உலகச் செய்திகள்

 தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு

இம்ரான் கானின் சிறை தண்டனை இடைநிறுத்தம்

இஸ்ரேலில் உஷார் நிலை

இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற காசா மருத்துவமனையில் பேரழிவு

தாய்வானில் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 9 பேர் பலி


தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு

காசா வந்த உதவிக் கப்பல் திரும்பிச் சென்றது

April 4, 2024 9:43 am 

 தொண்டுப் பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை எடுத்துச் சென்ற கப்பல் மீண்டும் சைப்ரஸுக்கே திரும்பியுள்ளது. ஏழு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தனது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில் இஸ்ரேல் மன்னிப்புக் கேட்டுள்ளது.

மத்திய காசாவில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன் அமைப்பின் தொண்டு பணியாளர்கள் சென்ற வாகனத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.

இதனை மனசாட்சி அற்ற தாக்குதல் என்று குறிப்பிட்ட ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரஸ், ‘போர் நடத்தப்படும் வரையில் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதே’ என்றார்.

பலஸ்தீன சகா ஒருவருடன் கொல்லப்பட்ட ஆறு தொண்டூழியர்களின் உடல்கள் ரபா எல்லை கடவை வழியாக எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்த நகரின் அபூ யூசுப் அல் நஜ்ஜார் மருத்துவமனையின் பணிப்பாளர் மர்வான் அல் ஹம்ஸ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் ‘பெரும் தவறு’ என்று குறிப்பிட்ட இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் தளபதி ஹெர்சி ஹலெவி, இரவு நேரத்தில் தவறுதலாக அடையாளம் காணப்பட்டதே இந்தத் தவறுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ அறிவிப்பில், ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன் உறுப்பினர்கள் மீது தற்செயலாக தீங்கு விளைவித்ததற்கு நாம் மன்னிப்புக் கோருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கவலைக்குரிய சம்பவம் தொடர்பில் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மீது இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்த சம்பவம் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அதிக தேவையுடைய பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க முயற்சிக்கும் உதவிப் பணியாளர்களை பாதுகாப்பதற்கு இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ என்று சாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த சம்பவம் குறித்து கடும் விசாரணைகளை ஆரம்பிக்கவும் கேட்டுள்ளார்.

நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனிஸ் ‘கோபம் மற்றும் கவலையை’ வெளியிட்டிருப்பதோடு இஸ்ரேலிய தூதுவரை அழைத்திருக்கும் பிரிட்டனர் ‘முழுமையான பொறுப்புக்கூறலுக்கு’ அழைப்பு விடுத்துள்ளது.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், எக்ஸ் சமூகதளத்தில் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய தூதுவருக்கு வெளியிட்டிருக்கும் பதிவில் ‘தன்னார்வலர்களுக்கு எதிரான கொடிய தாக்குதல் மற்றும் உங்களது பதில் கோபத்தைத் தூண்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து 240 தொன் உதவிப் பொருட்களுடன் காசாவை நோக்கி புறப்பட்ட கப்பல் மீண்டும் மத்தியதரைக்கடல் தீவு நாடான சைப்ரஸுக்கு திருப்பப்பட்டுள்ளது.

காசாவில் தரைவழியாக உதவிகள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வரும் நிலையிலேயே மாற்று வழியாக சைப்ரஸில் இருந்து உதவிக் கப்பல்கள் காசாவை நோக்கி அனுப்பப்பட்டன. ஐந்து மாதங்களுக்கு முன் போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை செயற்படுத்தி வரும் நிலையில் அங்கு குறிப்பாக வடக்கு காசா பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் கூறி வருகின்றன.

 

33 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் 180 ஆவது நாளாக நேற்றும் நீடித்தது. தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸில் பல குடியிருப்பு வீடுகளையும் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பத்து பேர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் நடத்திய தாக்குதல்களில் மேலும் மூவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். இதேநேரம் இஸ்ரேலிய பீரங்கிகள் காசா நகரில் பல இடங்களிலும் குண்டு வீசியுள்ளன.மேலும், காசா மக்கள் தொகையில் பதிக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் ரபா நகர் மற்றும் கான் யூனிஸ் நகரங்களின் வீடுகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் படகுகளில் இருந்து இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 59 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,975 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த போர் தொடர்பில் காசா அரச ஊடகம் நேற்று சில புள்ளிவிபரங்களையும் வெளியிட்டிருந்தது. இதன்படி போர் ஆரம்பித்தது தொடக்கம் 14,500 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 பேர் பட்டினியால் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 73 வீதத்தினர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதோடு 17,000 சிறுவர்கள் தமது பெற்றோர்களில் ஒருவரையேனும் இழந்துள்ளனர்.

தவிர, 484 மருத்துவ பணியாளர்கள், 140 ஊடகவியலாளர்கள் மற்றும் 65 பொதுமக்கள் பாதுகாப்பு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்வுகள் காரணமாக 1,088,764 பேர் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதோடு போதுமான மருந்துகள் இல்லாததால் 350,000 நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்த ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் உள்ள 32 மருத்துவமனைகள் செயலிழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் 70,000 தொன் குண்டுகளை வீசி இருப்பதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் முதல் நான்கு மாதங்களிலும் காசா மீது நடத்திய தாக்குதல்களில் சுமார் 18.5 பில்லியன் டொலர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நேற்று முன்தினம் (02) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 இல் மேற்குக் கரை மற்றும் காசாவில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 97 வீதமான அளவு சேதம் காசாவில் இடம்பெற்றிருப்பதாக இந்த மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் இஸ்ரேலிய பாராளுமன்றத்திற்கு முன் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த முன்னாள் பிரதமர் எஹுட் பராக், ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் நெதன்யாகு மீது குற்றம்சாட்டியதோடு முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

மறுபுறம் ஐக்கிய நாடுகள் சபையில் முழு அங்கத்துவத்தை பெறுவதற்கு பலஸ்தீனம் தனது விண்ணப்பத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது. ஐ.நா தலைவருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், 2011 ஆம் ஆண்டின் விண்ணப்பத்தை இந்த மாதம் பாதுகாப்புச் சபையில் எடுத்துக்கொள்ள அவதானம் செலுத்தும்படி ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் கோரிக்கை விடுத்துள்ளார்.   நன்றி தினகரன் 





இம்ரான் கானின் சிறை தண்டனை இடைநிறுத்தம்

April 2, 2024 9:38 am 0 comment

அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதுடன் தொடர்புபட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இடைநிறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இருவரும் அரச பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு 10 ஆண்டுகள் தடையும் பாகிஸ்தான் நாணயப்படி தலா 787 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

அரச இரகசியங்களை வெளியிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ஒருநாள் கழித்து கடந்த ஜனவரி 31 ஆம் திகதியே இம்ரான் கானுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் இம்ரான் கான் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் சிறை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் வழக்கப்பட்ட தண்டனையை இடைநிறுத்தியது. தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு தொடர்பான விசாரணை நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதியரசர் ஆமிர் பாரூக் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 




இஸ்ரேலில் உஷார் நிலை

April 5, 2024 10:46 am 

சிரியாவில் ஈரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்ட வான் தாக்குதலை அடுத்து ஈரானின் பதில் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் இராணுவம் அனைத்து போர்ப் பிரிவுகளுக்குமான விடுப்புகளை நிறுத்தியுள்ளது.

‘சூழ்நிலை மதிப்பீட்டின்படி, அனைத்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை போர் பிரிவுகளுக்கான விடுப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் போர் ஒன்றில் இருப்பதோடு தேவைகளுக்கு அமைய படைகளை அனுப்புவது தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகிறது’ என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.டமஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு ஜெனரல்கள் உட்பட ஈரான் புரட்சிக் காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக ‘இஸ்ரேல் தண்டிக்கப்படும்’ என்று ஈரானின் உயர்மட்டத் தலைவர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்காத போதும் அது பதில் தாக்குதல் ஒன்றை எதிர்கொள்வதற்கு உஷார் நிலையை அதிகரித்துள்ளது. இதனால் மேலதிக படைகளுக்கும் அது அழைப்பு விடுத்துள்ளது.உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் அது அறிவுறுத்தியுள்ளது.

ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணை தாக்குதல்களை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவத்தால் இஸ்ரேலிய ஜி.பி.எஸ். முறையில் நெரிசலை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரியவருகிறது.   நன்றி தினகரன் 






இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற காசா மருத்துவமனையில் பேரழிவு

நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டம்

April 2, 2024 8:28 am 0 comment

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலில் இதுவரை இல்லாத பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதோடு, காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவனையில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய முற்றுகையில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.

எனினும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு, நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று (01) தனது டாங்கிகள் மற்றும் வாகனங்களை வாபஸ் பெற்றதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த வளாகத்திற்குள் இருந்து பல டஜன் உடல்களை கண்டெடுத்தாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

மருத்துவமனையைச் சூழவுள்ள பகுதிகள் மீது வான் மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வாபஸ் பெறும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ஹமாஸ் அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த மார்ச் 18 ஆம் திகதி சுற்றிவளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. அங்கு ஹமாஸ் போராளிகள் செயற்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் ஹமாஸ் அதனை மறுத்தது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின்போது அல் ஷிபா மருத்துவமனையில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் திகதி முற்றுகை ஆரம்பித்தது தொடக்கம் மருத்துவமனையில் 21 நோயாளிகள் மரணித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

‘முற்றுகையின்போது அல் ஷிபா மருத்துவமனைக்குள் எம்மால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் இருந்தது’ என்று அந்த மருத்துவமனையில் உள்ள தாதி ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். ‘அங்கு பிணவாடை வீசி வருகிறது. எமக்கு நடந்தது விபரிக்க முடியாதது’ என்றும் அவர் கூறினார்.

மருத்துவமனைக்கு தீ வைத்து அதனை முற்றாக செயலிழக்கச் செய்து விட்டே இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து வாபஸ் பெற்றிருப்பதாகவும் மருத்துவ வளாகத்திற்குள் மற்றும் சுற்றி இருக்கும் கட்டடங்களில் ஏற்பட்டிருக்கும் சேதம் பாரியளவில் இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பகுதிகள் தீயினால் சோதமடைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டதாக குறிப்பிட்டிருக்கும் மருத்துவர் ஒருவர் சில உடல்கள் வாபஸ் பெறும் வாகனத்தினால் நசுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்னர் இங்கு ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்தனர். அவர்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது இஸ்ரேல் கடந்த நவம்பரிலும் தாக்குதல் நடத்தியபோது சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

மறுபுறம் மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையின் முற்றவெளி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவின் கட்டளை மையம் ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆறு மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

காசாவில் 20 வயதான நவாட் கொஹன் என்ற படை வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 600ஐ எட்டியதாக அது குறிப்பிட்டது. இதில் 256 படையினர் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்டுள்ளனர்.

நெதன்யாகுவுக்கு அழுத்தம்

காசா போர் தொடர்பில் இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று முன்தினம் (31) குடலிறக்க நோய்க்காக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அவரது நிலை சீராக இருப்பதாய் ஜெருசலத்தில் உள்ள மருத்துவமனை தெரிவித்தது.

அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைப் பிரதமர் யாரிவ் லெனின் தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

இந்நிலையில் ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்றக் கட்டடத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டமாக ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

ஹமாஸின் பிடியில் இருந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என்றும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

காசா போர் வெடிப்பதற்கு காரணமான 1,139 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதிய பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியது, காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கத் தவறியது தொடர்பில் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின் போது 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமானது.

முன்னதாக முஸ்லிம்களின் புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் முயன்றபோதும் ரமழானின் பாதிக்கும் அதிகமான நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

‘ஆறு மாதங்களின் பின்னராவது நெதன்யாகு தடையாக இருப்பதை அரசாங்கம் புரிந்து கொள்வது போல் தெரிகிறது’ என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஈவான் மோசஸ் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். இவர் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருக்கும் காடி மோசஸின் மாமனார் ஆவார். ‘அவர் உண்மையில் அவர்களை மீட்டு கொண்டு வர விரும்பவில்லை, அவர் இந்தப் பணியில் தோல்வியடைந்துள்ளார்’ என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தை முடக்கிய ஆர்ப்பட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக உறுதி பூண்டுள்ளனர்.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் செங்கடல் துறைமுக நகரான ஈலாட்டில் நேற்று வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

இஸ்ரேலின் கிழக்கில் இருந்து அனுப்பப்பட்ட பறக்கும் பொருள் ஒன்று ஈலாட்டில் இருக்கும் கட்டடம் ஒன்றை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. அப்போது அந்த நகரில் சைரன் அபாய ஒலியும் எழுப்பப்பட்டது.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், தகுந்த ஆயுதத்தை பயன்படுத்தி இஸ்ரேலின் முக்கிய இலக்கு மீது தாக்கதல் நடத்தியதாக குறிப்பிட்டது. இந்த நகர் மீது ஏற்கனவே யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியாவில் உள்ள குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகரில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் 57 வயது சகோதரி சபா அப்தல் சலாம் ஹனியேவை தெற்கு இஸ்ரேலில் வைத்து கைது செய்ததாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெல் ஷெவாவில் இருக்கும் தனது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





தாய்வானில் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 9 பேர் பலி

April 4, 2024 7:06 am 

தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று (03) இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஒன்பது பேர் பலியானதோடு மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் சுரங்கங்கள் மற்றும் இடிந்த கட்டடங்களுக்குள் 77 பேர் வரை சிக்கியிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

7.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பிரதேசமான ஹுவாலினில் பல மாடிகள் கொண்ட கட்டடங்கள் சாய்ந்து இருப்பது மற்றும் மேலும் பல கட்டடங்கள் இடிந்திருப்பது அங்கிருந்து வெளியான படங்கள் காட்டுகின்றன.

‘அது மிக சக்திவாய்ததாக இருந்தது. வீடு சரிந்து விழுவது போல் உணரப்பட்டது’ என்று தலைநகர் தாய்பேவில் உள்ள 60 வயது மருத்துவமனை பணியாளர் சாங் யூ லின் தெரிவித்துள்ளார்.  மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் நேரத்தில் 15.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்கம் இடம்பெற்றதோடு ஆரம்பத்தில் தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் கரைகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தலைநகர் தாய்பேவில் 50க்கும் அதிகமான முறை பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக காலநிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானில் 1999 ஆம் ஆண்டு சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டு 50,000க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்த  7.6 ரிச்டர் அளவான பூகம்பத்திற்குப் பின்னர் அந்நாட்டில் பதிவான சக்திவாய்ந்த பூகம்பமாக இது உள்ளது.

நன்றி தினகரன் 



No comments: