September 27, 2024
உலகத் தமிழர் பேரவை அநுரவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது. முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது அநுரவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது. நம்பிக்கை வெளியிடுவது பிரச்னைக்குரியதல்ல ஆனால் நம்புவதற்கான அடிப்படை என்ன என்பதுதான் முக்கியமானது. அடுத்தது நம்பிக்கொண்டிருப்பது மட்டும்தான் விடயமா என்பதையும் நோக்க வேண்டும். அனுரகுமார திசாநாயக்க வித்தியாசமான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்.
அவரிடம் இனவாதம் வெளிப்படவில்லை ஆனால் அவரால் அதிகம் செய்ய முடியுமா – அப்படியே செய்ய முடியுமென்றாலும் எதைச் செய்ய முடியுமென்பதுதான் கேள்வி. அனுரகுமார திசநாயக்க சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கின்றார். கோட்டாபய முன்னர் ஜம்பது விகிதத்தை தாண்டிப் பெற்ற வாக்குகளின் மூலம் தமிழ் வாக்குகள் தேவையற்றவை என்பதை நிரூபித்திருக்கின்றனர். தற்போது அதனையே அனுரகுமார திசாநாயக்க வேறுவிதமாக நிரூபித்திருக்கின்றனர். தமிழ் வாக்குகள் இல்லாமலேயே அநுர அவரது வெற்றியை நிரூபித்திருக்கின்றார். ஆனால் ஜம்பது விகிதத்தை தாண்டிய ஜனாதிபதியாக அவரால் வரமுடியவில்லை.
இந்தப் பின்புலத்தில் அவர் அரசியல்ரீதியில் விடயங்களை முன்னெடுக்கும் வல்லமையுள்ளவாராக இருப்பதற்கான வாய்ப்பில்லை. இவ்வாறானதொரு சூழலில் அநுரவை நம்புவது என்பது தேவையற்ற ஒன்று. ஆனால் அநுரவுடன் உரையாடுவதில் தவறில்லை. அதிகாரத்தில் இருக்கும் எவருடனும் உரையாடுதல் பிரச்னையில்லை. அநுரகுமாரவின் அரசியல் ஆரம்பம் சிக்கலானது. 1971 மற்றும் 1989 காலப்பகுதியில் அவரது அமைப்பின் நிலைப்பாடும் செயல்பாடுகளும் சிக்கலானது. தமிழர் விரோதப்போக்கும் அவரது அரசியலின் அங்கமாக இருந்தது.
இப்போதைய அனுர முன்னைய அனுர இல்லை – அவரது கட்சியும் முன்னைய நிலைப்பாட்டில் இல்லை. ஆனாலும் அவர்களது இரண்டாம் மூன்றாம் மட்ட பிரிவுகள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றன – அவைகள் எந்தளவுக்கு ஒத்துப்போகும் – உடன்பட மறுக்கும் என்பதெல்லாம் இப்போதைக்கு ஊகிக்க முடியாது. எனவே ஓர் ஆட்சியாளரை அளவுக்கதிமாக நம்பவும் வேண்டியதில்லை – அதற்காக விரோதிக்கவும் வேண்டியதில்லை. உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் அமைப்புகளுக்கு அரசியல் யதார்த்தமும் புரியாது – அதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. முன்னர் மைத்திரி – பின்னர் ரணில் – இப்போது அனுர. இப்படியாக நம்புவதில் ஒரு புத்திசாதுரியமும் இல்லை மாறாக – அரசியல் அறியாமைதான் உண்டு. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment