கம்போடிய அரசின் வாழ்நாள் சாதனை விருது பெற்ற கலாநிதி பாரதி இளமுருகனார்

அங்கோர் தமிழ்ச் சங்கமும் கம்போடிய அரசின் பண்பாடு மற்றும் நுண்கலை அமைச்சும் இணைந்து ஒழுங்குசெய்த உலகத் தமிழ்க் கவிஞர்கள் மகாநாடு கம்போடியாவிலே கோலாகலமாகக் கொண்டாடப்பெற்றது. இந்த மகாநாட்டிலேதான் தமிழ்க்; கவிஞர்களுக்கான கவிதைப் போட்டியும்   நடந்தேறியது.. அந்த விழாவிலேதான் பாரதி அவர்களுக்கு கம்போடிய அரசினால்; இந்தப் பெறுமதிமிக்க விருது வழங்கப்பெற்றது. அயல் நாடொன்று இவரின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டிக் கௌரவம் அளிக்கின்றது என்றால் இவர் ஆற்றிய சேவைகளின் உயர்வுபாராட்டுவதற்கு உரியதல்லவா?

 ஈழவள நாட்டிலே புலவர் பரம்பரையை இலங்கச் செய்து தமிழிலே


15000 திற்கும் அதிகமான பாடல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தவர் நவாலி ஊரிலே திருத்தக வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் ஆவார். வன்னியசேகர முதலியார் பரம்பரையிலே அரச வழித்தோன்றலாகப் பிறந்து,  தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைபெற்று விளங்கி, ‘தங்கத் தாத்தா’ என்று அறிஞர்களால் அன்புடன் அழைக்கப்பெற்று வந்த புலவரின் மூத்த புதல்வனே கவிசிந்தாமணி      புலவர்மணி இளமுருகனார் அவர்கள். இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வனாகிய கலாநிதி சோமசுந்தர பாரதி சிறு வயதிலிருந்தே தமிழிலும் சைவத்திலும் மிகுந்த பற்றுடையவராகவும் சமூக சேவை செய்வதில்; விருப்பங் கொண்டவராகவும் விளங்கினார். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்.

 

தவத்திரு யோகர் சுவாமிகளின்   பூரண ஆசீர்வாதம்

எட்டு வயது நிரம்பிய பாரதியை அவரின் தந்தை( கொழும்புத்துறை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்திலே) ஒருநாள்  தவத்திரு யோகர் சுவாமிகளிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பாரதியைத்  தனது மடியிலே தூக்கி வைத்து ஒரு வாழைப்பழத்தை உரித்து இவருக்குச் சுவாமிகள் முற்றாக ஊட்டினார். இவருடைய தந்தை சுவாமியிடம் :”இவன் என்ன செய்யப்போகிறானோ தெரியவில்லை சுவாமீ . குழப்படி அதிகம் என்று சொல்ல  சுவாமி உடனே,  ‘அவன் பல்லைப் பிடுங்குவான் போ’ என்று அருள்வாக்காகச் சொல்லிச் சிரித்தhர்.. அப்பொழுது அவர் சும்மா பகிடிக்குச் சொல்கிறார் என்று நினைத்து நாளடைவில் அவர் சொன்னதை பாரதியின் குடும்பத்தவர்கள் மறந்தே விட்டார்கள். சிவனானச் சித்தரின் வாக்குப் பொய்யாகுமோ?. 


பின்னர் இஸ்கந்தவரோதயாவின் அதிபராக விளங்கிய இவரின்  தாய்மாமனாகிய ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் விருப்பப்படி  அந்தக் கல்லூரியிலே தனது கல்வியைத்  தொடர்ந்தார். 12ஆம் வகுப்புச் சோதனையிலே மிகவும் திறமையாகச் செய்து நேரடியாக மருத்துவம்(MBBS)   செய்வதற்குத் தெரிவானார். ஆனால் அந்தக் காலத்திலே இறுதியாக ஒரு நேர்முகச் உரையாடல் வழக்கத்தில் இருந்தது. அந்த உரையாடலிலே இவருக்கு பல்மருத்துவம்தான் கிடைத்தது. அப்பொழுதுதான்   யோகர் சுவாமிகள் சொன்ன வார்த்தையின் உண்மை அர்த்தம் விளங்கியது. பாரதி அவர்களும் அதை ஏற்றுப் படித்ததனாலேதான்   அவருக்குப் பெரும் புகழும் செல்வமும் கிடைத்தது என்பதைப் பலர் அறிவார்கள். சித்தர்களின் அருள்வாக்கிலேதான் எவ்வளவு உண்மை!    

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பல்மருத்துவக் கல்லூரியிலே


தனது மேற்படிப்பைத் தொடர்ந்த பாரதி திறமைச் சித்திபெற்று பல்மருத்துவக் கல்லூரியிலே உதவி விரிவுரையாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரி ந்ததுடன் பல் மருத்துவத்தின் நவீன சிகிச்சை முறைகளிலே  நன்கு பயிற்சிபெற்ற ஓர் பல்மருத்துவராக யாழ்ப்பாணப் பொது அரசாங்க மருத்துவசாலையிலே சேர்ந்து அங்கும் மூன்று ஆண்டுகள் பணியியற்றினார். அந்தக் காலத்திலே அரச உத்தியோகத்தைத் தக்கவைப்பதற்கும் சம்பள உயர்வு பெறுவதற்கும் ஒருவர் சிங்கள மொழியிலே தேர்ச்சி (குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்) பெற்றிருக்கவேண்டும். தமிழ்ப் பற்று மிகுந்த பாரதி சிங்களம் கற்க விரும்பவில்லை. அதனால் யாழ். அரசினர் மருத்துவசாலையிலே மூன்று ஆண்டுகள் முடிவடைந்ததும் இவர் தனது வேலையை இழக்க  நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் இந்தக் குறுகிய காலத்திற்குள் வட மாநிலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது பல் மருத்துவத் திறமைதனை நிலைநாட்டிப் புகழை ஈட்டியிருந்ததால் சிங்களம் படிக்காத ஒரே காரணத்திற்காக வேலையை இழந்திருந்தும் தனது ஆளுமையிலே திட நம்பிக்கையுடன் தனிப்பட்ட பல் சிகிச்சை நிலையத்தை ஏற்படுத்தி 15 ஆண்டுகள் அதிசிறந்த பல் மருத்துவராகப் பணியாற்றினார்.  இவரிடம் பல் சிகிச்சை பெற்ற  ஆயிரமாயிரம் நோயாளிகள் இவரின் திறமைதனை பாராட்டிப் புகழாரஞ் சூட்டிவந்தமை  இவருடைய காலத்திலே அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும்..

 


உலகப் பிரசித்திபெற்ற சமூகத் தொண்டு  நிறுவனமாகிய சர்வதேச றோட்டரி அமைப்பிலே ஈடுபாடு கொண்டு யாழ்ப்பாணம் றோட்டரிச் சங்கத்திலே அங்கத்தவராகி  1971 முதல் 1984 வரை பல பொறுப்பான பதவிகளை வகித்துப் பல புதிய புதிய திட்டங்களை வடிவமைத்து அவற்றைத் திறம்படச் செய்துமுடித்ததைத் தொடர்ந்து சர்வதேச  றோட்டரி அமைப்பின் சிக்காக்கோ தலைமை அகத்திலிருந்து உலக றோட்டரி அமைப்பின் தலைவரின் தனிப்பட்ட    பாராட்டுகளையும் பெற்றவர். 

இவர் யாழ்ப்பாணத்திலே பணி புரியும் காலத்திலே  இயற்றிய 10க்கும் மேற்பட்ட இசைச்சித்திரங்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிலைய வாத்தியக் கலைஞர்கள் ஏற்ற இசையமைத்து ஒலிபரப்பியுள்ளார்கள். இவை இவருக்கு மேலும் புகழைக் கொடுத்தது. ஈழநாடு பத்திரிகையும்  காரைநகர் தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்படுத்திய கவிதைப் போட்டியிலே 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்றார்கள். அப்போட்டியிலே முதலிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றமை இவரின் கவிதை இயற்றும் ஆற்றலுக்குச் சான்றுபகர்ந்தது எனலாம்.   

முதன்முதலாக யாழ்ப்பாணத்திலே வெகு சிறப்பாக நடந்தேறிய


தமிழாராய்ச்சி மகாநாட்டிலே இவர் பல வழிகளாலும் பணிசெய்தவர். இவரின் அசாத்தியத் திறமைகளை நேரிலே கண்டறிந்த யாழ் மாநகரசபை விசேட ஆணையாளராகக் கடமையாற்றிய திரு சிவஞானம் அவர்கள் மாநகரசபையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்காகப் பத்து நாள்களும்  கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பினைக் கலாநிதி பாரதியிடம் கையளித்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யக்கூடாது என்றும் கலைநிகழ்ச்சி ஒன்றுகூட நடத்த விடமாட்டோம் என்றும் அதை மீறி ஒழுங்கு செய்தால் பெரும் விழைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும்  பல மிரட்டல்களும்; அச்சுறுத்தல்களும்  சிலரிடம் இருந்து பாரதி அவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விடுவிக்கப்பட்டன. உயிரைப் பணயம் வைத்துப் 10 நாள்  நிகழ்ச்சிகளையும்; தனிமனிதனாக நின்று ஒழுங்குசெய்து வெற்றிகரமாக ஒப்பேற்றியவர் பாரதி. 10 நாள்களும் சிறப்பாக நிகழ்ச்சிகள் நடைபெற்றுப் பாரதி அவர்களுக்கு பெரும் புகழைக் கொடுத்தது.  . இந்த வெற்றி அவரின் துணிச்சலுக்கும் நிருவாகத் திறமைக்கும் சான்றாகியது.

 தன்னிகரற்ற பல்மருத்துவராகப் புகழுடன் இருந்தும் நாட்டு


நிலைமை காரணமாக 1984ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கு ஊட்டியிலேயும் கோத்தகிரியிலும் பல்சிகிச்சை நிலையங்களை  ஏற்படுத்திப் பத்து ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றினார்.

ஊட்டியிலே தொழில் செய்துவந்த பத்து ஆண்டுகளும் உதகை றோட்டறிச் சங்கத்திலே பல பதவிகளை வகித்தார்.   இவர் சமூகசேவை இயக்குநராக இருந்த மாவட்ட றோட்டரிப் பிரிவிலுள்ள  81 றோட்டரிச் சங்கங்களுக்குள்ளே அதிசிறந்த சமூக   சேவைக்கான மூன்று விருதுகளை (Outstanding Community Service District Awards) ஆளுமையை வெளிப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் இவர் பணியாற்றிய காலத்தில் இவரது சேவைகளையும் தமிழ்ப்பணிகளையும் ;பாராட்டி ஊக்கப்படுத்திய தமிழறிஞர்களில் 

இயலிசை வாரிதி பிரம்மசிறீ வீரமணி ஐயர் வைத்தீஸவரக் குருக்கள் அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசாமி சிவகுருநாத செட்டியார் வித்துவான் ஆறுமுகம் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் சிவத்தம்பி   கனக செந்திநாதன் வித்துவான் வித்துவான் வேலன் வித்துவான் கா. பொ இரத்தினம் எழுத்தாளர் வரதர் பொன் முத்துக்குமாரன்  சிவப்பிரகாசபிள்ளை பண்டிதர் மயில்வாகனம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றும் ஊட்டியிலே (தமிழ் நாடு)பத்து வருடங்கள் பணிபுரிந்த காலத்திலே தமிழ் நாட்டைச் சேர்ந்த  பத்மசிறீ அவ்வை நடராசன் பேராசிரியர் பசுவலிங்கம் கே ரி திருநாவுக்கரசு(இயக்குநர் தமிழாராய்ச்சி நிறுவனம்) திருக்குறள் முனுசாமி  போன்ற பல தமிழ் அறிஞர்களும்   தன்னை ஊக்குவித்தும் பாராட்டியும் வந்துள்ளார்கள் எனவும் இவர் கூறுவதுண்டு.

 பிற மொழி;க் கலப்பில்லாது தமிழை எழுதுவதையும் பேசுவதையும்


பெரிதும் விரும்பிச் செயற்பட்டு வரும் பாரதி அவர்கள் எதுவித பலனையும் எதிர்பார்க்காது பல அமைப்புகளுக்கும் தனிப்பட்ட நண்பர்களுக்கும்    தூய தமிழை எழுதுவதற்கு உதவி செய்து வருவது பலருக்குத் தெரிந்ததொன்றாகும். அவுஸ்திரேலியாவிலே  தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத்தினால் பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பெற்று வருகின்ற  தமிழ் ஊக்குவிப்புப் போட;டிகளைச் சிறப்பாக நடத்துவதற்கு கலாநிதி பாரதி அவர்கள்  பரீட்சைஅதிகாரிகளில் ஒருவராகக் கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. 

அவரது தாத்தாவாகிய நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இயற்றிய நூல்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அவற்றில் முக்கியமான பல நூல்களை  மறு பிரசுரம் செய்து வெளியிட்டு வருகிறார்.

  அவுஸ்திரேலியா வந்த பின்னர் பலவித சமூகப் பணிகளிலும் சைவப் பணிகளிலும் தமிழ் ஊக்குவிப்புத் திட்டங்களிலும் பெரும் பங்கேற்று வரும் பாரதி அவர்கள்

 ஓபன் தமிழர் கழகம் (இப்பொழுது கம்பலாந்து தமிழர் கழகம்)  ஆரம்பிப்பதற்கு வழிவகுத்த ஐவர்களில் ஒருவராவர்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழாக்களாக 2013ஆம் ஆண்டிலிருந்து 2019ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக நடத்துவதற்கு விழா அமைப்பாளராகப் பணி புரிந்து வருகிறார் இதுவரை 16 தமிழறிஞர்களுக்கு விழா எடுக்கப்பெற்றுள்ளது பலரும் அறிந்ததே!.  

 உலக இலக்கியத் தமிழ் மகாநாடு- திருக்குறள் மகாநாடு  சிலப்பதிகார மகாநாடு-  கவி அரங்குகள்  கருத்தரங்ககள் போன்றவை அமைப்பதில் முக்கிய பங்கேற்றமை. பல கவி அரங்குகளுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்புச் செய்தமையும் இவரின் பணிகளில் அடங்கும்.

 இவர் இயற்றிய நூல்கள்

அருள்மிகு சிட்னி முருகன் திரு ஊஞ்சல்

பிளெமிங்ரன் அருள்மிகு விநாயகர் திரு ஊஞ்சல்

றீயன்ஸ் பார்க் அருள்மிகு துர்க்கை அம்மன் திரு ஊஞ்சல்

ஹெலன்ஹ்பேக் அருள்மிகு சிவன் திரு ஊஞ்சல்

ஹெலன்ஹ்பேக் அருள்மிகு வெங்கடேசர் திரு ஊஞ்சல்

கன்பரா அருள்மிகு ஆறுபடை முருகன் திரு ஊஞ்சல்

விக்ரோறியா கரம்டவுன்ஸ் அருள்மிகு சிவன்திரு ஊஞ்சல்

விக்டோறியா அருள்மிகு வெங்கடவரதர் திரு ஊஞ்சல்

விக்டோறியா சன்சைன்  அருள்மிகு முருகன் திரு ஊஞ்சல்

விக்டோறியா றொக்பாங் அருள்மிகு முருகன் திரு ஊஞ்சல்

விக்டோறியா பேசன் அருள்மிகு வத்திரதுண்ட விநாயகர் திரு ஊஞ்சல்

அருள்மிகு சக்தி திரு ஊஞ்சல்

அருள்மிகு திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி

அருள்மிகு வி;நாயகர் திருப்பள்ளி எழுச்சி

எண்பது குழந்தைப் பாடல்கள்   கொண்ட சிறுவர் செந்தமிழ் (பதிப்பிக்க உள்ள புத்தகம்)

சிவஞானச் சித்தர்’ தவத்திரு சிவயோகர் சுவாமிகள். 

சூரிய வழிபாடும் கோளறு பதிகமும்’ என்னும் நூலுக்கு உரை 

  தன்னலமற்ற தனிப்பட்ட சமூக சேவைகளையும் சர்வதேச றோட்டரிச் சங்கங்களின் மூலமாக ஆற்றிய சமூக சேவைகளையும்

தமிழ்ப் பணிகளுக்கு அவர் 50 ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்புகளையும் 

அவரின் சைவசமயப் பணிகளையும் பரிசீலனை செய்தபின்னரே பல அமைப்புகள் விருதுகளை அளித்துள்ளன.

அவற்றுள் முக்கியமானவை  தமிழ் அறிஞர் விருது - முத்தமிழ் வித்தகர் விருது – திருமந்திரச் சுடர் விருது – சிவஞானச் சுடர் விருது – சிவஞான சித்தியார் செம்மல் விருது - தெய்வீகச் சுடர்; விருது போன்றவற்றை ஆகும்

மேலே குறிப்பிட்ட சேவைகளின் அடிப்படையில் அகில அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் கலாநிதி பாரதி அவர்களுக்கு  சான்றோர் விருதினை  2016ஆம் ஆண்டிலே கோலாகலமாக நடந்த கம்பன் விழாவிலே அளித்துக் கொரவித்தது. ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கம்ப வாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களும் அரங்கு நிறைந்த அவையினரும் குழுமியிருந்த கம்பன் விழாவிலே இந்த விருது அளிக்கப்பெற்றது.

 சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பாரதி அவர்களுக்கு கம்போடிய அரசின் பண்பாடு மற்றும் நுண்கலை அமைச்சின் உயர் விருதான வாழ்நாள் சாதனை விருது (Lifetime Achievement Award) வழங்கப் பெற்றது. 

எவ்வளவோ விருதுகள் கிடைத்தாலும் பாரதி அவர்களுக்கு பெரும் மனத் திருப்தியைக் கொடுப்பது என்ன வென்றால் அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கிய கோயில்களுக்கு அவர் திரு ஊஞ்சலை இயற்றிக் கொடுத்ததுதான். அவர் இயற்றிக் கொடுத்த எல்லாத் திரு ஊஞ்சல்களும் அந்தந்தக் கோயில்களிலே திருவிழாக் காலங்களிலே இசையுடன் பாடப்பெற்று வருவதுதான் பெரு மகிழ்ச்சியைக் கொடுப்பது என்று அறிகிறோம்.

  வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கலாநிதி பாரதி  அவர்களை தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் சில மாதங்களுக்கு முன்னர் அதன் வாராந்தக் கூட்டமொன்றில் கௌரவித்துச் சிறப்புச் செய்தது.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்டு நல்லதொரு சாரதி போன்று இந்தச் சங்கத்தை வழிநடத்திவரும் செந்தண்மை    பூண்ட திருமதி சறோயினி சுந்தரலிங்ம் அவர்கள் பாரதி அவர்களைப் பற்றிய பல செய்திகளைக் கூறி அவரைப் பாராட்டிக் கௌரவித்தார்.

 இதே போல இந்த மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கத்தின் செயற்குழு  அதன் வாராந்தக் கூட்டத்திலே  இவரைக் கௌரவித்தது.

  திரு பஞ்சாட்சரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திரு சிவா வரதன் அவர்கள் பாரதி அவர்களைப் பற்றிய அறிமுகத்தை அழகுறச் செய்தார்.

      வரதன் அவர்கள் தனக்கே உரிய தனித்துவமான கணீரென்ற குரலிலே ஆற்றிய உரை கூட்டத்திற்கு மெருகூட்டியது.

          =                                             (    எழுதியவர்          ----                யசோதா)

 

No comments: