இலங்கைச் செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம்

நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்பு ! 

10 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் அரிசி முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ; அரச வாணிப கூட்டுத்தாபனம்

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

 தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் ; தமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்கிறது கனேடிய கன்சர்வேட்டிவ்




40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம் 

02 Jan, 2025 | 12:51 PM
image

“கிளீன் சிறீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அவதியுற்ற மக்களுக்கான புதிய பஸ் சேவை மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசமான மாவலையாறு கிராமத்துக்கு செங்கலடி ஊடான இந்த பஸ் சேவையை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆரம்பித்துவைத்தார்.

ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் முகாமையாளர் எம்.எம் ஷைனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் ஆர்.எம். விஜித தர்மசேன உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர் 

செங்கலடியில் இருந்து காலை வேளையில் புறப்படும் இந்த பஸ் மாவலையாறு, மாவடிச்சேனை, சிவத்த பாலம் உட்பட பல கிராமங்களின் ஊடாக சுமார் 28 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. 

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பஸ் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், இந்த பஸ் சேவையை ஆரம்பித்ததில் திருப்தியடைவதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். 

நன்றி வீரகேசரி 





நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்பு ! 

Published By: Digital Desk 2

02 Jan, 2025 | 11:20 AM
image

யாழ்.நெடுந்தீவிலிருந்து - குறிகாட்டுவான் நோக்கி பயணித்த பயணிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவில் இருந்து நேற்று புதன்கிழமை(01) பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட பயணிகள் படகானது நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்காமல் நின்றுள்ளது. 

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.

படகு கடல் கொந்தளிப்பினால் தத்தளித்த நிலையில் இதனை அவதானித்த மீன்பிடி படகுகள் கரைக்கு தகவல் கொடுத்த நிலையில், நெடுந்தீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான படகின் உதவியுடன் பயணிகள் படகு மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர். சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




10 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் அரிசி முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ; அரச வாணிப கூட்டுத்தாபனம்

01 Jan, 2025 | 09:34 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10 ஆயிரத்து 400 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 7 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (01)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய முதலாவதாக விலைமனுகோரல் செய்யப்பட்ட 5200 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் 10400 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

இரண்டாம் கட்டமாக 28 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை  இம்மாதம் நடுப்பகுதியில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தையில் நிலவும் அரசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரமளவில் தீர்வு எட்டப்படும்.

அரச கட்டமைப்பின் ஊடாக நாடு அரிசி மாத்திரமே இதுவரையில் இறக்குமதி செய்யப்படும். தனியார் துறையினர் சுமார் 80 ஆயிரம் மெற்றிக் அரிசி இறக்குமதி செய்துள்ளனர்.

அரிசி இறக்குமதிக்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட காலவகாசம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையும். அரிசி விற்பனை தொடர்பிலான கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாகவே சந்தையில் அரிசியை விநியோகிக்க வேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி 





தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

Published By: Digital Desk 7

01 Jan, 2025 | 04:29 PM
image

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது “புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு தொல்லை தராதே”இ “தொல்பொருள் அதிகாரிகளே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்காதே”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களையும் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குறித்த ஆர்ப்பாட்டத்தில் குச்சவெளி கிராம சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

குறித்த காணிகளை கையகப்படுத்தும் முகமாக அப்பகுதிகளில் எவ்வித அறிவித்தலும் இன்றி இரவோடு இரவாக பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் பிரதேச சபைக்குச் சொந்தமான 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத்தொகுதிகளுடன் காணப்பட்ட பகுதியும் மற்றுமொரு இடத்தில் நெற் களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டடங்களுடன் கூடிய பகுதியையும் தொல்லியலுக்குரிய இடமாக கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த சட்ட விரோதமான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பான மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி 







 தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் ; தமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்கிறது கனேடிய கன்சர்வேட்டிவ்

05 Jan, 2025 | 05:49 PM
image

 (நா.தனுஜா)

கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை. ஏனெனில் மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.   

எனவே அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.

தமிழர் மரபுரிமை மாதத்தை முன்னிறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

நாம் ஜனவரி மாதம் முழுவதும் கடும் உழைப்பாளிகளைக் கொண்டாடுகின்றோம். கனடாவில் வாழும் தமிழர்கள் அவர்களது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, பல தசாப்தகாலமாக எமது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.

தமிழர்களின் இப்பாரம்பரிய வரலாறு பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அவர்களது பாரம்பரிய கலாசாரமானது மொழி, இசை, கலை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகின்றது.

பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஊடாக வழிநடத்தப்படும் கனேடியத் தமிழர்களால் இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வணிக நிலையங்கள், கலாசார அமைப்புக்கள் மற்றும் சமூக ஊடக நிலையங்கள் என்பன கனேடிய சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இருப்பினும் நாம் கொண்டாடும் இந்த தமிழ் மரபுரிமை மாதம் துரதிஷ்டவசமாக அதற்குரிய முழுமையான கௌரவத்தை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

எனவே கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியினரான நாம் இந்த தமிழர் மரபுரிமை மாதத்திலும், இவ்வாண்டு முழுவதும் மேற்குறிப்பிட்டவாறான மிகமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்துவோம்.

அதேவேளை கனடாவில் வாழும் தமிழ்ச்சமூகத்தினரைக் கொண்டாடுவதில் நாம் பெருமையடைகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்      நன்றி வீரகேசரி 





No comments: