பாக்தாத் பேரழகி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

1960ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் இளம் நட்சத்திர நடிகர்களாகத் திகழ்ந்தவர்கள் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடி. இவர்கள் இணைந்தது நடித்த குமரிப் பெண், நான், மூன்றெழுத்து , பணக்காரப் பிள்ளை ஆகிய படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்று இவர்களுக்கு ரசிகர் ஆதரவை அள்ளிக் கொடுத்தது. ஆனால் 70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இந்த ஜோடிக்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ஒன்று 73ம் வருடம் திரைக்கு வந்தது. அந்தப் படம்தான் பாக்தாத் பேரழகி!

வண்ணப் படமாக , பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு உருவான பாக்தாத் பேரழகி படத்தை டைரக்டர் டீ ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கினார். 50ம் ஆண்டுகளில் எம் ஜி ஆர், டீ ஆர் ராஜகுமாரி நடிப்பில் இவர் தயாரித்து, இயக்கிய குலேபகாவலி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கதையை சற்று மாற்றி பாக்தாத் பேரழகியாக்கினார் அவர்.

படத்தில் பாக்தாத் பேரழகி ஜெயலலிதாதான். வித விதமான ஆடை ஆபரணங்களோடு, ஆடல் , பாடல், சண்டை காட்சி என்று ஒரு ஆல் ரவுண்டராக படத்தில் தோன்றினார் அவர். காதல், சோகம், விரகம் என்று எல்லாவித உணர்வுகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. ரவிச்சந்திரன் டைரக்டர் சொன்ன எல்லா வேலைகளையும் செய்கிறார். ஆனால் பழைய இளமை மிஸ்ஸிங். சண்டைக் காட்சிகளில் அவரின் திறமை வெளிப்பட்டது.

படம் முழுவதும் நாகேஷ் வருகிறார். வரும் போதெல்லாம் சிரிக்க வைக்கிறார். அவரும் சச்சு, வி, கே ராமசாமி,
தேங்காய் சீனிவாசன் செய்யும் அட்டகாசம் ஜோர். திருநங்கையாக வரும் தேங்காய் சீனிவாசனின் நடிப்பு அருமை. என்னமாய் வழிந்து , வழிந்து பேசுகிறார். காட்டுவாசிகளிடம் பிடி படும் நாகேஷ் அவர்களின் கடவுள் ஆவதும், கடவுளுக்கு உணவு படைத்தால் போதும் அதை அவர் உண்ண மாட்டார் என்று சொல்லி காட்டுவாசிகள் நாகேஷை பட்டினி போட்டு உணவை தாங்களே உண்பது நல்ல தமாஷ். காட்டுவாசிகள் தலைவனாக வரும் ஓ ஏ கே தேவர் மிரட்டுகிறார் , சமயத்தில் சிரிக்கவும் வைக்கிறார்.




குவிஸ்த்தான் நாட்டுக்கு ஆட வரும் சுபைதா என்ற நடன அழகி நாட்டின் மன்னர் மனதிலும் ஆடி அவர் மனதில் குடியேறி விடுகிறாள். பிறகென்ன நாட்டில் அவள் இட்டதே சட்டம், அவள் சகோதரன் முராஸ் செய்வதே ஆட்சி என்றாகி விடுகிறது. பட்டத்து ராணி சிறைப்படுகிறாள், இளவரசி காட்டுவாசிகளிடம் பிடி படுகிறாள், இளவரசன் நாடற்றவன் ஆகிறான். பாக்தாத் பேரழகி நடத்தும் போட்டிகளில் பங்கு பற்றி அவற்றில் வெற்றி பெரும் இளவரசன் அப்துல்லா அவள் மனதையும் வெற்றி கொள்கிறான். அவளின் உதவியுடன் நய வஞ்சகர்களை ஒழித்து கட்டி இழந்த ஆட்சியையும் மீட்கிறான் . இப்படி அமைந்த படத்தின் கதையை விறுவிறுப்பாக இயக்கினார் ராமண்ணா. அவருக்கு துணையாக காட்சிகளை கலரில் அழகாக படமாக்கினார் எம் ஏ ரஹ்மான்.

புலமைப்பித்தன், எம் எஸ் விஸ்வநாதன் கூட்டணி இந்தப் படத்தில் எடுபடவில்லை. பாடல்கள் சுமார் ரகம். ஆனால் நடனங்கள் ரசிக்கும்படி இருந்தன. ஸ்டண்ட் மாஸ்டர் மாதவன் அமைத்த சண்டைக் காட்சிகள் நல்ல த்ரில்.


படத்தில் அசோகன், மனோகர், ஓ ஏ கே தேவர், சண்முகசுந்தரம், குண்டுமணி, புத்தூர் நடராஜன் , ஜஸ்டின் என்று பல வில்லன்கள். எல்லோருக்கும் வேலை இருக்கிறது, சண்டைகளும் இருக்கின்றன! மனோகர் முரட்டு வில்லன் என்றால் அசோகன் அமுக்கமான வில்லன். மதத் தலைவர் என்ற போர்வையில் அவர் தீட்டும் சதிகளும், அவர் வசனம் பேசும் ஸ்டைலும் பலே பலே.

சாவித்திரி, சுந்தரராஜன், சி ஐ டி சகுந்தலா, ராஜவேலு, ஆலம் , சுபா, ஜெயசுதா, என்னத்தே கன்னையா டைப்பிஸ்ட் கோபு , கே ஆர் ராம்சிங் என்று பலரும் படத்தில் இருக்கிறார்கள். ஆயிரத்தொரு இரவு அரபிக் கதைகளில் ஒன்றை தமிழுக்கு ஏற்றாற் போல் எழுதியிருந்தார் ரவீந்தர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர் பாராட்டியுள்ளார். சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர். எம் ஜி ஆரிடம் நீண்ட காலம் பணியாற்றிய ரவீந்தர் இப் படத்துக்கு எழுதிய வசனங்கள் அற்புதமானவை . நல்ல வசனகர்த்தாவான அவரை திரையுலகம் எனோ கண்டுகொள்ளவில்லை!

வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் நகைச்சுவை காட்சிகளுக்கு வசனங்களை எழுதினார். சிக்கலில்லாமல் படத்தை ராமண்ணா டைரக்ட் செய்திருந்தார்.



ஜெயலலிதாவின் திறமை, நட்சத்திர அந்தஸ்தை முன்னிலைப் படுத்தும் விதத்தில் வெளிவந்த பாக்தாத் பேரழகி பொழுதுபோக்கு பட ரசிகர்களுக்கு விருந்து!



No comments: