கட்டுரை - 14 வருடகால எதிர்ப்புகளின் பயன்

 March 19, 2024


யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகி விட்டன. இந்தப் பதினான்கு வருடங்களில் தமிழர் பக்கத்தில் ஜனநாயக ரீதியில் பலவாறான எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. ‘எழுக தமிழ்’ தொடங்கி ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யில் மக்களைத் திரட்டி எதிர்ப்பு காண்பிக்கப்பட்டிருக்கின்றது – மக்கள் தன்னெழுச்சியாக திரண்டிருக்கின்றனர். ஒப்பீட்டடிப்படையில் ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அது தொடர்பில் அதிகம் விவாதிக்கப்பட்டது – கருத்துருவாக்கங்கள் செய்யப்பட்டன.
ஆனால், இறுதியில், அதனால் எதிர்பார்த்த விளைவுகளைப் பெறமுடிந்தனவா? அரசின் ஒரு நகர்வைத் தானேனும் தடுத்து நிறுத்த முடிந்ததா? அரசாங்கத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கையையாவது கொடுக்கமுடிந்ததா? கடையடைப்பு, பருவகால அடையாள எதிர்ப்புகள் எனப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் – பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், எந்தவொரு விடயத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வதேசத்திடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளாலும் எதுவும் நிகழவில்லை. இத்தனைக்குப் பின்னரும் அரசு அதன் நிகழ்ச்சி நிரலை தொய்வின்றி முன்னெடுக்கின்றது என்றால் அதன் பொருள் என்ன? – அரசு தமிழரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பதுதானே பொருள் அல்லது விடயங்களைக் கையாள தமிழர் தரப்புக்குத் தெரியவில்லையா?
இப்போது எதிர்ப்பு அரசியல் வெடுக்குநாறிமலை சிவனில் தரித்து நிற்கின்றது.
ஆனால், வெடுக்குநாறிமலை விவகாரத்திலும் தமிழருக்கு வெற்றி கிட்டப்போவதில்லை. குருந்தூர்மலை விவகாரத்தைக் கைவிட்டது போன்று – தையிட்டி விகாரை விடயத்தை கைவிட்டது போன்று – வெடுக்குநாறிமலை சிவன் ஆலய விடயமும் சில வாரங் களில் மறந்துபோகும்.
ஏனெனில், அதனை மறக்கடிக்கும் வகையில் பிறிதோர் இடத்தில் புதிய பிரச்னை ஒன்று ஏற்படுத்தப்படும். தேர்தல் நெருங்கும்போது வெடுக்குநாறிமலை விடயம்போல இன்னும் பல விடயங்கள் நடைபெற்றால் அதில், ஆச்சரியப்பட ஒன்றுமிருக்காது.
‘ஈழநாடு’ இதனை முன்கூட்டியே கூறிவைக்கின்றது. தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் இறைமையுள்ள ஒரு மக்கள் கூட்டம். இதனை நிரூபிக்கும் நோக்கில் விடயங்கள் கையாளப்பட்டாலே அன்றி, தமிழ் மக்களை எவரும் திரும்பிப் பார்க்கப்போவதில்லை.
கடந்த பதினான்கு வருடங்களாகத் தமிழ் மக்களை எவருமே திரும்பிப் பார்க்கவில்லை – காரணம் தமிழ் மக்களின் தலைமைகள் என்போர் முறைப்பாடுகளை செய்து கொண்டிருந்தனர் – பாதிக்கப்பட்ட மக்களோ ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். ஒப்பாரி ஒரு புறமும் – ஒப்பாரிக்கு நீதி வேண்டும் என்னும் முறைப்பாடு இன்னொரு புறமுமாக தமிழர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், தமிழ் மக்கள் தேவையானவர்கள் – அவர்களின் நலன்களை பாதுகாப்பது அவசியம் என்னும் நிலையில் எந்தவொரு வெளித்தரப்பும் சிந்திக்கவில்லை – ஏன் சிந்திக்கவில்லை? ஏனெனில், அவ்வாறு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய மக்கள் கூட்டம் என்பது நிருபிக்கப்படவில்லை. அதனை நோக்கித் தமிழ் தலைமைகள் என்போரால் செயலாற்ற முடியவில்லை. ஒரு குண்டூசியைத்தானும் தூக்கிப் போட முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு சிந்தித்தால் இந்த ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது.   நன்றி ஈழநாடு 



No comments: