எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 70 ஒரு குழந்தை எனக்கு வழங்கிய விருது ! தலைமுறைகள் தாண்டியும் வளரும் உறவு !! முருகபூபதி


எனது சிறிய வயதில் நான் நேசம் பாராட்டிய குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகி, மணம் முடித்து பிள்ளைகள் பெற்று, அந்தப் பிள்ளைகளுக்கும் மணமாகி குழந்தைகள் பெற்றபின்னர் , மூன்றாவது தலைமுறையை நான் சந்திக்க நேர்ந்தாலும்,  தொடக்கத்தில் நான் நேசம் பாராட்டிய அந்தக் குழந்தைகள், என்னதான் வயதால் முதிர்ச்சியடைந்திருந்தாலும்,  எனது பார்வையில் இன்னமும் குழந்தைகள்தான்.

எனக்கு 1954 ஆம் ஆண்டு நீர்கொழும்பில்,  விஜயதசமியன்று ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்து வைத்த ஆசிரிய பெருந்தகைகளில் ஒருவரான ( மற்றவர் அமரர் பண்டிதர் க. மயில்வாகனன் ) திருமதி மரியம்மா திருச்செல்வம் அவர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள்.

எமது நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) 1954 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டபோது,  என்னோடு சேர்த்து 32 குழந்தைகளுக்கு ஏடு துவக்கினார்கள்.

அந்தப்பாடசாலையின் முதலாவது மாணவனாக                                         ( சேர்விலக்கம் -01 ) நான்  இணைத்துக்கொள்ளப்பட்டேன்.

திருமதி திருச்செல்வம் அவர்கள் எமக்கு ஆசிரியையாக மாத்திரம் அறிமுகமாகவில்லை. எமக்கு அவர் மற்றும் ஒரு தாயார்.  அவரது கணவரை நாம்   பப்பா  “ என அழைப்போம். அதற்குக் காரணம் : அவர்களின் மூன்று குழந்தைகளுமான செல்வராணி, செல்வமணி, செல்வ நளினி ஆகியோரும் தமது தந்தையாரை “  பப்பா“  எனத்தான் அழைப்பார்கள்.

அவர் இலங்கை விமானப்படையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். 1960 களில் அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது,  இரண்டாவது குழந்தை செல்வமணிக்கு மூன்றுவயதுதான் இருக்கும்.

பப்பா லண்டன் போனார்  என்பதை, யன்னலுக்குப் போனார் என்றுதான் மழலைக்குரலில் சொல்லி எம்மை சிரிப்பில் ஆழ்த்துவார்.

இந்த சுவாரசியத்தை பல ஆண்டுகளுக்குப்பின்னர் தங்கை


செல்வமணியிடம் நான் சொன்னபோது, “ பூபதி அண்ணன் இந்த சின்ன விடயங்களையும் மறக்கவில்லை “ என்று சொல்லிச்சிரித்தார்.

 பப்பாவின துணைவியார் எமக்கு வித்தியாரம்பம் செய்யவந்து அரிவரி வகுப்பு ஆசிரியராக அறிமுகமானபோது முதல் குழந்தை செல்வராணியை  வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார்.

அதனால், பப்பா அந்தப்பாடசாலை 33 குழந்தைகளுடன்தான் ஆரம்பமானது என்று அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வார்.

பப்பா இலங்கையில் நீர்கொழும்பில் 1999 ஆம் ஆண்டு மறைந்தபோது,  அந்த இறுதி நிகழ்வில் நானும் நின்றமை எதிர்பாராத நிகழ்வு.  அவருக்கான நினைவுமலரையும் எழுதி தயாரித்துக்கொடுத்தேன். அவர் சிறந்த நகைச்சுவை நடிகர்.


இலங்கை வானொலியில் கலைஞர் சானா சண்முகநாதனின் தயாரிப்பில் ஒலிபரப்பான குதூகலம் – மத்தாப்பு நிகழ்சிகளிலும் பங்கேற்றிருப்பவர்.

நாம் என்றுமே பெரிய ரீச்சர் அம்மா என அழைக்கும் திருமதி திருச்செல்வம் அவர்கள்,  கணவர்   1999 இல் நவராத்திரி காலத்தில் மறைவதற்கு முதல்நாள் நண்பகல் எனக்கும், என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவாவுக்கும், அச்சமயம் ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை பணிப்பாளராக  பணியாற்றிய நண்பர் வன்னியகுலத்திற்கும் மதிய விருந்தினை வழங்கினார்.

எங்கள் பெரியரீச்சர் அம்மா, என்னை மாத்திம் நேசிக்கவில்லை. எனது இலக்கிய நண்பர்களையும் நேசித்தவர்.

அவருடனான உறவு பூர்வஜென்ம தொடர்பினைக்கொண்டதாகவே நான் எப்போதும் கருதுகின்றேன்.

2007 ஆம் ஆண்டு நான் கனடா சென்றசமயம் பெரியரீச்சர் அம்மாவை சந்தித்தேன். அப்போது அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார்.

அவரது படுக்கையில்  தலையணைக்கு அருகில் எனது சில நூல்கள்


இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.   எனது கடிதங்கள் நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருப்பதாக இதற்கு முன்னரும் எழுதியிருக்கின்றேன்.

அவரது இரண்டாவது புதல்வி திருமதி செல்வமணி இராஜதுரை எனக்கு தற்போதும் குழந்தைதான். இவரை சிறுவயதில் எனது சைக்கிளில் ஏற்றி இறக்கியிருக்கின்றேன். இவரும் இவரது சகோதரிமாரும் எப்போதும் என்னை “ பூபதி அண்ணா “ என்றே அனபொழுக அழைப்பார்கள்.

பெரியரீச்சர் அம்மா முன்னர் எனக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் இன்றளவும் பொக்கிஷமாக காத்து வருகின்றேன். மாணவ மகனார் என்றுதான் எனக்கு எழுதும் கடிதங்களை ஆரம்பிப்பார். கனடாவில் வதியும் இவரது மூன்று செல்வங்களும்  இம்முறை கனடா பயணத்தின்போது,  என்னை மிகவும் கரிசனையுடன் கவனித்துக்கொண்டார்கள்.


கடந்த ஜூன் மாதம் 04 ஆம் திகதி எனக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கிடைத்தபோது இவர்கள் மூவரும் அந்த விருது விழாவில் கலந்து சிறப்பித்தனர்.  அத்துடன் என்னை பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று உபசரித்தனர்.

தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கிய விருது  நான் அங்கிருந்து புறப்படும் வரையில்  அமரர்கள்  திரு, திருமதி திருச்செல்வம் தம்பதியரின் உருவப்படங்களுக்கு முன்பாகத்தான் அமர்ந்திருந்தது.

தங்கை செல்வநளினியும் அவரது கணவர் ராஜனும் என்னை நயாகரா நீர்வீழ்ச்சி,  டெராண்டோ கடல் ஏரி, நூல் நிலையம் எங்கும்  அழைத்துச்சென்றனர்.

நீர்வீழ்ச்சி பார்க்கச்செல்லும் வழியில் எனது இலக்கிய நண்பர் ராஜாஜி ராஜகோபாலன் வீட்டுக்கும் அழைத்து வந்தனர்.

செல்வராணியும் அவரது  கணவர் தயாவும் மகள் அர்ச்சனாவும் ஒரு


உணவு விடுதிக்கும் தங்கள் வீட்டுக்கும்  அழைத்து உபசரித்தனர். 

கனடாவில் நான் நின்ற நாட்களில் தங்கை செல்வமணி வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

ஒருநாள் தமது மகன் அர்ஜுனா வீட்டிற்கு செல்வமணி தம்பதியர் என்னை அழைத்துச்சென்றனர்.

இவர்கள் தமது பேரக்குழந்தைகளிடத்தில்,  கனடா வந்திருக்கும் நான் ஒரு எழுத்தாளன் என்றும், அவர்களின் பேத்தியாரின் முதல் மாணவன் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நான் அந்தக் குழந்தைளைப் பார்க்கச்சென்றபோது,  செல்வமணி தம்பதியரின் பேத்தி செல்வி கிறேஸும் பேரன் எக்ஸெல்லும் என்னை அணைத்து வரவேற்றனர்.


கிறேஸ் உள்ளே ஓடிச்சென்று எனக்கு ஒரு பரிசுப்பொருளை எடுத்து வந்து கொடுத்தார். திறந்த பார்த்தேன். உள்ளே ஒரு அழகான பேனை இருந்தது. அத்துடனிருந்த வாழ்த்து மடலில்               “ I like your smart writing “ என்று தனது கையால் எழுதியிருந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்லவேண்டும் என்றும் இந்தக்குழந்தை அன்புக்கட்டளை விடுத்தார். அவரையும் அவரது சகோதரன் எக்ஸெல்லையும் வாரி அணைத்துக்கொண்டேன்.

1954 ஆம் ஆண்டு தொடங்கிய உறவு, 70 வருடங்களையும் நெருங்கி


வளரும் காலப்பகுதியில்  மூன்றாவது தலைமுறையைச்சேர்ந்த இந்த குழந்தைச் செல்வங்கள் தந்திருக்கும் இந்த விருதை பொக்கிஷமாக சுமந்துகொண்டு பயணிக்கின்றேன்.










( தொடரும் )

No comments: