ரஷ்ய இராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள்
உக்ரைனிய உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
விண்வெளிச் சுற்றுலா ஆரம்பம்
இந்திய விமானப் படைக்கு என்ஜின் தயாரிக்க ஒப்பந்தம்
ரஷ்ய இராணுவத்திடம் ஆயுதங்களை கையளிக்கிறது வாக்னர் கூலிப்படை
ரஷ்ய இராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள்
நேபாளாத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் படித்து விட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இப் போரில் இறந்தனர்.
அதன் விளைவாக ரஷ்ய இராணுவத்தில் சேர படைவீரர்கள் தேவைப்பட்டனர்.
இந்நிலையில் வெளிநாட்டவரும் ரஷ்ய இராணுவத்தில் வேரும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதிக ஊதியம் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய இராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நன்றி தினகரன்
உக்ரைனிய உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ஒன்பது பேர் உயிரிழப்பு
சனநெரிசல் மிக்க உக்ரைனிய உணவு விடுதி ஒன்றில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து உக்ரைனிய கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிராமடோஸ்க் நகரில் இருக்கும் இந்த உணவு விடுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த உணவு விடுதியில் கடந்த செவ்வாய் இரவு எட்டு மணி அளவில் அனைவரும் உணவு உட்கொண்டிருந்தபோது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“அங்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் இருந்தார்கள். சிறுவர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்று அங்கு நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்த யெவ்கென் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
“நாம் அங்கிருந்து சற்று முன்னரே வெளியேறினோம். ஆனால் நண்பர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் எஸ்–300 ஏவுகணை மூலமே ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஏவுகணை கிராமடோஸ்க் நகரின் விளிம்பில் இருக்கும் கிராமம் ஒன்றில் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
கிராமடோஸ்க் நகர் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் அது ரஷ்யா கைப்பற்றி பகுதிக்கு மிக நெருக்கமாக உள்ளது. நன்றி தினகரன்
விண்வெளிச் சுற்றுலா ஆரம்பம்
விண்வெளிச் சுற்றுலா நிறுவனமான 'விர்ஜின் கேலக்டிக்' தனது முதல் விமான வணிக சேவையை தொடங்கவுள்ளது. இச் சேவையானது இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்விமானத்திற்கு 'கேலக்டிக் 01' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இரண்டாவது வணிக ரீதியான விண்வெளி விமானமான 'கேலக்டிக் 02' ஆகஸ்ட் மாதத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் முதல் பயணம் ஒரு சாதாரண பயணமாக இருக்காது எனவும் இதுவோர் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கேற்கும் பயணமாக இருக்குமெனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
இந்திய விமானப் படைக்கு என்ஜின் தயாரிக்க ஒப்பந்தம்
இந்திய விமானப்படைக்கான யுத்த விமான என்ஜின்களை இந்திய அரச நிறுவனத்துடன் கூட்டாகத் தயாரிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் ஜெனரல் இலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான லோரன்ஸ் கல்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்தே ஜெனரல் இலக்ட்ரிக் நிறுவனம், இந்திய விமானப் படைக்கான யுத்த விமான என்ஜின்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரொநொட்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டாகத் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அறிவித்துள்ளது. நன்றி தினகரன்
ரஷ்ய இராணுவத்திடம் ஆயுதங்களை கையளிக்கிறது வாக்னர் கூலிப்படை
அதன் தலைவர் பெலாரஸ் பறந்தார்
கிளர்ச்சியை கைவிட்ட ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்கனி பிரிகோசின் தனது தனிப்பட்ட விமானத்தில் நேற்று (27) பெலாரஸ் நாட்டை சென்றடைந்ததோடு அந்தப் படை தமது ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளபாடங்களை ரஷ்ய இராணுவத்திடம் கையளிக்கவுள்ளது.
வாக்னர் படை கடந்த வார இறுதியில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நோக்கி முன்னேறிய நிலையில் அந்தக் கிளர்ச்சியை கைவிட தீர்மானித்ததை அடுத்து பதற்றம் தணித்தது. இதன்போது வாக்னர் தலைவர் அண்டை நாடான பெலாரஸுக்கு செல்ல இணங்கினார்.
இதனைத் தொடர்ந்தே அவர் நேற்றுக் காலை பெலாரஸை சென்றடைந்துள்ளார்.
இதில் வாக்னர் படையை ரஷ்ய இராணுவம் கைப்பற்றுவதை தடுக்கவே தாம் மொஸ்கோவை நோக்கி அணிவகுத்ததாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் ரஷ்ய அரசை கவிழ்க்கும் நோக்கம் இருக்கவில்லை என்றும் பிரிகோசின் கடந்த திங்கட்கிழமை (26) குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நாட்டில் கிளர்ச்சி மேற்கொள்ள முயன்ற வாக்னர் குழு தனது அனைத்து உபகரணங்களையும் கையளிப்பதற்கு தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
“பி.எம்.சி வாக்னர் குழுவின் கனரக இராணுவ உபகரணங்களை ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் செயலில் உள்ள பிரிவுகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ரஷ்யாவில் இரத்தம் சிந்துவதை தவிர்க்க உதவிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸூக்கு இடம்பெயரவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதி வழங்கப்படும் என புடின் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் வாக்னர் கூலிப்படை மேற்கொண்ட கிளர்ச்சி நடவடிக்கை தொடர்பில் அந்த குழு மீதான குற்றவியல் வழக்கு கைவிடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்னர் குழு என்று பொதுவாக அழைக்கப்படும் ‘வாக்னர் பி.எம்.சி.' ரஷ்யாவைச் சேர்ந்த தனியார் இராணுவ நிறுவனமாகும். ரஷ்ய சட்டத்தின் கீழ் தனியார் இராணுவ நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லையென்றாலும், ரஷ்ய அரசின் நலன்களுக்காக வாக்னர் குழு போரிட்டு வருவதால் அந்தப் படையினருக்கு ஆயுதங்களையும், பயிற்சியளிப்பதற்கான வசதிகளையும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக வழங்கி வருகிறது.
இதன் காரணமாக, ரஷ்யாவின் மறைமுக துணை இராணுவப் படை எனவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனியார் இராணுவம் எனவும் வாக்னர் படை வர்ணிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாக்னர் குழு, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரிலும் பங்கேற்றுள்ளது.
உக்ரைன் படையினருடன் மிகக் கடுமையாக போரிட்டு அந்த நாட்டின் பாக்முத் நகரை கடந்த மாதம் வாக்னர் படை கைப்பற்றினாலும், சண்டையில் தங்களுக்குப் போதிய ஆயுத உதவிகளை அளிக்கவில்லை என்று யெவ்கனி பிரிகோசின் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதன் பின் ரஷ்ய இராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment