இன்பத்தைச் சித்திரையாள் எப்படியும் கொடுப்பாள் !













 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



தைமகள் வந்தாள் தளர்வகற்றி நின்றாள்
வழிகாட்டி எம்மை வழிநடத்தி நின்றாள் 
புத்துணர்வு தந்தாள் புதுமுயற்சி தொடங்க
கைப்பிடித்து எம்மை கனிவுடனே அணைத்தாள்

அவளணைப்பில்  இருக்க சித்திரையாள் வந்தாள்
சீர்கொண்டு சிறப்போடு சிரித்தபடி வந்தாள்
ஆனந்தம் தருவாள் அகமகிழ வைப்பாள்
அவளோடு கைகோர்த்து அனைவருமே மகிழ்வோம் 

சித்திரை என்பதே சிறப்பான மாதம் 
எத்தனையோ எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மாதம்
கல்யாணப் பத்திரிகை காத்திருக்கும் மாதம்
கலகலப்பு எங்கணுமே காலூன்றும் மாதம் 

மருத்துநீர் என்பது மருந்து நீராகும்
உடலுளத்தைச் சீராக்கும் உயர்ந்த நீராகும்
சித்திரையில் சிறப்பாக இணையும் நீராகும்
அத்தனையும் முன்னோரின் அறிவியலே ஆகும்

புத்தாடை பட்டாசு சித்திரையில் இருக்கும்
புறப்பட்டு உறவெல்லாம் விருந்தாக வருவார் 
உணர்வோடு உறவுகள் சங்கமிக்கும் வேளை
உயர்வாகச் சித்திரையும் எழுந்துமே நிற்கும் 

ஊரிருக்கும் கோவிலெல்லாம் உற்சவம் நடக்கும்
உறவோடு குடும்பமெலாம் வழிபட்டு நிற்பார் 
ஆலயத்தில் அரன்நாமம் அனைவருமே சொல்லி
ஆனந்தம் அமைதிபெற அடிபரவி நிற்பார் 

சித்திரையில் தித்திப்பு இல்லமெலாம் இருக்கும்
எத்தனையோ பலகாரம் எங்குமே நிறையும்
பக்கத்து வீட்டார்க்கு பகிர்ந்துமே கொடுத்து
பகிர்ந்துண்ணும் பண்பினை காட்டுமே சித்திரை 

விதம்விதமாய் கலைவிழாக்கள் சித்திரையில் நடக்கும்
விளம்பரமே இல்லாமல் விருந்தோம்பல் நடக்கும்
இருப்போர்கள் இல்லாதார் இல்லங்கள் தோறும்
இன்பத்தைச் சித்திரையாள் எப்படியும் கொடுப்பாள் 



 




No comments: