வைர நெஞ்சம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய படங்களுக்கு வசீகரிக்கும்


பெயர்களையே வைப்பதுண்டு. அந்த வரிசையில் 1972ன் ஆண்டு படத்தை வெளியிடுவேன் என்ற வைர நெஞ்சம் கொண்டு அவர் உருவாக்கிய படத்துக்கு வைத்த பெயர் தான் ஹீரோ 72. 


சிவாஜியை ஹீரோவாகப் போட்டு தயாரான இந்தப் படம் ஸ்ரீதரின் திரை வாழ்வில் மறக்க முடியாத வடுவாக நெஞ்சத்தில் நிலைத்தது. காரணம் துரித தயாரிப்பாக உருவாகி வெளிவரும் என்று எதிர்பார்த்த படம் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்து இழுபட்டு இறுதியில் படத்தின் பெயரும் மாற்றப் பட்ட பின்னரே திரைக்கு வந்தது. 

தமிழ், ஹிந்தி என்று இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படம்

தயாரானது. ஹிந்தியில் ஜித்தேன்திரா, ஹேமமாலினி, அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்க , தமிழில் சிவாஜி, முத்துராமன் , பத்மப்ரியா ஆகியோர் வேடம் ஏற்றனர். தமிழிலும் ஹேமாமாலினி நடிப்பதாக இருந்தும் பின்னர் அது நடக்காமல் , ஹேமாவின் முக சாயலை கொண்ட புது முகம் பத்மபிரியா ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன் பாலாஜி, சி ஐ டி சகுந்தலா , தூலிபாலா ஆகியோரும் நடித்தனர். 

ரசிகர்களின் ரசனை மாறி விட்டது , ஆக்சன் படங்களைதான் விரும்புகிறார்கள் என்ற அபிப்பிராயத்தில் ஓர் அடிதடி படத்தை சிவாஜியின் நடிப்பில் உருவாக்க முனைந்தார் ஸ்ரீதர். ஏற்கனவே ஹிந்தியில் எடுத்த தர்த்தி , அவளுக்கென்று ஓர் மனம் , அலைகள் படங்களின் தோல்வியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டிருந்த ஸ்ரீதர் இந்தப் படத்தின் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கையில் இப் படத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கிடைத்த சிவாஜியின் கால்ஷீட் நாளடைவில் கிடைக்காமல் போகவே படம் இழுபடத் தொடங்கியது. 1973ல் ஹிந்திப் படம் தயாராகி வெளியான நிலையில் தமிழ் படம் பாதி தான் முடிந்திருந்தது. 


தன்னிடம் இருந்து விலகி ஸ்ரீதர் எம் ஜி ஆரிடம் சென்றதே சிவாஜியின் கால்ஷீட் கிடைக்காமல் போக காரணம் என்று சொல்லப்பட்டது. அதே சமயம் அன்றைய கால கட்டத்தில் சிவாஜியும் மிக பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம் , அதுவும் ஒரு காரணமானது. இதனால் படத்தில் சில காட்சிகளில் அவருக்கு பதில் வேறு ஒருவர் குரல் கொடுத்த விந்தையும் நடந்தது. இறுதியில் ஹீரோ 72 , 72ல் வெளிவராமல் 1975ல் வைர நெஞ்சம் என்று பெயர் மாறி வெளியாகி தோல்விப் படங்களில் ஒன்றானது. 

ஆனாலும் ஸ்ரீதருக்கு என்றும் கை கொடுக்கும் கண்ணதாசன், எம் எஸ்

விசுவநாதன் கூட்டணி இதிலும் கை கொடுக்க தயங்கவில்லை . செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று, அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி, நீராட நேரம் நல்ல நேரம் பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன. 

ஸ்ரீதர் படம் என்றால் நாகேஷ் இருப்பார். இதில் நாகேஷும் இல்லை, மருந்துக்கும் நகைச்சுவையும் இல்லை. புது முகம் பத்மப்ரியா படபடவென்று பேசி நடிக்கிறார். அழகாகவும் தோன்றுகிறார். முத்துராமன் இருந்தும் வேஸ்ட். பாலாஜிக்கு பதில் வேறு எவரேனும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் ஹிந்தி நடிகை நடிப்பதாக இருந்த போதும் பின்னர் வில்லி வேடத்தில் சகுந்தலா நடித்தார். ஆக படத்தின் முழுப் பாரமும் சிவாஜியின் தலையிலேயே விழுந்தது. அவரும் தன் பங்குக்கு ஆட்டம், பாட்டம் ,காதல், சண்டை, என்று எல்லாம் செய்தும் வைரம் விலை போகவில்லை . 


படத்தை யு . ராஜகோபால் ஒளிப்பதிவு செய்தார். சண்டைக் காட்சிகளை மாதவன் அமைத்தார். சென்டிமென்டல், காமெடி படங்கள் எடுப்பதில் கில்லாடியான ஸ்ரீதருக்கு இந்தப் படம் பலத்த அடியாக அமைந்தது. ஆனாலும் ரசிக்கும் படி இயக்கியிருந்தார். 

சொந்த செலவில் சூனியம் வைப்பது என்பது சிவாஜி படங்களுக்கு

பொருந்தும். வருடத்தில் 365நாட்கள் இருந்தாலும் இவர் நடித்த படங்கள் இரண்டு ஒரே நாளில் வெளியாகி அதில் ஒன்று ஓடும் ஒன்று கவிழும். வைர நெஞ்சத்துக்கும் இதுவே நடந்தது. 1975ம் ஆண்டு தீபாவளிக்கு ஒரே நாளில் வைர நெஞ்சம், Dr சிவா இரண்டும் வெளியாகி Dr சிவா சுமாராக ஓட , வைர நெஞ்சம் முதலுக்கு மோசம் செய்தது. அதன்

பிறகு சிவாஜி நடிப்பில் ஸ்ரீதர் எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை!

No comments: