‘கோதை’ நடன நிகழ்ச்சி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

26, August 2023, BRYAN BROWN THEATRE-இல் ‘கோதை’ என்ற தலைப்பில் கார்த்திகா மனோகரன் பரத நாட்டிய நிகழ்வை நடத்தியிருந்தார். கோதை என்பது பெரியாழ்வார் தன் மகளுக்கு இட்டப் பெயர். பெரியாழ்வாரின் செல்வ மகள் கண்ணனில் பிரியமுள்ளவளாக வளர்பவள். கண்ணனுக்குத் தொடுத்த மலர் மாலையை தானே அணிந்து அழகுபார்க்கிறாள். சிறுமி பெரியவளாக வளர்ந்தவள், கண்ணனில் ஆழக் காதல் கொள்கிறாள். அவளையே மணாளனாகக் கொள்ளத் துடிக்கிறாள். அவனது வாய் அமுதை அனுபவிக்கத் துடிக்கிறாள். திருமாலின் கரத்திலே எப்பொழுதும் ஒட்டி உறவாடும் சங்கைக் கேட்கிறாள்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

 

வைணவ பக்தியிலே மேலோங்கி இருப்பது ‘மதுர பக்தி.’ பக்தர் தம்மைப் பெண்ணாக வரித்து இறை மேல் காதல் கொண்டு, அவனையே அடையத் துடிக்கும் காதலியாகத் தம்மை பாவனை செய்து வெளிப்படுத்துவதே ‘மதுர பக்தி’. ஆண் பக்தர்கள் உருகி உருகிப் பாடினாலும் ஒரு பெண்ணின் விரகத்தை உணர முடியாத பாவனையே அவை.

ஆனால் ஆண்டாள் ஒரு பெண்ணாக தன் காதலால் அவனை அடையத் துடிக்கும் பாடல்களை உணர்ந்து உருகி உருகிப் பாடுகிறார். அதனால்தான் அவரது மதுர பக்தி யாவரையும் விஞ்சி நிற்கிறது.

கோதை நாச்சியார் ஒரு புனிதமான பக்தை. கண்ணனையே மணவாளனாகக் கலந்தவள். ஆன்மீக உறவிலே மதுர பக்தியின் உச்சத்தைத் தொட்டு நிற்பவை அவள் பாடல்கள். கண்ணன் கனவிலே தன்னை மணந்தான் எனக் கொண்டாள். அவள் கனாக் கண்ட வரிகள்,

 

‘கதிரொளி தீபம் கலச முடனேந்தி

சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனா கண்டேன் தோழி நான்’

 

மதுரையார் கண்ணன் அடிநிலையைத் தொட்டு உடம்பெல்லாம் அதிரும்படி புகுந்தானாம். கண்ணன் கலந்த இந்த உடலை வேறொருவன் தொடக் கூடாது என்பதே இதன் அர்த்தம்.

 

நாச்சியார் பாடிய இன்னொரு பாடல்.

 

தான் காதலாகி தன்னவனாக வரித்துவிட்ட கண்ணனைத் துயில் எழுப்புகிறாள். ஆனால் தனக்கு மட்டுமே உரியவன் அல்லன் என்பதையும் பாடலிலே கூறுகிறாள்.

‘குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக்கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய், நீயுன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.’

 

குத்துவிளக்கு எரிகிறதாம், அழகிய கால்களையுடைய கட்டிலின் மேல் மெதுமெதுவென்றிருக்கும் மெத்தை மேல், நப்பின்னையின் கொங்கையின் மேல் தலையை வைத்துப் படுத்திருக்கும் கண்ணா, எழுந்திராய். “அடி அம்மா நப்பின்னை, நீ எப்பொழுதும் உன் கணவனை எழவிட மாட்டாய் போலிருக்கிறது. இரவும் பகலும் லீலை நடத்திக் கொண்டிருக்கிறாய். கண்ணா, நீ அவனை விட்டு எழுந்து வா.’

இதுவும் நாச்சியார் பாடல்தான். இன்று சமய சீர்திருத்தவாதிகள் இவற்றை ஆபாசம் எனலாம். ஆனால் இந்து மதத்திலே ‘மதுர பக்தி’ காரணம் இல்லாது தோன்றிவிடவில்லை. தமிழகத்தில் ஜைன, சமண, புத்த மார்க்கங்களே மேலோங்கி இருந்தன. இந்த மதங்களே காட்டுத்தீயாகப் பரவின. சமணமும் பௌத்தமும் இல்லறத்தை அறவே வெறுத்தன. கடுமையான துறவறத்தைப் போதித்தன. பெண்களோ பௌத்த சன்னியாசிகளாயினர். இவர்கள் கடுமையான விரதங்களை அனுட்டித்தனர். இளைஞர்களோ திருமண பந்தத்தில் ஈடுபடாது பௌத்த, ஜைன சன்னியாசம் மேற்கொண்டனர். இதன் விளைவு குடும்பங்கள், அதனால் சமூகம் வளராது பல இன்னல்கள் ஏற்பட்டன. வீட்டைப் பொறுப்பெடுக்காது, வயோதிகக் காலத்திலே அவர்களைத் தவிக்கவிட்டு பிள்ளைகள் சன்னியாசம் கொண்டு வெளியே போயினர். இவற்றைக் கட்டுப்படுத்தி சமூக மேம்பாட்டிற்காகவே ‘மதுர பக்தி’ என பக்தி ரசத்தில் காம ரசம் ஒரு அங்கமாகியது. நாயக நாயகி பாவம் கொண்ட பாடல்கள் உருவாயின. ஆண் பெண் உறவை பச்சைப் பச்சையாகக் காட்டி எழுதி பக்தி ரசத்தை கவிஞர்கள் எழுதினார்கள். அத்தனையும் இளம் சமுதாயத்தை மீட்டெடுக்கும் செயலே. கண்ணனோடு இரண்டறக் கலந்துவிட்ட நிலையை ஆண்டாளும் வார்த்தையாக வடித்தாள்.

இந்த மதுர பக்தியையே இன்று நாம் பரத நாட்டிய மேடைகளில் காண்கிறோம். கண்ணன் லீலைகளைக் கொண்ட பாடல்கள், அவனை அடையத் துடிக்கும் தாபத்தால் மன்மத பாணத்தைத் தாங்காத காரிகையை வர்ணிக்கும் ‘வர்ணம்’ என்ற உருப்படி.

மதுர பக்தியை வெளிப்படுத்திய ஆண்டாளை ‘கோதை’ என்ற நிகழ்வாக பரத நாட்டியமாகப் படைத்தார் கார்த்திகா. பரதம் கற்று அரங்கேறிய கார்த்திகா தொடர்ந்தும் பல ஆடல் நிகழ்வுகளில் பங்கேற்பவர். கம்பன் கழகத்திலே இணைந்து கம்பனின் காவியம் கற்றவர். பல கம்பன் கழக மேடைகளில் விவாத அரங்கிலே பங்கு கொண்டவர். 2023-இல் மலேஷியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தவர்.

இவர் ‘கோதை’ மலரிலே ஆண்டாளை ஆண் ஆதிக்க சமூகத்திலே பெண்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த அஞ்சிய, கூசிய சமூகத்திலே கோதை நாச்சியாரை பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களை, பிறர் விமர்சனத்திற்கு அஞ்சாது வெளியிட்டவர் என எழுதி உள்ளார். இந்த கருத்திற்கு வலு சேர்க்கும் ஆடலாக கோதையை ஒரு பரத நாட்டிய நிகழ்வாகவே நடத்தினார்.

வில்லிபுத்தூராரின் திருவரங்கன் மேலான திருப்பள்ளி எழுச்சி உடன் நிகழ்வு ஆரம்பமானது. அதை அடுத்து சுங்கை முத்து நட்டுவனார் எழுதிய கௌத்துவத்தை ஆடினார் கார்த்திகா. சிறுமி கோதை மணல் வீடு கட்டி ரசிக்க அதை கண்ணனோ காலால் உதைக்கிறான். இந்த சிறு பிள்ளை விளையாட்டிலே கோதையான கார்த்திகா அற்புதமாக பாவங்களை வெளியிட்டு இரசித்து ஆடினார். காரிகை ஆகிய கோதை விரக தாபத்தால் தவிக்க வேண்டும். விரக தாபத்தை எந்த விதக் கூச்சம், சமூக பயம் இன்றி வெளியிட்டவள் ஆண்டாள் – நாச்சியார் எனக் கூறிய கார்த்திகா, விரகத்தைக் காட்டாது தயங்கினாரோ என எண்ணத் தோன்றியது. காமம் புனிதமானது என்ற உணர்வுடனேயே ஆண்டாள் தன் பாக்களை வடித்தாள்.

அன்றைய காலத்திலே கோவில் கொண்ட மூர்த்தியை மணந்தாள் தேவ (இறைவன்) அடியாள். இரவிலே கோயில் மூட முன் அர்த்த ஜாம பூஜையிலே தேவடியாள் கும்ப ஆராத்தி எடுப்பாள். அதாவது நிறைகுடத்தின் மேல் தீபம் ஒன்று எரியும். இது அவனது உயிரோட்டம் உள்ள கருப்பையைக் குறிக்கும். அவள் ஆராத்தியை நிறைவு செய்ய அர்ச்சகர் அந்த தீபத்தை வெண்ணிறப் பூவால் அணைப்பார். வெண்ணிற மலர்கள் ஆண் விந்துவின் அடையாளம். இந்தச் சடங்கு லிங்காவியம் எனப்படும். இதுவும் மதுர பக்தி அல்லது பிரேம பக்தி. இறைவனே பரமாத்மா, கோயில் தாசியே ஜீவாத்மாவாக இறையுடன் ஒன்றறக் கலப்பதேயாகும்.

கார்த்திகா விரகம் கொண்டதாக பாவனையில் ஆடிய பின், கனவிலே திருமாலை மணம் புரிகிறார். இங்கு மணப் பெண்ணின் நாணம் அவன் கைப்பற்றும் பொழுது ஏற்படுவது மிக மிக அழகாகக் காட்சிப்படுத்தினார். திருமணம் கனவே, அவனை அவளால் அனுபவமாக உணர முடியாத தாபம் வாட்டுகிறது. மாதவன் கையிலே எப்பொழுதும் வீற்றிருக்கும் சங்கோ அவனது திருவாயால் ஊதும் பாக்கியம் பெற்றது. அவன் அதை ஊதும்போது அவன் வாய் அமுதச் சுவையை அது அனுபவித்திருக்குமே. திருப்பவளச் செவ்வாய்தான் தித்திக்குமோ, மருப்பொசித்த மாதவன் தன் வாய் அமுதம் நாறுமோ என வினவுகிறாள். இங்கு நாம் விரகம் கொண்ட மாதின் ஆற்றாமையைக் காண்கிறோம்.

பரத, கச்சேரியின் இறுதி நிகழ்வான தில்லானா மகுடம் சூட்ட மங்களமாக நிறைவுறுகிறது, கோதை நாச்சியார் ஆடல் நிகழ்வு.

நிகழ்வை மெருகுடன் தம் இசையால் மிளிரச் செய்த கலைஞர்கள்

குரலிசை – அகிலன் சிவானந்தன்

நட்டுவாங்கம் – அனுஷா தர்மறாஜா

மிருதங்கம் – ஜனகன் சுதந்திரறாஜா

வயிலின் – கிரந்தி கிரன் முடிகொண்டான்

வேணு – வெங்கடேஷ் ஸ்ரீதரன்

 

நிகழ்ச்சித் தொகுப்பாளராக துர்கா சிவாஜி, மாதுமை சாரங்கன் தமது அழகிய வாசிப்பால் மெருகேற்றினர். மாதுமை தமிழிலே மிக ஆழமாக விஷயத்தை எடுத்துக் கூறியது அவர் தமிழிலும் ஆண்டாளிலும் கொண்ட பற்றைக் காட்டியது.  

 


No comments: