அருணகிரிநாதர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

தமிழ் திரையிசையில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர் டி எம்

சௌந்தராஜன். மறைந்தும் ரசிகர்களின் மனதில் மறையாமல் வாழும் அவரின் 102 வது பிறந்த தினம் மார்ச் 24ம் தேதியாகும். பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணிப் பாடி அவர்களின் புகழுக்கு வித்தான அவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அப்படி அவர் நடித்து 1964ல் வெளிவந்த படம் . இசையமைப்பாளர் ஜி ராமநாதன் தயாரித்து

இசையமைத்து வெற்றி கண்ட பட்டினத்தார் படத்தைத் தொடர்ந்து டீ எம் எஸ்ஸை கதாநாயகனாக நடிக்க வைத்து டி ஆர் ராமண்ணா இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகப் பக்தரான அருணகிரிநாதரின் வாழ்வில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டது. அருணகிரிநாதராக நடிக்க சரியான தேர்வாக டீ எம் எஸ் தெரிவானார். இது படத்துக்கு பலம் சேர்த்தது. சிறு வயதில் தாயை இழந்த அருணகிரி தன் தமக்கை ஆதியின் அன்பான அரவணைப்பில் வளர்கிறான். வாலிபனானவுடன் அவன் மனம் சிற்றின்பத்திலேயே நாட்டம் கொள்கிறது. நித்தம் நித்தம் புதுப் பெண்களுடன் சல்லாபிக்கும் அவனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்பததற்காக அவனுக்கு ஞானவல்லியை மணமுடித்து வைக்கிறாள் ஆதி. அருணகிரியோ மனைவியை உதாசீனப் படுத்தி விட்டு விலைமாதர்களே கதி என்று கிடக்கிறான். இதனால் மனம் வெறுத்த ஞானவல்லி முருகப் பெருமானிடம் இனிமேல் அருணகிரியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கொள்கிறாள். காலகதியில் அருணகிரிக்கு குஷ்டரோகம் என்ற நோய் ஏற்றப்படுகிறது. அவனுடன் சல்லாபித்த மாதர்கள் எல்லாம் அவனை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். ஆனால் அவனோ அவனுக்கு இருக்கும் நோயுடனும் சிற்றின்பத்துக்காக ஏங்குகிறான். மனைவியுடன் ஒன்று சேர முனைகிறான் . அவளோ அவன் விருப்பத்தை நிராகரிக்கிறாள். காம வெறியில் அவன் தவிப்பதைக் கண்ட அவனின் தமக்கை ஆதி அவனின் இச்சைக்கு தன்னையே அவனுக்கு பலியிடத் துணிகிறாள். அவளின் இந்த செய்கை அருணகிரியின் கண்களைத் திறக்கிறது. தான் இனியும் வாழத் தகாதவன் என்ற முடிவில் திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் இருந்து குதித்து தன் உயிரை மாய்க்கத் துணிகிறான். அவனை தடுத்தாற் கொள்ளும் முருகப் பெருமான் அவனுக்கு சும்மா இரு என்று ஞான உபதேசம் செய்கிறான். அது மற்றுமின்றி திருப்புகழ் பாட அருள்கிறான். அருணகிரி , அருணகிரிநாதராகி பலருக்கும் அருளுகிறார். இப்படி அமைந்த படத்தின் கதை வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். அத்துடன் நின்று விடாமல் படத்துக்கான சில பாடல்களையும் எழுதி இருந்தார். இரண்டிலும் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். பாடதில் அருணகிரிநாதர் அருளிய பாடல்களும் இடம் பெற்றன. குறிப்பாக முத்தைத் தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழ் டீ எம் எஸ் குரலில் தேனாக ஒலித்தது. இந்தப் பாடலை அவர் ஒரே டேக்கில் பாடினார் என்று கூறப் படுவதுண்டு. இத்துடன் மேலும் சில திருப்புகழும் டீ எம் எஸ் குரலில் கம்பீரமாக ஒலித்தன. பட்டினத்தார் படத்தை விட இப்படத்தில் சௌந்தர்ராஜனுக்கு தன் நடிப்புத் திறனையும் காட்ட சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரும் அதனை பயன் படுத்தியிருந்தார். 

ஆதியாக பி எஸ் சரோஜா நடித்து அப் பாத்திரத்துக்கு

மெருகூட்டியிருந்தார். ஞானவல்லியாக வரும் சாரதாவின் நடிப்பு கவரும் படி அமைந்தது. இவர்களுடன் லக்ஷ்மிராஜ்யம், ஆர் எஸ் மனோகர், சேதுபதி, அங்கமுத்து, என் எஸ் கோலப்பன், என்னத்தே

கன்னையா ஆகியோரும் நடித்திருந்தனர். அருணகிரிநாதருக்கு வில்லன் இருந்தாரா என்று ஆச்சரியப்படுவீர்கள். அந்த வேடத்தில் எம் ஆர் ராதா நடித்து படத்தை ஓரளவுக்கு கலகலப்பாக்கினார். படத்தின் ஒளிப்பதிவை ஜி கே ராமு

கையாண்டார். படத்துக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் ஜி ராமநாதன். அவருடைய மறைவைத் தொடர்ந்து டி ஆர் பாப்பா படத்துக்கு இசையமைத்து அப்பணியை நிறைவு செய்தார். எல்லா வித படங்களையும் தன்னுடைய பாணியில் இயக்கும் ராமண்ணா பக்திக் கதையான இதனையும் சீராக இயக்கியிருந்தார். அருணகிரிநாதரின் பாத்திரப் படைப்பை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே ரத்தக்கண்ணீர், திரும்பிப்பார் ஆகிய சமூகப் படங்கள் வந்திருந்த போதும் ஒரிஜினல் கதையான இதில் நடித்து டீ எம் எஸ் முத்திரை பதித்திருந்தார்!

No comments: