பெரும் உயிரிழப்புகளிடையே லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்
தெற்கு லெபனானில் இருந்து அச்சத்தால் மக்கள் ஓட்டம்
உக்கிர தாக்குதல்களில் லெபனானில் 492 பேர் பலி
அல் ஜசீரா அலுவலகத்திற்கு இஸ்ரேலியப் படையினர் பூட்டு
இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்படும்
அபுதாபியின் ரூவாய்ஸில் உற்பத்திப் பணிகளில் ஈடுபட 2 இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2024 இல் 66 பில்லியன் டொலர்
லெபனான் மீது வான் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் பலி
பெரும் உயிரிழப்புகளிடையே லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்
- ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதல்களால் மோதல் உச்சம்
கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நேற்றும் (24) கடுமையான மோதல் நீடித்தது.
தெற்கு லெபனானில் உள்ள பல்வேறு ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியதோடு இஸ்ரேலுக்குள் 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்று உட்பட பல இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை பாத்தி ரக ரொக்கெட்டுகள் கொண்டு தாக்கியதாக ஹிஸ்புல்லா அமைப்பு நேற்றுக் காலை கூறியது.
இதில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வெடிபொருள் தொழிற்சாலையை தாக்கியதோடு மெக்கிமேடா விமானப்படை தளம் மீது மூன்று வெவ்வேறு நேரங்களில் தாக்கியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தனது தெற்கு எல்லையான காசாவில் சுமார் ஓர் ஆண்டாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் அது தற்போது லெபனானுடனான வடக்கு எல்லையில் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளது. காசா போரை ஒட்டி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது கடந்த ஓர் ஆண்டாக ரொக்கெட் குண்டுகளை வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம் தமது பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாகக் கூறியது. வடக்கு இஸ்ரேலில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் பல இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 50 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உட்பட உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாத் நேற்று (24) தெரிவித்தார். இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறுவதை அவர் செய்தியாளர் சந்திப்பில் மறுத்தார்.
இதுவரை குறைந்தது 1835 பேர் காயமடைந்திருப்பதோடு 54 மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு துணை மருத்துவர்கள் இருப்பதோடு மேலும் 16 பேர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியதாக லெபனான் நிர்வாகம் தெரிவித்தது. லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளுக்கு அருகில் இருக்கும் பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்திய நிலையிலேயே அங்கு பயங்கரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேலிய கொடூரங்களில் இருந்து தப்பி வரும் பொதுமக்களுக்காக 26,000க்கும் அதிகமானவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் வகையில் பாடசாலைகள் மற்றும் ஏனைய வசதிகளில் 89 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக லெபனானின் அனர்த்த பதில் ஒருங்கிணைப்பு அமைச்சர் நாசர் யாசின் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
லெபனானின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் ரொக்கெட் ஏவு நிலைகள், கட்டளை முகாம்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்புகள் உட்பட ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் சுமார் 1,600 ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேல் விமானப் படை தாக்கியது என்றும் அது குறிப்பிட்டது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பயங்கரத் தாக்குதல்களில் 35 சிறுவர்கள் உட்பட குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 1,645 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. 1975–1990 சிவில் யுத்தம் தொடக்கம் லெபனானில் நாளொன்றில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கை இது என்று லெபனான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் துறைமுக நகரான டைரேவுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒட்டுமொத்த குடும்பம் ஒன்று கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்மார் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர் முழுவீச்சில் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் டெல் அவிவ் மற்றும் பெய்ரூட்டுக்கான பல விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டிருப்பதோடு அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத ஆரம்பத்தில் காசாவில் இருந்து லெபனான் மீது அவதானம் செலுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்த நிலையிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
எனினும் லெபனான் முனையில் போர் விரிவடைவது குறித்து உலகத் தலைவர்கள் கவலை வெயிட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதில் தலையிடுவதற்கு பிரான்ஸ் மற்றும் எகிப்து அழைப்பு விடுத்திருக்கும் அதேநேரம் நியூயோர்க்கில் நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே அரபு நாடுகளின் ஒன்றுகூடல் ஒன்றுக்கு ஈராக் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கிற்கு ஏற்கனவே போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பி இருக்கும் நிலையில் அந்தப் பிராந்தியத்திற்கு சிறு எண்ணிக்கையான மேலதிக அமெரிக்கப் படையினர் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டது.
இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் இருந்து ஹிஸ்புல்லாவை பின்தள்ளி அவர்களின் அச்சுறுத்தலை தணிப்பது மற்றும் அவர்களின் உட்கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலியப் படை ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் லெபனான் கிராமங்கள் மற்றும் நகரங்களை அழிக்கும் இலக்குடனான இஸ்ரேலின் திட்டத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வல்லரசுகள் தடுக்க வேண்டும் என்று லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக உலகத் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தை ரத்துச் செய்துவிட்டு நியூயோர் பயணிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
தெற்கு லெபனானில் இருந்து அச்சத்தால் மக்கள் ஓட்டம்
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்த நிலையில் தெற்கு லெபனானில் உள்ள மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி கார்கள் மற்றும் வாகனங்களில் வடக்கை நோக்கி கூட்டமாக வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா நிலைகளுக்கு அருகில் இருந்து வெளியேறும்படி எச்சரித்து சில குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேலிடம் இருந்து குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவுகள் வந்துள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக தெற்கு நகரான நபட்டியேவில் உள்ள சஹ்ரா சவ்லி என்ற பல்கலை மாணவி, பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
‘காலை 6 மணிக்கு எழுந்தபோது குண்டுகள் விழும் சத்தங்கள் கேட்டன. நண்பகலாகும்போது அது தீவிரம் அடைந்ததோடு எனது வீடு இருக்கும் பகுதியில் குண்டுகள் விழுவதைக் கண்டேன். கண்ணாடிகள் உடையும் சத்தங்களைக் கோட்டேன்’ என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தலைநகர் பெய்ரூட்டை நோக்கிச் செல்லும் வீதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டதோடு ஆறு வழி நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் பெரும் நெரிசல் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் பெய்ரூட்டிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இங்கு ஹிஸ்புல்லா ஆயுதக் களஞ்சியங்கள் இருக்கும் இடம் என்று கூறும் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு இஸ்ரேல் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதில் சிலர் பாடசாலை சென்றிருக்கும் தமது பிள்ளைகளையும் பாதியிலேயே அழைத்துக் கொண்டு அவசரமாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். ‘எச்சரிக்கை விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததால் பிள்ளையை அழைத்துச் செல்ல வந்ததாக இஸ்ஸா என்ற தந்தை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
‘அவர்கள் எல்லோரையும் அழைத்து தொலைபேசியில் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
எனவே நான் பாடசாலையில் இருந்து மகனை அழைத்துச் செல்ல வந்தேன். நிலைமை பாதுகாப்பானதாக இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
உக்கிர தாக்குதல்களில் லெபனானில் 492 பேர் பலி
- ஹிஸ்புல்லா இலக்குகளிலிருந்து விலகியிருக்குமாறு இஸ்ரேல் எச்சரிக்கை
அமைதி காப்பதற்கான சர்வதேச அழைப்புக்கு மத்தியிலும் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (23) தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் கடுமையான தாக்குதல்களை நடத்தியதோடு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் குறிப்பிட்டது. அதேபோன்று ஹிஸ்புல்லா நிலைகளில் இருந்து விலகி இருக்கும்படி லெபனான் மக்களையும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
லெபனானில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவறை குறைந்தபட்சம் 492 பேர் கொல்லப்பட்டு 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறும் இராணுவ ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் தெற்கு லெபனானில் உள்ள மக்களுக்கு நேற்று லெபனான் நாட்டு இலக்கம் ஒன்றில் இருந்து விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பில், ஹிஸ்புல்லா பயன்படுத்தும் எந்த ஒரு நிலையில் இருந்தும் விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லெபனானில் உள்ள மக்களுக்கு இது போன்ற எச்சரிக்கை ஒன்று விடுக்கப்படுவது இது முதல் முறை என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகரி குறிப்பிட்டார். லெபனான் முழுவதும் பரவலாக உள்ள பயங்கரவாத இலக்குகளுக்கு எதிரான விரிவான மற்றும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஹகரி குறிப்பிட்டார்.
காசாவில் நீடிக்கும் போரை ஒட்டி சுமார் கடந்த ஓர் ஆண்டாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையில் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் அண்மைய நாட்களில் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.
காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் மற்றும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிடுகிறது.
லெபனான் மற்றொரு காசாவாக மாறும் அச்சுறுத்தல் இருப்பதாக வருடாந்த பொதுக் குழுக் கூட்டத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். காசா போரில் இரு தரப்பும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பட்டார்.
‘எதிரிப் போர் விமானங்கள் அரை மணி நேரத்தில் 80க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியது’ என்று லெபனானின் உத்தியோகபூர் செய்தி நிறுவனம் நேற்று கூறியது. இதன்போது தெற்கு லெபனான் பகுதி இலக்கு வைக்கப்பட்டதாகவும் கிழக்கே பக்கா பள்ளத்தாக்கிலும் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்ததாகவும் இதில் மேய்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
முன்னதாக கடந்த ஞாயிறன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதனை அடுத்து பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹிஸ்புல்லா மீது அது நினைத்துப் பார்க்க முடியாத தொடர்ச்சியான அடிகளை மேற்கொள்ளும்’ என்று எச்சரித்தார்.
இந்நிலையில் ஹிஸ்புல்லா பிரதித் தலைவர் நசிம் கஸ்ஸம், தமது அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ‘புதிய கட்ட’ மோதல் ஒன்றில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் வடக்குக் கடற்கரையில் உள்ள பிரதான நகரான ஹைபாவில் இடம்பெற்ற தாக்குதலால் பொருட் சேதம் ஏற்பட்டு இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இரு தரப்பினரும் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
‘தமது பிரஜைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எந்த நாடும் அமைதி காக்க முடியாது’ என்று குறிப்பிட்ட நெதன்யாகு, காசாவில் இருந்து ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தனது அவதானத்தை திருப்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த காசா போர், ஹிஸ்புல்லா உட்பட பிராந்தியத்தில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடுவதற்கு தூண்டியதோடு அது பிராந்தியப் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய சமூகத்தினர் பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு திரும்பும் இலக்கை எட்டும் வரை இராணுவ நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் கடந்த ஞாயிறன்று (22) கூறியிருந்தார்.
எனினும் மோதலை விரிவுபடுத்துவதில் இஸ்ரேல் முக்கியமாக ஆர்வம் காட்டவில்லை என்று இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடும் அதற்கு பிரதான ஆயுதங்களை வழங்கும் நடாகவும் இருக்கும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. பரந்த அளவான போர் ஒன்று வெடிப்பதை தவிர்ப்பதற்கு எம்மால் முடியுமான அனைத்தையும் எமது நிர்வாகம் செய்து வருகிறது. என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் வலியுறுத்தி இருப்பதோடு வடக்கு எல்லையில் கடுமையான பத்தற் நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இஸ்ரேலில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறும்படி சீனா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் சிக்கலான வான் பாதுகாப்பு அமைப்புக்கு மத்தியிலும், ஹிஸ்புல்லா ரொக்கெட் குண்டுகள் ஹைபாவுக்கு அருகில் உள்ள கிரியாட் பியாலிக் பகுதியில் விழுந்து கட்டடம் ஒன்று தீப்பற்றியதோடு வாகனங்களும் தீயில் கறுகின.
‘இது இனிமையான விடயம் அல்ல. இது ஒரு போர்’ என்று இஸ்ரேலிய குடியிருப்பாளர் ஒருவரான ஷரோன் ஹக்மிஷ்விலி குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேலுடனான மோதலில் ஹிஸ்புல்லா அமைப்பு கடந்து ஒரு வார காலத்தி பெரும் இழப்புகளை சந்தித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அந்த அமைப்பின் தொடர்பாடல் சாதனங்களின் வெடிப்பு சம்பவங்களில் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டதோடு கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட் நகரில் நடத்திய வான் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் முன்னணி தளபதி ஒருவர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் இறுதிச் சடங்கில் கடந்த ஞாயிறன்று பங்கேற்ற அந்த அமைப்பின் பிரதித் தலைவர் கஸ்ஸம், ‘இஸ்ரேலுடன் வெளிப்படையாக செயற்படும் புதிய கட்டம் ஒன்றுக்குள் நாம் நுழைந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார். ‘அச்சுறுத்தல் எம்மைத் தடுக்காது. இராணுவ ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம்’ என்றும் அவர் கூறினார்.
மறுபுறம் லெபனானில் தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கான சாத்தியத்தியம் பற்றி இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர் ஹகரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘வெளியேற்றப்பட்ட வடக்கு இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பும் பொருட்டு என்ன தேவையோ அதனை நாம் செய்வோம்’ என்றார். நன்றி தினகரன்
அல் ஜசீரா அலுவலகத்திற்கு இஸ்ரேலியப் படையினர் பூட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவில் உள்ள அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை, அதனை ஆரம்பக் கட்டமாக 45 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியப் படையினர் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று (22) காலை அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இதன்போது இந்த செய்தி ஒளிபரப்பின் மேற்குக் கரை பிரிவுக்கான தலைவர் வலீத் அல் ஒமரியிடம் இந்தச் செய்தி ஒளிபரப்பை மூடும் உத்தரவை படையினர் கொடுக்கும் காட்சி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகக் கண்டனர்.
ஏற்கனவே நசாரத் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள அல் ஜசீரா அலுவலகங்கள் மீது இஸ்ரேலியப் படை சுற்றிவளைப்பை நடத்தியது. கட்டாரைத் தளமாகக் கொண்ட இந்தச் செய்தி ஒளிபரப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று இஸ்ரேல் அப்போது தெரிவித்தது. ‘உண்மையை மறைப்பது மற்றும் மக்கள் உண்மையை கேட்பதைத் தடுக்கும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் எப்போதுமே இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்’ என்று ஒமரி குறிப்பிட்டார்.
அல் ஜசீரா அலுவலகத்திற்கு வெளியில் கடைசி ஒலிவாங்கி மற்றும் கெமராவை பறிமுதல் செய்த படையினர் ஒமிரியை அலுவலகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக அல் ஜசீரா செய்தியாளர் முஹமது அஸ்லாபின் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்படும்
சீனா மீதான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரத்தில் இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை பிரதிச் செயலர் கர்ட் எம். கேம்ப்பெல் குறிப்பிடுகையில், “நாங்கள் இதை இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் இதை நான் உங்களுக்கு முதல் முறையாக வெளிப்படுத்துகிறேன்.அமெரிக்காவும் இந்தியாவும் மற்றும் ஏனைய நாடுகளும் இந்து சமுத்திரத்தை மையமாக வைத்து ஒரு அமர்வை நடத்த உத்தேசித்துள்ளன. எங்கள் பரஸ்பர கவலைகள் என்ன, எப்படி ஒன்றாக வேலை செய்யலாம் என்பதைப் பற்றி பேசப் போகிறோம் ” என்றார்.
குடியரசுக் கட்சி வெளியுறவுக் குழுவில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பைடன் நிர்வாக உயர்மட்ட அதிகாரியான அவர் மேலும் குறிப்பிடுகையில் “இது புதிய எல்லை, இந்து சமுத்திரத்தில் இந்தியா போன்ற ஒரு பங்காளியுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற இருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரத்தில் உலகளாவிய வர்த்தகத்திற்கான மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும், நாளாந்தம் பெருந்தொகையான கப்பல் போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன.
மதிப்பீடுகளின்படி, உலகின் 60 சதவீத கடல்சார் வர்த்தகம் இந்து சமுத்திரத்தின் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது, இதில் உலகின் மூன்றில் ஒரு பங்கு கொள்கலன் சரக்குகளும், உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கும் அடங்கும். ஒரு நாளைக்கு சுமார் 36 மில்லியன் பீப்பாய்கள் இந்த வழியாக நகர்கின்றன. இது உலகின் எண்ணெய் விநியோகத்தில் 40% மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் 64% ஆகும்.
சீனா தனது வர்த்தகம், குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் ஆபத்தில் இருப்பதால், பிராந்தியத்தில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இது 2017 இல் செயல்படத் தொடங்கிய ஜிபூட்டியில் ஒரு இராணுவத் தளத்தைக் கொண்டுள்ளது. குவாடார் முதல் சிட்டகாங் வரை, இது தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளது. அடுத்த 2-4 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர விமானம் தாங்கி கப்பலை சீனா வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கவலைக்குரிய மற்றொரு பகுதி செங்கடல் பகுதி ஆகும்.கடந்த ஆண்டு ஹவுதிகள் வணிக கப்பல்கள் உட்பட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் அதிகரித்த ஏற்ற இறக்கத்தைக் கண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கிரீஸ், ஜப்பான், லைபீரியா மற்றும் மார்ஷல் தீவுகள் போன்ற நாடுகளின் கப்பல்கள் ஹூதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, அப்பகுதியின் ஊடான கடல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன.
ஹூதிகள் எந்த சீனக் கொடியுடைய கப்பல்களையும் குறிவைக்கவில்லை. அவை தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. என்றாலும், ஒரு கொந்தளிப்பான செங்கடல் சூழ்நிலை தாய்வான் மீதான அதன் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பீஜிங்கிற்கு உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூலோபாய விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் கிரிஷ் லிங்கண்ணா இது தொடர்பில் குறிப்பிடுகையில், செங்கடலின் நிலைமை “தாய்வானில் இருந்து சர்வதேச கவனத்தை மாற்றுகிறது.அங்கு பீஜிங்கின் உறுதியான நகர்வுகள் சாத்தியமான இராணுவ மோதலின் அச்சத்தை எழுப்பியுள்ளன.” என்று தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கடற்படை உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் கொமடோர் ரஞ்சித் ராய் (ஓய்வு) குறிப்பிடுகையில் “ஒரு சீன வணிகக் கப்பல் மீது எந்த தாக்குதலையும் நான் காணவில்லை.மேலும் இந்த பகுதி கொந்தளிப்பாக இருக்கலாம், இது தாய்வானிய நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது” என்று தெரிவித்தார். நன்றி தினகரன்
அபுதாபியின் ரூவாய்ஸில் உற்பத்திப் பணிகளில் ஈடுபட 2 இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி
இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம் மற்றும் பாரத் பெற்றோலியக் கூட்டுத்தாபன நிறுவனம் ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அபுதாபி நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உச்ச கவுன்சில் உற்பத்தி அனுமதியை வழங்கியுள்ளது.
“ஆரம்ப ஆய்வு முயற்சிகள் 38 சதுர கிலோமீட்டர் ருவைஸ் பகுதிக்குள் சாதகமான முடிவுகளை அளித்துள்ளன” என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இப்பகுதியில் வழக்கமான வளர்ச்சியடையாத எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளன.மேலும் அதன் வளர்ச்சி அபுதாபியின் ஹைட்ரோகார்பன் துறையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கும் அதே நேரத்தில் எமிரேட்டில் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
புதிய ஒப்பந்தம் 6,162 சதுர கிலோமீட்டர் வரையிலான மொத்த பரப்பளவில் செயல்பட அனுமதிக்கிறது.இந்திய நிறுவனத்திற்கு 100% சலுகை உரிமைகளை வழங்குகிறது. ஆரம்ப ஆய்வு முயற்சிகள் சாதகமான முடிவுகளை அளித்துள்ளன.
அல்ருவைஸ் பகுதியில் உள்ள உர்ஜா பாரத் பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு உற்பத்திச் சலுகை வழங்கப்பட்டுள்ளது”அபுதாபியின் நீண்டகாலப் பொருளாதார வளத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், எமிரேட்டின் ஹைட்ரோகார்பன் துறையை முன்னேற்றுவதற்கான எங்கள் முயற்சிகளை உறுதிப்படுத்துகிறது” என்று நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் அஸீம் மொஹமட் அடாபீ அல் ஸாபி தெரிவித்தார்.
“சர்வதேச கூட்டுமுயற்சிகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம், எரிசக்தி துறையில் உலகளாவிய தலைவராக அபுதாபியின் நிலையை நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உச்ச கவுன்சில் வலுப்படுத்துகிறது.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2019 இலும் இந்த சலுகை வழங்கப்பட்டது. இது பின்னர் ஆய்வுக் கட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வழிவகுத்தது, இதன் போது சுமார் 164 மில்லியன் டொலர் முதலீடு செய்தது. நன்றி தினகரன்
“இந்த சலுகை நமது பொருளாதாரத்தின் பின்னடைவு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும், எதிர்கால சந்ததியினருக்கு நமது வளங்கள் தொடர்ந்து மதிப்பை உருவாக்குவதை உறுதிசெய்கிறது – அதே நேரத்தில் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொலைநோக்குத் திட்டத்தை ஆதரிக்கிறது” என்று அல் ஸாபி கூறினார்.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2024 இல் 66 பில்லியன் டொலர்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பல மாதங்களாக உயர்ந்து, ஒருபோதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்நிய செலாவணி இந்த ஆண்டு இதுவரை 66 பில்லியன் டொலர்கள் அதிகரித்து தற்போது 689.235 பில்லியன் டொலர்களாக உள்ளது.
இந்த அந்நியச் செலாவணி கையிருப்பு உலகளாவிய அதிர்ச்சிகளிலிருந்து உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளைத் தனிமைப்படுத்த உதவுகிறது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் அண்மைய தரவுகளின்படி, அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் டொலர் 604,144 புள்ளிகளாக இருந்தன.
தற்போது தங்கம் கையிருப்பு 61.988 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
மதிப்பீட்டின்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் ஒரு வருட கணிக்கப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக உள்ளது.
2023 ஆமு; ஆண்டில், இந்தியா தனது அந்நிய செலாவணி கையிருப்பில் சுமார் 58 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
மாறாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 இல் 71 பில்லியன் அமெரிக்க டொலர்களின் ஒட்டுமொத்த சரிவைக் கண்டது. அந்நிய செலாவணி இருப்புக்கள் அல்லது அந்நியச் செலாவணி இருப்புக்கள் ஒரு நாட்டின் மத்திய வங்கி அல்லது நாணய ஆணைக்குழுவின் சொத்துக்கள் ஆகும்.
ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணிச் சந்தைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஒழுங்கான சந்தை நிலைமைகளைப் பராமரிக்க மட்டுமே தலையிடுகிறது.முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கு நிலை அல்லது பட்டையைக் குறிப்பிடாமல் மாற்று விகிதத்தில் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க, டொலர்கள் விற்பனை உட்பட பணப்புழக்க முகாமைத்வத்தின் மூலம் ரிசர்வ் வங்கி சந்தையில் அடிக்கடி தலையிடுகிறது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இந்திய ரூபாய் ஆசியாவின் மிகவும் ஏற்ற இறக்கமான நாணயங்களில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், இது மிகவும் நிலையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த மாற்றம் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) திறமையான நிர்வாகத்திற்கு ஒரு சான்றாகும்.
ரூபாய் வலுவாக இருக்கும்போது டொலரை வாங்குவதையும் பலவீனமாக இருக்கும்போது விற்பனை செய்வதையும் ரிசர்வ் வங்கி தந்திரமாக செய்து வருகிறது. இந்த தலையீடு ரூபாயின் மதிப்பில் பெரிய ஏற்ற இறக்கங்களை சமாளித்து, அதன் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கிறது. குறைந்த நிலையற்ற ரூபாய் இந்திய சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது, ஏனெனில் அவர்கள் அதிக கணிப்புத்தன்மையுடன் சிறந்த செயல்திறனை எதிர்பார்க்கலாம். நன்றி தினகரன்
லெபனான் மீது வான் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் பலி
- இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹிஸ்புல்லா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹிஸ்புல்லா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹிஸ்புல்லா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.
ஆனால், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.
ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், “ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹிஸ்புல்லா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment