உலகச் செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா சரமாரித் தாக்குதல்

இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதால் மத்திய காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்: கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சு 

காசாவில் தஞ்சமடையவும் இடமின்றி மக்கள் தவிப்பு

சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – ஒமான் இணக்கம்

இஸ்ரேலிய தரைவழி தாக்குதல்கள் மக்கள் நெரிசல் மிக்க மத்திய காசாவில் உக்கிரம்



உக்ரைனில் ரஷ்யா சரமாரித் தாக்குதல் 

December 30, 2023 12:38 pm 

உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோன்ற சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்குப் பின் இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (28) இரவு ஆரம்பித்து சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உக்ரைன் 87 ஏவுகணைகள் மற்றும் 27 சாஹெத் வகை ட்ரோன்களைத் தடுத்து அழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

18 மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் பல கட்டடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் சேதமடைந்ததாக உக்ரைன் கூறியது.   நன்றி தினகரன் 






இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதால் மத்திய காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்: கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சு 

December 30, 2023 6:36 am 

இஸ்ரேலிய படைகள் அகதி முகாம்களை நோக்கி முன்னேறும் நிலையில் மத்திய காசா பகுதியில்
 இருந்து சுமார் 150,000 பேர் வரை தப்பிச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

புரைஜ் அகதி முகாமின் கிழக்கு புறநகர் பகுதியாக இஸ்ரேலிய டாங்கிகள் நெருங்கியுள்ளதாக பார்த்தவர்கள் மற்றும் ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் புரைஜ் மற்றும் அருகிலுள்ள நுஸைரத் மற்றும் மகாசி அகதி முகாம்களுக்கு தனது தரைவழித் தாக்குதலை அண்மையில்
 விரிவுபடுத்தி இருந்தது.

காசாவெங்கும் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேலும் டஜன் கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நுஸைரத் மற்றும் மகாசி முகாம்களில் உள்ள வீடுகளை இலக்கு வைத்து வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதில் இலக்கு வைக்கப்பட்ட வீடுகள் தவிர சுற்றி இருக்கும் நான்கைந்து வீடுகள் என சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 35க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தெற்கு காசாவில் உள்ள குவைட்டி மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடியிருப்புக் கட்டடங்கள் மீது நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் குறைந்து 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயிருக்கும் நிலையில் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 187 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இடைவிடாத தாக்குதல்களால் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான போரில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,500ஐ தாண்டியுள்ளது. 11 வாரங்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

இதன்படி காசா மக்கள் தொகையில் நான்கு வீதத்தினர் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணமல்போயுள்ளனர். காணாமல்போயிருக்கும் 7,000க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் மத்திய காசாவின் குறுகிய நிலப்பகுதியில் சுமார் 90,000 குடியிருப்பாளர்கள் மற்றும் 61,000 இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் டெயிர் அல் பாலாஹ்வுக்கு தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

எவ்வாறாயினும் டெயிர் அல் பாலாஹ்வில் ஏற்கனவே அளவுக்கு அதிகமான மக்கள் நிரம்பி வழிவதாகவும், வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அடைக்கலம் பெற்றிருப்பதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்கள் புதிய இடங்களுக்கு பரவி வரும் நிலையில் காசாவில் சனநெரிசல் மிக்க பகுதியாக மாறி இருக்கும் ராபாவுக்கு கடந்த சில நாட்களில் புதிதாக சுமார் 100,000 பேர் வரை அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா கூறியது.

புரைஜில் இருந்து குறைந்தது தனது 35 குடும்ப உறுப்பினர்களுடன் வெளியேற்றப்பட்டதாக 60 வயது ஒமர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“எப்போதும் வரக்கூடாது என்று பிரார்த்தித்த அந்தத் தருணம் வந்துவிட்டது. என்றாலும் வெளியேறுவது கட்டாயமாகிவிட்டது” என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார். “இஸ்ரேலின் இந்த கொடிய போரினால் நாம் இப்போது டெயிர் அல் பாலாஹ்வில் கூடாரம் ஒன்றில் இருக்கிறோம்” என்று தொலைபேசி வழியாக அவர் கூறியுள்ளார்.

படுகொலை இரவுகள் தொடர்வதாக விபரிக்கும் உள்ளூர் மக்கள், தற்காலிக முகாம்களில் இருந்தும் இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

எங்கு சென்றாலும் மரணம் எனில் வீட்டிலேயே உயிர் போகட்டும் என்று தெரிவித்துள்ளார் புரைஜ் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ராமி அபு மோசப்.

இஸ்ரேல் தரைவழியில் தனது இராணுவ படையை அனுப்புவதற்கு முன்பாக அந்தப் பகுதிகளில் தொடர் குண்டுவீச்சை நிகழ்த்துகிறது.

இத்தனை விரிவான மற்றும் தீவிரமான தாக்குதல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக்கொண்டு சேர்ப்பதில் தடையை ஏற்படுத்துவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. காசாவில் நான்கில் ஒருவர் பசியில் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தெற்கு காசா நகரான ரபாவை நோக்கி மேலும் மேலும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் காசா பணிப்பாளர் டொம் வைட் தெரிவித்துள்ளார். “மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் அதிகமான மக்கள் நிரம்பி இருப்பது அவர்களுக்கு உதவாது” என்றார்.

இஸ்ரேலிய தரைப்படை காசாவில் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இஸ்ரேலிய படையினர் மற்றும் வாகனங்களை தமது போராளிகள் இலக்கு வைப்பதாகக் கூறும் வீடியோ ஒன்றை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு இஸ்ரேலிய வீரர் காசாவில் கொல்லப்பட்டார். வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் 551 ஆவது படைப்பிரிவின் 7008 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த 33 வயது கெப்டன் ஹரெல் ஷர்வித் என்பவரே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதன்மூலம் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

ஹமாஸ் எகிப்து விரைவு

இஸ்ரேலிய தரைவழி படை தாக்குதலை நடத்திய வடக்கு காசா தற்போது பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில் அந்தத் தரைப்படை மேலும் தெற்காக முன்னேறி வரும் நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியம் எங்கும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான திட்டத்தை எகிப்து அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை கூறுவதற்கு ஹமாஸ் தூதுக் குழு ஒன்று நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் புதிய போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது, இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் இறுதியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னராக காசவை கட்டியெழுப்புவது மற்றும் நிர்வகிப்பதற்கான பொறுப்பு வகிக்கும் வகையில் அனைத்து பலஸ்தீன தரப்புகளையும் தொடர்புபடுத்திய பேச்சுவார்த்தை ஒன்றுக்குப் பின்னர் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட அரசு ஒன்றை அமைப்பது பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வாபஸ் பெறுவதற்கான உத்தரவாதங்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான பல்வேறுபட்ட அவதானிப்புகள் உட்பட பலஸ்தீன தரப்புகளின் பதிலை கெய்ரோ சென்றிருக்கும் தூதுக்குழு வழங்கும் என்று ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனிய இரத்தம் சிந்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஒன்றிணைக்க எதிர்பார்ப்பதாக எகிப்தின் அரச தகவல் சேவைகளின் தலைவர் டியா ரஷ்வான் தெரிவித்துள்ளார்.

எனினும் காசா முழுவதும் காலவரையின்றி இஸ்ரேல் சில வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அது அந்தப் பகுதி மீதான மீள் ஆக்கிரமிப்பாக அமையாது என்று கூறியுள்ளது.

காசாவில் எஞ்சி இருக்கும் 129 பணயக் கைதிகளையும் விடுவிப்பதே இந்தப் போரின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக அது சூளுரைத்துள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டியுள்ளது. குறிப்பாக யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹூத்திக்களால் அனுப்பப்பட்ட ஒரு ஆளில்லா விமானம் மற்றும் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று முன்தினம் (28) கூறியது. இது கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தொடக்கம் அந்தக் கிளர்ச்சியாளர்களால் சர்வதேச கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் 22ஆவது முயற்சியாக இருந்தது என்றும் அமெரிக்க இராணுவம் கூறியது.

தாக்குதல் இடம்பெறும்போது அந்தப் பகுதியில் இருந்த எந்த ஒரு கப்பலுக்கோ அல்லது நபர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகிலும் தெற்கு சிரியாவிலும் இஸ்ரேல் வியாழனன்று தாக்குதல்களை நடத்தி இருப்பதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் தெற்கு சுவைதா மாகாணத்தில் உள்ள சிரிய வான் பாதுகாப்பு நிலை ஒன்று மற்றும் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள சர்வதேச விமானநிலையம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





காசாவில் தஞ்சமடையவும் இடமின்றி மக்கள் தவிப்பு

December 29, 2023 10:28 am 

மத்திய காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எனினும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இந்தப் போரினால் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தெற்கு காசாவில் மக்கள் தஞ்சமடைவதற்கு இட வசதி தீர்ந்து வருவதால் தற்காலிக முகாம்களை பெறுவதற்கு மக்கள் போராடி வருகின்றனர்.

“குண்டு தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து, நெருங்கி வருகிறது. அது நேற்று இரவு பயங்கரமானதாகவும் தாங்க முடியாததாகவும் இருந்தது” என்று சொன்டோஸ் என தனது முதல் பெயரை மாத்திரம் கூறிய ஒருவர் ‘மிடிலீஸ்ட் ஐ’ இணைய செய்தி நிறுவனத்திற்கு புதன்கிழமை (27) குறிப்பிட்டிருந்தார்.

மத்திய காசாவின் புரைஜ் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பகுதியில் போருக்கு முன் சுமார் 90,000 பேர் வாழ்ந்ததோடு தற்போது அங்கு 61,000 இடம்பெயர்ந்த மக்களும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறியவர்களாவர்.

புரைஜ் அகதி முகாமும் காசாவின் ஏனைய இடங்கள் போன்று 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டு அடைக்கலம் பெற்றவர்கள் வசிக்கும் பகுதியாகும்.

தற்போது இங்குள்ள மக்கள் கால்நடையாகவும் கழுதை வண்டிகளிலும் தமது உடைமைகளைச் சுமந்தபடி மேலும் தெற்காக டெயிர் அல் பலா பகுதியை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் தங்குமிடங்களில் ஏற்க முடியுமான அளவை விட மக்கள் பல மடங்கு நிரம்பியிருப்பதால், புதிதாக வருபவர்கள் குளிர்கால இரவிலும் நடைபாதைகளில் கூடாரங்களை அமைத்துள்ளனர். பாதுகாப்பானது என கருதி பெரும்பாலான மக்கள் அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையைச் சூழ கூடாரங்களை அமைத்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன் காசாவின் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை. டெயிர் அல் பலா மற்றும் தெற்கு முனையான ரபா பகுதியில் சன நெரிசல் மிக்க பகுதியாக மாறியுள்ளன. இந்தப் பகுதிகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தரைப் படைகளும் இங்கு வரும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.   நன்றி தினகரன் 




சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

December 29, 2023 8:18 am 

த்திய காசாவில் இஸ்ரேலியப் படை தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. போரில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் முயன்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசாவில் மோசமடைந்திருக்கும் மனிதாபிமான நெருக்கடியை தணிப்பது மற்றும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும் இஸ்ரேல் தனது உக்கிரத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக அது உறுதியாகக் கூறி வருகிறது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவில் உள்ள அல் நுஸைரத் மீது நடத்திய மூன்று வான் தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மறுபுறம் நேற்று (28) கான் யூனிஸ் மருத்துவமனை ஒன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். பலஸ்தீன செம்பிறை சங்கத்தினால் நடத்தப்படும் அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதே பகுதியை இலக்கு வைத்து புதனன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான் யூனிஸ் மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும், கார்களிலும் தப்பிச் செல்வதை தமது ஊழியர்கள் பார்த்ததாக ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. வீதியை ஒட்டி தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

இராஜதந்திர ரீதியில் இஸ்ரேலுக்கான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளின் உதவியுடன் நீடித்த போர்நிறுத்தத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மத்திய காசாவின் அல் மகாசி மாவட்டத்தில் வான் தாக்குதல் ஒன்றில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருப்பதோடு வடக்கின் காசா நகரில் ஏழு பலஸ்தீனர்களின் சடலங்கள் அல் ஷிபா மருத்துவமனைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இரவு முழுவதும் இஸ்ரேலிய ஷெல் தாக்குதல்கள் நீடித்ததாக மத்திய காசா குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலிய டாங்கிகள் அல் புரைஜ் மற்றும் அல் மகாசி பகுதிகள் ஊடாக செல்ல முயலும் நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இதனால் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,110 ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 8,200 சிறுவர்கள் அடங்குவர். மேலும் 55,243 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் காசாவில் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மேலும் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காசாவில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

காசா பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாத்திரம் 22 இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பலரும் அந்த குறுகிய நிலப்பகுதியில் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் போர் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தூண்டும் என்று மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு அரசுகள் கவலை அடைந்துள்ளன. இதில் லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் தொடர்ந்து பதற்ற சூழல் நீடிக்கிறது. முந்தைய எந்த நாட்களை விடவும் ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த புதனன்று இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதம் சுமந்த ஆளில்லா விமானங்களை அனுப்பி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா இராணுவத் தளங்கள் மற்றும் மற்ற இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

“ஹஸ்புல்லாக்களை எல்லையில் இருந்து விலக்கி வைப்பதற்கும் இஸ்ரேலின் வடக்கு குடியிருப்பளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் சர்வதேசம் மற்றும் லெபனான் அரசு செயற்படாவிட்டால், இஸ்ரேலிய இராணுவம் அதனைச் செய்யும்” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கான்ட்ஸ் குறிப்பிட்டார்.

சிரியா மீது இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் கடந்த திங்களன்று கொல்லப்பட்ட ஈரானின் மூத்த தளபதி ராசி முசாவியின் கொலைக்கு பழிதீர்க்க தாம் அல்லது தமது கூட்டணிகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் புரட்சிக் காவல் படை புதன்கிழமை எச்சரித்திருந்தது.

இதேநேரம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அருகில் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று விழுந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதற்கு ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான ஈராக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்திருப்பதோடு அங்கு இதுவரை 76 சிறுவர்கள் உட்பட 313 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் மற்றும் ரமல்லா பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று தீவிரம் அடைந்திருந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 






பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – ஒமான் இணக்கம்

December 28, 2023 7:20 pm

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஒமானும் இணக்கம் கண்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் கண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் தெரிவித்துள்ளனர்.

ஒமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்கு வருகை தந்திருந்த சமயம் இந்தியாவின் பிரதி ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சார்த்திடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவும் ஒமானும் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இந்தியப் பிரதமரும் ஒமான் சுல்தானும் இதன் நிமித்தம் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதோடு எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் எக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது என்பதையும் அனைத்து வகையான வன்முறைத் தீவிரவாதத்தையும் கைவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அமைதி, நிதானம், சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் உலகளாவிய மதிப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டுத் தலைவர்களும் மேலும் வலியுறுத்தியமாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




இஸ்ரேலிய தரைவழி தாக்குதல்கள் மக்கள் நெரிசல் மிக்க மத்திய காசாவில் உக்கிரம்

24 மணி நேரத்தில் 241 பேர் பலி: “போர் பல மாதங்கள் நீடிக்கும்”

December 28, 2023 7:54 am

காசாவில் சனநெரிசல் மிக்க மத்திய பகுதியில் உள்ள அகதி முகாம்களுக்கு தனது தரைவழி தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் விரிவுபடுத்தி இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் மேலும் 200க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. எனினும் வீடுகள், அகதி முகாம்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசா சுகாதார அமைச்சு நேற்று (27) வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 382 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி 20,915 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 54,918 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி மத்திய காசா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. நுஸைரத், மகாசி மற்றும் புரைஜ் அகதி முகாம்கள் இடைவிடாத தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நிலையிலேயே இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே காசா தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேலிய உத்தரவை அடுத்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த அகதி முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்பதால் இந்தப் பகுதிகள் சனநெரிசல் மிக்க இடங்களாக மாறியுள்ளன.

“மத்திய முகாம்கள் என்று அறியப்படும் பகுதிகளை நோக்கி எமது போர் நடவடிக்கையை விரிவுபடுத்தி இருக்கிறோம்” என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படுவதால் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலுடனான கெரம் ஷலோம் எல்லை பகுதியின் ஊடாக இஸ்ரேலினால் கையளிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத 80 பலஸ்தீனர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை (26) அடக்கம் செய்யப்பட்டதாக காசா நிர்வாகம் குறிப்பிட்டது.

இந்த உடல்கள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய வக்பு அல்லது சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உடல்கள் தெற்கின் ரபா அடக்கஸ்தலம் ஒன்றில் நீண்ட அகழி போன்ற புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டதாக அது கூறியது.

இவ்வாறு புதைக்கப்பட்ட உடல்களை பின்னர் அடையாளம் காண்பதற்காக புகைப்படம் பிடிக்கப்பட்டதாக காசா இஸ்லாமிய வக்பு தெரிவித்துள்ளது.

காசாவில் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படும் 7,000க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் பல மாதங்கள் நீடிக்கும்

இதேவேளை காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் மாதக் கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்ஸி ஹலேவி கூறியுள்ளார். தொலைக்காட்சி வழியாக நேற்று முன்தினம் (26) வெளியிட்ட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இதற்கு மாயவித்தை போன்ற தீர்வுகள் இல்லை. ஒரு பயங்கரவாத இயக்கத்தைக் குலைப்பதற்குக் குறுக்கு வழிகள் ஏதுமில்லை. வைராக்கியத்துடன் தொடர்ந்து போரிடுவதுதான் ஒரே வழி” என்று ஹலேவி குறிப்பிட்டார்.

முற்றுகையில் உள்ள காசாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தமும் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் காலம் எடுத்துக்கொண்டபோதும் அனைத்து ஹமாஸ் படைப்பிரிவுகளையும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறும் வடக்கு காசாவிலும் கூட பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு காசாவில் மேலும் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி அங்கு தரை வழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இடம்பெறும் போர் “பேரழிவை தாண்டி நீடிப்பதாகவும்”, “அழிவுகளை தாண்டி இடம்பெறுவதாகவும்” பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சாடியுள்ளார். பலஸ்தீன மக்கள் வரலாற்றில் இதுவரை காணாததை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் விபரித்தார்.

இந்தப் போர் ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக அவர் ரமல்லாவில் இருந்து எகிப்து தொலைக்காட்சிக்கு பேசி இருந்தார். காசா பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருப்பதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வெடிப்பு ஒன்று ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தனது இராணுவ நடவடிக்கையை பாரிய அளவில் முன்னெடுத்தது.

அங்கு நேற்றுக் காலை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெறும் 25ஆவது ஆளில்லா விமானத் தாக்குதலாக இது இருந்தது.

மருத்துவ பணியாளர்கள் காயமடைந்தவர்களை அணுகுவதையும் இஸ்ரேல் இராணுவம் தடுத்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது. போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 311 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 3,450 பேர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டம் ஒன்று பற்றி இஸ்ரேல் மற்றும் அரபு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதன்படி அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுப்பது மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகிய திட்டங்கள் எகிப்தின் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக காசாவில் ஒரு வாரம் நீடித்த கட்டார் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்தத்தின்போது பல டஜன் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

பிராந்தியத்திலும் பதற்றம் தீவிரம்

காசாவை போன்று பிராந்தியத்திலும் பதற்ற சூழல் தீவிரம் அடைந்துள்ளது. செங்கடலில் செல்லும் கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் செங்கடலில் உள்ள கப்பல்களை இலக்கு வைத்து ஹூத்திக்கள் மேற்கொண்ட பல ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

“அந்தப் பகுதியில் உள்ள கப்பல்களுக்கோ அல்லது ஆட்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று பெண்டகனின் மத்திய கட்டளையகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதில் டிசம்பர் 26 ஆம் திகதி யெமன் நேரப்படி காலை 6.30 தொடக்கம் 10 மணி நேரத்திற்குள் ஹூத்திக்களினால் தெற்கு செங்கடலில் பன்னிரண்டு ஒருவழி ஆளில்லா விமானங்கள் மற்றும் மூன்று கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தரையைத் தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான கப்பல் பாதையான செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக ஹூத்திக்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் இஸ்ரேல் எல்லையில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தெற்கு லெபனான் நகரான பின்த் ஜிபைல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது மூவர் பேர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களில் லெபனான் பக்கம் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு டஜனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அடங்குகின்றனர். இஸ்ரேல் பக்கமாக குறைந்தது நான்கு பொதுமக்கள் மற்றும் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய தலைவர் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூதரகத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் உள்ள இடத்தில், இஸ்ரேலிய தூதருக்கு ஒரு கடிதத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கடிதம் சுற்றப்பட்ட கொடியையும் கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கடிதத்தை பொலிஸார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 







No comments: