திருமந்திரத்தைப் படிப்போம் திருமூலரை நினைப்போம் !

 .

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

                மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                  மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 


   பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் மூவாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ் மொழி. இலக்கணத்தை , இலக்கியத்தை , இசையை , நாடகத்தை , சமயத்தை , தத்து வத்தை , அரசியலை , அறவியலை , அறிவியலை - ஆழமாய் , அகலமாய் , நுண்மாண் நுழை புலத் துடன் கொண்டு விளங்கும் பெருமை மிக்க ஒரே மொழி தமிழ் எனபதை மறுத்து விட முடியாது. தமிழ் மொழியில் காணப்படும் ஒவ்வொரு நூல்களுமே - உயரிய பண்பாட்டை , வாழும் வாழ்வியல் முறை களை- பக்குவமாய் பகர்ந்து நிற்பதுதான் மிகவும் உன்னதமாகும். அந்தவகையில் மூவாயிரம் பாடல் களைக் கொண்டதாய் முத்திரை பதித்து நிற்பதுதான் " திருமந்திரம் " ஆகும்.

  இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,   சமய நூல் என்பதாமருத்துவ நூல் , என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக் களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா ! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத் திருநூல் அமைந்திருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப்  உலகில் திரு மந்திரம் தனித்துவமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

  திருமந்திரத்தை எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கி ழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை " நம்பிரான் " என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்க த்தகது. சம்பந்தப் பெருமானை " எம்பிரான் " என்றவர் திருமூலரை " நம்பிரான் " என்று சுட்டுவது மன மிருத்த வேண்டிய கருத்தாகும்.

 திருமூலர் என்பவர் யார் ? அவரின் ஆதி என்ன ? அவரின் மூலந்தான் என்ன ? என்பது பற்றிக் கதைகள் பல இருக்கின்றன. வள்ளுவரைப் பற்றியும் இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. இங்கு கதைகளைக் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே பொருத்தமாகும். அவர்களால் மக்களுக்கு வழங் கப்பட்ட கருவூலமான நூலே முக்கியமானது என்பதை கவனத்தில் எடுப்பதே சாலச் சிறந்ததாகும்.

    
 " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
  தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே "



இதுதான் திருமூலரின் நிலையாகும். இறைவன் தன்னைப் படைத்ததற்கான சரியான விடையைத் திரு மூலரே தருகிறார். " தமிழ் கொண்டு தன்னைப் பாடவே இறைவன் படைத்தான் பணித்தான் " என்பது தான் அந்த மறுமொழியாகும். இதுதான் அவரின் பிறப்பின் நோக்கமாகும். இங்கே தமிழ் என்று அழுத் திச் சொல்லப்படுவது கருத்திருத்த வேண்டியதேயாகும். திருமூலர் இறைவன் விருப்பப்படி தமிழில் நன் றாகவே பாடினார். அறம் பாடினார். பொருள் பாடினார். இன்பம் பாடினார். தத்துவம் பாடினார். யோ கம் பாடினார். ஆரோக்கியம் பாடினார். ஒழுக்கம் பாடினார். நிலையாமை பாடினார். விஞ்ஞானம் மொழிந்தார். அதேவேளை அரிய மெஞ்ஞானமும் மொழிந்தார். எதைப் பாடினாலும் இறைவனை அக மிருத்தியே அத்தனையும் தந்துநின்றார் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். சைவ சித்தாந்தம், யோக சாத்திரமுறை, விஞ்ஞானமுறை என்று திருமந்திரம் இருந்தாலும் அடிநாதமாய் அமை ந்திருந்திருந்தது - பரம்பொருளை உணர்ந்து கொள்ளுதலே என்பதை மறந்துவிடக் கூடாது.

 திருமந்திரம் ஒன்பது தந்திரங்களையும்  மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. ஆண்டுக்கு ஒரு பாட லாக மூவாயிரம் பாடல்களைப் பாடி மூவாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பது வரலாறு. இதில் நாம் நுழைந்து விவாதம் செய்ய வேண்டியதில்லை. திருமூலரைச் சித்தர் என்றே அழைப்பது வழக்கம். சித்தர்கள் வாழ்வானது விசித்திரமானது. அறியமுடியா பல அதிசயங்கள் கொண்டது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து நிலையாகும். அவரின் பிறப்போ அல்லது அவரின் மறைவோ பற்றிய சர்ச்சை களை விட்டு விட்டு அவரின் சிந்தனைக் கருவூலமான திருமந்திரத்தையும் அதன் மூலம் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைத்திட்ட திறத்தையுமே நாமனைவரும் எம்மகத்தில் அமர்திட வேண்டும். அது தான் மிகவும் பொருத்த மானதுமாகும்.

  மூவாயிரம் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த வைரங்கள். அவற்றில் அறிவார்ந்த பல கருத்துகள் பொதிந்திருக்கின்றன என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அறிவார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த திருமூலர் கையாண்ட மொழி நடையினை வியந்துமே பார்க்க வேண்டி இருக்கிறது. இலகுவான சொல்லாக இருக்கும். படிக்கும் பொழுது ஒரு கருத்தை எமக்குள் ஏற்படுத்தும். ஆனால் உள்நுழைந்து பார்க்கும் பொழுதுதான் திருமூலர் தெரிவார். அவர் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தி டக் கையாண்ட சித்தும் தெரிய வரும். அந்த அளவுக்கு ஆழம் நிறைந்திருக்கும். அதேவேளை கவிதை அழகும் செறிந்திருக்கும். அதற்குள் பக்தியும் தத்துவமும் புதைந்தும் இருக்கும். இப்படியான சிறப் பினை வேறெதிலுமே காணமுடியாது. ஆனபடியால்த்தான் அது " திருமந்திரம் " என்னும் பெயரினைத் தாங்கிடும் பெருமைக்கு ஆளானது எனலாம்.

  ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை அனைவருமே தேடுகின்றோம். அந்த அருட்சோ தியை வேண்டிப் பல இடங்களைத் தேடியும் ஓடுகின்றோம்.மனம் அங்கலாய்த்தபடியே இருக்கிறது. அருட்பெருஞ்சோதியை அறிய முடியாமல் இருப்பார்க்கு திருமூலர் புதுமையாய் ஒரு கருத்தைச் சொல்லி புதுப் பாதையையும் காட்டுகின்றார். இது யாருமே சிந்திக்கா சிந்தனையாகும்.

 

      அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

      அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
      அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
      அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே
 
இந்தப் பாடல் அமைப்பே அற்புதம். சிவனைப் பற்றிய சிந்தனை வந்ததும் திருமூலரிடம் அன்புதான்
அமர்ந்து விடுகிறது என்பதை இங்கே காணமுடிகிறது. பாடலின் நான்கு வரிகளின் தொடக்கமே அன்பாய் மலர்கிறது. சிவன் என்றதும் அன்புதான் அங்கே முகிழ்க்கிறது. அன்ப்பைச் சிவனைப் பிரிக்கவே முடியாது என்னும் திருமூலர் நினைப்பு மிகப்பெரிய நிலை அல்லவா ? 

சித்தம்  போக்கு சிவன் போக்கு என்று சொல்லுவதை நாமெல்லாம் கேட்டிருக்கின்றோம். இதன் அர்த்தம் சிவபெருமானின் போக்கானது அன்பு நிலையேயாகும்.இதனைக் கருத்திருத்தியே திருமூலரும்  சிவனை  " அன்பாய் " காணுகின்றார். ஆகவேதான் சிவன் வேறல்ல - அன்பு வேறல்ல . இரண்டுமே ஒன்றுதான் என்று உரக்கக் கூறுகிறார். ஆண்டவனை அன்பாய்க் காணுவதே மிகவும் உகந்த நிலை என்பதுதான் திருமூலர் எண்ணமாகும்.பரம்பொருளை அன்புடன் இணைத்து அப்பரம்பொருளுக்கு அன்புதான் பெயர். அந்த அந்த அன்புதான் சிவன் என்று காட்டும் பாங்கில் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விளங்காதவருக்கும் விளங்கப் பண்ணிடும் உத்தியாய் இருக்கிறதல்லவா ?

  உடம்பினைப்பற்றிய திருமூலர் பார்வை மிகவும் வேறுபட்டது. மற்றவர்கள் பார்க்காப் பார்வை.    திருமூலர் பார்வையோ யாவரையும் விட வித்தியாசமானதாய் அமைந்திருக்கிறது. உடம்பு இழுக்கா என்றால் இல்லையே என்கிறார். அதற்குத் தக்க காரணமும் தருகிறார். அங்குகூட பரம்பொருளையே உட்புகுத்தியும் நிற்கிறார். இந்த நிலையில் திருமூலர் கருத்துகள் மந்திரமாய் ஒளிர்கிரது எனலாம்.


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
 

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே

தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

இவ்வாறு உடம்பைப் பற்றிய சிந்தனையோ , பார்வையோ , மற்றெவருக்கும் வரவேயில்லை. திருமூலர் ஒருவருக்கே வந்திருக்கிறது. அதனால் அவரின் கருத்துக்கள் " திருமந்திரம் " ஆகியே இருக்கிறது.
புதுஇய பார்வை , புதிய சிந்தனை ! அறிவுக்கு அப்பால் உணர்வினால் உணரும் உன்னதைத்தைதே திருமூலர் காட்டி இருக்கிறார்.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

திருமூலர் தனித்துவமான சிந்தனையை இப்பாடலும் அதன் அர்த்தமும் எமக்களிகிறது.இப்பாடல் ஊடா க திருமூலர் சமூகத்துக்கு எதனை உணர்த்திட விரும்புகிறார் என்பதே மிக மிக முக்கியமானதாகும். பரம்பொருளைப் பூசிப்பதற்குஒரு பச்சிலையே போதும் என்கிறார். பரம்பொருளைப் பூசித்தால் மட்டும் போதுமா என்று கேட்டு விட்டு - பசுவுக்குப் புல்லுக்கொடு .உண்ணும் போது யாராவது வந்தால் ஒரு கைப்பிடி உணவு கொடு. இப்படி யெல்லாம் உனக்குச் செய்வது கஷ்டமாக இருந்தால் நல்லதாக ஒரு வார்த்தையினையாவது மற்றவரைப் பார்த்துச் சொல்லிவிடு. என்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதுபோல எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார்.  பரம்பொருளை நாடுவதும், பூசிப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்து வத்தை பசுவுக்கு வாயுறை கொடுப்பதற்கும், உண்ணும்போது ஒரு கைப்பிடி கொடுப்பதற்கும், இன் னுரை மற்றவர்க்கு வழங்குவதற்கும் திருமூலர் கொடுத்து நிற்கிறார் என்பதுதான் அகம் அமர்த்திட வேண்டிய கருத்தாகும்.மகேசன் சேவையுடன் சமூகச் சிந்தனையும் மிகவும் அவசியமானதுதான் என்ப தையே திருமூலர் எண்ணிச் சொல்லுகிறார் என்பதே கருத்திருத்த வேண்டிய கரு எனலாம்.இந்தப் பாட லின் மூலம் நல்ல அறமும் உணர்த்தப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.அறங் களை இலகுவாக்கி அதனையாவது இருக்கும் காலத்தில் செய்யுங்கள் என்று நல்ல குருவாய் நல்லதொரு உபதேசத்தை வழங்கியவர் - மனித வாழ்வினையும், அதன் நிலையாமையினையும் படம்பிடித்துக் காட் டுகிறார். திருமூலரைத் தவிர எவராலுமே இப்படி விளக்கிடவும் முடியாது. உணர்த்திடவும் முடியாது என்பதுதான் உண்மை.


அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே
    

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

 வந்தார். நன்றாகவே அதுவும் சுவையாகவே உண்டார். அழகான மனைவியுடன் இன்பமாய் இருந்தார். இட துபக்கம் சிறிது வலிக்கிறது என்றார்.நோவினால் படுத்தார். படுத்தவர் படுத்தே விட்டார். எழவே இல்லை ! ஒரு நாடகம் போல காட்டி மனித மரணத்தினை திருமூலர் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கிறார். இங்கே நிலை யாமையும் இருக்கிறது. மருத்துவமும் இருக்கிறது. இடப்பக்கம் நொந்தால் இருதய நோய். அதனால் உயிராபத்து வரும். இதனை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சித்தர் பெருமான் சொல்லி இருப்பது எம்மையெல்லாம் அவர் பக்கம் திருப்பிப் பார்த்திட வைத்திடும் நிலைதானே !

 படுத்தவர் எழவேயில்லை. படுத்தவர் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர். வசதிகள் வாய்ப்புகள் நிறைந்த வர்.ஆள் பலம் படைத்தவர்.அரசியலில் உயர்நிலையில் இருப்பவர். அனைவரையும் ஆட்டிவைத்தே வாழ் ந்தவர். அவரிப்போ எழமுடியாமல் வீழ்ந்துவிட்டார். ஊரிருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஒலிக்கி அழுதார்கள். சற்று நேரங்கழித்து - அந்தஸ்த்திலிருந்தவரின் பெயரினைச் சொல்லாது எப்பத்தான் இந்தப் பிணத்தை எடுக்கப் போகிறார்களோ என்று சொல்லி நிற்கின்றார்கள். - நிலைமை உடனேயே மாறி விட்டது என்கிறார் திருமூலர். அதுமட்டுமா ? ஆடவைத்து நின்றவரின் ஆட்டம் அடங்கிய பின் பிணம் என்னும் பெயருடன் சூரையங் காட்டுக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்து , அங்குள்ள நீர் நிலையில் மூழ்கி எழுந்து - அந்தஸ்த்தில் இருந்தவரையே நினைப்பிலிருந்து அகற்றியே விட்டார்கள். இதுவும் ஒரு படமாக காட்டப்படுகிறது அல்லவா ! இதுதான் வாழ்கை ! இதுதான் வாழ்கையின் நிதர்ச னமான நிலை ! 

 திருமூலரின் சிந்தனைகளைப் பார்த்தால் அவர் சமய நம்பிக்கை , கடவுள் நம்பிக்கை , உடையவரா என்னும் ஐயமும் ஏற்படலாம். அவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்று கூட எண்ணவும் வைக்கும். கடவுளை , கோவிலை , நம்பிக்கைகளை எல்லாம் எல்லாம் அவர் பார்க்கும் பார்வைகள் ,அவரின் கருத்துக்கள் சாதாரன மக்களை சஞ்சலத்துக்கு ஆளாக்கி விடும் வண்ணம் இருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கலாம். நதி மூலம் ரிஷி மூலம் அறியவே முடியாது என்பதையும் கேள்விப் பட்டிருக்கிறோம்.
திருமூலர் ஒரு சித்தர். அவரின் போக்கு அந்தப் பரம் பொருளுக்கே தெரியும். விளங்கும். திருமூலரைப் பற்றி விமர்சனம் செய்வதற்கோ , அவரின் கருத்துக்களை மறுப்பதற்கோ உரிய அறிவும் ,ஆற்றலும் , ஞானமும்,  சாதரண நிலையில் இருக்கின்ற அதாவது உலகியலில் உழன்று கொண்டிருக்கும் எங்களிடம் இல்லை என்பதை மனமிருத்தி " திருமந்திரத்தைப் படிப்போம் " திருமூலமூலரை நினைப்போம் ! 

No comments: