விரிசலும் உறவும்

 

31 Aug, 2025 | 02:43 PM

லோகன் பரமசாமி

பூகோள அரசியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி நெருக்கடிகள் பெரும் பொருளாதார நெருக்குதல்களை உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட தளம்பல் நிலை சீன-  இந்திய உறவை சுமூகமாக்கும் நிலைக்குத் தள்ளி உள்ளது.  

இந்திய - சீன உறவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல்கள் புதிய சமாதான புரிந்துணர்வு நோக்கி நகர்ந்து வருகிறன்றன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, புது டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் புதிய திருப்பு முனையை உருவாக்கி உள்ளது.  புதிய வர்த்தக உடன் படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன ,  சீன, இந்திய நகரங்கள் மத்தியில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடாகி உள்ளது. 

மேலும், ஊடகவியலாளர்களுக்கான பயண அனுமதி வழங்கல், கலாசார பரிமாற்றம், வியாபார வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற  பல புதிய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான  செயற்பாடுகள் ஆரம்பிக்க ஏற்பாடாகி உள்ளது .  அத்துடன், இன்று சீனா செல்லும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ  ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் உற்ற நண்பனாக கடந்த காலங்களில் இந்தியா  கணிக்க பட்டது. குறிப்பாக, சீனாவின் பிராந்திய விஸ்தரிப்பிற்கு எதிரான ஒரு பதில் பலம் தரக்கூடிய கூடிய ஒரு ஆசிய வல்லரசாக அமெரிக்காவினால் இந்தியா நகர்த்தப்பட்டு வந்தது.  இதற்கு ஏதுவாக ‘நாற்கர நாடுகள் கூட்டு’ என்ற ‘குவாட்’ அமைப்பில் இந்தியா சேர்த்து கொள்ளப்பட்டதற்கு சீன எதிர்ப்பில் இந்தியா துனை நிற்கும் என்ற எண்ணப்பாடே காரணமாக இருந்தது. 

ஆனால், இந்த நிலை இன்று பெரும் மாற்றம் காணும் நிலையை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  இந்தியப் பொருட்கள் மீதான தீர்வை வரியை 50 சத வீதமாக அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா மீது இந்தியா  அதிருப்தி வெளியிட்டது. 50 சதவீத வரி விதிப்பிற்கு அமெரிக்காவால் தரப்பட்ட காரணங்களாக  ரஷ்யாவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை பெருமளவில் இந்தியா கொள்வனவு செய்வதையும், ரஷ்ய மசகு எண்ணையை இந்தியா அதிகளவில் கொள்வனவ செய்வதையும் அமெரிக்கா குறிப்பிட்டது. 

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேற்கு சார்பு நாடுகள் விதித்திருக்கும் இந்த நிலையில், சர்வதேச வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு தேவையான டொலர்களை இந்தியாவே தனது வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக கொடுத்து வருகிறது என்று வொஷிங்டனில் ட்ரம்ப நிர்வாக  அதிகாரிகள் கூறினர்.  மேலும், ரஷ்ய எண்ணெய்  விற்பனையை பூர்த்திசெய்து வைக்கும்  ஒரு பிரதான முகவராக இந்தியா செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்தியா, அமெரிக்காவின் பங்காளி நாடாக விரும்பினால் முதலில் அமெரிக்காவின் பங்காளியாக செயலில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

அதிபர் ட்ரம்ப், இந்தியா மீதான வரி விதிப்பு மிக விரைவாக நடைமுறை படுத்தப்படும் என்ற அறிவித்ததுடன்  ”உக்ரேரேனில் கடுமையாக தாக்கி வரும் ரஷ்யாவுக்கு சாதகமான கொள்கை கொண்ட இந்தியா” என்ற கருத்தை வெளியிட்டார்.   மேலும் பிரேஸில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆபிரிக்க நாடுகளை அங்கத்துவராக கொண்ட  பிறிக்ஸ் நாடுகள் மத்தியில் இந்தியா மிக மும்முரமாக செயற்படுவதை சுட்டி காட்டியதுடன் ”பிறிக்ஸ் அமைப்பானது ஓர் அமெரிக்க எதிர்ப்பு அமைப்பு” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

அதேவேளை, இந்திய தரப்பில் நேர்மைக்கு மாறாக  ரஷ்யாவை தனிமைப்படுத்தவது ஏற்றுக் கொள்ள முடியாது  என்றதுடன், இந்தியாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் புது டெல்லி அதிக கரிசனை செலுத்தும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் கூறிவிட்டது. 

 பிரதமர் மோடி, இந்திய விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் புது டெல்லி மிக கவனமாக செயற்படும்,  தான்  இதற்கு எதிராக எந்த நாட்டுடனும் இணக்கப்பாட்டிற்கு வர முடியாது என்றும் கூறி விட்டார். 

இந்த நிலையிலேயே சீன  - இந்திய உறவில் மாற்றம் காணும் நிலை எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்திய  -  சீன எல்லைகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட படையினர் மத்தியில் கைகலப்பு மோதல் இடம்பெற்றது. 

இதனைத் தொடர்ந்து சீன தரப்பினால் எல்லையோர கண்காணிப்பு கோபுரங்களும் கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் சீனா நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்த காவல் கோபுரங்களையும் கூடாரங்களையும் விலக்கி கொண்டது. 

இதற்கு பதிலாக இந்தியா, சீன உல்லாசப் பயணிகளுக்கு பயண அனுமதி வழங்கும் சேவையை ஆரம்பித்தது.  அத்துடன், எல்லைகளை மீளவும் திறக்கும் பேச்சுகள் ஆரம்பமாகின. அண்மைய புது டெல்லி பயணத்தின் பொழுது வெளிவிவகார அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளிவிவகார அமெச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுகளில்  சீன, இந்திய தரப்புகள் புதிதாக எல்லையோர கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான துறைசார் நிபுணர் குழு அமைப்பற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

புதிதாக எழுந்துள்ள இந்த உறவு நிலையை ஒரு ”திடமான வளர்ச்சி” என்று இந்தியத் தரப்பில்  கருத்துக் கூறப்பட்டது.  அதேவேளை, சீனத் தரப்பில் இந்தியாவும் சீனாவும் எதிரிகள் போல் அல்லாது  பங்காளிகளாக  இருக்க வேண்டும் என்பதுடன் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை தனது தோழமை நாடாக  கடந்த கால அமெரிக்க தலைமைகள் கூறி வந்தன. சீனாவை தனிமைப்படுத்துவது அல்லது சீனாவினால் வளர்த்தெடுக்கபடும் பிராந்திய நாடுகள் மத்தியிலான செல்வாக்கை சிதைத்தல் என்ற நோக்கத்திலேயே கடந்த கால  வொஷிங்டன் நிர்வாகங்களின்  அமெரிக்க -  இந்திய உறவுகள் இருந்தன. 

ஆனால், இப்பொழுது அமெரிக்காவை தனிமைப்படுத்தவதிலும் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள் மத்தியில்  அமெரிக்கச் செல்வாக்கைக் கையாளுவதையும் முழு நோக்கமாக கொண்டு  இந்திய - சீன உறவு உருவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது. 

ஏற்கெனவே அமெரிக்க - இந்திய உறவு குறித்த ஒரு ஜேர்மானிய பத்திரிகை அண்மையில் வெளியிட்ட செய்தியில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நான்கு தடவைகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி அழைப்பில் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும்  மோடி இந்த தொலை பேசி அழைப்பை உதாசீனம் செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி கொண்டு வந்ததை எதிர்க்கும் முகமாகவே மோடி அத்தொலைபேசி அழைப்பை உதாசீனம் செய்ததாக அறியத் தரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்திய - அமெரிக்க உறவில் புது விரிசலும் இந்திய -  சீன உறவில் புதிய அத்தியாயமும் உருவாகுவதை வெளிப்படையாக காண முடிகிறது.    நன்றி வீரகேசரி 

No comments: