-சங்கர சுப்பிரமணியன்.
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொல்லழகு என்பதைப் போன்று தமிழிக்கு சிறப்பு ழகரம் அழகு. எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழிபோல் சிறப்பு ழகரம் போன்ற எழுத்து எம்மொழியிலும் இல்லை. அதன் எழுத்து வடிவமின்றி அதனை நாவைச் சுழற்றி உச்சரிக்கும் முறையும் இணைந்துதான் சிறப்பு ழகரம் என்ற தகுதியை அதற்கு வழங்கியுள்ளது.
தமிழ் என்று எழுதும்போது சிறப்ப ழகரத்தை எழுதினாலும் அதன் மேல் புள்ளி வைக்காது போனால் அது பொருளற்றே நிற்கும். தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால் தமிழை வாழ்வதற்கு ஏற்ற பணியாகத் தேர்வு செய்தவர் வாழும் பணியாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அவர் வேறு யாருமல்ல உலகத் தமிழர் யாவரும் அறிந்த பல நூல்களுக்குச் சொந்தக்காரரான அன்பரும் நண்பருமான எழுத்தாளர் திரு. லெட்சுமணன் முருகபூபதி அவர்கள்தான். ஒரு ஆறு என்றால் அது சீராக ஓடிக்கொண்டிராது. அகன்றும் குறுகியும் வேகமாகவும் மெதுவாகவும் சுழல்கள் நிறைந்தும் சுழல்கள் அற்றும் ஓடிக் கொண்டிருப்பதுதான் ஆறு.
அவற்றையெல்லாம் கடந்து நீடித்து நிற்பதுதான் நட்பு. அந்த வித்தையை எவ்வாறு கற்றார் எங்கிருந்து கற்றார் என்று எல்லோருமே வியக்கும்படி நட்பை பேணி வளர்த்து வருபவர் திரு. முருகபூபதி அவர்கள்.
கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வரும். வரத்தான் செய்யும். எவராவது ஒருவர் எங்களுக்குள் கணவன் மனைவி என்ற சண்டை சச்சரவுகள் வருவதில்லை என்றால் அவர் மிகவும் சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை. நாம் ஒரு தவறைச் செய்துவிட்டோம். நடிகர் திலகம் என்ற பட்டத்தை சண்டை சச்சரவுகள் வந்ததில்லை என்று கூறுபவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்.
நட்புக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் வரவே செய்யும். அப்படியெல்லாம் எங்களுக்குள் இல்லை என்றால் அவர் துதி பாடுவதில் கண்டிப்பாக முனைவர் பட்டம் பெற்றவராகத் இருப்பார். ஆனால் எல்லோரையும் நட்பு என்ற கூட்டுக்குள் தக்கவைத்து அரவணைத்து செல்வதென்பது ஒரு அற்புதமான கலை. அதைப் பெற்றிருப்பவர் முருகபூபதி அவர்கள்.
இக்கருத்தை ஆகஸ்ட் 15, 2025 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்பரும் நண்பருமான ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் தற்போதைய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரு. ஶ்ரீகந்தராசா அவர்கள் தெள்ளத்தெளிவாக தமது உரையின்போது எடுத்துரைத்தார்.
திரைப்பட பாடல்களில் வரும் அற்புதமான வரிகளை விரும்புபவன் நான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாகப்பிரிவினை என்ற படத்தில் ஒரு பாடல். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று தொடங்கும் பாடல். அதில் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ, சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் காண்பதுண்டோ என்ற வரிகள் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வரிகள்.
தனக்கு எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி முன்னைவிட உற்சாகமாக ஓடும் மாவீரர் முருகபூபதி. இப்படிப்பட்டவரைப் பற்றி எனக்கு மனதில் ஒரு கவலை இருந்தது. புராணங்களில் எதையாவது உறுதிப்படுத்த சான்றாக ஒரு துணைக்கதை வருமல்லவா? அது போல் என் கவலைக்கும் காரணத்தை சொல்கிறேன்.
பலர் சேர்ந்து சந்தையில் பார்த்துப் பார்த்து ஒரு செடியை வாங்கினார்கள். அதை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார்கள். உரமிட்டு உயரமாகவும் ஒய்யாரமாகவும் வளரவைத்தார்கள். மரமும் படர்ந்து வளர்ந்து நிழல் கொடுத்தது. சுவையுள்ள கனிகளையும்
கொடுத்தது. கனிகளை அனைவரும் இன்று சுவைத்து மகிழ்கிறோம்.
இவ்வாறு செடியாக நட்டு நிழல்தரும் மரமாக வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒருவர். அந்த மர நிழலில் எத்தனையோபேர் இளைப்பாறினர். ஆனால் இவரை அவர் வளர்த்த மரநிழலில் இளைப்பாறும்படி யாரும் சொல்லவில்லையே என்ற கவலை இருந்தது. இப்போது திரு. முருகபூபதி அவர்களை காலங்கடந்தேனும் காப்பாளராக்கியதில் கவலை மறந்து மனமகிழ்வடைகிறேன்.
நான் இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது வள்ளுவன்தான். எந்தன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற அவன் வடித்த குறள்தான். திரு. முருகபூபதி அவர்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் பார்த்துப் பழகியதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நண்பர் ஆவூரான் சந்திரன் அவர்கள் என்னை ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் கலச்சங்கம் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று முருக பூபதி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் நட்பும் சங்கத்துடன் தொடர்பும் ஏற்பட்டது.
நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் அல்ல. இருந்தாலும் நான் சங்கத்துக்கு புதியவன் என்று கூடப் பார்க்காமல் என்னை செயற்குழுவில் இணைத்தார். சங்கம் எப்போது ஆரம்பமானது எப்படி ஆரம்பமானது போன்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்ததோடு மட்டுமின்றி பற்பல ஆவணங்களையும் காட்டினார்.
இவற்றையெல்லாம் என்னிடம் விளக்கவோ ஆவணங்களைக் காட்டவேண்டிய அவசியமே இல்லை. அங்கு தான் அவர் உயர்ந்து நிற்கிறார். கொஞ்ச காலத்திலேயே துணைத்தலைவர் ஆனேன். அதன் பின்னர் எதிர்பாராதபடி நான் தலைவரானதை அழகு பார்த்தார்.
என்னைத் தலைவரானதற்கு மருத்துவர் திரு. நோயல் நடேசன் அவர்களும் ஒரு காரணம். என்னைத் தலைவராக்க முயன்றபோது நான் ஏற்கனவே மற்றொரு சங்கத்தில் தலைவராக இருப்பதால் சட்டப்படி முறையல்ல என்று மறுத்தேன். அப்போது திரு. நடேசன் அவர்கள் அந்த சங்கத்தின் செயல்பாடு வேறு இச்சங்கத்தின் செயல்பாடு வேறு என்று என்று கூறி சமரசம் செய்து சம்மதிக்க வைத்தார்.
நானும் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக சங்கத்தில் என்னால் முடிந்தவரை நேர்மையோடு பணியாற்றினேன். எனக்கு துணையாக தோளோடு தோள் கொடுத்து நின்றவர் முனைவர் திரு. கௌரிசங்கர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
குறிப்பாக வில்லிசையை சங்க நிகழ்ச்சியில் அரங்கேற்ற முதுகெலும்பாய் இருந்து முயன்றவர் அவர். என் பதவிகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகளே என் பணிகளை பறைசாற்றும். அன்று செயற்குழுவில் இருந்தோர்களும் அறிவார்கள்.
அன்றிலிருந்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். பதவியை மட்டும் அனுபவித்துவிட்டு பதவிக்காலம் முடிந்ததும் காணாமல் போய்விடக்கூடாது என்பதுதான் அது. ஆதலால் செயற்குழுவிலோ அல்லது உறுப்பினராகவோ தொடர்ந்து இருப்பேன் என்று உறுதி பூண்டேன். அந்த அடிப்படையில் தொடர்ந்து பயணித்து வருகிறேன்.
வெறுமனே பயணிப்பதில் பயனில்லை. தவறு வருமிடத்தில் தட்டிக் கேட்பதுமின்றி பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி மகிழ்வதுதான் பண்பு. ஆதலால் காப்பாளாராக சிம்மாசனம் ஏறியிருக்கும் திரு. முருபூபதி அவர்கள் தமிழ் என்ற வார்த்தையில் ழகரம் தன் மேல் புள்ளியைப் பெற்று மெய்யானது போல் தன் இருப்பை கா்பபாளராக ஆனதின் மூலம்
மெய்யாக்கியுள்ளார்.
ஆதலால் எழுத்தெனும் செங்கோல் கொண்டு இலக்கியமெனும் உலகை செம்மையாக ஆளவேண்டும் சீராளராக பவணிவரவேண்டும் என்று பாராட்டி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment