மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் ஒளிவிழாவும் பரிசளிப்பு விழாவும் – 2023 பரமபுத்திரன்










வுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் 2023 ம் ஆண்டு கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டின் நிறைவினைக் கொண்டாடும் வகையில் கடந்த 16/12/2023 சனிக்கிழமை Erskine park High Schoolஅரங்கத்தில் மவுண்ட் றூயிட் தமிழ்ப் பள்ளியில் கல்விகற்கும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், இறைமகன் இயேசுபிரான்  புவிக்கு வந்த நாளினைக் கொண்டாடும் ஒளிவிழா நிகழ்வுகளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.  சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை வசந்தன் அவர்கள் கலந்து கொள்ள  விருந்தினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.  


மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களின் அறிவித்தலுடன் மாலை சரியாக 4 மணிக்கு விழா நிகழ்வுகள் தொடங்கின. அரங்கத்தில் மாணவர்களால் அவுத்திரேலிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, பாடசாலைக் கீதம் என்பன இசைக்கப்பட்டு, தமிழ் வீரர்களை நினைந்து அகவணக்கம் செலுத்தி சம்பிரதாய நிகழ்வுகள் நிறைவடைந்தன. தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் வரவேற்புரையினை பள்ளியின் நிர்வாக  உறுப்பினர் திரு. கௌரீஸ்வரன் கந்தசாமி அவர்கள் வழங்கி, அனைவரையும் விழா நிகழ்விற்கு வரவேற்றார். இதனைத் தொடர்ந்து ஒளிவிழா நற்செய்தியுடன் வருகை புரிந்த  அருட்தந்தை வசந்தன் அவர்கள் ஒளிவிழா நற்செய்தியினை வழங்கினார்.


புவியில் வாழும் மக்களுக்காக இயேசுபிரான் புவிக்கு வந்த நாளினைக் கொண்டாடும் நாளே ஒளிவிழா நாள் அந்த நாளினைக் கொண்டாடி மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்குதல் சிறப்பு என்று கூறி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் பள்ளியின் மாணவர்களின் அறிவிப்புகளுடன் நிகழ்வு தொடங்கியதனையும், மாணவர்கள் சிறப்பாகச் செயற்பட வழிகாட்டும் ஆசிரியர்களுக்கும், அதற்காக உழைக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி கூறி, தனது நத்தார், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளியின் நிர்வாகத் தலைவர்  பாலசுப்பிரமணியம்  செந்தில்குமார் அவர்களின் தலைமையுரையினை நிகழ்த்தினார்.


34 ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பள்ளியில் 2023 ம் ஆண்டிற்கான தலைவராக பணியாற்றும் வாய்ப்புக் தனக்குக் கிட்டியது எனவும், இந்த ஆண்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மட்டுமன்றி, மாணவர்களின் இயல், இசை, நாடகத் திறமைகளை வெளிக்காட்டும் கலைவிழா நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன என்பதனைக் கூறி, இச்செயற்பாடுகளுக்காக தன்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன் எனக்கூறி தனது உரையினை நிறைவு செய்தார். இதனை அடுத்து ஒளிவிழா சிறப்பு நிகழ்வு அரங்கேறியது.


இயேசுபிரான் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்தது முதல், அவரின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய செய்திகளை இசையுடன் கூடிய பாடல்கள், கதைகள் என்பவற்றின் மூலம் அரங்கினில் நிகழ்த்தினார். பள்ளியில் கற்கும்  ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை  வழங்கினர். ஆசிரியர்கள் பலோமியற் அன்ரனிஸ்ராலின்,   நிர்மலா திலகரட்ணா ஆகியோர் இணைந்து தயாரித்து நெறிப்படுத்தி இருந்தனர். இந்த நிகழ்விற்கான இசையினை ஆசிரியர் விதுசன் முரளீதரன் மாணவர்களுடன் சேர்ந்து செயற்படுத்தி இருந்தார். அடுத்து  மாணவர்களால் இயேசுபிரான் தொடர்பான ஆடலுடன் பாடல் நிகழ்வும் அரங்கினில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் உரையாற்றினார்.  


மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் பள்ளி முதல்வர் தேவராசா சதீஸ்கரன் அதிபர் உரையினை வழங்கினார். 2023 ம் ஆண்டின் கற்றலுக்கான பரிசில்கள் வழங்கும் இந்நாளில் கற்றல்- கற்பித்தல் சிறப்பாக நடைபெற்றமையையும், இளங்கோ வேந்தனார் பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சிகள் பெற்றமையையும், இம்முறை நடைபெற்ற HSC பரீட்சையில் கோகுல்ரமணன் முரளிதரன் Band 6 பெற்றமையையும் குறித்துக்காட்டினார்.  அதுமட்டுமன்றி வழமைபோல மாதிரிப்பொங்கல், குடும்ப குதுகல நாள், பேச்சுப்போட்டி, கலைவிழா, வாணிவிழா  என்பன சிறப்புற நடைபெற்றமையையும், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் போன்ற மாணவர்களின் இயல் இசை திறன்களை வெளிக்காட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன என்றும் குறிப்பிட்டார். பள்ளி அதிபரின் உரையினைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.


மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மூன்று நிலைகளாகப் பிரித்து வழங்கப்பெற்றது. முதலில் பள்ளியில் 2023 ம் ஆண்டு முழுமையாக வகுப்பறைக் கற்றலை நிறைவு செய்த மாணவர்களுக்கும், அடுத்து வகுப்பறைச் செயற்பாடுகளில் முதன்மைகாட்டிய மாணவர்களுக்கும், வகுப்பறைச் செயற்பாடுகளில் துரித முன்னேற்றம் காட்டிய மாணவர்களுக்கும் பரசில்கள் வழங்கப்பெற்றன. தொடர்ந்து HSC வகுப்பில் தமிழ்மொழியினை ஒருபாடமாக எடுத்துச் சித்திபெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்கல் நிகழ்வு அரங்கினில் நடைபெற்றது.  


தமிழ்மொழியினை ஒருபாடமாகக் கற்று உயர்தர சான்றிதழ் பரீட்சைக்குத்  தோற்றி சிறப்புச் சித்தி பெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்க அருட்தந்தை வசந்தன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்.  இதன்போது ஆசிரியர்கள் அனைவரும் அரங்கினில் அமர்ந்து இருந்தார்கள். அச்சமயத்தில் மீண்டும் உரையாற்றிய அருட்தந்தை அவர்கள் எமக்குள் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எங்கள் தாய்மொழி தமிழ் ஒன்றே எம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பாலமாக உள்ளது. எனவே தமிழ்மொழியையும், அதன் மூலமாக எங்கள் பண்பாடுகள், கலாசாரங்கள் என்பவற்றையும்  மாணவர்கள் அறிந்து கொண்டால் மட்டுமே எங்கள் உறவுகள் பலமாக அமையும். தொடர்ந்து நாம் ஒன்றுபட்டு வாழ வாய்ப்புகள் கிட்டும். இன்று நடைபெறும் நிகழ்வில் மாணவர்களின் பேச்சுகள், அறிவிப்புகள், தமிழ்ப்பிள்ளைகளாக அவர்கள் வெளிக்காட்டும் பண்புகள் என்பவை தன்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியதாகவும், அவ்வாறு வளர்த்த பள்ளிக்கும், அதன் நிர்வாகக் குழுவிற்கும், அதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்த அதேவேளை,  எங்கள் பிள்ளைகள் எங்களுடன் சேர்ந்து வாழ தமிழைக் கற்பிப்பதும், எங்கள் பண்பாடு கலாசாரம் என்பவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்கள் கடமையும் பொறுப்பும் என்றுகூறி, அதனைத் தொடர்ந்து செய்யுங்கள், எங்கள் பிள்ளைகளுக்கு வளமான எதிர் காலத்தினைக் பெற்றுக்கொடுங்கள் என்று அன்பாகவும், உரிமையுடனும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். அத்துடன் மாணவனுக்கும், ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்து,  மாணவனுக்கான பரிசிலை வழங்கி மதிப்பளித்தார். தொடர்ந்து மாணவர் பதிலுரை வழங்கினார். தொடக்க வகுப்புமுதல் நான் மவுண்ட் றூயிட் பாடசாலையில் கல்வி கற்றேன் என்றும், தனது பெற்றோர்களினது உதவியினாலும், ஆசிரியர்களினது வழிகாட்டலினாலும் தமிழ்மொழியில் சிறந்த  பெறுபேற்றினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது என்று கூறி,  தமிழ்மொழியினை  ஒரு பாடமாகக் கற்றதன் விளைவாக மேடையில் பேசும் ஆற்றல், கவிபாடும் திறன், அறிவிப்பாளராக செயற்படுதல், போன்ற பல நன்மைகளைப் பெற்றுக்கொண்டதாகவும், குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு தொடங்கியது.


பள்ளியின் நிர்வாகத்தலைவர், பள்ளி முதல்வர் ஆகியோர் ஆசிரியர்களுக்கான பரிசில்கள் வழங்கி ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தமையைத் தொடர்ந்து பள்ளியின் நிர்வாகச் செயலாளர் குலசேகரம் முரளீதரன் அவர்கள் நன்றியுரையினை வழங்கினார்.   நிகழ்வின் நிறைவாக நத்தார் பாப்பா வருகை தந்து இனிப்புகள் வழங்கியதைத் தொடர்ந்து இரவுப் போசனமும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வுகளுக்கான உதவிகளை தமிழ்ப்பள்ளிகளின் செயற்பாடுகளை விருப்புடன் ஊக்குவிக்கும்  Pendle Hill Family Medical Practice, Marshan Real estate & Finance, Menuka’s Boutique, Jearmy Jewellery, Aus Safe Support, Luxmy Driving School, Kings Spice Minimart PTY LTD, Smart Printing & Graphics, Sun Spice, Adroit Alarm Systems, Spice Mini Mart, Kesihen Décor Event Management, Koolaa Home Delivery, C.M.J Spice Centre, Aarthi Spices, Pendle Hill Fish Market, NKR Rental PTY LTD ஆகிய நிறுவனங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 



No comments: