மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் 35ம்ஆண்டின் கலைவிழா

 .

                      

மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின்  35ம் ஆண்டின் கலை விழா-2025 St Memorial Hall இல் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை பள்ளியின் அதிபர் திரு. தேவராசா சதீஸ்கரன், மற்றும் நிர்வாகத் தலைவர் திரு. ரோசாந் ரூபன் அருளப்பு  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முதலில் சம்பிரதாய நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றலினை பள்ளியின் அதிபர், திரு.தேவராசா சதீஸ்கரன் அவர்தம் பாரியார் திருமதி.கஜந்தி சதீஸ்கரன் அவர்களும், நிர்வாகத் தலைவர் திரு.ரோசாந் ரூபன் அருளப்பு அவர்தம் பாரியார் திருமதி.ரேணுகா ரோசாந் ரூபன் அவர்களும் அவர்களும், ஆசிரியர் திருமதி. பாமரதி மகேஸ்வரமூர்த்தி, பிரதம விருந்தினரான பள்ளியின் முன்னாள் செயலாளரும் பொருளாளருமான திரு.நோயல் ரொபின்சன், அவர்தம் பாரியார் திருமதி .லெனிட் ரொபின்சன், மற்றும் சிறப்பு விருந்தினர்களான சட்டத்துறை நிபுணரும், Western Sydney பல்கலைக்கழகத்தில் கல்வியாளருமான திருமதி. துர்க்கா ஓவன், councillor for Cumberland city council  திரு .சுஜன் செல்வேந்திரன், ஈஸ்ட்வுட் பள்ளியின் முதல்வர் திரு. பிரபாகர் தியாகராஜா ஆகியோர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, அவுதிரேலியா கீதம் ஆகியன இசைக்கப்பட்டது. 


அடுத்து நாம் வாழும் நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போராட்டத்தின்பால், உயிர்நீத்த பொதுமக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து 1 நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியின் 9ம், 10ம், 11ம் வகுப்பு மாணவர்களால் வரவேற்பு நடனமும். நிர்வாக உறுப்பினர் திருமதி.அனுசா பிரஜீவ் அவர்களால் வரவேற்புரையும் வழங்கப்பட்டது.




தொடர்ந்து இந்நிகழ்வில் பள்ளியின் கீழ் பிரிவு, மத்திய பிரிவு, மேற் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வும், 35 ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக ஆசிரியர்களை கௌரவிப்பு நிகழ்வும், அமைச்சர் விருதினை இவ்வாண்டு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்று இருந்தன.

 






கீழ் பிரிவுகளில் இருந்து “தாயவளே தமிழ் மண்ணே” எனும் தமிழ் பாடலுக்கு ஆரம்ப பள்ளி மாணவர்களும்கண் சிமிட்டுது கண் சிமிட்டுது பொம்மை” மற்றும் “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” என்ற பாடலுக்கும் முன்பள்ளி மாணவர்கள் ஆடலை வழங்கி இருந்தனர். மழலைகளின் ஒவ்வொரு அசைவுகளும் அவர்களின் குதூகல முக பாவனைகள் சபையோரை ஈர்க்கு முகமாக அமைந்திருந்தது. ஆண்டு ஒன்று மாணவர்கள் “செந்தமிழான தமிழ் மொழியே” மற்றும் ஆண்டு இரண்டு மாணவர்கள் "மணப்பாறை மாடு கட்டி மாயவரம் எரு பூட்டி” எனும் தமிழ் பாடல்களுக்கு ஆடல்களை அழகுற வழங்கி இருந்தார்கள். இவர்களுடன் ஆண்டு மூன்று மாணவர்கள் “நேற்று இன்று நாளை” எனும் கற்பனை நாடகம் ஒன்றை வழங்கியிருந்தார்கள். நாடகம் சபையோர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

 


மத்திய பிரிவிலிருந்து ஆண்டு நான்கு மாணவர்கள் பாடலுக்கு நடனமும், ஆண்டு ஐந்து மாணவர்கள், தகடூரை ஆண்ட மன்னன் அதியமான் தன் வாழ்நாளை நீடிக்கும் சிறப்பு வாய்ந்த நெல்லிக்கனியை தான் உண்ணாமல் புலமையின் சிறப்பை கருதி ஔவையாருக்கு வழங்கினார். எனும் கருப்பொருளை மையப்படுத்தி “நெல்லிக்கனி பெற்ற புலவர்” எனும் வரலாற்று நாடகத்தை வழங்கினார்கள். 

தொடர்ந்து ஆண்டு ஆறு மாணவர்கள் "வீரமிகு வேல்வாரி" எனும் வரலாற்று நாடகத்தை வழங்கினார்கள். இவ் நாடகமானது கொடை வள்ளலில் புகழ் மேலோங்கியவனும் சேர சோழ பாண்டிய மன்னர்களால் வெல்ல முடியாதவனாகிய பாரி இறுதியில் எவ்வாறு மலைக்குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வீரனால் கொல்லப்பட்டான் என்ற வரலாற்று கதையை கூறி நின்றது.

