ராஜீவ்காந்தி கொலை வழக்கு: தாயகம் திரும்பிய தமிழ் அரசியல் கைதிகள்
இவ்வருட முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு
SLFP வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு யாழ். பலாலி விமான நிலையத்தை குத்தகைக்கு விட அரசு தீர்மானம்
போராட்டத்தின் போது வெளிநாட்டவர் எவரும்... நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை இலட்சக்கணக்கான நாட்டு மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: தாயகம் திரும்பிய தமிழ் அரசியல் கைதிகள்
- 33 ஆண்டுகளுக்குப் பின் பூர்வீக வாழ்விடங்களுக்கு வருகை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும், தமது மூத்த சட்டத்தரணி புகழேந்தி அவர்களது வழித்துணையுடன் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் (03) யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர்.
இவர்களை, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் நேரில் சென்று சந்தித்து, அவர்களது சுகநலன் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். அதன்போது, தாம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விமானம் வழியாக இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதே வேளை, தாங்கள் மூவரும் தற்காலிக விசாவிலேயே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த காரணத்தைக் காட்டி விமானநிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும், குற்றப்புலனாய்வுப் பொலிசாரும் பல மணிநேர விசாரணைகளை தம்மிடம் மேற்கொண்டதன் பின்னரே தமது இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதித்ததாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுகையில், தனது மனைவி ‘நளினி’ ஒரு இந்திய பிரஜை என்பதால், தமிழகத்தில் இருப்பதாகவும், சிறையில் பிறந்த தனது ஒரே மகள் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழ்வதாகவும், இந்நிலையிலேயே தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டதால் தற்போது தாயாருடன் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முருகன், “தயவுசெய்து, தமது விடுதலை சாத்தியமாவதற்கு உந்து சக்திகளாக இருந்து துணைபுரிந்தவர்கள், தனது மனைவி பிள்ளையுடன் தானும் சேர்ந்து வாழும் நிலமைக்கு வழி செய்துதவுமாறு வினயமான கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மேலும், இத்தனை வருட காலங்களும் துன்பங்களை மட்டுமே அனுபவித்து நடைபிணங்கள் போன்று சிறைமீண்டு வந்திருக்கும் தம்மை, ‘இனிமேலாவது குடும்ப உறவுகளுடன் நிம்மதியாக காலத்தைக் கழிப்பதற்கு வழிவிட வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை ‘ எனத் தெரிவித்துள்ள மூவரும், தமது விடுதலைக்காக பல்வேறு வழி வகைகளிலும் போராடிய உலகவாழ் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் தமது வாழ்நாள் நன்றிகளை காணிக்கை செய்வதாக உருக்கத்துடன் விழிகசியக் கூறியதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் கோமகன் செய்திக் குறிப்பொன்றின் மூலம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஓமந்தை விசேட நிருபர் - நன்றி தினகரன்
இவ்வருட முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
இவர்களில் 39,900 ஆண்களும் 34,599 பெண்களும் அடங்குவதாகவும், அப்பணியகம் தெரிவித்தது.
இதற்கமைய அதிகளவான இலங்கையர்கள் குவைத்துக்கு சென்றுள்ளதுடன், 17,793 பேரே அங்கு சென்றுள்ளனர்.
இதேவேளை ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் தென்கொரியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவு இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்கு அனுப்ப முடிந்துள்ளது.
தென்கொரியாவுக்கு 2,374 பேரும் இஸ்ரேலுக்கு 2,114 பேரும் ருமேனியாவுக்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
கடந்த 2 மாதங்களில் மாத்திரம் வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து 963.08 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும், அப்பணியகம் மேலும் தெரிவித்தது.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
SLFP வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல
நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைப்பேன் - மைத்திரி
லங்கா சுதந்திரக் கட்சித் தலைவராக செயற்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பாக
SLFP வரலாற்றில் இது…
நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீதிமன்றத்துக்கு சென்று முறைப்பாட்டு மனு மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க இடைக்கால தடை உத்தரவை பெற்றுக்கொண்டார்.
எனினும் நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பான ஆவணங்கள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இத்தகைய சவால்கள் புதிதல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அநுர பண்டாரநாயக்க போன்றோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கினர். 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர் கட்சியானது 17 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டியதாயிற்று.
எமது கட்சியிலுள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் சென்றுள்ளனர். அதனால் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக சில முடிவுகளை எடுத்தது. அமைச்சர் பதவியின் பேராசையால் அவ்வாறு அவர்கள் செயற்பட்டார்களே தவிர நாடு, கட்சி, மக்கள் மீதுள்ள அன்பினால் அல்லவென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு யாழ். பலாலி விமான நிலையத்தை குத்தகைக்கு விட அரசு தீர்மானம்
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தனியார் துறையினருக்கு பலாலி விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இதற்கு பொருத்தமான முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மத்தல விமான நிலைய செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனையை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார். நன்றி தினகரன்
போராட்டத்தின் போது வெளிநாட்டவர் எவரும்... நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை இலட்சக்கணக்கான நாட்டு மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
நாட்டில் நிலவிய நெருக்கடியின் போது வெளிநாட்டு தரப்பினர் எவரும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்பதை சபையில் சுட்டிக் காட்டிய சபாநாயகர், நாட்டின் இறையாண்மைக்கு வெளிநாட்டு தரப்புகள் அச்சுறுத்தல் விடுத்ததாக அறியமுடியவில்லை என்றும் பாராளுமன்றம் என்ற மக்களின் இறையாண்மைக்கு இலட்சக்கணக்கான நாட்டு மக்களே அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, உள்ளக மட்டத்தில் குறைபாடுகளுடன் நாம் செயற்படும் போது வெளி தரப்பினர் அதில் தலையிட முற்படுவார்கள் என குறிப்பிட்ட சபாநாயகர், அந்த வகையில் போராட்டத்தின் போது ஆரம்பத்திலிருந்தே அவ்வாறான நிலை காணப்பட்டது என்றும் தெரிவித்தார். இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் உருவாகாமல் தடுப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம் பி ‘’அரகலய’ சந்தர்ப்பத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்ட சர்வதேச தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டுமென சபையில் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் இறையாண்மையை இலட்சக்கணக்கான உள் நாட்டு மக்களே அச்சுறுத்தினார்கள்.’அரகலய’ சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற கட்டடத்தை சுற்றி வளைப்பதற்கு ஒரு தரப்பினர் வருகை தந்தார்கள். பாரிய போராட்டத்துக்கு மத்தியில் பாராளுமன்றத்தை நாம் பாதுகாத்தோம்.
நெருக்கடியின் போது வெளிநாட்டு தரப்பினர் எவரும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. எமது மக்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட பாரியதொரு அச்சுறுத்தலாகும்.
உள்ளக மட்டத்தில் குறைபாடுகள் காணப்படும் போது வெளி தரப்பினர் தலையிடுவார்கள். இது இயல்பானதே எமது தரப்பிலும் பல குறைபாடுகள் காணப்பட்டன. ’அரகலய’வின் ஆரம்பத்தில் இருந்தே அது வெளிப்பட்டது.ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான நிலை உருவாகாமல் தடுப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment