கற்பனை உணர்வு அற்புதம் மனிதர்க்கு !

 .



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் …. அவுஸ்திரேலியா



உள்ள மென்பது உன்னத மாகும்
உள்ள மென்பது ஆலய  மாகும்
உள்ள மென்பது உயிர்ப்பிட மாகும்

உள்ள மென்பதை ஒளியுடை யாக்கு 

உள்ள மிருந்தே கள்ளம் வரும்
உள்ள மிருந்தே உண்மை வரும்
உள்ள மிருந்தே தெளிவும் வரும்
உள்ள மிருந்தே யாவும் வரும்  

கற்பனை யுள்ளம் கதையினைப் பகரும்
கற்பனை  யுள்ளம் கவிபல சொல்லும்
கற்பனை யுள்ளம் களியினைக் கொள்ளும்
கற்பனை யுள்ளம் கண்டிடும் கடவுளை

கற்சிலை கற்பனை கவிதையும் கற்பனை
நாடகம் கற்பனை நாட்டியம் கற்பனை
உரையிலும் உணர்விலும் கற்பனை கலந்தால்
உண்மைப் பொருளைக் காண்பது கடினமே

அருவமே உருவம் ஆகியே இருக்கு
அதுவே கந்தனின் தோற்றமாய் தெரியுது
கற்பனை இங்கே கருப்பொரு ளானது
கநதனின் கற்பனை கடவுளாய் மலர்ந்தது

புராணம் கற்பனை புழுகு மூட்டையே
என்றே சிலரும் இயம்பியே திரிகிறார்
கற்பனை யூடாய் தெரியும் கருவை
கருத்தில் கொண்டால் தத்துவம் விளங்கும்

கற்பனைக் கெட்டா ஒன்றே பரம்பொருள்
கற்பனைக் கடந்த ஜோதியே பரம்பொருள்
ஆதியு மில்லா அந்தமு மில்லா
அனாதியே அந்த ஆனந்தப் பரம்பொருள்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியும்
கடவுளைப் பற்றிய அடியார் கற்பனை
கருத்தில் இருத்தினால் கடவுளே தெரிவார்

திருமுறைப் பாடல்கள் அடியார் கற்பனை
திருந்தா மனத்தைத் திருத்திடும் கற்பனை
உண்மையை உயர்வை உணர்த்திடும் கற்பனை
உளமதைத் தூய்மை ஆக்கிடும் கற்பனை 

கற்பனை உணர்வு அற்புதம் மனிதர்க்கு 
பிறந்தவர் அனைவர்க்கும் கற்பனை உரித்தே
தப்பிதக் கற்பினை தவறினைக் காட்டும்
தரமிகு கற்பனை உயர்வினைச் சேர்க்கும் ! 

No comments: