காதலிக்க நேரமில்லை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்ட ஸ்ரீதர் , தனது சித்ராலயா பட நிறுவனத்தின் முதலாவது வண்ணப் படத்தை 1964ம் ஆண்டு தயாரித்தார். முதல் வண்ணப் படம் என்றால் அதனை நட்சத்திர நடிகர்களை கொண்டுதான் தயாரிக்க பலரும் விரும்பும் நேரத்தில் புதுமுக நடிகர்களையும், ஓரளவு அறிமுகமான நடிகர்களையும் போட்டு இப் படத்தை ஸ்ரீதர் உருவாக்க முன் வந்தார். படத்திற்கு அவர் தெரிவு செய்த ஒரே நட்சத்திர நடிகர் டி எஸ் பாலையா தான்!

படத்துக்கு ஸ்ரீதர் வைத்த பெயர் காதலிக்க நேரமில்லை. மலேசியாவில் இருந்து கல்வி பயில சென்னை வந்திருந்த ரவிச்சந்திரன் ஒரு ஹீரோவாகவும் , முத்துராமன் இன்னுமொரு ஹீரோவாகவும் , நாகேஷ் மற்றைய கதாநாயகனாகவும் தெரிவானார்கள். விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்த காஞ்சனா , இரண்டாம் கட்ட நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ , இரண்டு படங்களில் ஹீரோயினியாக நடித்திருந்த
சச்சு ஆகியோர் கதாநாயகிகளாக உள்வாங்கப் பட்டார்கள்.

இளம் கதா பாத்திரங்கள், இளம் நடிகர்கள் என்றவுடனே ஸ்ரீதர் படத்துக்கு இசையமைக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரையுமே அமர்த்தினார். அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். பாடல்களை எழுதி கொடுத்த கண்ணதாசன் அத்தோடு விட்டுவிடவில்லை. ஸ்ரீதர் ஏராளமாக செலவு செய்து கலரில் படம் எடுக்கிறாய், புதுமுகங்களை போட்டு படம் எடுப்பது பெரிய ரிஸ்க் , இது வேண்டாம் என்று அறிவுரை கூறத் தலைப்பட்டார். அவ்வளவுதான் , அதில் ஏற்பட்ட வாதம் வம்பாகி , இருவரிடையேயும் விரிசல் ஏற்பட்டு விட்டது. பின்னர் விசுவநாதன் தலையிட்டு பிரச்னை தீர்ந்தது! அதே போல் போலீஸ்கரன் மகள் தெலுங்கு படத் தயாரிப்பின் போது ஸ்ரீதருக்கு, பி சுசீலாவுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இனி என் சொந்த தயாரிப்பில் சுசிலா பாட வேண்டாம் என்று ஸ்ரீதர் தடை போட, அனைத்து வாய்ப்புகளும் எஸ். ஜானகிக்கு போயின. இப்போது மீண்டும் விஸ்வநாதன் தலையிட்டு , சுசிலா சிறு விளக்கக் கடிதம் எழுதி பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்தது. ஆக காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்கள் வெற்றி பெற விஸ்வநாதன் இசையை மட்டும் வழங்கவில்லை, ஸ்ரீதர், கண்ணதாசன், சுசிலா இசைந்து போவதற்கும் வழியமைத்தார்!
இந்தப் படம் தயாரான அதே காலகட்டத்தில் ஸ்ரீதர் , எம் ஜி ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்று ஒரு படத்தை ஆரம்பித்து சில தினம் படப்பிடிப்பு நடந்து பின்னர் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் அதன் படப்பிடிப்பு நின்று விட்டது. புதுமுகங்களை வைத்து கலரில் படம் எடுக்கும் ஸ்ரீதர் தன்னை போட்டு கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறார் என்ற கோபம் எம் ஜிஆருக்கு! இப்படி பல சங்கடங்களுக்கு மத்தியில் காதலிக்க நேரமில்லை தயாரானது.



மெல்லிசை மன்னர்கள் இப்படத்துக்கு வழங்கிய மியூசிக் தமிழ் திரைக்கு புதிது. கர்னாடக மெட்டில் மேற்கத்திய இசைக் கருவிகளையும் சேர்த்து அவர்கள் வழங்கிய இசை இளைஞர்களை சுண்டி இழுத்தது. அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் நின்று நிலைக்கிறது. பாடல்களை பி பி ஸ்ரீனிவாஸ், கே ஜே ஜேசுதாஸ், சுசிலா, எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் படியிருந்தார்கள். டி எம் எஸ் மிஸ்ஸிங். உணர்ச்சிகரமான பாடல்களையும், சோகமான பாடல்களையும் பாடும் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தில் மாடி மீது மாடி கட்டி, உங்க பொன்னான கைகள் புண் ஆகலாமா பாடலையும் பாடி அசத்தியிருந்தார். அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் பாடல் இளம் உள்ளங்களை கொள்ளை கொண்டது. நாளாம் நாளாம் திருநாளாம் பாடல் இதயத்தை மிருதுவாக தடவியது. பின்னாளில் பிரபல டான்ஸ் மாஸ்டராக விளங்கிய தங்கப்பனுக்கு இப் படம் ஆரம்ப படிக் கல்லானது.



ஆரம்ப காலத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து விட்டு இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று தீர்மானித்திருந்த பாலையாவுக்கு திருப்புமுனையாக இப் படம் அமைந்தது. அவர் ஏற்ற கோடிஸ்வரர் விஸ்வநாதன் பாத்திரத்துக்கு அவரை விட்டால் யாருமில்லை என்ற நிலையே இன்று வரை நீடிக்கிறது. படத்துக்கு படம் முன்னேறிக் கொண்டிருந்த நாகேஷுக்கு இப் படம் ஒரு திருப்பு முனையாக விளங்கியது. ரவிசந்திரன், முத்துராமன், காஞ்சனா, ராஜஸ்ரீ ஆகியோர் அவர் அவர் பாத்திரத்துக்கு அப்படியே பொருந்தினார்கள்.

படத்துக்கு ஸ்ரீதரும்,கோபுவும் இணைந்து வசனம் எழுதினார்கள். நாகேஷ் படம் எடுக்க அலைவது, பாலையாவுக்கு கதை சொல்வது எல்லாம் இயல்பாக அமைந்து கோபுவுக்கு பேரைப் பெற்று கொடுத்தது. ஸ்ரீதரின் எல்லாப் படங்களுக்கும் படத் தொகுப்பாளராக பணியாற்றும் என் எம் சங்கர் இந்தப் படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் எடிட் பண்ணியிருந்தார். ஏ வின்சென்டின் ஒளிப்பதிவு தமிழ் கலர் படங்களில் ஒரு மைல் கல் எனலாம். வெளிப்புற படப்பிடிப்பு சூப்பர். எஸ் எஸ் வாசன் புதிதாக உருவாக்கிய ஜெமினி கலர் லேபில் உருவான முதல் கலர் படம் என்ற பெருமையையும் இப் படம் பெற்று கொண்டது.



இப்படத்தில் நடித்த அனைவரும் இப் படத்தை தொடர்ந்து பிசியாகி விட்டார்கள். ரவிச்சந்திரன் நட்சத்திர அந்தஸ்தை இந்த ஒரே படத்தில் பெற்று விட்டார். காஞ்சனா, ராஜஸ்ரீ இருவரும் ரசிகர் மனதில் நிலைத்து விட்டார்கள். சச்சு கதாநாயகி அந்தஸ்தை விட்டு விட்டு நகைச்சுவை நடிகை ஆகி விட்டார்.

ஸ்ரீதர் காதலிக்க நேரமில்லை படத்தை எடுக்கும் போதே அவருக்கு காதலிக்க நேரம் கிடைத்து விட்டது. ஆம் கல்லூரி மனைவி தேவசேனாவை அவர் கரம் பற்றிக் கொண்டார். அந்த மகிழ்ச்சியிலேயே முழு நீள நகைச்சுவை படமாக இதனை நேர்த்தியாக எடுத்து விட்டார். படமும் இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளிவிழா படமானது.

அம்மா சென்டிமென்ட் இல்லை, வழக்கமான நடிகர்கள் இல்லை, சண்டை காட்சி இல்லை, கண்ணீர் காட்சிகள் இல்லை, உணர்ச்சிகரமான காட்சிகள் இல்லை இதுதான் காதலிக்க நேரமில்லை!



No comments: