மறுபிறவி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 புகழ் பெற்ற மனோதத்துவ மருத்துவராகவும்,


பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தவர் ஆப்ரஹாம் கோவூர். இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் , இலங்கைக்கு குடிபுகுந்து , கொழும்பு பாமன்கடை பகுதியில் வாழ்ந்து வந்தார். மனோரீதியில் பாதிக்கப்பட்ட பலர் இவரிடம் சிகிச்சைக்கு வந்து நலம் பெற்றுள்ளனர். இவ்வாறான தனது அனுபவங்களை அவர் இலங்கையில் , தமிழில் இரண்டு நூல்களாக தொகுத்து வெளியிட்டிருந்தார். அவை நல்ல வரவேற்பையும் பெற்றன.


மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராகத் திகழ்ந்தவர் கே எஸ்

சேதுமாதவன். வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் ஆர்வம் உள்ள இவர் கோவூரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு , அவர் சிகிச்சை அளித்த சம்பவத்தை மலையாளத்தில் புனர் ஜென்மம் என்ற பெயரில் படமாக்கினார். பிரேம் நசீர், ஜெயபாரதி நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கண்ணை உறுத்தவே இயக்குனர் டி ஆர் ராமண்ணா இந்தப் படத்தை மறுபிறவி என்ற பெயரில் தமிழில் இயக்கினார்.

கல்லூரி ஆசிரியரான இளங்கோ , தன்னிடம் கல்வி பயிலும் சாரதாவை காதலிக்கிறார். சாரதாவும் அவரை காதலிக்கவே , ஆரம்பத்தில் அவர்கள் காதலை மறுக்கும் சாரதாவின் தந்தை பின்னர் அவர்கள் காதலுக்கு சம்மதம் வழங்குகிறார். திருமணம் நடந்து தம்பதிகள் தனிக் குடித்தனம் போகிறார்கள். மகிழ்ச்சியுடன் தொடங்கும் அவர்கள் புது வாழ்வு விரைவில் கசக்கிறது. தாம்பத்ய உறவில் இளங்கோ ஆர்வம் காட்டாததை கண்டு சாரதா துடிக்கிறாள். இளங்கோவுக்கு காம உணர்வை ஏற்படுத்த பூஜை, புனஸ்காரம் மலையாள மாந்த்ரீகம் என்று பல வழிகளை சாரதாவின் தந்தை நாடுகிறார். ஆனால் ஒன்றும் பலனளிக்காமல் போகவே இறுதியில் மனோதத்துவ டொக்டரான கோவூரை நாடுகிறார்கள். அவரால் அவர்களின் பிரச்னைக்கு தீர்வு தர முடிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் இளங்கோவாக முத்துராமனும், சாராதாவாக மஞ்சுளாவும் நடித்தனர். தன் பாத்திரம் அறிந்து இயல்பாக நடித்திருந்தார் முத்துராமன். மஞ்சுளாவுக்கு சற்று கடினமான வேடம். ஆனாலும் அதனை முறையாகக் கையாண்டிருந்தார் அவர். ஆரம்பத்தில் இளமைத் ததும்ப , வித விதமாக ஆடைகள் அணிந்து வரும் அவர் பின்னர் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார்.

படத்தில் பரபரப்பாக இடம்பெற்றது படுக்கை அறை பாடல் காட்சிதான். இந்தக் காட்சியில் மஞ்சுளாவும், முத்துராமனும் படுக்கையில் நடத்தும் ரொமான்ஸ் இது வரை காலமும் தமிழ் திரை காணாத காட்சி எனலாம்! அந்த காட்சி தணிக்கைக்கு தப்பியது ரசிகர்களின் அதிர்ஷ்டம்தான்!.


படத்தில் மஞ்சுளாவின் தந்தையாக வரும் அசோகன் நடிப்பு நன்று. நாகேஷ் சில காட்சிகளில் தோன்றுகிறார். இவர்களுடன் சுகுமாரி, தேங்காய் சீனிவாசன், எம் ஆர் ஆர் வாசு, மனோரமா , உசிலைமணி ஆகியோரும் நடித்தனர்.

படத்துக்கு வசனம் எழுதியவர் டி என் பாலு. செக்ஸ் சம்பந்தப் பட்ட காட்சிகளில் பாலுவின் வசனங்கள் வரம்பு மீறாமல் அமைந்தன. பாடல்களை கண்ணதாசன் எழுத , டி ஆர் பாப்பா இசையமைத்தார். எஸ் பி பி மிருதுவான குரலில் ஒலித்த சொந்தம் இனி உன் மடியில்

பாடல் இனிமையாக அமைந்தது. அதே போல் எம் ஆர் விஜயா பாடிய ஏடி பூங்கொடி ஏன் இந்த பார்வை பாடல் மனதை வருடியது. படத்தை அமிர்தம் ஒளிப்பதிவு செய்தார்.

மலையாளத்தில் சேதுமாதவன் இயக்கியதை அப்படியே தமிழில் மறுபிறவியாக்கினார் ராமண்ணா. சில காட்சிகளில் டாக்டர் கோவூர் இடம் பெற்று சிகிச்சை அளிப்பதாக காட்டியது தமிழ் சினிமாவுக்கு புதுமை. பாலியல் சம்பந்தப் பட்ட கதையை விரசம் இல்லாத விதத்தில் படமாக்கியது பாராட்டுக்குரியது.


No comments: