புலம் பெயர்ந்தும் தமிழர்களின் நலனுக்காக ஓயாது உழைக்கின்ற சட்டவாளர் ரவீந்திரன் ! டிசம்பர் 27 இல் எண்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார் ! ! - வித்தி – ( ஆசிரியர் – யாழ். காலை முரசு )


ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி,  தமது எண்பதாவது வயதை எட்டுகின்றார். அதை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

இலங்கைப் புலம்பெயர் சட்டவாளர் அவர். இலங்கையில் சன்சோனிக் கமிஷன் விசாரணைகளில் தமிழர் தரப்பில் பிரதான பங்காற்றிய சட்டத்தரணி.

தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தின் பிதாமகர்களுள் ஒருவர். தமிழரின்

உரிமைப் போராட்டத்துடன் நெருக்கமாகச் செயற்பட்ட - செயற்படுகின்ற - புலமையாளர். அண்மைக் காலத்தில் 'காலைக்கதிர்' நாளிதழ் வாயிலாக பல தொடர் கட்டுரைகளை எழுதி, தமிழ் வாசக உலகில் நன்கு அறியப்பட்ட கட்டுரையாளர். கலை, இலக்கியவாதியும் கூட.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் உரும்பராய்க்குத் தனித்துவமான இடம் உண்டு. சுதந்திர வேட்கை கனன்ற பூமி அது. அங்கிருந்துதான் விடுதலைப் போராட்ட வேள்வியில் முதல் ஆகுதியான சிவகுமாரன் தோன்றினான்.
அந்த மண்ணில்தான் பிறந்தவர் செல்லதுரை ரவீந்திரன்.

தியாகி சிவகுமாரனின் தந்தை பொன்னுத்துரை ஆசிரியர், ரவீந்திரனுக்கு நன்கு தெரிந்தவர். மகன் சிவகுமாரன் விடுதலைப் போரின் பக்கம் திசை திரும்பிய போது, வழமையான யாழ்ப்பாணத் தந்தை போல மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவே சட்டத்தரணி ரவீந்திரனின் ஆதரவைத் தேடினார் பொன்னுதுரை ஆசிரியர். ஆனால் சிவகுமாரன் அதற்கு இணங்கவேயில்லை. தனது ஒரே இலட்சியமான தனித் தமிழீழக் கனவைப் பற்றி எல்லாம் ரவீந்திரனோடு நன்கு மனம் விட்டுப் பேசி நெருங்கிப் பழகினான் சிவகுமாரன்.

ஆரம்பத்தில் சிவகுமாரனின் தனி நாட்டுக் கோரிக்கை ரவீந்திரனை அதிகம் ஈர்க்கவில்லை. எனினும் அதில் அவன் காட்டிய பற்றுறுதி, திடசங்கற்பம், அதையொட்டிய இலட்சிய வேட்கை, அர்ப்பணிப்பு, தியாகம் யாவையும் ரவீந்திரனுக்கு அவன் மீது பெரும் மதிப்பை தந்தன. அவனோடு நெருங்கிப் பழகியவர் ரவீந்திரன்.

இலங்கை பொலிஸின் சுற்றிவளைப்புக் கைதில் இருந்து தப்புவதற்காக சயனைட் அருந்திய முதல் போராளி சிவகுமாரன்தான். அப்போது ஆஸ்பத்திரி வரை ஊடாடியவர் ரவீந்திரன். அதை ஒட்டிய விடயங்களை 'காலைக்கதிர்' நாளிதழில் தான் வரைந்த கட்டுரைத்  தொடரில் பிரஸ்தாபித்திருக்கிறார் ரவீந்திரன்.


ஆரம்ப காலத்திலேயே சிவகுமாரன் போன்றோரின் தொடர்பாடலும், ரவீந்திரனின் முன்மாதிரியான செயல்பாடுகளும், முதல் தலைமுறை தமிழ் போராளிகளுக்கு ஐந்து - பத்து வயது கூடிய அண்ணன் நிலைப்பாட்டில் ரவீந்திரன் மூத்தவராக செயற்பட்டமையும் பிரபாகரன், உமா மகேஸ்வரன் முதல் டக்ளஸ் தேவானந்தா வரை அனேகமான எல்லாப் போராளிக் குழுக்களின் தலைவர்கள் மீதும் வாஞ்சையையும் செல்வாக்கையும் அன்புரிமையையும் ரவீந்திரனுக்குத் தானாகவே வசீகரித்துத் தந்தன எனலாம்.

அநேகமாக எல்லாப் போராளித் தலைவர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் அன்புரிமை கொண்டவராக இருந்து, இப்போதும் அதே அரசியல் களத்தில் சுயநல நோக்கில்லாமல், தன்னை முன்னிறுத்தாமல் செயற்பட்டு வரும் ஒருவராக எஞ்சியிருப்பவர் ரவீந்திரன் மட்டுமே என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

1971 இல் இளம் தமிழ் சட்டத்தரணியாக கொழும்பில் களமிறங்கிய

ரவீந்திரனுக்கு ஆரம்பத்திலேயே அல்பிரெட் தம்பிஐயா (கார்கில்ஸ்), சிலோன் தியேட்டர்ஸ் செல்லமுத்து (புடவை கடை) போன்றோரின் விடயங்களைக் கையாண்ட சட்ட அலுவலகங்களில் தொழில் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் குடும்பத்தின் சட்ட விடயங்களை கையாண்டமையால், அவரின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா போன்றோருடனும் கூட நெருங்கிப் பழகினார்.

கொழும்பில் சிங்களத் தரப்புகளுடனும் நெருங்கிப் பழகி சட்ட விடயங்களைக் கையாண்ட போதிலும்,  1972 அரசமைப்புச் சட்ட உருவாக்கம் இடம்பெற்ற முறைமை மற்றும் 1977 இனக் கலவரம் ஆகியன ரவீந்திரனை தன்னாய்வு செய்யத் தூண்டின.

அதன் விளைவு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் (Tamil Refugees Rehabilitation Organization - TRRO) உருவாக்கத்தில் அவரை முழுமையாக பங்களிப்பு செய்ய வைத்தது. அகதிகளை வன்னியில் கென்ற், டொலர், நாவலர் பண்ணைகளில் மீள்குடியேற்றும் பணிகளில் முழுமையாக ஈடுபட வைத்தது.

அதுவேதான் பிரபாகரன், உமாமேஸ்வரனில் இருந்து டக்ளஸ் தேவானந்தா வரை பின்னாளில் பல இயக்கங்களின் மூத்த தலைவர்களாக உருவெடுத்த பலரை அவருடன் ஒட்டி உறவாடும் நிலைமையை ஏற்படுத்தின.

1977 கலவரங்களை ஒட்டிய சன்சோனிக் கமிஷன் விசாரணைகளிலும் TRRO சார்பில் பிரசன்னமாகி முக்கிய - காத்திர - பங்களித்தார் ரவீந்திரன். அமிர்தலிங்கத்திற்கும் ஏனையோருக்கும் எதிரான ட்ரயல் அட் பார் வழக்கிலும் இவர் ஒரு சட்டத்தரணி.


இவற்றினாலும், இயக்கத் தலைவர்களுடனான ஊடாட்டங்கள், அவர்களுக்கு ஆரம்பகட்ட உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, பலரையும் தொடர்பு படுத்தி ஒழுங்குப்படுத்தி வசதி செய்தமை என்று பல்வேறு விவகாரங்களினால் புலன் விசாரணையாளர்களின் கைதுக்கும் தொல்லைக்கும் தொடர்ந்து ஆளானார் ரவீந்திரன்.

1983 கலவரங்களின் பின்னர் மீள முடியாத நெருக்கடி ஏற்பட்ட போது, வேறு வழியின்றி இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியா சென்று சேர்ந்து, அங்கு தமிழ் மக்களுக்கான அரும் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

1976 - 1984 இடைப்பட்ட காலங்களில் தனது ஐரோப்பிய விஜயங்களினால் தமிழர் புனர்வாழ்வு கழகம் (பிரித்தானியா), தமிழர் தகவல் நிலையம் (சென்னை) ஆவணக் காப்பகம் என்பவற்றுடன் இணைந்து செயல்பட்டார் ரவீந்திரன்.
அதனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தலைமுறை சக்திகள் பலவற்றுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பேணினார்.

அந்தக் காலத்தில் ஆரம்பத்தில் செயற்பட்ட தமிழ் போராளிகள் குழுக்களை T groups, E groups என்று சிலாகிப்பதுண்டு. 'தமிழ்' என முன்னெழுத்துக்களை கொண்ட LTTE, TELO போன்றவை T குரூப். தமிழை முன்னிலைப்படுத்தாமல் இடதுசாரிச் சித்தாந்தங்களில் ஈழப் பேருடன் அமைந்த EROS, EPRLF போன்றவை E குரூப்.
இந்த T குரூப்புகள், E குரூப்புகள் எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்திய ரவீந்திரன்,  இந்த குழுக்களை ஒன்றுபட்டுச் செயல்பட வைக்கும் இமாலய முயற்சியிலும் பெரும் பகுதி நேரத்தைச் சளைக்காது செலவிட்டவர்.

அவை குறித்துத் தமது கட்டுரைத் தொடரில் ஆங்காங்கே அவர் தொட்டுச் சென்றிருக்கின்றார்.

திம்புப் பேச்சுக்களின் போதும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் போதும் கூட, பக்கத்து தரப்புகளில் அவர் கணிசமாக பணியாற்றி இருக்கிறார் என அறிந்திருக்கிறேன்.
அதுவே அவரது செல்நெறிப் பாதையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், அரசியல் ரீதியில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதே உசிதமானது என்ற மாறா நிலைப்பாட்டை எடுத்தார் ரவீந்திரன். இன்றும் கூட, அவரது உறுதியான நிலைப்பாடு அதுதான் என்பதை நான் நன்கறிவேன். அதனை இப்போது வரை மாற்றாமல், அஞ்சாமல், தனது எழுத்துகளிலும், பேச்சுக்களிலும் வெளிப்படுத்தும் அவரது உறுதியான பண்பு பெரிதும் மதிக்கத்தக்கது.

இந்த நிலைப்பாடு காரணமாக பின் நாள்களில் விடுதலைப் புலிகளாலும், புகலிட தேசங்களில் புலிகளின் ஆதரவாளர்களாலும் அவர் ஓரம் கட்டப்பட்டார்.
எனினும், அவர் தயங்காது இன்று வரை ஆஸியில் அகதி அந்தஸ்துக் கோரும் நம்மவர்களுக்கான வழக்குகளில் வேற்றுமை பாராது தொடர்ந்தும் கடுமையாக உழைத்துப் பணியாற்றி வருகின்றார். புலிகளுடன் கொள்கை ரீதியான அடிப்படையில் வேறுபட்டாலும், தமது அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ரவீந்திரன் இருக்கின்றமையால் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசம் எங்கும் அவருக்கு ஒரு தனித்துவ மரியாதை உண்டு என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அதற்காக அவர் புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவரோ அல்லது ஈடுபட்டவரோ அல்லர் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

தமிழர் நலனுக்காகப் பல சமரச முயற்சிகளில் தன்னை வெளிப்படுத்தாமல் ஈடுபட்டவர் ரவீந்திரன்.
போர் முடிந்த கையோடு சில சமாதான சமரச முன்னெடுப்புகளுக்காக இந்தியத் தரப்புடன் தொடர்பாடல்களில் ஈடுபட்டார். தமிழர் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து (கஜேந்திரகுமார் அணியைத் தவிர்த்து) இந்தியாவுக்குத் தமிழர் தரப்பிலிருந்து பொதுவான சமர்ப்பணம் ஒன்றைத் தருவதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்தார்.

ஆயினும், இடை நடுவில் ரெலோ அமைப்பு தாங்கள் தனியாக இந்தியாவுக்கு ஒரு சமர்ப்பணம் தரப்போவதாக புறப்பட்டமையால், அந்த முயற்சி தூர்ந்து போனதாக நொந்து கொள்வார் ரவீந்திரன்.

தமிழர் தேசத்துக்கு இன்று ஒரே பக்கபலமாக இருக்கக்கூடியது புலம்பெயர் தரப்புத்தான். ஆனால், அதுவோ நாடுகள் தோறும் பல குழுக்களாக - பல அணிகளாக - பல தரப்புகளாக - பிரிந்து நின்று அக்கப்போர் செய்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து ஒரு கட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அது குறித்து இங்கு நமது விமர்சகர்கள் பலரும் எழுதுகின்றார்கள். குறிப்பிடுகின்றார்கள்.

வலியுறுத்துகின்றார்கள்.

ஆனால் அதை எப்படி முன்னெடுப்பது என்ற வழிவகையை யாரும் வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை.
அத்தகைய முயற்சியில் - புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்து, ஒரு கட்டமைப்பாக உறுதியாக இயங்க வைக்கும் எத்தனத்திலும் விருப்பிலும் ஈடுபாட்டிலும் முழு முயற்சியிலும் - சிந்தித்து ஊடாடிக் கொண்டிருக்கின்றார் ரவீந்திரன் என்பதை நான் அறிவேன்.

அதற்கான தகைமையும், பண்பும், பரிச்சயமும், தொடர்பாடல்களும் கொண்டவர் அவர்தான். தமது 80 ஆண்டு கால வாழ்வின் பெரும்பகுதியை தமிழர் நலனுக்காக செலவிட்ட அவர்,  இந்த முயற்சியையும் வெற்றிகரமாக ஒப்பேற்ற எத்தனிக்க வேண்டும். ஊடகங்களும் புலம்பெயர் தரப்புக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவது இன்றைய தேவை என்று கருதுகிறேன்.

அவர் தமது குடும்பத்தாரோடு இனிய வாழ்வு தொடரவும், அவரது எழுத்துப் பணியும் முரசு வாசகர்களுக்கும் தொடர்ந்து கிட்டவும் வாழ்த்துகிறேன்.

 ( நன்றி:  யாழ். காலை முரசு )

 

No comments: