.
எனது இலக்கிய
நண்பர் ஒருவர், வாட்ஸ் அப் ஊடாக எனக்கு ஒரு சுவாரசியமான கதையை அனுப்பியிருந்தார்.
முதலில் அதனை
இங்கே பதிவுசெய்துவிட்டு, எனது எழுத்தும் வாழ்க்கையும்
தொடரை ஆரம்பிக்கின்றேன்.
கடவுளும், அவர் படைத்த உயிரினங்களும்
கடவுள் ஒரு நாள்
கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்:
“ நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க
வேண்டும். உன்
மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ ஐம்பது வருடங்களுக்கு வாழ்வாய். “
இதற்கு கழுதை சொன்னது:
“ நான் கழுதையாக
இருக்கிறேன். ஆனால், ஐம்பது வருடங்கள் ரொம்ப
அதிகம். எனக்கு இருபது வருடங்கள் போதும்.”
கடவுள், கழுதையின்
ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்துவிட்டு, அதனிடம் சொன்னார்:
“ நீ மனிதனின் வீட்டைக் காக்கும் காவலன். அவனுடைய அன்புத்
தோழனாக
இருப்பாய். மனிதன், தான் உண்ட பிறகு எஞ்சியதை உனக்குக் கொடுப்பான்.
நீ முப்பது வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு நாய் கூறியது:
“ கடவுளே, முப்பது வருடங்கள் ரொம்ப அதிகம். எனக்கு பதினைந்து
வருடங்கள் போதும். ”
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார்:
“ நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ
வித்தைகள் காட்டி
மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ இருபது வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு குரங்கு கூறியது: “ இருபது வருடங்கள் ரொம்ப அதிகம். பத்து
வருடங்கள் போதும். ”
கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்துவிட்டு, அவனிடம்
சொன்னார்:
” நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே.
உன் அறிவைக்
கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ
இருபது வருடங்களுக்கு
வாழ்வாய்.”
இதற்கு மனிதன் கூறினான்.
“ கடவுளே, எனக்கு
இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு.
கழுதை வேண்டாம் என்ற முப்பது வருடங்களையும்,
நாய் வேண்டாம் என்ற பதினைந்து வருடங்களையும்,
குரங்கு வேண்டாம் என்ற பத்து வருடங்களையும்
எனக்கு கொடுத்து விடுங்கள் “
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினார்.
அன்று முதல்
மனிதன் முதல் இருபது வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த முப்பது வருடங்களை கழுதை போன்று
எல்லாச் சுமைகளையும் தாங்கிக் கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த பதினைந்து வருடங்களுக்கு
அவன்
வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்துக் கொள்கிறான். மிச்சம்
மீதி உள்ளதை
சாப்பிடுகிறான்.
வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் பத்து வருடங்களுக்கு மகன்
வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி,
தன் பேரக்குழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்.
எமது மனித வாழ்வின் யதார்த்தத்தை இக்கதை படம்பிடித்துக்
காண்பித்துள்ளது.
தாயகம் விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல, போக்கிடமின்றி
தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும்
இக்கதை பொருந்தும்.
வெளிநாடுகளில் வதியும் பிள்ளைகளின் அழைப்பின் பேரில் விமானம்
ஏறிவந்து, சில மாதங்களிலேயே, “ எங்கட ஊரைப்போல வருமா..? என்றும்
சொல்லிக்கொண்டு, “சொர்க்கமே என்றாலும் நம் நாட்டைப்போல வருமா ? “
என்றும் பாடிக்கொண்டிருப்பவர்கள் பற்றியும்
அறிந்திருக்கின்றோம்.
கடந்த ஆறுமாத காலத்திற்குள், 2023 செப்டெம்பர் முதல் பெப்ரவரி வரையில்
நான் வதியும் அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பன், கன்பரா, அடிலைற்
மாநிலங்களில் பல நூல் வெளியீட்டு அரங்குகள், நூல் வாசிப்பு அரங்குகள்
நடந்துவிட்டன.
எனது அறிவுக்கு
எட்டியவாறு சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
புகழ்பெற்ற அறிவிப்பாளர் பி. எச். அப்துல்ஹமீத், எழுத்தாளர்கள் கலாநிதி
சந்திரிக்கா சுப்பிரமணியன், தேவகி கருணாகரன், கார்த்திகா கணேசர்,
நடேசன், முருகபூபதி, ஜெயராம சர்மா, வேதநாயகி செல்வராசா, ஜே.கே.
ஜெயக்குமாரன், அகணி. சுரேஷ் (கனடா எழுத்தாளர் ) இராசி, ஜெயபதி,
மாத்தளை சோமு, சிங்கள எழுத்தாளர்கள் லயனல் போப்பகே, சாவித்திரி
ஜெயசிங்க, ஆகியோரின் நூல்களும் தினகரன் முன்னாள் ஆசிரியர் ( அமரர் )
ஆர். சிவகுருநாதன் நினைவுத் தொகுப்பு என்பனவும்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நூலாசிரியர்களின் தொகுப்பாசிரியரின் வேண்டுகோளை ஏற்று மேடையில்
தோன்றி, தங்கள் வாசிப்பு அனுபவத்தை உரையாகச்சொல்லிவிட்டுச்
செல்லும் அன்பர்களில் எத்தனைபேர், அதனை எழுத்துப்பிரதியாக
ஊடகங்களில் வெளியிடுகிறார்கள்..?
சமகாலத்தில் தங்களின் உரைகளை மற்றவர்கள் மூலம் கைத்
தொலைபேசியினாலும் வீடியோ பதிவாக்கிக்கொள்ள எம்மவரால் முடிகிறது.
பின்னர் அதனைத் தங்கள் முகநூலில் வலம்வரச்செய்து ஆறுதலும்
அமைதியும் அடைகிறார்கள்.
நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நூல்வெளியீட்டு அரங்குகளில் எழுத்தாளரின்
அன்பான அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பிக்கிறார்கள். முதல் பிரதி,
சிறப்புப்பிரதி பெற்றுக்கொண்டு, எடுக்கப்படும் படங்களுக்கும்
பதிவுசெய்யப்படும் வீடியோக்களுக்கும்
போஸ் கொடுக்கிறார்கள்.
சில நூல்வெளியீடுகளில் நூலாசிரியருக்கும் பேச்சாளர்களுக்கும்
பொன்னாடைகள் , பட்டுச்சால்வைகள் கிடைக்கின்றன. இதில் குறிப்பாக
பொன்னாடை பெற்றவர்களின் மனைவிமாருக்கும் பெண்
பேரக்குழந்தைகளுக்கும் இந்தப் பொன்னாடைகள் ரவிக்கை தைப்பதற்கும்
பாவாடை
சட்டை தைப்பதற்கும் பெரிதும் உதவும்.
அந்தவகையில் இந்தப்பொன்னாடைகளும் பட்டுச்சால்வைகளும்
சமூகப்பயன்பாடு மிக்கவையாக திகழுகின்றன.
அவற்றை நெய்து, சந்தைக்கு விடும் உழைப்பாளிகளுக்கும் விற்கும்
வர்த்தகர்களுக்கும் வருமானம் கிடைக்கிறது.
எல்லாம் சரி. மண்டபம் நிறைந்து வருகை தந்து, வரிசையாக நின்று, நூலை
எழுதிய எழுத்தாளரின் கையொப்பத்தை பெற்றுச்செல்லும் அன்பர்களில்
எத்தனைபேர், குறிப்பிட்ட
நூலை எடுத்துச்சென்று வாசிக்கிறார்கள் ?
கடந்த மாதம்
கன்பரா மாநிலத்தில் நடந்த இலங்கை இதழியலில் சிவகுருநாதன்
என்ற நூல் அறிமுக அரங்கிற்கு சென்றிருந்தேன்.
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்.
அந்தத் தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அதற்குமேல்
அன்பர்களை உள்வாங்க முடியாது.
பலரும் அந்த நூலைப் பெற்றுக்கொண்டார்கள். பேச்சாளர்களின் உரைகளையும் கேட்டார்கள். வீடு திரும்பினார்கள்.
பி. எச். அப்துல்ஹமீத் அவர்களின் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் சில மாநில நகரங்களிலும் வெளியிடப்பட்டது. பலரும்
அவரது கையொப்பத்தை பெறுவதற்காக வரிசையாக காத்து நின்றனர்.
அத்தகைய ஒரு காட்சியை மெல்பனில் சிங்கள எழுத்தாளர் திருமதி
சாவித்திரி ஜெயசிங்கவின் Arya’ s Dream – Little things matter நாவல்
வெளியீடு நடைபெற்றபோதும் கண்டேன். இந்நிகழ்ச்சியில் தமிழ் , முஸ்லிம்
அன்பர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால்,
சிங்கள மக்கள் இருநூறுக்கு மேல் கலந்துகொண்டார்கள்.
மெல்பன் எழுத்தாளர் ஜே.கே. ஜெயக்குமாரனின் வெள்ளி நாவல் வெளியீட்டு
அரங்கை வாசகர் வட்டம், தமிழ் அன்பர்களுக்கு முற்றிலும் புதிய புறநகரம்
ஒன்றில் நடத்திய தினத்தன்று, இங்கே தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட
முக்கியமான மூன்று நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.
எனினும் , எழுத்தாளர் ஜே. கே. மீது கொண்டிருந்த அபிமானத்தினால், இங்கும்
சுமார் நூற்றி ஐம்பது பேருக்கும்
அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.
“அடடா, மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இந்த நூல் வெளியீடுகளுக்கு
வருகிறார்களே “ என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தேன்.
சென்னையில் வருடாந்தம்
நடக்கும் புத்தகத் திருவிழாவிலும் மக்களின் அலைமோதுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில்,
ஆயிரம் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்ற ஒரு தொகுப்பு
வெளியிடப்பட்டது. அந்த மண்பத்தை மக்கள் நிறைத்திருந்தார்கள். அத்துடன்
நீண்ட வரிசையில் காத்திருந்து அந்த நூலையும் விலைகொடுத்து
வாங்கிச்சென்றார்கள்.
இந்தச்செய்திகளை இங்கே தொகுத்து தருகின்ற எனக்கு இதனால்,
மனநிறைவு
ஏதும் இல்லை. ஆதங்கம்தான் நிறைந்திருக்கிறது.
இவ்வாறு வெளியீடு காணப்படும் நூல்கள் பற்றி எத்தனைபேர் தங்கள்
வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறார்கள்..?
என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.
என்னைப்பொறுத்தவரையில், நான் எழுத்துலகத்திற்கு பிரவேசித்த காலம்
முதல், முடிந்தவரையில் எனக்கு வாசிக்கக் கிடைக்கும் நூல்கள் பற்றி எனது
வாசிப்பு அனுபவத்தை எழுதிக்கொண்டே இருக்கின்றேன். அந்தப்பதிவுகளை
முன்னர் அச்சில் வெளிவந்த ஊடகங்களிலும் பிற்காலத்தில் இணைய
இதழ்களிலும் வாசகர்கள்
பார்க்க முடியும்.
எமது சமூகத்தில் ஏதாவது ஒரு துறையில் வேலைசெய்பவர்களுக்குத்தான்
தொடர்ந்தும் பணிச்சுமைகள் வந்துகொண்டிருக்கும்.
தொடர்ந்தும் நூல்களைப்பற்றி நான் “ படித்தோம் சொல்கிறோம் “ என்ற
தலைப்பில் எனது வாசிப்பு அனுபவங்களை எழுதிவருவதனால், எனது
நேசிப்புக்குரிய எழுத்தாளர்கள் பலருக்கும் என்னிடமிருந்து எதிர்பார்ப்பு
இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
இதுதவிர, எங்காவது ஒரு படைப்பிலக்கியவாதி அல்லது கலைஞர்
மறைந்துவிட்டால், என்னிடமிருந்து எப்படியும் ஒரு அஞ்சலிக்குறிப்பு கட்டுரை
வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் தோன்றியிருக்கிறது.
இந்த 96 ஆம் அங்கத்தை முடித்துக்கொள்வதற்கு முன்னர் இரண்டு செய்திகளைச்
சொல்லிக்கொள்கின்றேன்.
வடமராட்சி அல்வாயைச்சேர்ந்து கலைஞரும் படைப்பிலக்கியவாதியுமான
கலாநிதி த. கலாமணி மறைந்தவேளையில், அவுஸ்திரேலியாவிலிருந்து
நானும் எழுத்தாளர்கள் கானா. பிரபாவும் ஐங்கரன் விக்னேஸ்வராவும் அவர்
பற்றிய பதிவுகளை
எழுதினோம்.
கலாமணி பிறந்து வாழ்ந்து மறைந்த வடமராட்சி மண்ணில் எத்தனை
எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள்..? என்பதைத் தெரிந்தவர்கள்
எண்ணிப்பார்த்துக்கொள்ளட்டும்.
அதே வடமராட்சியிலிருந்து வெளிவரும் ஒரு ஊடகத்திலிருந்து எனக்கு ஒரு
குறுஞ்செய்தி “ கலாமணி அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரையை எழுதி
அனுப்புங்கள்.
“ வருகிறது.
தொடர்ந்தும் நான் எழுதிவரும் கனடா பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ.
ந. கிரிதரனிடமிருந்தும், அதேபோன்றதொரு குறுஞ்செய்தி வருகிறது.
கன்பராவிலிருந்து மற்றும் ஒரு அன்பர், அமரர் சிவகுருநாதன் பற்றிய நிகழ்ச்சி
பற்றியும் அந்தநிகழ்வில்
வெளியிடப்பட்ட நூல் பற்றியும் எழுதி அனுப்புமாறு கேட்டார்.
இவர்கள் அனைவரதும் வேண்டுகோளை நிறைவேற்றியவாரே எனது இதர
பணிகளையும் தொடர்கின்றேன்.
இந்தப்பத்தியின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கடவுள் – அவர் படைத்த
உயிரினங்கள் பற்றிய கதைக்கு மீண்டும் வருகின்றேன்.
கடவுள் என் முன்னே தோன்றினால், “ நூல் வெளியீடுகளுக்கு வந்து நூல்களை
பெற்றுச்சென்று, வீட்டின் மூலையில் வைத்துவிட்டு, முகநூல்
பார்த்துக்கொண்டிருப்பவர்களின் ஆயுளையும் எனக்குத்தாருங்கள். எனக்கு
வந்து சேரும், நான் வாங்கும் நூல்களைப்பற்றியும், மறைந்துகொண்டிருக்கும்
கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். “
என்ற வரத்தைத்தான் கேட்பேன்.
அந்தக்கடவுள்
கனவில் கூடத் தென்படுகிறார் இல்லை.
( தொடரும்
)
No comments:
Post a Comment