மேற்பிரிவு மாணவர்களான ஆண்டு ஒன்பது மாணவர்கள் “சிலம்பின் உதயம்” எனும் தலைப்பில் தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளவரசன் இளங்கோவன் எவ்வாறு இளங்கோ அடிகள் ஆனார் என்ற வரலாற்று நாடகத்தை கலை நிகழ்வின் முதல் நாடகமாக அரங்கேற்றிருந்தார்கள். ஆண்டு பத்து மாணவர்கள் “தமிழர்களின் தாயகம்” எனும் தலைப்பில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தேயிலை இறப்பர் கரும்பு தோட்ட வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது பற்றியும் ஈழத் தமிழர்கள் தாயகத்தை ஏன் துறந்தார்கள் என்பது பற்றிய கதையை மையப்படுத்தி வில்லுப்பாட்டுனை வழங்கியிருந்தார்கள். இவர்களுடன் ஆண்டு 11 மாணவர்களால் சமூக ஊடகங்களினால் நன்மையா தீமையா என்ற தலைப்பில் கருத்துக்களம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.

 

மாணவர்கள் அனைவரும் அற்புதமாகத் தத்தமது நடிப்புக்களை வெளிக்கட்டியிருந்தமையைப் பாராட்டியே ஆக வேண்டும். இன்தமிழின் அழகியவடிவில் அவர்கள் மனனம் செய்தவற்றை அங்கு பிழையறத் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் பேசியும், நடித்தும் திறமைகளை வெளிக்காட்டினார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர் முகங்களில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் காணப்பட்டதுடன், வழிகாட்டிய ஆசிரியர்களின் கடின உழைப்பையும்  காணக்கூடியதாக இருந்தது. நிகழ்ச்சி ஒவ்வொன்றையும் மேலும் மெருகூட்டும் வகையில் ஆண்டு 12 மாணவர்களின் நிகழ்ச்சி தொகுப்பாற்றலும் மற்றும் பள்ளியின் தொழில்நுட்ப பிரிவினர்களால் வழங்கப்பட்ட திரைக்காட்சிகளும் வண்ண வண்ண ஒளியூட்டல்களும் ரசிக்கும் படியாக இருந்தது. பார்வையாளர்களும் நிகழ்ச்சிகளை இரசித்துத், தமது வாழ்த்துக்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

 



வழமை போல் ஆண்டுதோறும் அமைச்சர் விருதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர் அதன் அடிப்படையில் இவ்வாண்டு அமைச்சர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவி செல்வி. மிகிகா சந்திரசேகர் அவர்கள் அமைச்சர் விருதினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு   நோயல் ரொபின்சன், அவர்களும் அவர்தம் பாரியார் திருமதி லெனிட் ரொபின்சன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பேசிய பிரதம விருந்தினர் தனதுரையில் தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றியும், தமிழ் மொழி கற்பதில் பிள்ளைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்தார்.



 

கலை விழாவில் இன்னொரு அங்கமாக பள்ளியின் 35 ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களையும் தாங்கள் ஏன் தமிழ் மொழியை கற்பிக்க வந்தோம் என்பது பற்றியும் கூறியிருந்தார்கள். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமதி. துர்க்கா ஓவன் அவர்களும் மற்றும் திரு. சுஜன் செல்வேந்திரன் அவர்களும் ஆசிரியர்களுக்கான விருதினையும் வழங்கி சிறப்புரையினையும் ஆற்றினார்கள். எல்லோராலும் செல்லமாக அம்மம்மா டீச்சர் என அழைக்கப்படும் எமது பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி நடனபாதம் அவர்கள் எமது அழைப்பை ஏற்று பள்ளியின் மேல் வைத்த அளப்பெரிய பற்றினால் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தமை மேலும் சிறப்பாக அமைந்திருந்தது.



ஒவ்வொரு வருடமும் கலை விழாவிற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தங்களுடைய ஆதரவினை வழங்கி வரும் கவிஞர்களை கௌரவிப்பது வழமை. அந்த வகையில் இந்த ஆண்டும் நாடக ஒப்பனையாளர், ஒலியொளி அமைப்பாளர், விழா மண்டபத்தினை அலங்கரித்தவர்கள், நடன ஆசிரியர்கள் என அனைத்து கலைஞர்களும் அரங்கினில் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்பினை பெற்று மிகவும் நேர்த்தியாக நிகழ்வினை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்

நிகழ்ச்சிகளின் இறுதியில் பள்ளியின் நிர்வாக உறுப்பினர் திருமதி. ஜனனி நிஷாந்தன் அவர்கள் சகலருக்கும் நன்றியைத் தெரிவித்தார். எமது எதிர்காலச் சந்ததிகளை, பிள்ளைகளை வழிநடத்திச் செல்லும் பள்ளியின் அதிபர், ஆசிரியர் குழாம், நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் அவர்களின் அளப்பரிய பங்ளிப்பிற்கும், ஊக்குவிப்புக்கும் எனது நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவு பெற்றதன் பிற்பாடு அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. குழந்தைகள் பெற்றோர்கள், முதியவர்கள் என அனைவரும் கூடி இருந்து மகிழ்ந்து தங்களுடைய இரவு உணவினை உண்டு களித்து மகிழ்வுடன் வீடு திரும்பினார்கள்.

எழுத்தாக்கம் : கௌரீஸ்வரன் கந்தசாமி, மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையம்


No comments: