எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 89 எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்களின் வரிசையில் சட்டத்தரணி நிவேதனா அச்சுதன் ! முருகபூபதி

அன்பார்ந்த வாசகர்களுக்கு,  இனிய 2024 ஆங்கிலப் புத்தாண்டு


வாழ்த்துக்கள்.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடர் மூன்று வருடங்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  மூன்று வருடங்களுக்கு முன்னர் முதல் பாகம் ஆரம்பமாகியது. இதன் இரண்டாம் அங்கம், தொடரும் 2024 ஆம் ஆண்டிலும் இந்த இரண்டாம் பாகம் நிறைவுபெறுமா..? என்பது எனது ஆரோக்கியத்திலும் தங்கியிருக்கிறது.

எனது எழுத்துலக வாழ்வில் சந்தித்தவர்கள் பற்றி முடிந்தவரையில் எழுதி வந்திருக்கின்றேன். இந்த அங்கத்திலும் இனிவரவிருக்கும் சில அங்கங்களிலும்  எனக்கு மொழிபெயர்ப்பு விடயத்தில் பக்கபலமாக இருந்தவர்கள் பற்றி பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த காலப்பகுதியில் எனக்கு அறிமுகமான ரேணுகா – தனஸ்கந்த தம்பதியர் பற்றி, முன்னரும் எழுதியிருக்கின்றேன்.


தனஸ்கந்தா, மாஸ்கோவில் முன்னர் படித்த பொறியியல் பட்டதாரி. அவரது மனைவி ரேணுகா, இலங்கை  வடபுலத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவர். எனது புதர்க்காடுகளில் சிறுகதையை ரேணுகா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்தப்  பதிவை,  இலங்கையில் The Island பத்திரிகையில் இலக்கிய நண்பர் கே. எஸ். சிவகுமாரன் வெளிவரச்செய்தார்.

ரேணுகாவின் கவிதைகள், முன்னர் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் நூலிலும் இடம்பெற்றுள்ளது.

மலரும் புத்தாண்டில் ( 2024 )  மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினத்தின்போது எனது யாதுமாகி ( பெண் ஆளுமைகள் பற்றிய நூல் ) நூலின் இரண்டாம் பாகத்தில் ரேணுகா தனஸ்கந்தாவைப்பற்றிய விரிவான பதிவு இடம்பெறவிருக்கிறது. குறிப்பிட்ட  இரண்டாம் பாகத்தில் 35 பெண் ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கின்றேன்.

எனது தொடர் நூல்களின் வரிசையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவரவிருக்கும் யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) பற்றிய செய்தியையும் வாசகர்களுக்கு முற்கூட்டியே அறியத்தருகின்றேன்.

1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் அறிமுக நிகழ்வுக்குச்சென்றிருந்தேன். இது பற்றி முன்னரும் நான் எழுதியிருக்கலாம்.

அப்போது அந்த மன்றத்தின் தலைவராகவிருந்தவர் கு. விநோதன்.  அந்த நிகழ்வில்தான் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த ஶ்ரீகாந்தா, அஷ்ரப், கனக. மனோகரன் ஆகியோரையும் சந்தித்தேன்.

பின்னாளில் இவர்கள் அரசியலுக்குள் வந்தார்கள்.   அன்றைய சட்டக்கல்லூரி நிகழ்ச்சி பற்றி பூரணி இதழிலும் எழுதியிருக்கின்றேன்.

மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தன் பாரதி பள்ளியை தொடங்கிய காலத்தில், அங்கே எனது மூத்த மகள் பாரதியுடன் படித்தவர்தான் செல்வி நிவேதனா.  எனது மகளை பாரதி பள்ளிக்கு அழைத்துச்சென்றவேளைகளில் நிவேதனாவையும் சந்தித்துப்  பேசி பழகியிருக்கின்றேன்.

தமிழ் கலை, இலக்கிய ஆர்வம் மிக்க நிவேதனாவுடன் உரையாடியபோதுதான், அவர் நான் 1973 இல் கொழும்பு சட்டக்கல்லூரியில் சந்தித்த ஶ்ரீகாந்தாவின் புதல்வி என்பதை தெரிந்துகொண்டேன். நிவேதனாவின்  அம்மாவும் சட்டம் பயின்றவர்தான்.

மெல்பன் பல்கலைக்கழகத்தில் நிவேதனா பயின்ற காலத்தில், அங்கிருந்த தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.  நண்பர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடந்த பட்டிமன்றத்திலும் நிவேதனா, வெகு சுவரசியமாக வாதிட்டார்.

பாரதி தாசனின்,  “காதல்… காதல்… காதல் போயின் சாதல்  “ என்ற


வரிகளை எடுத்துக்கொண்டு, சமகாலத்து இளையோர், அதனைத்தான்,  “ டாவு… டாவுடா … டாவில்லாட்டி… டையடா..?  “ எனச்சொன்னதும் அரங்கமே சிரித்தது.

நிவேதனா, பல்கலைக்கழக படிப்பை முடித்து சட்டமும் படித்து சட்டத்தரணியானார். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்தார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் எழுதக்கூடிய ஆற்றல் மிக்க நிவேதனா, கல்வி நிதியத்தில் எமக்கு வலது கரமாகவே திகழ்ந்துவருபவர்.

2006 இற்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை எமக்கு தமது தந்தை சட்டத்தரணி ஶ்ரீகாந்தா அவர்களின் ஊடாக அறிமுகப்படுத்தியவரும் நிவேதனாதான். அச்சமயம் அந்த அமைப்பின் தலைவராகவிருந்தவர் யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் திரு. சி. வி. கே. சிவஞானம். 

பின்னாளில் இவர் வடமாகாண சபையின் தவிசாளரானார்.

இந்த அமைப்பின் ஊடாக போரில் தந்தையை இழந்த மேலும் பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு எமது நிதியம் உதவத்தொடங்கியது.


2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததும்,  கல்வி நிதியத்தில் அங்கம் வகித்த  இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான நடேசனுடன் யாழ்ப்பாணம் சென்றேன்.  கொக்குவில் இந்துக்கல்லூரியில் எமது நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களின் சந்திப்பு – தகவல் அமர்வு – ஒன்றுகூடலை நடத்தினோம்.  திரு. சி.வி. கே. சிவஞானம்,  மற்றும்  யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு. பால தயானந்தன் ஆகியோர் முன்னிலையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அன்று தைப்பொங்கல் தினம். இந்நிகழ்விலும் நான்  செல்வி நிவேதனா ஶ்ரீகாந்தாவின்  ஆளுமைப்பண்புகளை விதந்து குறிப்பிட்டேன்.

மெல்பனில் நிவேதனா, திருமணமாகிய பின்னர் நிதியத்தின் நிதிச்செயலாளர் – செயலாளர் பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தபோதிலும், தொடர்ந்தும் நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு உதவி வருகிறார். அத்துடன் தமது தாயார் திருமதி வள்ளி ஶ்ரீகாந்தா அவர்களையும் எமது நிதியத்தின் பணிகளில் இணைத்துவிட்டார். இவரும்  ஒரு தடவை யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தப்பின்னணிகளுடன், எமது நிதியத்தின் அறிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவந்த  சட்டத்தரணி திருமதி நிவேதானா அச்சுதன், எனது இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவை கொழும்பில் ஆங்கில ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்தன.

அவுஸ்திரேலியா மெல்பனில் முன்னர் வெளிவந்த கடபத்த என்ற சிங்கள மாத இதழும் அக்கட்டுரைகளை சிங்கள மொழியில் பெயர்த்து வெளியிட்டது.

தமிழ் அபிமானி ( அமரர் ) கே.ஜி. அமரதாச அவர்களைப்பற்றிய - சிங்கள – ஆங்கில வாசகர்களும் அறியவேண்டிய பல செய்திகளை உள்ளடக்கிய கட்டுரையையும் நிவேதனா  பின்வரும் தலைப்பில் மொழிபெயர்த்து தந்தார்.

Memories of late K.G Amaradasa - an Ardent Tamil Literary Lover & Advocate for National Unity.

இக்கட்டுரை Colombo Telegraph மற்றும் நடேசனின் வலைப்பூவிலும், கடபத்த இதழிலும் வெளியானது.

இக்கட்டுரைக்கு சிங்கள வாசகர்களிடமிருந்தும்  வரவேற்பு கிட்டியது. சிலர் தங்கள் கருத்துக்களை எழுத்திலேயே பதிவேற்றியிருந்தனர்.

தமிழ் – சிங்கள இலக்கிய மொழிபெயர்ப்பு  தொடர்பாக நான் எழுதிய மற்றும் ஒரு விரிவான கட்டுரையையும் நிவேதனா, அதன் உயிர் சிதையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இக்கட்டுரை மெல்பனில் நடந்த ஒரு  கருத்தரங்கிலும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை மெல்பன் டீக்கின் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் வாசித்தார்.

நான் எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை நூலை ஆங்கிலத்தில் ( The Mystique of Kelani River ) மொழிபெயர்த்தவர் மற்றும் ஒரு இலக்கிய நண்பர் நூர் மஃரூப்.

 

குறிப்பிட்ட ஆங்கில நூல்,  மின்னூலாக வெளியானபோது மெய்நிகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்விலும் நிவேதனா அச்சுதன் உரையாற்றினார்.

 

சில வருடங்களுக்கு முன்னர், நிவேதனா பின்வரும் தலைப்பிலும் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியிருந்தார்.  

 “ ஒரு சமூகம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால், ஆண்டவன் கூட அதைக்காப்பாற்ற முடியாது 

எனது கதைத் தொகுப்பின் கதை  சிறுகதை நூலில்  இடம்பெற்ற நடையில் வந்த பிரமை என்ற சிறுகதை பற்றி நிவேதனா எழுதிய மதிப்பீடும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

எழுத்தாற்றலும், மொழிபெயர்க்கும் ஆற்றலும் நிரம்பப்பெற்ற நிவேதனாவைத் தொடர்ந்து, எனது  படைப்புகளை அவ்வப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து வந்திருக்கும் மேலும் சிலரைப்பற்றியும், இனி வரவிருக்கும் அங்கங்களில் பதிவுசெய்யவிருக்கின்றேன்.

( தொடரும் )  

letchumananm@gmail.com

No comments: