இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்!
குறிப்பிட்ட தொன்னூறு ஆண்டுகளுக்குள், இலங்கையில் நேர்ந்த
அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.
காலிமுகத்தில் கடலோடு சங்கமிக்கும் சிற்றேரியின் அருகே தினகரனும்
இதர ஆங்கில, சிங்கள ஏடுகளும் வெளியாகும் மாபெரும் கட்டிடம் அமைந்திருப்பதனால்,
தினகரனுக்கும் ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என்ற நாமம்
கிட்டியிருக்கிறது.
இதன் நிறுவனர் ( அமரர் ) டி. ஆர். விஜேவர்தனா.
தினகரன், 1932
ஆம்
ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது.
ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற
பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன்.
தினகரன் முதலாவது இதழ் 1932 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் 15 ஆம் திகதி வெளியானது. தினகரன் வாரமஞ்சரி ( ஞாயிறு பதிப்பு ) 1948 மே மாதம் 23 ஆம் திகதி அதன்
முதல்வெளியீட்டை வரவாக்கியது.
தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம்
பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண
ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் க. கைலாசபதி , ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினர்.
தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப் பத்திரிகையாக்கிய பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் பணியாற்றிய வீ. கே. பீ. நாதன், பின்னாளில் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் மாலைத்தினசரியான தந்தியில் ஆசிரியரானார்.
பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் முத்தமிழ் விழாவை தினகரன் பத்திரிகை நடத்தியது. யாழ்ப்பாணத்திலும் தினகரன் விழா நடந்தது. இவ்விழாவில் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் அகிலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சிவாஜி கணேசனுக்கு இவ்விழாவில்தான் கலைக்குரிசில் பட்டமும்
வழங்கப்பட்டது.
ஸ்ரீகாந்தன், எஸ். அருளானந்தம், சிவா. சுப்பிரமணியம், முன்னர் வீரகேசரி – தினபதியில் பணியாற்றிய பத்திரிகையாளர் எஸ். தில்லைநாதன், மற்றும் கணபதிப்பிள்ளை குணராசா ஆகியோர் ஆசிரியர்களானார்கள். தற்போது தேவதாசன் செந்தில் வேலவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
சிவகுமார் பணியாற்றி வருகின்றார். அவர் இலத்திரனியல் ஊடகங்களிலும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். வாரமஞ்சரி பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அருள் சத்தியநாதன் ஆவார். அவர் அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் பணியாற்றியவர். அருள் சத்தியநாதன் சிறந்ததொரு கட்டுரை எழுத்தாளர். இலக்கண சுத்தமாக எழுத வல்லவர்களில் அவரும் ஒருவர்.
என். எம். அமீன், ஈ.
கே. ராஜகோபால், மு. கனகராஜன், எம். எச். எம். சம்ஸ், மனோகரி சபாரத்தினம்,
ஸெய்னுல் ஹுஸைன், எஸ். பாலசிங்கம், எம். ஏ. எம். நிலாம், மல்வானை கியாஸ், அபூபக்கர்,
ஆனந்தி பாலசிங்கம், சித்திக் காரியப்பர், பற்றீஷியா ஆரோக்கியநாதர், ஏ.கே.எம். ரம்ஸி,
லக்ஸ்மி பரசுராமன், எம்.பிரசாத் உட்பட பலர் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
ஏரிக்கரையிலிருந்து அமுது என்ற கலை, இலக்கிய, சமூக இதழும்
சிறிது காலம் வெளியானது. இதன் ஆசிரியர் குழுவில் மனோரஞ்சன், சிதம்பரப்பிள்ளை சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த நூலை அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எழுத்தாளரும், சர்வதேச அரசியல் விவகாரங்களை எழுதிவரும் ஆய்வாளருமான ஐங்கரன் விக்னேஸ்வரா தொகுத்து வெளியிட்டார்.
பாரதி இயல் ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் பேராசிரியர் க. கைலாசபதி. அவரது
தினகரன் பதவிக் காலப்பகுதியில் இருவேறு
கருத்தியல்கள் இலக்கிய உலகில் நிலவியதாக இலக்கிய ஆய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
”பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்ச்சிறப்பு பட்டதாரியாக
அவர் முதல் வகுப்பில் சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ அல்லது உயர் கல்வி ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ வெளிநாடு சென்றோ, உயர்ந்திருக்கவோ கூடும். ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதில் கைலாஸ் குறியாயிருந்தமை தெளிவாகும்.
கைலாஸ் பத்திரிகைத்துறையுட் புகுந்த காலம் மேலைத்தேய நாகரீகமும் ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத்தொடங்கிய காலம். பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத்தொடங்கிய காலம். சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழ்ப்பேசும் மக்கள், இந்நாட்டில், தங்கள் இருப்பு, வரலாறு, வருங்காலம், தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர சிந்திக்கத் தலைப்பட்ட காலம். தமிழ்மொழி உபயோகச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை, சுதேச மொழி முக்கியத்துவம் பெறத்தொடங்கியமை, புதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தமை, அதுவரை ஆங்கிலப் பத்திரிகைகளே பெற்றிருந்த அரசியல் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைந்த சிங்கள, தமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க வாய்ப்புத்தோன்றியமை, வெளிநாட்டுச் செலாவணிக்கட்டுப்பாடு காரணமாக இந்திய எழுத்தாளர்களுக்குப் பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை — இவை யாவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை. ” என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன், தனது பன்முக ஆய்வில் கைலாசபதி என்ற கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்
தினகரனின் தொடக்க
காலப்பகுதியில், சிறுகதைகள், தொடர்கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட்
ரோட்டையும் மெரீனா பீச்சையும் பகைப்புலமாகக்கொண்டு
எழுதினார்கள். இதனால் அன்றைய ஈழத்து தமிழ்த்தேசிய
படைப்பிலக்கியம் தேக்கம் கண்டது. அதனை மாற்றியவர்தான் கைலாசபதி.
அவர் இலங்கை எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம்
தந்து ஊக்கமளித்தார். பத்திரிகையின் செல்நெறியை
வகுத்தார்.
கைலாசபதிக்குப்பின்னர், தினகரன் ஆசிரியராக பொறுப்பேற்ற
இ. சிவகுருநாதன், யாழ். பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெறுவதற்கு
சமர்ப்பித்த ஆய்வில், ” தேசிய இலக்கியம்
உருப்பெற்று வளர்ச்சிகாண கைலாசபதி களம் அமைத்துக்கொடுத்தார் ” என்று
குறிப்பிட்டிருப்பதையும் பேராசிரியர் தில்லைநாதன் ஊடாக
நாம் அறிகின்றோம்.
கைலாசபதி, தான் மாத்திரம் வளராமல், தன்னைச்சூழ
இருந்தவர்களையும் வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும்
படைப்பாளிகளாயினும் கலைஞர்கள், ஓவியர்கள்,
கார்டுனிஸ்ட்டுகளாயினும் சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள்
அனைவரும் தத்தமது துறைகளில் ஆரோக்கியமாக
வளர்வதற்கு உற்றதுணையாக விளங்கியவர்.
மகாகவி பாரதியாரும்
பத்திரிகையாளர்தான். பாரதியாரைச் சுற்றியும்
எப்பொழுதும் நண்பர்கள் இருப்பர் என அவரது வரலாற்றிலிருந்து
தெரிந்துகொள்கின்றோம்.
அவர்கள்
இருக்குமிடத்தில் வாதங்களும் இடம்பெறும். யார் யார் என்ன
எழுதியிருக்கிறார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல்கள்
நிகழும். மொழிபெயர்ப்புகள் தொடர்பாக பேசப்படும்.
கைலாசபதியும் பாரதியைப்போன்றே தமக்கு
நெருக்கமான இலக்கிய நண்பர்களிடம் கருத்துப்பரிமாறி பணிகளையும்
ஒப்படைப்பார். யார் யார் தினகரனில் என்ன என்ன
எழுதவேண்டும் ? எத்தனை
நாளில் அவற்றை ஆசிரிய பீடத்தில் கொடுக்கவேண்டும்
என்று அந்த மின்னஞ்சல் யுகமில்லாத காலத்திலேயே கிட்டத்தட்ட, பத்திரிகை
ஆசிரியர் பாரதியைப்போன்றே இயங்கியவர்.
தமிழ் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பாரதி
சிந்தித்த கிருத யுகம் தொடர்பாக எழுதியிருக்கும் மு. தளையசிங்கத்திற்கு
கைலாசபதியின் மார்க்ஸீய சிந்தனைகளில் அபிப்பிராய பேதங்கள்
இருந்தன. கைலாசபதியை விமர்சித்தவர்களில் மு.தளைய சிங்கம்
முக்கியமானவர். இவர் கண்டியிலிருந்து வெளியான செய்தி எனும்
பத்திரிகையில் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற
தொடரில் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறார்:
” பத்திரிகைக்கொம்பனியின் பங்குதாரர்களின் உறவின்
காரணமாய் சந்தர்ப்பவசத்தால், தினகரன் ஆசிரியரான கைலாசபதி,
வர்த்தகத்தையே பிரதான நோக்கமாகக்கொண்டு இலக்கியத்தைப்பற்றி
அக்கறைப்படாது, அதுவரையும் வெறும் புதினத் தாளாக
இயங்கிவந்த ஒரு முதலாளி வர்க்கப்பத்திரிகைக்குள்
இலக்கியத்தைப்பற்றிய ஓரளவுக்குத் தரமான பொதுவுடமைக் கருத்துக்களை
மட்டும் புகுத்தவில்லை. கூடவே அதே வண்டியில் கா. சிவத்தம்பி,
ஏ.ஜே. கனகரத்னா போன்ற இலக்கியம் பற்றிய தரமான கருத்துக்களையுடைய வேறு
பலரின் செல்வாக்கையும் பக்கபலத்தையும் சேர்த்துக்கொண்டு
வந்தார்.”
கைலாசபதியை
தமது எழுத்துக்களில் விமர்சித்துவந்த மு.தளையசிங்கமும்
கூட தினகரனை இலக்கியத்தரமாக வெளியிடுவதற்கு அவர்
மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகளை விதந்து பாராட்டியிருக்கிறார்.
இவர்கள் இருவரதும் சிந்தனைகளை பாரதியின் வெளிச்சத்திலிருந்தே
இலக்கிய உலகம் அவதானித்திருக்கிறது.
கைலாசுக்குப்பின்னர், தினகரன் ஆசிரியப்பொறுப்பை
ஏற்ற இ.சிவகுருநாதன் மாத்திரமே இங்கு நீண்ட காலம்
பணியாற்றிய மூத்த பத்திரிகையாளராவார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்
சங்கத்தின் தலைவராக 1981 இல் தெரிவான சிவகுருநாதன், அதன் பின்னர் 1983
– 84
காலப்பகுதியிலும் அந்தப்பதவியை வகித்தவர்.
ஊடகத்துறையிலிருந்தவாறே சட்டமும் பயின்று, கொழும்பு
சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவுமிருந்த சிவகுருநாதன், மற்றும் ஒரு
பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம் தொடங்கிய கொழும்பு கலை இலக்கிய ,
பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பிலும் காலப்போக்கில் கொழும்பு
தமிழ்ச்சங்கத்திலும் தலைவராக இருந்தவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் அங்கு வெளியான
இளங்கதிர் என்னும் இதழின் ஆசிரியராகவும் இயங்கியிருக்கும் இவர், அங்கு இந்து
தர்மம் என்னும் மற்றும் ஒரு இதழ் வெளிவருவதற்கும் முக்கிய பங்காற்றியவர்.
ஈழத்து இலக்கிய உலகையும் இங்குள்ள படைப்பாளிகளையும்
நன்கு தெரிந்துவைத்திருந்த சிவகுருநாதன், தினகரனில் பல சந்தர்ப்பங்களில்
பாரதி தொடர்பான ஆசிரியத்தலையங்கங்களும் எழுதியுள்ளார்.
தினகரன் வாரமஞ்சரியும் காலத்துக்குக்காலம் பாரதி ஆய்வுகளை
வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. ருஷ்ய எழுத்தாளர் ஏ. ஷெலிஷேவ்,
கைலாசபதி, செ. கணேசலிங்கன், இளங்கீரன், சி. மௌனகுரு, சொக்கன், க. நவசோதி, மு.
கனகராசன், மு. சடாட்சரன், வேல் அமுதன், அராலி வெ.சு. நடராசா, அன்புமணி, க.
கந்தசாமி, அந்தனிஜீவா, பொன்னி ஆனந்தன், சகுந்தலா நல்லையா, ஏ. இக்பால், தமிழக
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் பாரதி பற்றிய ஆக்கங்களும் ஶ்ரீதேவகாந்தன்,
ஷெய்கு இஸ்ஸதீன், மு. துரைசாமி, பாண்டியூரான், வளவை வளவன், சி. ஆறுமுகம், முதலான
பலரின் கவிதைகளும் பாரதி நூற்றாண்டு காலத்தில் தினகரன் வாரமஞ்சரியை
அலங்கரித்திருக்கின்றன.
தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் காலம் அறிந்து
அதற்குப்பொருத்தமாகவும் பல விடயங்களைச்செய்திருப்பவர். பாரதி நூற்றாண்டு
காலத்தில்தான் பேராசிரியர் கைலாசபதி கொழும்பு அரசினர் மருத்துவமனையில் 1982
டிசம்பர்
மாதம் 6 ஆம் திகதி காலமானார்.
அவர் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் மறைவதற்கு முதல்நாள் டிசம்பர் 5 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியில் கைலாசபதி
எழுதியிருந்த ‘பாரதியின் புரட்சி’ என்ற கட்டுரையை சிவகுருநாதன்
வெளிவரச்செய்திருந்தார். கைலாசபதி மருத்துவமனைக்கட்டிலிலிருந்து
அதனையும் பார்த்துவிட்டுத்தான் நிரந்தரமாக கண்களை மூடினார் என்ற
துயரமான தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றோம்.
தினகரன் நாளேடு,
கடந்து சென்றிருக்கும், ஒன்பது தசாப்த
காலத்தில் அரசியல் , சமூகம், பொருளாதார, ஆன்மீகம்,
தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதுபோன்று , கலை, இலக்கிய செய்திகளுக்கும்
பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.
தினகரன் வாரமஞ்சரி, சிறுகதைகள், தொடர் கதைகள், மற்றும் இலக்கிய
புதினங்களுக்கு போதியளவு களம் வழங்கியிருக்கிறது.
தற்போது கனடாவில்
தமிழர் தகவல் மாத இதழை வெளியிட்டுவரும் எஸ். திருச்செல்வம் இலங்கையிலிருந்த
காலப்பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் “
அறுவடை “ என்ற இலக்கியப்பத்தியை எழுதிவந்தார்.
தற்போது இங்கிலாந்தில் புதினம் என்ற இதழை நடத்திவரும்
ஈ. கே. ராஜகோபாலும், தினகரனில் பணியாற்றிய காலப்பகுதியில் கலை, இலக்கியப்பத்திகளை எழுதினார்.
இவ்வாறு தினகரன் பாசறையில் வளர்ந்தவர்களும் புலம்பெயர்ந்து
சென்றபின்னரும் இலக்கியப்பணியும் ஊடகப்பணியும் தொடருகின்றார்கள்.
சமகாலத்தில் இலங்கையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும்
பாடசாலைகளில் ஊடகக்கற்கை நெறியில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.
பல மின்னிதழ்கள் தோன்றியிருக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக விளங்கியிருக்கும் தினகரனின்
92 ஆவது
பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.
--0—
No comments:
Post a Comment