சுவாமி ஐயப்பன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் விரதம் இருந்து


சுவாமி ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு யாத்திரை செல்வது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு பக்தர்கள் தங்களின் விரதத்தை தொடங்குகிறார்கள். இவ்வாறு இலட்சக்கணக்கான பக்தர்களின் மனதில் குடியிருக்கும் ஐயப்ப சாமியின் மகிமையை உணர்த்தும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்று தயாரானது. கலரில் தயாரான அப் படத்தின் பேர் சுவாமி ஐயப்பன் . படத்தை தயாரித்து, இயக்கியவர் மெரிலாண்ட் சுப்பிரமணியம். 



ஆரம்ப காலத்தில் இளைஞனான சுப்பிரமணியம் ஒரு கேனில்

பெட்ரோல் எடுத்துக் கொண்டு பிரதான வீதியில் நின்று , பெட்ரோல் இல்லாமல் நின்று விடும் வாகனங்களுக்கு சற்று கூடுதல் விலைக்கு பெட்ரோலை விற்று கொண்டிருந்தார். அதே போல் பஞ்சராகி வழியில் நின்று விடும் கார்களின் டயரையும் மாற்றிக் கொடுப்பார். ஒரு முறை ஒரு வெள்ளைக்காரரின் கார் பெற்றோல் இல்லாமல் வழியில் நின்று விட சுப்பிரமணியம் அவருக்கு பெற்றோல் கொடுத்து உதவியுள்ளார். அந்த வெள்ளைக்காரர் டன் லோப் டயர் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் என்று அறிந்து தன்னால் டயர் விற்று தர முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளார்.வீதியில் நிற்கும் 18 வயது இளைஞனால் எப்படி டயர் விற்க முடியும் என்று அதிசயப்பட்ட வெள்ளைக்காரர் இரண்டு டயர்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

 அவற்றை உடனடியாகவே சுப்பிரமணியம் விற்று பணத்தை அனுப்பி வைக்கவே , வெள்ளைக்காரர் அசந்து போய் சுப்ரமணியத்தையே தனது டயர் நிறுவனத்தின் முகவராக அந்த பிராந்தியத்துக்கு நியமித்து விட்டார். அதில் இருந்து முன்னேறிய சுப்பிரமணியம் பின்னர் மெரிலாண்ட்ஸ் ஸ்டுடியோவை உருவாக்கி, படத் தயாரிப்பில் இறங்கி , பல படங்களையும் இயக்கினார். இரண்டு தடவை திருவனந்தபுரம் மேயராகவும் பதவி வகித்தார்! இவர் தயாரித்த யானை வளர்த்த வானம்பாடி படம் வெற்றி பெற்றது. அதே போல் எம் ஜி ஆர், பத்மினி, வீரப்பா நடிப்பில் ராஜராஜன் படத்தையும் இவர் தயாரித்தார். அந்த வரிசையில் 1975ல் இவர் உருவாக்கிய படம் சுவாமி ஐயப்பன். 




மகிஷி என்ற அரக்கியை வாதம் செய்வதற்கு சிவனாலும், விஷ்ணுவாலும் உருவாக்கப் பட்ட சக்தி சுவாமி ஐயப்பன். பந்தள நாட்டு ராஜாவால் காட்டில் கண்டெடுக்கப்பட்டு மணிகண்டன் என்று பேர் சூட்டப்பட்டு வளருபவன் , நாளடைவில் இளம் காளையாகி தாயின் வயிற்று வலியை போக்க காட்டுக்கு புலிப் பால் தேடி போகிறான். சென்ற இடத்தில் எதிர்பாராத விதத்தில் மகிஷியை சந்திக்க இருவரிடையில் போர் நடக்கின்றது. இதில் மகிஷி வாதம் செய்யப்பட அவளுக்கு சாப விமோசனம் கிட்டுகிறது. அதனைத் தொடர்ந்து ஐய்யப்பன் மகிமை நிலை நாட்டப் படுகிறது. 


இவ்வாறு அமைந்த ஐயப்பனின் ஆரம்ப வரலாற்றுடன் , அதன் பின்

அவன் பக்தர்களுக்கு செய்த அருளாசிகளையும் இணைத்து படமாக்கியிருந்தார் சுப்பிரமணியம் . ஆரம்பத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களை வந்தடைந்தது. 

 தமிழ் ஐயப்பனுக்கு வசனங்களையும் , பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். நீண்ட காலத்துக்கு பின்னர் அவர் எழுதிய வசனங்கள் சுவையாகவும், கருத்தோடும் ஒலித்தன. அதே போல் பாடல்களும் தேனிசையாக காதுகளுக்கு விருந்தளித்தன . சபரிமலையில் வண்ண சந்திரோதயம், திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா, சுவாமி சரணம் சரணம் பொன் ஐயப்பா ஆகிய பாடல்கள் கேட்பதற்கு பரவசமாக ஒலித்தன. 


படத்தில் ஐயப்பனாக மாஸ்டர் சேகர் நடித்திருந்தார். பொருத்தமான தேர்வு. நடிப்பும் சிறப்பாக அமைந்தது. பந்தள நாடு ராஜா, ராணியாக ஜெமினி கணேசன், ஸ்ரீவித்யா இருவரும் நடித்தனர். அவர்களின் மந்திரியாக எஸ் .வி . ராமதாஸ், வாபராக பாலாஜி, இவர்களுடன், ஏவி .எம் .ராஜன் , லஷ்மி, வி. கே .ராமசாமி, ஆர் .எஸ் .மனோகர் தீபா, வி. எஸ். ராகவன், ராஜஸ்ரீ, ஆகியோரும் நடித்தனர். 



காலம் பூராவும் ஐயப்ப பக்தராக விளங்கி ஆண்டு தோறும் சபரி மலைக்கு பலரையும் அழைத்து செல்லும் நம்பியார் படத்தில் ஐயப்பனின் வரலாற்றை சொல்லும் குருசாமியாக வருகிறார். இவ்வளவு சாந்தமான நம்பியாரை நாம் இதற்கு முன் பார்த்ததே இல்லை! ஒரு காட்சியில் பாடகர் டி . எம். சௌந்தர்ராஜனும் தோன்றி பாடுகிறார். 



படத்தை ஒளிப்பதிவுத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட எம் . மஸ்தான் ஒளிப்பதிவு செய்தார். அரங்க அமைப்பு கங்கா. மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்து, தமிழில் சில படங்களுக்கு மட்டும் இசையமைத்திருந்த ஜி . தேவராஜன் படத்துக்கு இசை வழங்கினார். சுப்பிரமணியம் படத்தை தயாரித்ததுடன், நேர்த்தியாக டைரக்ட் செய்தும் இருந்தார். படத்தின் ஆரம்பத்தில் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரையை இணைத்திருப்பது நல்ல யுக்தி. சரணம் ஐயப்பா !

No comments: