.
ஒரு கருத்தை மக்களிடம் யார் வேண்டுமானாலும் விதைக்கலாம். நல்ல கருத்தென்றல் முளைக்கும். நல்ல கருத்தல்ல என்றால் என்னதான் உரமிட்டு நீர் பாய்ச்சினாலும் முளைக்காது. முளைக்காது போனாலும் பரவாயில்லை. கருகிவிடும். அதுபோல் எழுத்தாளர்களின் எழுத்தும். இதில் பொழுதுபோக்குக்காக எழுதுபவர்களின் கருத்துக்களை கணக்கிட வேண்டியதில்லை.
ஆனால் புரட்சியாளர்களின் கருத்துக்கள் அப்படிப்பட்டதல்ல. முதலில் புரட்சியாளர்கள் எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் என்பதைப் பார்க்கவேண்டும். புரட்சிகரமான கருத்துக்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விதைத்துச் செல்லலாம்.
இப்படி விதைப்பவர்கள் தன் மனதில் தோன்றிய புரட்சிகரமான கருத்துக்களை பதிவிடுவார்கள். அவ்வளவுதான் அவர்கள் வேலை. அது மக்களிடம் போய்ச் சேர்கிறதா? இல்லையா என்று பார்ப்பது அவர்கள் வேலையில்லை. எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கருத்துத்தான் தோன்றும் என்று குறிப்பிட முடியாது. காதல், வீரம், நகைச்சுவை, கருணை சம்பந்தப்பட் கருத்துக்கள் தோன்றலாம்.
அவ்வாறு தோன்றுகின்ற கருத்துக்களுக்கு ஏற்ப அவ்வப்போது படைப்புகளைத் தந்து செல்வான். அப்படித்தான் புரட்சிகரமான கருத்துக்கள் தோன்றும்போது அதைப் பதிவிடுவார்கள். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று. அவர்களை புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் பன்முகத் தன்மை கொண்ட புரட்சி எழுத்தாளர்களில் புரட்சிக்கென்றே வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் மற்றும் இருந்திருக்கிறார்கள். முண்டாசுக் கவிஞர் பாரதியார் அவ்வாறு இருந்தார். அவர் பக்தி ததும்பவும் எழுதினார் வீரத்துக்கும் எழுதினார். காதலுக்கும் எழுதினார் கருணைக்காகவும் எழுதினார். அதேவேளை புரட்சிக்காகவும் எழுதினார்.
பாரதியார் பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க இந்திய விடுதலைப் போராட்ட விடுதலை வேட்கையை தூண்டும் வண்ணமும் எழுதினார். அதனால் ஏற்படும் பின் விலைவுகளைப்பற்றி எல்லாம் எண்ணிப்பார்க்காமல் எழுதினார். பாரதி வருமானத்துக்காகவோ புகழுக்காகவோ எழுதவில்லை என்பது ஊரறிந்த உண்மை.
அவர் வருமானத்துக்காகவோ புகழுக்காகவோ எழுதியிருந்தால் தான் எழுதியவை அனைத்தையும் நூலாக்கியிருப்பார். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அதற்கு சான்றாக அவர் எழுதிய பற்பல கெயெழுத்துப் படைப்புக்கள் இன்னும் அச்சேறாமலேயே இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தனக்கு ஏன் வம்பு என்று அந்தநேரத்தில் அமைதி காத்திருக்கலாம்.
புரட்சிகரமான கருத்துக்களை அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படாதபோது பாதுகாப்பான இடத்தில் இருந்து பதறாமல் எழுதலாம். ஆனால் பாரதி தன் குடும்பத்தைக் கூட காப்பாற்றாமல் மனைவியை பக்கத்து வீட்டில் அரிசியைக் கடனாகப் பெறும் சூழ்நிலையில் விட்ட நிலையில் புரட்சிக் கருத்துக்களை விடாது எழுதி வந்தார்.
அதனால் ஓரிடம் விட்டு ஓரிடம் தலைமறைவாக ஓடி ஒளிந்தபடியே வாழ்ந்து வந்தார். அவர் உயிருக்கு பயந்து ஓடி ஒளியவில்லை. அடிமை இந்தியாவுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் தலைமறைவாகவும் இருக்க தேர்ந்தது.
இதுபோன்றே உரிமைக்காகவும் நாட்டு விடுதலைக்காகவும் புரட்சிகரமான கருத்துக்களை விதைத்தவர்களும் இன்னும் விதைத்துக் கொண்டிருப்போரும் ஏராளம். அதற்காக தமது இன்னுயிரை ஈன்ற எழுத்தாளர்களும் பத்திரிகைக்காரர்களும் உலக அளவில் ஏராளம். இந்தியாவிலும் இலங்கையிலும் அப்படிப்பட்ட புரட்சியாளர்கள் பலர் இறந்ததை உலகறியும்.
சில ஆண்டுகளுக்கு முன் கர்னாடகாவில் ஒரு பத்திரிகையாளர் கொலைசெய்யப்பட்டார். ஆதலால் எப்போதெல்லாம் எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தலைவிரித்தாடத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் புரட்சி எழவே செய்யவும். அப்போது புரட்சிகரமான கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள் இருக்கவே செய்வார்கள்.
அப்படி எழுதுபவர்கள் தன் உயிருக்கு ஆபத்து என்று எண்ணியெல்லாம் எழுதமாட்டார்கள். மக்கள்பால் பேரன்பு கொண்டவர்கள் இவர்கள். எனவே உரிமைப் போராட்டங்களிலும் விடுதலைப் போராட்டங்களிலும் மக்கள் ஈடுபடும்போது மக்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வண்ணம் அவர்களின் கருத்து பரவலாக எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக உயிரையும் பணயம் வைத்து எழுதும் படைப்பாளிகளை வரலாறு கண்டுள்ளது.
இப்போது புரட்சிகரமான கருத்தை எழுதுபவர்களை நாம் பார்ப்போம். அப்படி செய்தால் நன்றாயிருக்கும் இப்படி செய்தால் சமுதாயத்துக்கு நல்லது என்று புரட்சிக் கருத்துக்களை எழுதுபவர்களைப் பார்ப்போம். இவர்கள் எவரையும் எந்த நிகழ்வையும் எந்த நாட்டையும் பற்றிக் குறிப்பிடமாட்டார்கள். இவர்கள் “டு கூம் இட் மே கன்சன்” என்பதைப் போன்றவர்கள்.
அடுத்ததாக புரட்சி நடந்து முடிந்தபின் அதனால் ஏற்பட்ட பலாபலன்களை எழுதுவார்கள். இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் நடந்து முடிந்த ஒன்றைப் பற்றித்தான் எழுதுவார்கள். இவர்களால் படைக்கும் படைப்பு அங்கு நடந்தவற்றை மற்றும் குறிப்பிடுவதால் இதை ஒரு வரலாற்று ஆவணமாக வேண்டடுமானால் பார்க்கப்படும்.
பிரஞ்சுப் புரட்சி, சிப்பாய்க் கலகம் போன்றவற்றைப் படித்துத் தெரிந்து கொள்கிறோம் அதுபோன்று ஒரு வரலாறாக மட்டுமே படிக்கமுடியும். ஆனால் மிகவும் ஆபத்துக்குரிய விசயமாக கருதப்படுவது ஒரு புரட்சி நடக்கும்போது அதைப்பற்றி எழுதுவதுதான். அதிலும் இவர்கள் படைப்பு எந்த பக்கமும் சாயாமல் எழுதப்பட வேண்டும்.
இவர்கள் புரட்சி செய்பவர்கள் பக்கம் நின்று எழுதினால் புரட்சி செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புரட்சி செய்பவர்களின் புரட்சியில் நியாயமின்றி புரட்சியை எதிர்கொள்பவர்கள் பக்கம் நின்று எழுதினால் உண்ணையை எழுதினாலும் இனத்துரோகி என்ற அவப்பெயருக்கு ஆளாவதோடு உயிரிழக்கவும் நேரிடும்.
இதுபோன்றே புரட்சியை எதிர்கொள்பவர்கள் பக்கம் நியாயமின்றி புரட்சியாளர்கள் பக்கம் நின்று எழுதினால் படைப்பாளனும் புரட்சியாளனாகப் பார்க்கப்படுவதால் எதிர்கொள்பவர்கள் பக்கமிருந்து வரும் ஆபத்துக்களையும் தவிர்க்க இயலாது.
முடிவாக புரட்சியாளன் உயிருக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. எதற்கும் அஞ்சாமல்தான் புரட்சியில் குதிக்கிறான். இந்த புரட்சியைப் பற்றி படைக்கும் படைப்பாளிகளைகளை எடுத்துக்கொண்டால் நடந்து முடிந்த புரட்சியை வரலாறாக எழுதும் படைப்பாளிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நடந்து முடிந்த ஊரறிந்த ஒன்றை உள்ளதை உள்ளபடி எழுதுவதால் பாதிப்பு எதுவும் நேராது.
ஆனால் பரட்சி நடந்து கொண்டிருக்கும்போது மகாபாரத யுத்தத்தில் நடந்ததை திருதராஷடிரனுக்கு அவனது தேரோட்டி சஞ்சயன் சொல்வதைப்போல புரட்சியில் நடப்பவைகளை மக்களுக்கு படைக்கும் படைப்பாளிக்குத்தான் உயிருக்கு ஆபத்து வரும். எந்தப்பக்கத்தில் இருந்து வரும் என்பது படைக்கும் படைப்பை பொருத்து அமையும்.
-சங்கர சுப்பிரமணியன்.

No comments:
Post a Comment