இலங்கைச் செய்திகள்

தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்; சுனாமி தாக்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்

“மலையகம் 200” நிகழ்வில் புத்தகம் வெளியீடு

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்


தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

December 28, 2023 4:11 pm 

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 




மட்டக்களப்பு மாவட்டத்தில்; சுனாமி தாக்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்

செனகல், மெக்சிகோ, இந்தோனேசியா, மடகஸ்கார் நாட்டவர்களும் பங்கேற்பு

December 28, 2023 7:50 am

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 19வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (26) உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. டச்பார் போன்ற கரையோரப் பிரதேசங்களிலுள்ள சுனாமி நினைவுத் தூபியில் கண்ணீர்மல்க கதறியழுது உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். டச்பார் பங்குத் தந்தை அருட்தந்தை எம்.லோரன்ஸ் அடிகளார் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மடகஸ்கார், இந்தோனேசியா, செனகல், மெக்சிகோ ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர் நிருபர் - நன்றி தினகரன் 




“மலையகம் 200” நிகழ்வில் புத்தகம் வெளியீடு

December 28, 2023 7:02 am 0 comment

மக்கள் முன்னணியின் தலைவர் வே. ராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் “மலையகம் 200” வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மலையக எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் மு. நித்தியானந்தன், மாத்தளை பெ. வடிவேலன் மலரம்பன் ஆகியோரின் ஆறு புத்தகங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுகுமார், இராதாகிருஷ்னன், தமிழ்நாடு MLA முருகு மாறன் மணி மாணிக்கம் ஆகியோரால் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மலைய எழுத்தாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிவுச்ச கௌரவமாகும். H H விக்கிரமசிங்க, டாக்டர் இளங்கோவன் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 



மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

- செந்தில் தொண்டமானிடம் கையளிக்க ஏற்பாடு

December 27, 2023 7:30 pm 

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் ஏற்பாட்டிலும், மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

புதுடில்லியில், இம்மாதம் 30 ஆம் திகதியன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின்போது, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முதல் முத்திரை, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நடா கையளிக்கவுள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு, இந்தியத் தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்மூலம், இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு, இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைப் கொண்டுள்ள இந்தியாவின் 155,015 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களிலிருந்து, எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் 32,285,425க்கும் அதிகமான இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், அந்த நாடுகளிலிருக்கும் மக்களுக்கு கிடைக்காத அங்கீகாரமொன்று, இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு கிடைத்திருப்பது, நம் மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.

உதவி, கடமை, பொறுப்புணர்வு என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால், நம் மக்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும், அவர்களுக்கு அங்கீகாரமளிக்க வேண்டுமென்ற தொனியில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரையொன்று வெளியிடப்படுவது, இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவைப் பறைசாற்றி நிற்பதோடு, மலையக மக்களால் இலங்கைக்கும் கௌரவம் கிடைத்திருக்கிறது.

இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் முதல் முத்திரையைக் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்

December 26, 2023 1:10 pm 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சுனாமி நினைவேந்தல் வளாகத்தில் இன்று (26) சுனாமி நினைவேந்தலினுடைய 19 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

காலை 8.00 மணிக்கு இந்துமத வழிபாடுகள் இடம்பெற்றது. இந்துமத வழிபாடுகளை முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகர் கிருசாந் ஐயா நிகழ்த்தினார்.

தொடர்ந்து இஸ்லாமிய மத வழிபாடுகள் 8.15 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. இஸ்லாமிய மத வழிபாடுகளை முல்லைத்தீவு ஜும்மா பள்ளிவாசல் மௌளவி ஜஸ்மின் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கிறிஸ்தவ மத வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது. கிறிஸ்தவ மத வழிபாடுகளை மல்லாவி பங்குத்தந்தை பிலீப் அந்தோனி நேசன் குலாஸ் நிகழ்த்தினார்.

அதனை தொடந்து தமது உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர்களை ஏற்றி கண்ணீர் விட்டு கதறி அழுது மக்கள் தங்களது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள். நிகழ்வில் அரச அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓமந்தை விஷேட நிருபர் - நன்றி தினகரன் 








No comments: