29 Dec, 2024 | 06:28 PM
(லியோ நிரோஷ தர்ஷன்)
ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக பல்வேறு கிசு கிசுக்கள் தேசிய அரசியலில் உலா வருகின்ற நிலையில், அரசாங்கமும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சவால் மிக்கதொரு ஆண்டாக இருக்கும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டது.
ரணிலின் இந்திய விஜய கிசுகிசுக்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புகள் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பினை ருவன் விஜேவர்தன மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரிடம் கையளித்து விட்டு ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து மேலதிக தகவல்களை அறியும் வகையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தொலைபேசி ஊடாக வஜிர அபேவர்தனவை தொடர்புக் கொண்டு கேள்வியெழுப்பியிருந்தனர்.
'என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுப் பேருரையை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார். ஏனெனில் வாஜ்பாயிக்கும் ரணிலுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் கடந்த காலங்களில் இருந்துள்ளன. கடந்த வருடமும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய காரணிகளின் அடிப்படையில் செல்ல முடியாமல் போனது. தற்போது ஓய்வில் இருக்கின்ற நிலையில் இம்முறை தவிர்க்காமல் சென்றுள்ளார். எனினும் இனிவரும் நாட்களில் சற்று அதிகமாக அரசியல் சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளார். அப்போது ஓய்வு எடுப்பது கடினம்' என தொலைப்பேசியில் கேள்வியெழுப்பியவர்களுக்கு பதிலளித்திருந்தார்.
இரு மாதங்களுக்குள் ரணில் விக்கிரமசிங்க இருமுறை இந்தியா சென்றமை தொடர்பில் தேசிய அரசியலில் கிசு கிசுக்கள் எழுந்தன. குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா செல்வதற்கு முன்னரும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு பின்னருமாக ரணில் இந்தியா சென்றமையினாலேயே பல்வேறு கிசு கிசுக்கள் தேசிய அரசியலில் ஏற்பட காரணமாகியது. இந்த இரு விஜயங்களின் போது சுமார் ஒரு வார காலம் வரை ரணில் விக்கிரமசிங்க தங்கியிருந்துள்ள நிலையில் தற்போதைய விஜயத்தின் போது ஜனவரி 2 ஆம் திகதியே நாடு திரும்ப உள்ளார்.
அரசாங்கத்தின் செயல்பாடுகள்
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது. இதன்போது அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன. ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் பதில் பொதுச் செயலாளர் கிஷான் தியடோர் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
'ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாட்டு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். உண்மையில் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எமது ஆர்வமும் நிலைப்பாடும் ஆகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் திட்டங்களுக்கு எதிராக செயல்பட போவதில்லை. ஆனால் அவர்களால் முடியாது போனால் மீண்டும் நாட்டை பொறுப்பேற்க கூடிய வலுவான கூட்டணி ஒன்று இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருவதாக' ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன கூறினார்.
'அது உண்மைதான். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்து செயல்பட்டவர் களுக்கு நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் அனுபவம் உள்ளது. எவ்வாறாயினும் பிளவுப்பட்டு நாட்டை முன்னேற்ற முடியாது. எனவே தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர் தரப்புகளை ஒன்றிணைத்து முன்னோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்' என இதன் போது வஜிர அபேவர்தன கூறினார்.
பெண்கள் - இளையோர் குழுக்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் பிரிவு மற்றும் இளையோர் அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து வலுவான அரசியல் செயல்திறன் குழுவை உருவாக்குவது குறித்து பலதரப்பட்ட பேச்சுகள் இதன் போது முன்னெடுக்கப்பட்டது. புதிய தலைவர்களை உருவாக்குதல் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசேட அறிக்கைகளை தயாரித்து தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
'சர்வதேச மெய்வல்லுனர் வீரர் ஹுசைன் போல்டின் இடத்திற்கு பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளில் கூட பங்கெடுக்காத ஒருவரை நியமித்தது போன்றதொரு நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே போட்டி எப்போதும் கை மாறலாம். எமது வீரர்களை அனைத்து வகையிலும் தயார்ப்படுத்தி வைக்க வேண்டும்' என வஜிர அபேவர்தன கூறினார்.
'இதனை செவிமடுத்த கட்சியின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்காக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற யோசனையை ஏற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் தேவையான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.
'நாட்டிற்கு சிறந்த வலதுசாரி கொள்கை கொண்ட அரசியல் முகாம் ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்' என குறிப்பிட்ட ருவன் விஜேவர்தன ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.
ஐந்து பிரேரனைகள்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் ஐந்து சட்ட பிரேரணைகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டம், இலங்கை மத்திய வங்கிச் சட்டம், தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டம், பொது நிதி மேலாண்மை சட்டம் மற்றும் தேசிய வருமான சட்டம் என்பனவை இல்லா விடின் நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து விடும்.
எனவே இந்த ஐந்து சட்டங்களில் எதனை நீக்கினாலும் நாடு பாதாளத்தில் விழுந்து விடும். இந்த சட்டங்களுக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை தற்போதைய அரசாங்கத்தில் காணக்கூடியதாக உள்ளதாக வஜிர அபேவர்தன கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment