உலகச் செய்திகள்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்

காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு

இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இடையே ‘பஞ்ச’ அபாயத்தை நெருங்குகிறது காசா

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

இந்தியாவுடன் அமெரிக்க பங்காண்மை உறுதி

கனடா படுகொலை: இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு


ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தாக்குதலில் இதுவரை 115 பேர் பலி

- 3 சிறுவர்களும் அடங்குவர்; 145 பேர் காயம்

March 23, 2024 3:21 pm 

– இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லை
– நேரடி தொடர்புடைய 4 பேர் உள்ளிட்ட 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகரில் உள்ள Crocus City Hall எனும் பாரிய அரங்கொன்றில் ஆயுததாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 115 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 145 பேர் காயமடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவில் இடம்பெறும் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் போன்று உடையணிந்த தாக்குதல்தாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு மற்றும் கைக்குண்டுகளை வீசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Piknik என அழைக்கப்படும் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிக்காக 6,200 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் மக்கள் நிரம்பியிருந்த நிலையில், இசைக்குழுவினர் மேடைக்கு வர இருந்த நிலையில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இசைக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

15 முதல் 20 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இத்தாக்குதல் காரணமாக இறந்தவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இத்தாக்குதலுக்கு ISIS என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

ஆயினும் இத்தாக்குதல் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு அகதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 4 பேர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த அரங்கு தீயில் எரிந்த பல்வேறு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. பீதியடைந்த ரஷ்யர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதையும், நான்கு துப்பாக்கிதாரிகள் தன்னியக்க துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டும் வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.

தாக்குதலின் போது தாக்குதல்தாரிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், குறைந்தது இரண்டு குண்டுகள் இதன்போது வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தலா 3 மில்லியன் ரூபிளும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபிளும் இழப்பீடு வழங்கவுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது

“இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகக் ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் மாதமளவில் ரஷ்யாவின் மொஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் மக்கள் அதிகம் கூடும் திருவிழா அல்லது நிகழ்ச்சியை குறிவைத்து இப்பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என இம்மாத ஆரம்பத்தில் ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், இது வேறு நோக்கத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை என்று ரஷ்யா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் குறித்து அமெரிக்க அரசாங்கம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாக்குதலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 






இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்

கட்டார் பேச்சில் முன்னேற்றமில்லை: மேற்குக்கரையில் 8 பலஸ்தீனர் பலி

March 22, 2024 8:52 am 0 comment

காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்று (21) 167 ஆவது நாளாகவும் தொடர்ந்ததோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடிக்கும் சூழலில், அவசர போர் நிறுத்தத்தை கோரும் நகல் தீர்மானம் ஒன்றை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.

பணயக்கைதிகளின் விடுதலையைப் பெறும் வகையிலும் தீர்மானத்தை அமைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். உலக நாடுகள் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சவூதி அரேபியாவுக்குச் சென்ற அவர் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காசாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து ஆறாவது முறையாக அவர் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் அமெரிக்கா காசா விவகாரத்தில் முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. எனினும் அண்மைய வாரங்களில் அது போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த பெப்ரவரியில் அல்ஜீரிய கொண்டுவந்த அவசர போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தின் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா மாற்று நகல் தீர்மானம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வந்தது.

இந்த மாற்றுத் தீர்மானத்தில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்று பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்புச் சபையின் ஆதரவு கிடைப்பதற்கு குறைவான வாய்ப்பே இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது வாக்கெடுப்புக்கு விடப்படும் திகதி பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆரம்பத்தில் சவூதி அரேபியா சென்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசரை சந்தித்த பிளிங்கன் தொடர்ந்து எகிப்து சென்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து விட்டு இஸ்ரேல் செல்லவுள்ளார்.

கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வரும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த நகல் தீர்மானம் வெளியாகியுள்ளது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பு சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் பாதகமாக பதில் அளித்திருப்பதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முன்மொழிவு தொடர்பில் ஆக்கிரமிப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி எமது சகோதரர்களுக்கு மத்தியஸ்தர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் அளித்திருந்தனர்… பொதுவாக பாதகமான பதிலே கிடைக்கப்பெற்றிருப்பதோடு கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கப்படவில்லை… உண்மையில், இது மத்தியஸ்தர்கள் முன்னர் வழங்கிய ஒப்புதலை திரும்பப் பெறுவதாக உள்ளது’ என்று பெய்ரூட்டில் புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

32,000 தாண்டிய உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

‘நாம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது குண்டு வெடிப்புகள் கேட்க ஆரம்பித்தன’ என்று காசா குடியிருப்பாளரான மஹ்மூத் அபூ அரார் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். தெற்கு நகரான ரபா மீது புதன்கிழமை இரவு இஸ்ரேல் சரமாரித் தாக்குதலை நடத்தியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வெடிப்புகள் பூகம்பம் போன்று இருந்ததோடு இடிபாடுகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுக்க வேண்டி இருந்தது என்றும் அவர் விபரித்தார்.

தற்போதைய மோதலின் மையப்புள்ளியாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை மாறியுள்ளது. இங்கு பலஸ்தீன போராளிகள் மறைந்திருப்பதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் நான்கு நாட்களுக்கு மேலாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று 140க்கும் அதிகமான போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியது.

எனினும் இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த மருத்துவமனையை சூழவிருக்கும் குடியிருப்பு பகுதிகள் மீதே கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் நோயாளிகள் மத்திரமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்குள்ள மக்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் சிவில் கட்டமைப்பு பெரும்பாலும் வீழ்ச்சி கண்டிருப்பதோடு 2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்தப் பகுதி பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

காசா மோதலுக்கு மத்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்குள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் நேற்று நடத்திய சுற்றிவளைப்பில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நூர் ஷம்ஸ் முகாமில் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவரின் உடலை பலஸ்தீன செம்பிறைச் சங்கம் எடுத்துச் சென்றது’ என்று அந்த அமைப்பு எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதில் வான் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருப்பதாக செம்பிறை சங்கம் கூறியது.

இதன்படி ஆக்கரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனின் நகரில் கார் ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இரு இஸ்லாமிய ஜிஹாத் போராட்டக் குழுவின் தளபதிகள் உட்பட மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லாவில் அல் அமரி அகதி முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக்கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதலில் 430க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு

- 32 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

March 21, 2024 6:57 am 

காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் காசாவில் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் காசாவுக்கு குறிப்பிடத்தக்க உணவுகள் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடும் பட்டினியால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, பிறந்த குழந்தைகள் எடை குறைவு காரணமாக உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 27 பேர் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கடைசியாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காசாவுக்கு பல நாடுகளும் வானில் இருந்து உதவிகளை போட்டு, தொண்டு நிறுவனம் ஒன்று கடல் மார்க்கமாக விநியோகப் பாதை ஒன்றை ஆரம்பித்தபோதும் தரை வழியாக உதவிகள் செல்வது தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறான உதவி விநியோகங்களே செயல்திறன் மிக்கது என தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதில் உதவிகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் வடக்கு காசாவில் உள்ள 300,000 மக்கள் மே மாதத்தில் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா ஆதரவு பெற்ற புதிய அறிக்கை ஒன்று மதிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் உதவிகளை முடக்கி இருப்பதாகவும் இது பட்டினியை போர் முறையாக பயன்படுத்துவதற்கு சமமானது என்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் (19) குறிப்பிட்டிருந்தார்.

உதவி வாகனங்கள் மீது தாக்குதல்

எவ்வாறாயினும் உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவின் குவைட் சுற்றுவட்டப்பாதையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதவி லொறிகளை நோக்கி மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில் உதவி லொரிகள் மற்றும் அதற்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. இவ்வாறான தாக்குதல்களில் 400க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டடங்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று இடம்பெற்ற இவ்வாறான ஒரு தாக்குதலில் வீடு ஒன்று இலக்கு வைக்கப்பட்டதோடு அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தாக்குதல் இடம்பெற்ற விரைவில் அங்கு சென்ற அல் ஜசீரா செய்தியாளர், இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்படுவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மூன்று மாடிக் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான வடக்கில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட கடுமையான சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

அல் ஷிபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் தெற்கை நோக்கி செல்லும்படி அவர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டிருந்தது.

அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பெண் ஒருவர் தமது அனுபவத்தை விபரித்துள்ளார். ‘இஸ்ரேலிய வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுக்கு இடையே நடப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டேன். சிறுவர்கள் பெரும் வேதனையை சந்தித்ததோடு டாங்கிகள் எம்மீது சூடு நடத்தின’ என்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் அல் ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார்.

‘காசா காசாவாக இல்லை. அனைத்து இடங்களும் அழிந்துள்ளன. மூன்று நாட்கள் உண்ணாமல் இருந்தோம். நான் மரணிக்கப்போவதாக உணர்கிறேன்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 104 பேர் கொல்லப்பட்டு 162 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,923 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 74,096 பேர் காயமடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பின்றி தொடரும் பேச்சு

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதோடு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவொன்று எட்டப்பட்டதாக கூறுவது முன்கூட்டியதாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை தொடர்பில் அவதானத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் திட்டமிட்டு வரும் காசாவின் ரபா நகர் மீதான தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தையில் அது பாதகமான விலைவையே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி இஸ்ரேலிய தரைப்படை நுழையாத காசாவின் ஒரே பிரதான நகராக இருந்து வருகிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் திட்டத்தை பூர்த்தி செய்ய ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியமாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார்.

கட்டாரில் இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கு தலைமை வகிக்கும் இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ, இஸ்ரேல் போர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதில் டொஹாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பதில் முன்மொழிவுகள் தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் அவநம்பிக்கை இருப்பதாக பெயர் குறிப்பிடாத இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் சென்னல் 12 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், உண்மையில் உடன்பாடு ஒன்றை நாடுகிறாரா அல்லது காலத்துடன் விளையாடுகிறாரா என்பது தொடர்பில் சந்தேகத்தை அந்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 




இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இடையே ‘பஞ்ச’ அபாயத்தை நெருங்குகிறது காசா

March 20, 2024 6:18 am

காசாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் தொடர்பில் சர்வதேச அளவில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழலில் அங்கு 165 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டாரில் முன்னெடுக்கப்பட்டபோதும், அது மிக மந்தமான வகையிலேயே இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆறாவது முறையாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மீண்டும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். காசாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் முறுகல் அதிகரித்து வரும் சூழலிலேயே பிளிங்கனின் விஜயம் இடம்பெறுகிறது.

கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிளிங்கன் சவூதி அரேபியா மற்றும் எகிப்து பயணித்து, அந்நாட்டு தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று குறிப்பிட்டது.

இந்நிலையில் காசாவின் ஒட்டுமொத்த மக்களும் “கடுமையான உணவு பாதுகாப்பின்மை” நிலையை அனுபவித்து வருவதாக பிளிங்கன் நேற்று (19) குறிப்பிட்டிருந்தார். அந்த பலஸ்தீன பகுதிக்கு மனிதாபிமான உதவி விநியோகத்தை அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸ் சென்ற அவர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடுமையான பட்டினி நிலையை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. ஆதரவுடைய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவில் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமானதாகவும், பரந்ததாகவும் மாறியுள்ளதோடு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் போக்கு செங்குத்தாக அதிகரித்து வருகிறது.

மக்கள் விலங்குணவுகளை உண்பது, குப்பைகளில் உணவு தேடுவது அல்லது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது தொடக்கம் மே மாதத்திற்கு இடையே எந்த ஒரு நேரத்திலும் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முற்றுகையில் உள்ள காசாவுக்கு தடையற்ற வகையில் உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை கேட்டிருக்கும் ஐ.நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிபித்ஸ், இழப்பதற்கு நேரம் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காசாவுக்காக உதவி விநியோகத்தை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருவதோடு அமெரிக்கா உட்பட பல நாடுகள் வானில் இருந்து அங்கு உதவிகளை போட்டும், தொண்டு நிறுவனம் ஒன்று கடல் வழியாக உதவி விநியோகத்தை ஆரம்பித்தபோதும் போதுமாக உதவிகள் கிடைப்பதில்லை என்று தொண்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன. குறிப்பாக வடக்கு காசாவில் நிலைமை மோசமடைந்துள்ளது.

காசாவில் உதவிகளை அதிகரிப்பது மற்றும் இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் ரபா பகுதி தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் (18) தொலைபேசியில் அழைத்து பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் உறுதியாகக் கூறி வருகிறது.

“ரபாவுக்குள் நுழைந்தால் நாம் எங்கே போவது? எங்கிருந்து கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கைகளை பெறுவது?” என்று ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் 50 வயது சபாஹ் அல் அஸ்தால் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

எனினும் ரபாவில் உள்ள இரு வீடுகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள உதவி களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஷெய்க் ரத்வான் பகுதியில் உள்ள அல் அமூதி குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேர் கொல்லப்பட்டு 142 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,819 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,934 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா வளாகத்தை சுற்றிவளைத்த இஸ்ரேலிய படைகள் அதன் முற்றவெளி பகுதியை தரைமட்டமாக்கி கடுமையான தேடுதலில் ஈடுபட்ட பின் நேற்று அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளன. இதன்போது மருத்துவமனையில் இருந்து சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் ஹமாஸ் தளபதி பாயித் அல் மபூ உட்பட 20 ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. எனினும் அவர் காசாவுக்கான உதவிகளை பாதுகாப்பதற்கு பொறுப்பான பலஸ்தீன பொலிஸ் அதிகாரி என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

எனினும் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான வான் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதில் அல் ஷிபா மருத்துவமனையின் வடக்கு வாயிலில் உள்ள இரு கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஹமாஸுடனான மறைமுக பேச்சுவார்த்தைக்காக கட்டார் சென்றிருக்கும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இரண்டாவது நாளாக நேற்று (19) போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கும் ஹமாஸ் அமைப்பு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் முயற்சித்து வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பெரும் இடைவெளி நீடித்து வருகிறது.

தற்போதைய பேச்சுவார்த்தைக்கு இரண்டு வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய பிரதிநிதிகள் கணித்துள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற போர் நிறுத்த உடன்படிக்கை ஒரு வாரம் மாத்திரமே நீடித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

March 19, 2024 8:21 am 

உயிரிழப்புகள் பதிவு: மக்களை வெளியேறவும் உத்தரவு


காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கட்டடம் ஒன்றில் தீ பரவியதாகவும் பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையை ஹமாஸ் மூத்த தலைவர்கள் பயன்படுத்துவதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கியம் வாய்ந்த இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்துக்குள் படையினர் நுழைந்ததும் சூடு நடத்தப்பட்டதாகவும் அது கூறியது.

இந்த மருத்துவமனையை சூழ டாங்கிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் இந்த மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இந்த மருத்துவமனை வளாத்தில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு காரணமானது.

தற்போது முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பை கண்டித்திருக்கும் காசாவின் ஹமாஸ் அரச ஊடக அலுவலகம், ‘டாங்கிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் அல் ஷிபா மருத்துவ வளாகத்திற்குள் ஊடுருவியதாகவும் அங்கு சூடு நடத்தியது ஒரு போர் குற்றமாகும்’ என்றும் தெரிவித்துள்ளது.

இதன்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தின் வாயில் பகுதியில் தீ பரவியதால் அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலியப் படை விசேட சத்திரசிகிச்சை கட்டிடம் மற்றும் அவசர வரவேற்பு கட்டடத்திற்குள் ஊடுருவி அங்கு நகரும் அனைவர் மீதும் சூடு நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜன்னல் பகுதியை நெருங்கும் அனைவர் மீதும் இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ குழுக்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவமனைக்கு அருகில் இருப்பவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது என்று காசா சுகாதார அமைச்சு கூறியது. ‘கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக யாரையும் மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல முடியாதுள்ளது’ என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

போருக்கு முன்னர் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிபா, வடக்கு காசாவில் பகுதி அளவு மாத்திரம் இயங்கும் ஒரு மருத்துவ பராமரிப்பு நிலையமாக மாறியுள்ளது.

‘திடீரென்று வெடிப்புகள் மற்றும் குண்டு சத்தங்கள் கேட்டதோடு, உடன் டாங்கிகள் வர ஆரம்பித்தன. அவை மேற்குப் பாதையான அல் ஷிபாவை நோக்கி வந்த நிலையில் துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் அதிகரித்தன’ என்று மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டத்தில் இருக்கும் இரு குழந்தைகளின் தந்தையான முஹமது அலி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்நிலையில் காசா நகரில் உள்ள இந்த மருத்துவமனையை சூழ இஸ்ரேல் இராணுவம் புதிய துண்டுப்பிரசுரத்தை வீசியுள்ளது.

‘ரிமாலில் இருப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த அனைவரும் மற்றும் அல் ஷிபா மற்றும் அதற்கு அருகாமையில் இடம்பெயர்ந்திருக்கும் அனைவருக்குமானது: நீங்கள் ஆபத்தான போர் வலயத்தில் உள்ளீர்கள். பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் கடுமையாக செயற்படுகிறது’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரையோர வீதியை பயன்படுத்தி தெற்கு காசாவில் உள்ள அல் மவாசிக்கு செல்லும்படி அந்த அறிவித்தலில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைய முடியாததன் குழப்பம், அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே இந்த மருத்துவமனை மீதான சுற்றிவளைப்பு உள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘பாதுகாப்பு இன்றி இருக்கும் பொதுமக்களை இலக்கு வைப்பதைத் தவிர, எந்த ஒரு இராணுவ அடைவையும் எட்ட முடியாத குழப்பம் மற்றும் அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்’ என்று ஹமாஸ் கூறியது.

அல் ஷிபா மருத்துவமனை மாத்திரம் அன்றி இடம்பெயர்ந்த குடும்பங்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றிலும் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் பலரை கைது செய்ததாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஹமாஸ் ஊடகம் குறிப்பிட்டது. கடற்கரை அகதி முகாம் ஒன்றின் விளிம்பிலும் டாங்கிகள் செயற்பட்டு அருகில் இருக்கும் சில கட்டடங்கள் மீது செல் குண்டுகளை வீசியதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

13,000 சிறுவர்கள் பலி

காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தக் காலப்பிரிவில் எட்டு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அது சுட்டிக்காட்டியது.

இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,726 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,792 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சுமார் 8,000 பேர் காணாமல்போயிருப்பதாக நம்பப்படும் நிலையில் இவர்கள் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 13,000க்கும் அதிகமான சிறுவர்களை கொன்றிருப்பதாகவும் மேலும் பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

‘மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம். உலகில் வேறு எந்த மோதலிலும் இந்த அளவு சிறுவர்களின் உயிரிழப்பை நாம் கண்டதில்லை’ என்று யுனிசெப் பணிப்பாளர் நாயகம் கெதரின் ரசல், சி.பி.எஸ். நியுஸ் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹமாஸுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் தலைவரின் தலைமையில் இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று கட்டார் சென்றிருக்கும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 100 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 40 பேரை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டாரில் இருக்கும் ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவை தளமாகக் கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் இருக்கும் சவால்கள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பும் கடந்த வாரம் போர் நிறுத்த பரிந்துரை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





இந்தியாவுடன் அமெரிக்க பங்காண்மை உறுதி

March 20, 2024 10:14 am 

இந்தியாவுடனும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்தும் பங்காளியாக செயற்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்துடன் கூடிய அணுவாயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய அக்னி 5 ஏவுகணை பரிசோதனை நடாத்தியுள்ளதைத் தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுதந்திரமானதும் திறந்த அடிப்படையிலுமான இந்தோ – பசுபிக் பிராந்திய பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் சுதந்திரமானதும் பாதுகாப்பானதும் மற்றும் செழிப்பானதுமான இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கான பார்வையை புதுடில்லியும் வொஷிங்டனும் பகிர்ந்து கொண்டுள்ளன. அதன் இலக்கை அடைவதற்காக பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றோம் என்றும் இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





கனடா படுகொலை: இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

March 18, 2024 9:06 am

கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.

ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.

இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.


நன்றி தினகரன் 



No comments: