கல்வியும் கருணையும்:

 


 - சங்கர சுப்பிரமனியன்                     





என் வீட்டு மேஜை மீது பலரின் வாழ்வில் விளக்கேற்றிய அந்த உத்தமரின் புகைப்படம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று ஒன்றிரண்டு தடவை என் மகன் சிவா என்னிடம் கேட்டிருக்கிறான். அவ்வளவு எளிதில் சில வார்த்தைகளில் அந்த புண்ணியவானைப் பற்றி சொல்லிவிட முடியுமா? அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவரது பின்னணி அவரால் தன்னைப்  போன்றவர்கள் அடைந்ந பலன் என்று எல்லாவற்றையும் சொன்னால்தான் அவரைப்பற்றி நன்றாக புரிந்து கொள்ளமுடியும். எனவே எனக்கு நேரம் கிடைக்காததால் இன்னொரு நாள் சொல்வதாக அவனிடம் சொல்லி இருந்தேன்.

 

"அப்பா, போலாமா? நான் தயார்" பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக சிவா கூப்பிட்டான்.


சிவா பிராட் மீடோஸ் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். தினமும் காலையில் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது என் வேலை.

 

"சரி, போலாம் வா" என்று சொல்லி ட்ரைவ் வேயில் நின்ற கார் பக்கம் சென்றேன்.

 

கார் ரயில்வே கிரசண்ட் ரோட்டில் அனிச்ச செயலாய் ஓடிக்கொண்டிருக்க என் மனமோ முப்பது ஆண்டு பின்னே சென்று ரயில்வே கிரசண்டை ஒற்றையடிப் பாதையாக கண் முன்னே விரியச் செய்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் தயங்கித் தயங்கி விழித்தபடி நின்றிருந்தேன். என்னைத் தன்னந்தனியாக தாத்தா

வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என் பெற்றோர்கள்.  

 

கீழப்பாவூரில் ஒரு வறுமையான குடும்பம் தான் என் குடும்பம். அம்மா, அப்பா, நான், மற்றும் என் தம்பி என நான்கு பேர் தான் எங்கள் குடும்பம். அதிகப் படிப்பில்லாததால் சொற்ப சம்பளத்தில் நெல் அரவை மில்லில் அப்பாவுக்கு வேலை. காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு வருவார். அவர் சம்பளம் வீட்டுச் செலவுக்கு பற்றாது. ஆதலால் அம்மாவும் தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்திற்காக உழைத்தார்கள். இராட்டையில்

நூல் நூற்று அதைக் கதர்க் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் கொஞ்ச பணத்தையும் வைத்துத்தான் குடும்பம் ஓடியது. அப்போது சீருடையெல்லாம் என் பள்ளியில் கிடையாது. என்னுடன் படித்த பிள்ளைகள் எல்லம் கலர் கலராக பளிச்சென்று உடை உடுத்தி வரும்போது நான் மட்டும் கதர்க் கடையில் அம்மா வாங்கிக் கொடுத்த கதர் உடையை அணிந்து பள்ளி செல்வேன்.

 

இவ்வாறான சூழ் நிலையில் நானும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கும் மேல் உயர் நிலைப் பள்ளி சென்று மேலே படிப்பதா? அல்லது அப்பாவுடன் அரவை மில்லுக்குச் சென்று குடும்பத்துக்கு உதவியாய் இருப்பதா?  என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என் பெற்றோரும் குழப்பத்தில் தான் இருந்தனர். மேலே படிக்க வைக்க என் குடும்பத்தால் முடியுமா? என்பது கேள்விக்குறி தான். இந்த சமயத்தில் கரிசல் குளத்தில் இருந்து எனது தாத்தா அதாவது என் அம்மாவின் அப்பா வந்துருந்தார். இது சம்பந்தமாக தாத்தாவிடமும் அபிப்பிராயம் கேட்டோம்.

 

"சிவாவை வேலைக்கு அனுப்பும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?" தாத்தா அப்பாவிடம் கேட்டார்.

 

"அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் மேலே படிக்க வைப்பதுதான் கடினம்" அப்பா தன் நிலைமையை விளக்கினார்.

 

"அதுதான் பிரச்சினை என்றால் நான் சிவாவை கூட்டிச் சென்று பேட்டை உயர் நிலைப் பள்ளியில் படிக்க வைக்கிறேன்.  உங்களுக்கு சம்மதம் என்றால் சொல்லுங்கள்," என்று என் பெற்றோருக்கு ஆறுதலாக தாத்தா பேசினார். கரும்பு தின்னக் கூலியா? அப்பாட

என்ற பெரு மூச்சுடன் என் பெற்றோரும் சம்மதம் சொல்லினர்.

 

ஒரு மாதம் கரைந்தோடியது. தாத்தாவிடம் இருந்து எந்த பதிலையும் காணோம். எனது அப்பா கடிதம் எழுதிக் கேட்டதற்கு தனக்கு கீழப்பாவூர் வந்து என்னை அழைத்துச் செல்ல நேரமின்மையை விளக்கி என் பெற்றோரைக் கூட்டி வந்து விடும்படி கேட்டுக்கொண்டார். மில்லில் விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு வேலை. அம்மவோ காலில் முள் குத்தி வீக்கமாய் இருப்பதால் இரண்டு நாட்களாய் நடக்க முடியாமல் அவதிப் படுகிறார்கள். நமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் எப்படியாவது கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி என்னைத் தனியாக அனுப்பி வைக்க முடிவு செய்தனர் என் பெற்றொர்.

 

பாவூர் சத்திரத்தில் திருநெல்வெலிக்கு செல்லும் டி.வி.எஸ் பஸ் நின்றிருந்தது. அப்பா கண்டக்டரிடம் சென்றார்.

 

"அண்ணாச்சி, இந்த பையனை அபிசேகப்பட்டி ஸ்டாப்பில் இறக்கி விட்டுடுங்க," என்று கண்டக்டரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு டிக்கெட்டை எடுத்து என் கையில் கொடுத்து, "பத்திரமாய் போய்வாப்பா" என்று என் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார்.

தாயைப் பிரிந்து செல்லும் கன்று போல் நானும் என் பெற்றொரைப் பிரிந்து கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றேன்.

 

பஸ் செல்லச் செல்ல அம்மா அப்பா சொல்லித் தந்த தைரியம் என்னை விட்டு மெல்ல மெல்லச் சென்றது. வெள்ளாளர் குளம், துலுக்கர் குளம் ஆகிய ஊர்களைக் கடந்து அபிசேகப்பட்டியில் பஸ் நிற்கவும்,

 

"தம்பி, அவுசுவட்டி வந்துடுச்சு இறங்குப்பா. அப்பா சொன்னபடி இந்த ஒத்தயடிப் பாதையில் பார்த்துப் போ. ஒன்றும் பயப்படாதே," என்று ஆறுதலாகச் சொல்லி பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டார். 

 

பஸ்ஸிலிருந்து இறங்கி அந்த ஓற்றையடிப் பாதையில் தயங்கித் தயங்கி நின்றிருந்தேன். பயந்தபடியே நடந்து சென்று பாதை முடிவில் உள்ள குளக்கரையில் ஏறினேன். குளக்கரையின் இருபுறமும் நீர்க்கருவை நடக்க முடியாத அளவு அடர்ந்து வளர்ந்திருந்தது. அவற்றை முடிந்த வரையில் கையால் தள்ளிவிட்டபடியே நடந்தேன். குளத்தில் தண்ணீர் கரைவரை இருந்ததால் கரையின் ஓரமாக தண்ணீர் பாம்புகளும் அவ்வப்போது வந்து தலை காட்டின. மேலும் கரையின் வெளிப்புறம் வரிசையாயும் உயரமாயும் வளர்ந்திருக்கும் பனை மரங்களில் இருந்து கழுகுகள் கத்தும் வினோதமான ஒலி சிறுவனான என் பயத்தை அதிகப் படுத்தியது. வெகு நேரம் அந்த குளக்கரையில் ரெம்ப தூரம் நடந்த பின் கரைமுடிவில் திரும்பவும்ஒத்தயடிப் பாதை தொடங்கியது. அந்த பாதையிலேயே கொஞ்ச தூரம் நடந்து ஊரின் எல்லையை அடைந்து ஒரு வழியாக தாத்தா வீடு போய்ச் சேர்ந்தேன்.

 

என் காரும் சிவாவின் பள்ளி வந்து சேர்ந்தது. அவனைப் பள்ளியில் இறக்கிவிட்ட பின் வீடு திரும்பும்போது எனது மனம் திரும்பவும் விட்ட இடத்துக்கே வந்தது.

 

தாத்தா வீட்டில் தங்கி படித்தேன். தாத்தா அப்படி ஒன்றும் வசதியானவர் இல்லை என்றாலும் சப்பாட்டுக்கு கவலை இல்லை அவ்வளவுதான். ஆனால் எங்கள் வீட்டில் சாப்பாட்டுக்கே போராட்டம்தான். மற்றபடி சம்பளம் கட்டி எல்லாம் படிக்க வைக்கும் அளவுக்கு தாத்தாவிடமும் அப்படி பெரிதாக வசதி ஒன்றும் இல்லை. ஆதலால் என்னை போன்ற எத்தனையோ பேர் படித்து முன்னேற பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த படிக்காத மேதையான அந்த பழுத்த அரசியல்வாதிதான் காரணம். அவர் கொண்டு வந்த கல்வித் திட்டத்தின் கீழ் படித்தே இன்று நான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்பதனை நன்றியறிதலோடு எண்ணிப் பார்த்து பெருமை அடைகிறேன். இன்னும் சில தினங்களில்      எப்படியாவது நேரம் ஒதுக்கி மேஜைமேல் புகைப்படத்தில் இருக்கும் அப்பெருந்தகையைபற்றி சிவாவுக்கு சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தபடியே சென்றேன்.

 


No comments: