சிவகாமியின் செல்வன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தொண்ணூற்றாராவது பிறந்த


தினம் அக்டோபர் முதலாம் திகதியாகும். தனது அரசியல் தலைவராக அவர் மதித்த காமராஜ் அவர்களுக்கு் கௌரவம் செய்யும் விதத்தில் தான் நடித்த ஒரு படத்துக்கு சிவகாமியின் செல்வன் என்று பெயரிட்டார் சிவாஜி. காமராஜின் அன்னையின் பெயர் சிவகாமி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெயரிடப் பட்ட படம் 1974ம் ஆண்டு திரைக்கு வந்தது.


ஹிந்தியில் தயாராகி வெற்றி பெரும் பல படங்கள் உடனுக்குடன் தமிழில் உருவாகி திரைக்கு வருவது ஐம்பத்து ஆண்டுகளுக்கு முன் வழமையாகும். இவ்வாறு தயாராகும் படங்கள் பெரும்பாலும் எம் ஜி ஆர் அல்லது சிவாஜியின் நடிப்பில் வெளியாகி , அவற்றுள் சில வெற்றி பெறுவதும், சில தோல்வியடைவதும் சகஜமாகும். இவ்வாறு வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை பெறாத படம்தான் சிவகாமியின் செல்வன்.

பிரபல பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான கே. கனகசபை

தனது ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் எம் ஜி ஆரின் நடிப்பில் மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை என்ற இரண்டு படங்களைத் தயாரித்து விட்டு தனது அடுத்த படத்துக்கு சிவாஜியை அணுகினார். சிவாஜியும் ஓகே சொல்லி விட படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகின. ஹிந்தியில் புகழ் பெற்ற தயாரிப்பாளரும், டைரக்டருமான சக்தி சமந்தா உருவாக்கிய ஆராதனா என்ற படத்தை தமிழில் சிவாஜி நடிப்பில் தயாரிப்பதென முடிவாகியது. சென்னையில் ஓராண்டுக்கு மேலும், ஏனைய நகரங்களில் பல வாரங்கள் ஓடி ரசிகர்களை கவர்ந்த இந்த ஆராதனா மீண்டும் தமிழில் ரசிகர்களின் ஆராதனையை எதிர்பார்த்து திரைக்கு வந்தது. தமிழ் நாட்டில் வெற்றி பெற்ற ஹிந்திப் படங்களை தமிழில் மீண்டும் எடுத்தால் அது வெற்றி பெறாது என்பது ஐதீகம். இது தெரிந்தும் சிவாஜியும், கனகசபையும் விஷப் பரீட்சையில் ஏனோ இறங்கினார்கள்.

இளம் ஜோடிகளான ராஜேஷ் கன்னாவும், ஷர்மிளா தாகூரும் நடித்த பாத்திரங்களை தமிழில் சிவாஜியும், வாணீஸ்ரீயும் ஏற்று நடித்தார்கள். வசந்த மாளிகையின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் இதில் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். ராஜேஷ் கன்னாவிடம் காணப்பட்ட அந்த இளமையை சிவாஜியிடம் காண முடியவில்லை என்றாலும், சிவாஜியின் நடிப்பு, அந்த ஸ்டைல், அந்த உணர்ச்சிபூர்வமான முகபாவனை இவற்றையெல்லாம் ராஜேஷ் கன்னாவிடமும் காண முடியவில்லை தானே! வாணிஸ்ரீயின் நடிப்பு, உருவம் இரண்டிலும் ஒரு முதிர்ச்சி தென்பட்டது. அது அவர் ஏற்ற பாத்திரத்துக்கு துணை நின்றது. ஆரம்பத்தில் காதலனிடம் அவர் காட்டும் நாணம், குழைவு , தனிமையில் சிக்கும் போது காட்டும் படபடப்பு, பின்னர் காட்டும் உருக்கம், தாயின் தவிப்பு என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தி இருந்தார் அவர்.


சிவாஜிக்கு இதில் இரட்டை வேடம். ஒருவருக்கு வாணிஸ்ரீ ஜோடி , மற்றையவருக்கு லதா ஜோடி. முதலில் வெண்ணிற ஆடை நிர்மலா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவருக்கும், சிவாஜிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நிர்மலா படத்தில் இருந்து விலக , லதா சிவாஜிக்கு ஜோடி சேர்ந்து இளமை விருந்தளித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுவேயாகும்.

பாதிப் படம் வரை வரும் சோ மீதி படத்தில் காணாமல் போய் விடுகிறார். வந்தவரைக்கும் சிரிக்கவும் வைக்கிறார். எஸ் வி சகஸ்ரநாமம் நடிப்பில் குறையில்லை. ஓரிரு காட்சியில் மட்டும் தோன்றும் எஸ் வி ரங்காராவ் உருவத்தில் இளைத்திருந்தாலும், நடிப்பில் இளைக்கவில்லை. ஏவி எம் ராஜன் நடிப்பு வழக்கம் போல. இவர்களுடன் எம் என் ராஜம், வி.நாகையா, ஆர் எஸ் மனோகர்,டி . கே . பகவதி, ஸ்ரீகாந்த், எஸ் என் பார்வதி, செந்தாமரை ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கான வசனங்களை ஏ எல் நாராயணன் தீட்டியிருந்தார். சில

அம்மாக்கள் சொல்லிச் சொல்லி அழுவார்கள், சிலர் சொல்லாமல் அழுவார்கள் ! போன்ற வசனங்களில் அவரின் திறன் வெளிப்பட்டது. ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த பல படங்களுக்கு வசனம் எழுதி தேர்ச்சி பெற்றிருந்த நாராயணன் இப் படத்திலும் குறை வைக்கவில்லை.

படத்தின் பல காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாக ஊட்டி, டார்ஜ்லிங், கேரளா என்று பல இடங்களில் படமாகி இருந்தன. ஒளிப்பதிவுத் துறையில் நீண்ட கால அனுபவமும், திறமையும் கொண்ட மஸ்தான் கலர் படமான இதில் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். சபாஷ் மஸ்தான்!


ஆராதனாவுக்கு இசையமைத்தவர் எஸ் டி பர்மன். இவர் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. தமிழ் படத்துக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் அதற்கு எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை. புலமைப்பித்தனின் இனியவளே என்று பாடி வந்தேன் , மேள தாளம் கேட்கும் காலம், வாலியின் எதற்கும் ஒரு காலம் உண்டு, என் ராஜாவின் ரோஜா முகம், கண்ணதாசனின் உள்ளம் ரெண்டும், எத்தனை அழகு கொட்டி கிடக்குது, ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவதுண்டு ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நிற்கின்றன.

படத்தை இயக்கியவர் சி வி ராஜேந்திரன். ஹிந்தியில் இருந்ததை

அப்படியே தமிழில் வடித்திருந்தார். அரசியலில் தன்னுடைய தலைவராக பெரும் தலைவர் காமராஜரை வரித்துக் கொண்ட சிவாஜி , காமராஜரை போற்றும் வண்ணம் படத்துக்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் வைத்தார். ஆனாலும் தேர்தலில் சிவகாமியின் செல்வனை கை விட்ட மக்கள் , சிவாஜியின் சிவகாமியின் செல்வன் படத்தையும் கை விட்டு விட்டார்கள்!

No comments: