எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 78 - முருகபூபதி

 .

“ வீழ்வேனென்று நினைத்தாயோ  “ எனச்சொன்ன பாரதி,  கண்ட பெண்களை  சந்தித்த பயணத்தில் சில காட்சிகளும் கதைகளும் !

     

கடந்த 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினத்தின்போது,  28 பெண் ஆளுமைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் யாதுமாகி – அமேசன் கிண்டிலில் வௌியானது.

அதில் இடம்பெற்ற சில பெண் ஆளுமைகளை 2023 ஆம் ஆண்டு மீண்டும் நேருக்கு நேர் சந்திப்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே எமது வாழ்க்கை.  குறிப்பிட்ட  யாதுமாகி நூலின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறவேண்டிய சிலர் பற்றியும் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன்.

எமது தமிழ் சமூகத்தில் ஏராளமான பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், ஊடகம், பொதுநல தன்னார்வப்பணி  முதலான துறைகளில் மிகச்சிறந்த ஆளுமைகளாக விளங்குகின்றார்கள்.

அத்தகையவர்கள் பலரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் அதிகம். கடந்த ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையில்             ( மூன்று மாதங்கள் ) தொடர்ச்சியாக பயணங்களில் ஈடுபட்டுவருகின்றேன்.  செப்டெம்பர் முதல் வாரம் மீண்டும் நான் நிரந்தரமாக வதியும் மெல்பன் வந்து,  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தவிருக்கும்  23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சிட்னி மாநகருக்கு பயணப்படவேண்டியிருக்கிறது.

கனடாவில்,  ஶ்ரீரஞ்சனி விஜயேந்திரா, சுமதி, மைதிலி தயாநிதி, உஷா மதிவாணன்,  சிவசங்கரி ( தமிழ்நாடு )   ஆகியோரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தேன்.

மவுண்ட்லவேனியாவில்  பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு அவர்களையும்  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்                                                     (  இலக்கியக்களம் நிகழ்ச்சியில் )    ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமையில்  எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் திருமதி ஞானம் ஞானசேகரன்,  வசந்தி தயாபரன்,  ரஞ்ஜனி சுப்பிரமணியம், சுகந்தி ராஜகுலேந்திரா, ஜீவா சதாசிவம் ஆகியோரையும். அதன் பின்னர்  தேவகௌரியையும்  கிழக்கு பல்கலைக்கழகத்தில் ரூபி வலன்ரினா, விஜிதா,  மற்றும் நதீராவையும் சந்தித்தேன்.


சித்ரலேகா கூற்று என்ற ஆவணத் தொகுப்பினைத் தந்தார்.  அதனைப்பற்றி நான் அவசியம் எழுதவேண்டும் எனவும் அன்புக்கட்டளை விடுத்தார்.  தொடர் பயணங்களினால் அந்த வேலையும் சற்றுத் தாமதமாகிறது.  மெல்பன் திரும்பியதும் நிச்சயம் எழுதவேண்டிய பல நூல்கள், தொகுப்புகள் எனது பொதிகளில் சேகரமாகியிருக்கின்றன.

மட்டக்களப்பில் புனித ஜோசப் தேவாலயத்தினால் பராமரிக்கப்படும்  முதியோர் காப்பகத்தில்  திருமதி அசுந்தா கனகராஜனை  பார்த்தேன்.

இவர் மறைந்துவிட்ட எழுத்தாளர் மு. கனகராஜனின் மனைவி.  கனகராஜன் எனக்கு 1972 இல் அறிமுகமானார்.  அந்த ஆண்டு பெப்ரவரி மாதம்,  மல்லிகை நீர்கொழும்பு பிரதேச மலர் வெளியீட்டரங்கு  எங்கள் இல்லத்தில் நடந்தபோது மல்லிகை ஜீவா, தன்னோடு அழைத்துவந்து எமக்கு அறிமுகப்படுத்திய படைப்பாளி மு. கனகராஜன்.   

சுதந்திரன்,  தேசாபிமானி, புதுயுகம், சோவியத்நாடு, தினகரன் வாரமஞ்சரி ஆகியனவற்றில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். அத்துடன் சிற்பியின் கலைச்செல்வி, செல்வராஜாவின் அஞ்சலி ஆகியனவற்றில் ஆசிரிய ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

கெமுனுவின் காதலி (  நாடகம் ) முட்கள் ( கவிதை ) பகவானின் பாதங்கள் ( சிறுகதை ) முதலான நூல்களையும் வரவாக்கியவர்.

பின்னாளில் உமா மகேஸ்வரனின் புளட் இயக்கத்துடன் ஏற்பட்ட தொடர்புகளினால், அவரது பிரதிநிதியாக திம்பு பேச்சுவார்த்தைக்கும் சென்றவர்.

சந்திரிக்கா – விஜயகுமாரணதுங்க தம்பதியரையும் சென்னையில் சந்தித்திருப்பவர்.

காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்ந்தவர்தான் அசுந்தா.

அசுந்த -  கனகராஜன் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.   ஒருவருக்கு ஒருவர் குழந்தைகளாக வாழ்ந்தவர்கள்.

கனகராஜன் மகரகம  மருத்துவமனையில் மரணப்படுக்கையிலிருந்தபோது தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால்,  பிரான்ஸிலிருக்கும் கலைஞர் ஏ. ரகுநாதனுக்கும், அவுஸ்திரேலியாவில் வதியும் எனக்கும் தகவல் அனுப்புமாறு ஒரு சிறிய காகிதத்தில் எழுதி அசுந்தாவிடம் கொடுத்தார்.

அந்தச் சிறிய துண்டை அசுந்தா எனக்கு தபாலில் அனுப்பியிருந்தார். கனகராஜனின் கல்லறை வவுனியாவில் இருக்கிறது. அவரது நினைவுகள் எனது நெஞ்சறையில் வாழ்கின்றது.

கலைஞர் ரகுநாதன் கொவிட் பெருந்தொற்றின்போது மறைந்தார்.

சகோதரி அசுந்தாவை கணவர் கனகராஜனுடன்   1997 இல்தான் நீண்ட  இடைவெளிக்குப்பின்னர் கொழும்பில் பார்த்தேன். அச்சமயம் கனகராஜன் தினகரன் வாரமஞ்சரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  அவரது மறைவுக்குப்பின்னர் 2002 ஆம் ஆண்டு  கொழும்பில் புறநகரமொன்றில்  ஒரு கத்தோலிக்க  ஆசிரமத்தில்  அசுந்தாவை,    பெற்றவர்கள் இல்லாத அனாதைக்  குழந்தைகளின் பராமரிப்பு நிலையத்தில் பணியாளராக பார்த்தேன்.  அதன் பின்னர்  வவுனியா செட்டி குளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். இலங்கை வரும்போதெல்லாம் நான் சந்திக்கும் சகோதரிதான் திருமதி அசுந்தா கனகராஜன்.

2019 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது இவர் மட்டக்களப்பில் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் முதியோர் காப்பகத்தில் இருப்பதாக அறிந்து , இலக்கிய  நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் வழிகாண்பிக்கச்  சென்று பார்த்தேன்.

அச்சமயம் இவரை பராமரித்தவர் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒரு அருட் சகோதரி. அவர் என்னுடன் தமிழில் சரளமாகப்பேசினார்.  எனக்கு அருந்துவதற்கு திராட்சை  பழ ரசம் தந்து உபசரித்தார்.

இலங்கையில் ஒரு முதியோர் காப்பகத்தில் திராட்சை பழரசம்  கிடைத்திருப்பது வியப்பான விடயம் !

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலக்கியவாதி திருமதி வசந்தி தயாபரன் குறிப்பிட்ட முதியோர் காப்பகத்திற்கு யாரையோ பார்க்கச் சென்றவேளையில், அசுந்தா வீரகேசரி பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தாராம்.

 “ என்னம்மா பத்திரிகை வாசிக்கிறீர்களா…? எப்படி இருக்கிறீர்கள்..?  “ என்று சம்பிரதாயத்திற்கு சுகம் விசாரித்திருக்கிறார் வசந்தி தயாபரன்.

 அப்போது எழுத்தாளர் மு. கனகராஜனின்  மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அசுந்தா.

மு. கனகராஜனை வசந்தி,  தனது  தந்தையார் ( தமிழ் கதைஞர் வட்டத்தின் ஸ்தாபகர் )  வ. இராசையா மாஸ்டர் சொல்லி அறிந்திருப்பவர்.

 வசந்தியிடம், “ தம்பி முருகபூபதி , இலங்கை வருவதாக அறிந்தேன். வந்தால் என்னை வந்து பார்க்குமாறு சொல்லுங்கள்  “ எனச்சொல்லியிருக்கிறார் அசுந்தா.

வசந்தியும் எனது வாட்ஸ்அப்பிற்கு தகவல் அனுப்பியிருந்தார்.

இந்தமுறை பயணத்திலும் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் அசுந்தாவை பார்க்கச்சென்று அதிர்ச்சியுற்றேன்.

அவர் தனது வலது காலை இழந்திருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து, நகர்ந்து வந்தார். முகத்தில் மந்தகாசமான புன்சிரிப்பு.

ஒரு எழுத்தாளனுக்கு வாழ்க்கைப்பட்டு,  எத்தனையோ துன்ப துயரங்களைக்  கடந்து வந்து,  தற்போது ஒரு முதியோர் காப்பகத்தில் சக்கர நாற்காலியில் முடங்கியிருந்தாலும், புன்சிரிப்புடன் அசுந்தா அக்கா  உற்சாகமாகப் பேசியது என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது. அவரது முகத்தில் கலக்கமே இல்லை! பிரகாசம்தான் இருந்தது!

அவர் எனக்கு ஒரு புத்திமதி சொன்னார்.

 “ கடந்த கால வேதனைகளை,  ஏமாற்றங்களை முடிந்தவரையில்  முற்றாக மறந்துவிடுங்கள்.  தினமும் புதிய வாழ்க்கை வாழ்வதாக உற்சாகமுடன் செயற்படுங்கள் “ 

அசுந்த அக்காவிடம் கற்றதை இங்கே சொன்னேன்.

இந்தப்பதிவில் மற்றும் ஒரு பெண் ஆளுமையை பற்றிச் சொல்கின்றேன்.

1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தை அறிந்திருப்பீர்கள்.  அக்கலவரத்தில் எங்கள் நீர்கொழும்பூரும் மலையகத்தில் இரத்தினபுரி, பெல்மதுளை, காவத்தை, இறக்வானை,  அவிசாவளை, கம்பளை,  நாவலப்பிட்டி,   தெரணியகல முதலான நகரங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஒரு மலையக நகரத்தில் கடை வைத்து தனது சிறிய குடும்பத்தை ஒருவர் பராமரித்துவந்தார். அவரது கடையும் தாக்கப்பட்டு,  அவரும் அவரது குடும்பத்தினரும் அகதிகளாக வெளியேறி எங்கள் நீர்கொழும்பூரில் தஞ்சமடைந்தனர்.

அந்த குடும்பத்தலைவரின் பெயர் செல்லத்துரை.  அவருக்கு ஆறு குழந்தைகள்.  அவர்களுக்காக குடும்பத்தலைவர்  எங்கள் ஊரில் ஒரு கடையில் பணியாற்றினார்.

வறுமை வீட்டில் தாண்டவமாடியது. எனினும் பிள்ளைகளை சிரமப்பட்டு படிக்கவைத்தார்.

ஒருநாள் அவர் திடீரென இறந்து, குடும்பத்திற்கு அதிர்ச்சியையும் பேரிழப்பினையும் தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றார்.

அந்தக்குடும்பத்தில் பிறந்த பாமினி என்ற பிள்ளை எங்கள் ஊர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் படித்தார்.

கல்வியில் ஆர்வம் மிக்க இந்தப்பிள்ளைக்கு அவுஸ்திரேலியாவில் இயங்கும்  எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவியது.

இவருக்கு  எமது கல்வி நிதியம் ஊடாக உதவிய அன்பர் மருத்துவர் நாகரத்தினம். இவர்  எழுத்தாளர் நடேசனின் துணைவியார் மருத்துவர் சியாமளாவின் தந்தையார்.  மருத்துவர் நாகரத்தினம் மறைந்துவிட, அவரது பேரன் நவீன் நடேசன்,  இம்மாணவிக்கு தொடர்ந்து உதவினார்.

செல்வி பாமினி செல்லத்துரை, கொழும்பு பல்கலைக்கழகம் பிரவேசித்தார். பட்டதாரியானார்.  கொழும்பில் நிறுவனங்கள்  ( கம்பனிகள் ) பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

அதன்பின்னரும் படித்தார். அரச பரீட்சைகளில் தோற்றினார். நுவரேலியா மாவட்ட பிரதிக்கல்விப்பணிப்பாளர் பதவி கிடைத்தது.

அவரது ஆளுமைப்பண்புகளையும்  செயற்திறனையும் பார்த்த கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர், தமது கல்வி அமைச்சில் பணியாற்ற வருமாறு அழைத்தார்.

மலையக மாணவர்களுக்காக அந்த நியமனத்தை அவர் ஏற்காமல், தொடர்ந்தும்  நுவரேலியா கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார்.

2019 ஆம் ஆண்டு பாமினியை நான் மீண்டும் சந்தித்தபோது,  என்னை மலையகத்திற்கு ஒரு அதிகாலை வேளையில் அழைத்துச்சென்று,   நானுஓயா, உட்பட சில பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சில மணவர்களை தெரிவுசெய்து தந்தார்.

அம்மாணவர்களின் கண்காணிப்பாளராகவும் இயங்கினார். அவர் தெரிவுசெய்து தந்த  மலையக மாணவர்களுக்கும்  தொடர்ந்தும் உதவி வழங்கப்படுகிறது.

எப்போதும்  படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் பாமினி, இலக்கிய ஆர்வமும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர். 2019 இல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த எனது                               இலங்கையில் பாரதி   நூல் வெளியீட்டு அரங்கிலும் உரையாற்றினார்.

தொடர்ந்தும் படித்தார். பரீட்சைகளில் தோற்றினார்.

தற்போது கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் உதவி பரீட்சை ஆணையாளராக பணியாற்றுகிறார்.

இம்முறை நான் இலங்கை வந்திருந்தபோது,  ஒருநாள் என்னை அதிகாலை வேளையில்  வெலிமடை பஸ்ஸில் மலையக மாணவர் ஒன்றுகூடலுக்கு  அழைத்துச்சென்றவரும் இவர்தான்.

எமது கல்வி நிதியத்தின் மலையக மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு, ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் செல்வி பாமினியும் ஒரு விருந்தினராக கலந்துகொண்டார்.

எனது தொடர்  பயணத்தில்  நான் சந்தித்த மேலும் சில பெண் ஆளுமைகளை இனிவரும் அங்கங்களில் பதிவுசெய்வேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 


No comments: