.
ஏனைய நட்சத்திர நடிகர்களுக்கு இல்லாத ஒரு பெருமை சிவாஜிக்கு உண்டு. அதுதான் அவர் நடித்த முதலாவது படமான பராசக்தி, நூறாவது படமான நவராத்திரி, நூற்று இருபத்தைந்தாவது படமான உயர்ந்த மனிதன், நூற்று ஐம்பதாவது படமான சவாலே சமாளி என்பன வெற்றிப் படங்களாகவே அமைந்தன. அந்த வரிசையில் அவரின் நூற்றுஎழுபத்தைந்தாவது படமான அவன்தான் மனிதன் படமும் அவரின் வெற்றிப் பட வரிசையில் இணைந்தது.
ஆனால் ஆரம்பத்தில் இப் படத்தின் கதை சிவாஜியினால் நிராகரிக்கப்பட்டு , பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். தமிழில் பிரபல கதாசிரியராக விளங்கியவர் ஜி . பாலசுப்ரமணியம். இவரின் கதையில் உருவான பாலும் பழமும், ஆலய மணி, அன்னை இல்லம் , பணமா பாசமா, தங்கச் சுரங்கம், முகராசி , போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாகின. இந்த பாலசுப்ரமணியம் ஒரு சந்தர்ப்பத்தில் சிவாஜியிடம் ஒரு கதையை கூறினார். 
ஒரு கோடிஸ்வரன் சிங்கப்பூரில் காதலித்து திருமணம் செய்கிறான். ஒரு விபத்தில் அவன் மனைவி இறக்க , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவன் குழந்தையும் இறக்கிறது. மீண்டும் இந்தியா திரும்பி தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தும் அவன் வாழ்வில் மற்றுமொரு பெண் குறுக்கிடுகிறாள் . ஆனால் அவன் தன் காதலை சொல்லும் முன்பே அவனின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவனை அவள் மணக்கிறாள். தொடர்ந்து தீப்பெட்டி தொழிற்சாலையில் இடம் பெறும் தீ விபத்தினால் ஓட்டாண்டி ஆகிறான் கோடீஸ்வரன். தொழிற்சாலை ஒடிந்து போகிறது. கோடிஸ்வரன் எல்லாவற்றையும் இழந்து குடிசைக்கு குடி பெயருகிறான். ஆனாலும் அவனின் ஈகை குணம் அவனை விட்டு விலகுவதில்லை. இதனால் மேலும் மேலும் துன்பத்துக்கு உள்ளாகி அவன் உயிர் பறி போகிறது. 
இப்படி சாவு, நட்டம், தரித்திரம் என்று அமைந்த கதையை பாலசுப்ரமணியம் Dryயாக சொல்லவும் அதிர்ந்து போன சிவாஜி அதில் நடிக்க முடியாது என்று நிராகரித்து விட்டார். கே. சங்கர் இயக்கத்தில் வர வேண்டிய இப் படம் அப்படியே கைவிடப் பட்டது. ஆனால் பாலசுப்ரமணியம் சும்மா இருக்கவில்லை. கதையை கன்னட தயாரிப்பாளருக்கு கொடுத்து விட்டார். கன்னடத்தில் பிரபல இயக்குநர்களாகத் திகழ்ந்த துரைராஜ்,பகவான் இருவரும் இந்த கதையை பொறுப்பெடுத்து அதற்கு நல்ல முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள். அவர்களின் கை வண்ணத்தில் திரைக் கதை அமைக்கப்பட்டு அவர்களே படத்தை டைரக்ட் செய்தார்கள். ராஜ்குமார் , ஜெயந்தி நடிப்பில் உருவான கஸ்தூரி நிவாஸம் என்ற இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதனை பார்த்த ஒரு தமிழ் படத் தயாரிப்பாளர் இரண்டு இலட்சம் ரூபாய் கொடுத்து தமிழில் படத்தை தயாரிக்கும் உரிமையை வாங்கிக் கொண்டு சிவாஜியிடம் வந்தார். கன்னட வெற்றி சிவாஜிக்கு நம்பிக்கை தரவே தமிழில் அக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார் . அவன்தான் மனிதன் என்ற பெயரில் படம் தயாரானது. 
 ஆரம்பத்தில் கதைக்கு பாலசுப்ரமணியம் கேட்டது இருபத்தையாயிரம். இப்போது அதன் விலை இரண்டு இலட்சம். ஆனாலும் துரைராஜ், பகவான் இருவரின் திரைக் கதையும், இயக்கமும் இந்த மாற்றத்துக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் தமிழில் கலரில், பெரும் பொருட் செலவில் படம் உருவானது. படத்தின் சில காட்சிகள் சிங்கப்பூரில் படமானது. 
படத்துக்கு முதுகெலும்பு சிவாஜியின் நடிப்புதான். நவீன கர்ணனாக பாத்திரமேற்று கட்சிக்கு காட்சி தன் நடிப்பால் மெருகேற்றினார் சிவாஜி. கோடீஸ்வரனாக இருக்கும் போது காட்டும் நடிப்பும் , பரம ஏழையாகி காட்டும் நடிப்பிலும் அசத்துகிறார் சிவாஜி. ஏழையான பின் தன் கையில் கடிகாரம் இருக்கிறது என்ற எண்ணத்தில் மறந்து போய் கையை தூக்கி விட்டு கடிகாரம் கையில் இல்லை என்பதை நாசுக்காக மறைக்கிற காட்சியே போதும் அவரின் நடிப்பை சுட்டிக் காட்ட! 
 அடுத்தடுத்து சோகம் என்பதாலோ என்னவோ நகைச்சுவை காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சற்று ரிலாக்ஸ். சந்திரபாபு, சோ, எம் ஆர் ஆர் வாசு, சச்சு என்று ஒரு டீம் காமெடியில் கலக்குகிறது. இவர்களும் இல்லாவிட்டால் நோ ரிலீஃப்! 
 படத்தில் இரண்டு நாயகிகள். காதல் காட்சிகளில் நடித்து டூயட் பாடி , திடீரென்று மறையும் ஒரு நாயகி. கோடிஸ்வரன் தன் காதலை சொல்லும் முன்பே இன்னொருவனுக்கு கழுத்தை நீட்டும் மற்றுமொரு நாயகி. சில காட்சிகளில் வந்தாலும் அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார் மஞ்சுளா. ஆர்ப்பாட்டம் இன்றி பாந்தமாக நடிக்கிறார் ஜெயலலிதா. பாத்திரத்துடன் பொருந்துகிறார். எல்லாப் படங்களிலும் கம்பீரமாக வரும் சுந்தரராஜன் இதில் அடக்கமாக வேலையாளாக வந்து அடக்கி வாசிக்கிறார். இவர்களுடன் பேபி சுமதி, ராஜவேலு, உசிலைமணி ஆகியோரும் நடித்திருந்தனர். 
 படத்தில் சிவாஜியின் பாத்திரத்தின் மீது ஏற்படும் அநுதாபத்துடன் முத்துராமனின் பாத்திரத்தின் மீதும் அநுதாபம் ஏற்படவே செய்கிறது. தாரம் இன்றி குழந்தையுடன் வாழ்கிறார், தொழிலில் வளர கிடைக்கும் சந்தர்ப்பத்தை பற்றிக் கொள்ள காட்டும் துடிப்பு, அதே சமயம் சுய கௌரவத்தையும் இழக்க தயாரில்லை , பழைய முதலாளி மீது காட்டும் நன்றி என்று தன் நடிப்பின் மூலம் தன்னை நிலை நாட்டுகிறார் முத்துராமன். 
படத்துக்கு சிவாஜி ஒரு தூண் என்றால் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் , விஸ்வநாத் ராய் மூவரும் ஏனைய தூண்களாகிறார்கள். கூந்தலுக்கு பூ சூடி ஊர்வலத்தில் விட்டாரோ, அன்பு நடமாடும் கலைக் கூடமே , ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு, எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது ஆகிய பாடல்கள் எல்லாமே இனிமை , இனிமை ! 
 இந்தப் படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று பாடல் காட்சி கதைப் படி சென்னையில் நடக்கிறது. ஆனால் இக் காட்சி சிங்கப்பூரில் ஒரு சுடுகாட்டில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்டது. சுடுகாட்டு படப்பிடிப்பின் போது தான் குறித்த பாடலின் ஒலி நாடாவை அவர்கள் சிங்கப்பூருக்கு எடுத்து வரவில்லை என்ற விபரம் தெரியவந்தது. சென்னையில் ஏற்கனவே கேட்டு ஓரளவு நினைவில் இருந்த வரிகளுக்கு ஏற்ப வாயசைத்து சிவாஜி நடிக்க, துரமாகவும், அருகிலுமாகவும் காட்சிகள் படமாகின. பின்னர் சென்னை திரும்பிய பின் படத் தொகுப்பாளர் கந்தசாமியும், திருலோகச்சந்தரும் ஒவ்வொரு பிலிம்மையும் பார்த்து, பார்த்து காட்சிகளை பாடலோடு இணைத்து முழுமை பெற செய்தார்கள். 
இப் படம் உருவான சமயத்தில் சிங்கப்பூர் அரசு கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த தமிழ் படக் கலைஞர்களை சிங்கப்பூருக்கு அழைத்திருந்தது. படத் தயாரிப்பாளர் ஏ. எல் .சீனிவாசன் தலைமமையில் சிவாஜி உட்பட பலர் இதில் கலந்து கொண்டார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன்தான் மனிதன் படத்தின் சில காட்சிகளையும் , மூன்று பாடல்களையும் அங்கே படமாக்கி விட்டார்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! 
விஸ்வநாத் ராயின் கமரா சிங்கப்பூரின் அழகை கொள்ளையடித்து விட்டது. முதல் தடவையாக சிவாஜி படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பஞ்சு அருணாசலத்துக்கு இப் படத்தில் கிடைத்தது. சிவாஜிக்கு பிடித்த இயக்குநரான திருலோகச்சந்தருக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடத்தில் இல்லாத சில காட்சிகளை உருவாக்கி படத்தை தமிழில் செம்மைப் படுத்தினார் அவர். 1975ம் ஆண்டு இவர் இயக்கத்தில் மூன்று சிவாஜி படங்கள் வெளி வந்தன. அன்பே ஆருயிரே, Dr சிவா, அவன்தான் மனிதன் , இம் மூன்றிலும் அவன்தான் மனிதன் தான் வெற்றிப் படமானது. 
 படத்தில் சிவாஜி வாழும் மாளிகைக்கு ஆனந்த பவன் என்று பேர். அடிக்கடி இது ஆனந்த பவன் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்கிறார் சிவாஜி. காமராஜர் மறையும் வரை அவரோடு இருந்து விட்டு , அதன் பின் இந்திரா காந்தியின் காங்கிரசில் வேகமாக சேர்ந்த சிவாஜி , நேருவின் பரம்பரை இல்லமான ஆனந்த பவன் இல்லத்தின் பேரை தான் வாழும் இல்லத்தின் பேராக படத்தில் வைத்துக் கொண்டார். 
 படம் தான் ஒரே சோகம் என்றால் அதில் நடித்த ஒரு நடிகரும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு இவ்வுலகில் இருந்து நிரந்தரமாக விடை பெற்றுக் கொண்டார். ஆம் , படம் வெளிவந்த போது அதை பார்க்க அதில் நடித்த சந்திரபாபு உயிருடன் இல்லை!
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment