இலங்கைச் செய்திகள்

 விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்; சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதி

உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி

ஜப்பான் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் 02 மணிநேரத்தில் மீண்டும் தரையிறக்கம்

மனிதாபிமான பணியில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பிரதிபலிக்கிறது

கட்டுநாயக்கவில் கால்பதிக்கும் சீன விமானம்


விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்; சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதி


வானில் பயணித்த மேலும் 04 பேர் காயம்

புத்தளம்- − கொழும்பு பிரதான வீதியில், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பிரதேசத்தில் நேற்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட நால்வர் காயமடைந்து, சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வான்  நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில், 107ஆம் மைல்கல் பகுதியில் வீதியோரத்திலுள்ள மரங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, வானின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென, சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் கபில மல்லவாராச்சி தெரிவித்தார்.

விபத்து காரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் குணமடைந்து நேற்றுப் பிற்பகல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வான் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 புத்தளம் மாவட்ட குறூப் நிருபர்கள்

நன்றி தினகரன் 





உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி

WB நிறைவேற்றுக்குழு தீர்மானம்

பட்ஜெட் குறைநிரப்புக்கு 500 மில். டொலர், மக்களின் நலன்புரிக்காக 200 மில்.டொலர் ஒதுக்கீடு

 நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொடுக்க உலக வங்கி நேற்று (29) அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்றுக் குழு நேற்று முன்தினம் (28) கூடிய போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரவு -செலவுத்திட்டம் மற்றும் மக்களுக்கான நலன்புரி திட்டத்துக்கான அனுசரணைக்காக இந்த 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

உலக வங்கியால் வழங்கப்படவுள்ள இந்த 700 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு -செலவுத்திட்ட இடைவெளியை நிரப்புவதற்கும் மீதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நலன்புரி திட்டத்துக்காக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்காக பெற்றுக்கொடுத்துள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் ஒத்துழைப்புக்கு பின்னர், சர்வதேச நிதி நிறுவனமொன்று இலங்கைக்கு வழங்கியுள்ள பாரிய கடனுதவியாக இந்த தொகை குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை, இலங்கைக்கு பல கட்டங்களாக ஒத்துழைப்பு வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வறுமை மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள மக்களை பாதுகாப்பதற்குமான வழிமுறைகள் தொடர்பாக உலக வங்கி கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதாக, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

 லோரன்ஸ் செல்வநாயகம்

நன்றி தினகரன் 





ஜப்பான் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் 02 மணிநேரத்தில் மீண்டும் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீடா சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 2 மணி 25 நிமிடங்கள்வரை பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் ஏ330 – 300 எனும் இலக்க விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.   அவ்விமானத்தின் சில்லுத்தொகுதி வெளிப்பகுதியில் தெரிவது கணினி கட்டமைப்பு மூலம் காணப்படாததால், விமானியால் அவ்விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எந்தவித அனர்த்தங்களுமின்றி மீண்டும் கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது.

அவ்விமானத்தில் பயணிகளும் விமான ஊழியர்களுமாக 301 பேர் இருந்தனர்.

இதனையடுத்து, அப்பயணிகளை வேறொரு விமானத்தில் ஜப்பானின் நரீடா விமான நிலையத்துக்கு அனுப்புவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 லோரன்ஸ் செல்வநாயகம்

நன்றி தினகரன் 





மனிதாபிமான பணியில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பிரதிபலிக்கிறது

- ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

மிகவும் கடினமான காலகட்டத்துக்கு பின்னர் புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்துக்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

மக்களை சிரமத்திலிருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பண்டிகை பிரதிபலிக்கின்றதென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தாவது,

"அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக நபி இப்ராஹிம், அவரது மகன் நபி இஸ்மாயில் மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோர் கருதப்படுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் செய்த தியாகங்களுக்கு நன்றியின் வெளிப்பாடாக முழு உலக மக்களாலும் போற்றப்படுகின்றனர்.

அண்மைக்காலங்களில் இலங்கை இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தது, அந்தக் கஷ்டங்களைச் சமாளித்து, நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டுவருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்தன.

நீங்கள் செய்த தியாகத்தை நினைவுகூர்வதற்கும் கடந்த வரலாற்றுகால முக்கியமான தருணத்தை நினைவுபடுத்துவதற்கும் ஹஜ்ஜூப் பண்டிகையை மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன்.

அடுத்த ஹஜ்ஜூப் பண்டிகையின் போது, பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களிலிருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும் பங்கேற்பும் மிகவும் முக்கியமானது.

பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ்ஜூப் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன்.

பெரியவர்களாகிய நாம் அனுபவிக்கும் இன்னல்களை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லாமல், அவர்களை நிலையான மகிழ்ச்சியுடன் கூடிய பூகோள சமூகத்தின் பெருமை மிக்க மக்களாக உயர்த்துவதன் முக்கியத்துவத்தை முதியோர், இளையோரென அனைவருக்கும் இந்த அற்புதமான ஹஜ்ஜூப் பெருநாளில் நான் நினைவூட்டுகிறேன்.

எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள், இலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் உலகளாவிய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமையப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

 நன்றி தினகரன் 




கட்டுநாயக்கவில் கால்பதிக்கும் சீன விமானம்

சீனாவின்  'Air China' (எயார் சைனா) விமான நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜூலை 03ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்க வரை 3 விமான சேவைகளும், கட்டுநாயக்காவில் இருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனாவின் சிச்சுவான் நகரில் இருந்து புறப்படும்  Air China CA 425 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சேவையை வழங்கவுள்ளதுடன் திங்கள், புதன், வெள்ளி  போன்ற  நாட்களில்  இரவு 8.55 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்படும்  Air China CA 426 விமானம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சேவையை வழங்கவுள்ளதுடன் திங்கள், புதன், வெள்ளி போன்ற  நாட்களில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் சிச்சுவான் நகரை சென்றடைய உள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.    நன்றி தினகரன் 


No comments: