இலங்கைச் செய்திகள்

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

மனோ , நிசாம் காரியப்பர், முத்து மொஹம்மட், சுஜீவ சேனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.க்களானர்

இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய Beechcraft King Air 350

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல்

இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு



யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

Published By: Vishnu

14 Dec, 2024 | 01:20 AM
image

அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். 

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 

அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். 

அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது , 

அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். 

அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் 

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி 







மனோ , நிசாம் காரியப்பர், முத்து மொஹம்மட், சுஜீவ சேனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.க்களானர்

12 Dec, 2024 | 04:04 PM

(எம்.மனோசித்ரா)

image

ஐக்கிய மக்கள் சக்தி நீண்ட இழுபறியின் பின்னர் அதன் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரது பெயர்கள் வியாழக்கிழமை (12) தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றில் முதலாவதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எஞ்சிய 4 ஆசனங்களுக்கான பெயர்கள் தொடர்பில் நீண்ட சர்ச்சை நிலவியது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகள் தமக்கு ஒவ்வொரு ஆசனங்களைக் கோரியதோடு, தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சில முக்கிய உறுப்பினர்களும் தமக்கும் தேசிய பட்டியலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் துஷார இந்துநில் போன்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்குப் பெயர்களை அனுப்புவதற்குக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து  நிசாம் காரியப்பரின் பெயரையும் உள்ளடக்கி தேசிய பட்டியல் பெயர்கள் வெளியிடப்பட்டன. தமது பெயர்கள் தேசிய பட்டியலுக்குள் உள்வாங்கப்படாவிட்டால் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும் என்று ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் துஷார இந்துநில் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். ஹர்ஷ டி சில்வா உட்பட பலரும் ஹிருணிகாவுக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய Beechcraft King Air 350

12 Dec, 2024 | 03:04 PM
image

அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையின் வான்வழி மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறனை பாரிய அளவில் மேம்படுத்தும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் பரஸ்பர முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலியாவின் இதுபோன்ற அன்பளிப்புகள் அமைவதாக, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில், “King Air 350 விமானத்தை அன்பளிப்பாக வழங்கிய அவுஸ்திரேலிய அரசுக்கு விமானத்திற்காக, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவுஸ்திரேலிய அரசின் இந்த அன்பளிப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எமது திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது.

எமது நீண்டகால பங்காளியான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பு முயற்சிகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற இந்த சம்பிரதாயபூர்வ அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவரமைப்பு) கட்டளைத்தளபதியான ரியர் அட்மிரல் Brett Sonter, (RAN) (Royal Australian Navy), ( ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை) இன்றைய நிகழ்வு அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவை மேம்படுத்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய சம்பிரதாயபூர்வமான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வானது, எமது நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான சந்தர்ப்பமாக அமைவதோடு, இரு நாடுகளும் எதிர்நோக்குகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், பல்வேறு தடைகளை நாம் கடக்க முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொருவரையும் தடுத்து நிறுத்துவதில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் உறுதியாக உள்ளன.” என்றார்.

Beechcraft King Air 350 விமானமானது, கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அப்பால், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெறுமதிவாய்ந்த பயிற்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கும்.

"இவ்வாறான திறன் மேம்படுத்துகின்ற பொருட்களை மாத்திரம் வழங்குவதில் மட்டுப்படுத்தப்படாமல், அதனைப் பயன்படுத்துபவர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதும் அவசியமாகும்.

இலங்கை விமானப்படைக்கு இந்த விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதில் நாம் பெருமையடைகின்ற அதேவேளையில், இந்த முக்கியமான புதிய வளத்தை பயன்படுத்தி இலங்கை பாதுகாப்பு தரப்பு புதிய திறன்களைப் பெறுவதோடு, அடுத்த தலைமுறை படையினரின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கும் வாய்ப்பாக அமைவதாக ரியர் அட்மிரல் Brett Sonter தெரிவித்தார். 

நன்றி வீரகேசரி 





 


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல்


Published By: Digital Desk 2

12 Dec, 2024 | 02:46 PM

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

image

இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர்.

அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று  குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் , இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி 




இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு



அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser AlAmeri) தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 150,000 இலங்கையர்கள் தொழில் செய்து வருவதாகவும் அந்த தொகையை மேலும் அதிகரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் ஆறாவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐக்கிய அரபு அமீரகமே காணப்படும் நிலையில், அந்த சந்தை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதோடு இலங்கைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்தார். 

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்மொன்றை மேற்கொள்ளுமாறும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் முழு அதிகாரமுள்ள மினிஸ்டர் பதவி வகிக்கும் அஹமட் எம்.ஏ.ஏ. அல் ஷெஹி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  



நன்றி வீரகேசரி 








No comments: