உலகச் செய்திகள்

 உக்ரைன்–ரஷ்யாவின் மோதலுக்கு இடையே மக்கள் சிக்கித் தவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் சரமாரி சூடு: பலஸ்தீனர்கள் மூவர் பலி

 ‘குரங்கம்மை’ நோயின் பெயரை மாற்ற திட்டம்

அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரிட்டன் ஒப்புதல்

தாய்வானை சீர்குலைக்கும் செயலை கைவிட வேண்டும் உக்ரைன்–ரஷ்யாவின் மோதலுக்கு இடையே மக்கள் சிக்கித் தவிப்பு

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரிலிருந்து ஆற்றைத் தாண்டி இன்னொரு நகருக்குச் செல்ல வழிவகுக்கும் பாலத்தை ரஷ்யப் படையினர் வெடிவைத்துத் தகர்த்துள்ளனர்.

அதனால் மக்கள் தப்பிச் செல்வதற்கான வழி முடக்கப்பட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறினர்.

கிழக்கு உக்ரேனில் உள்ள டொன்பாஸ் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உக்ரைனும் ரஷ்யாவும் போராடுகின்றன. அதற்கான மையமாக செவெரோடோனெட்ஸ்க் நகர் உருவெடுத்துள்ளது.

அந்நகரின் பல பகுதிகளில் கடுஞ்சண்டை நடைபெறுகிறது. அங்கு தெருவுக்குத் தெரு சண்டை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

நகரின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன. ஆனால் ஒரு தொழிற்சாலைப் பகுதியும் அஸோட் இரசாயன ஆலையும் உக்ரைனின் வசம் உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்கள் செவெரோடோனெட்ஸ்க் நகரிலிருந்து தப்ப இன்னும் ஒரு பாலம் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்த நகரின் 70 வீதமான பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருப்பதாகவும் தொடர்ந்து உக்கிரமான மோதல் இடம்பெற்று வருவதாகவும் லுஹன்ஸ்க் ஆளுநர் செர்ஹிய் ஹெய்டெய் தெரிவித்துள்ளார்.

“அஸோட் ஆலையில் சுமார் 500 பொதுமக்கள் உள்ளனர். இவர்களில் 40 சிறுவர்கள் உள்ளனர். சில நேரம் இராணுவத்துக்கு சிலரை வெளியேற்ற முடியுமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷெல் குண்டுகளுக்கு மத்தியில் இந்த நகரில் வெளியேற்ற நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது சத்தியமில்லாதிருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.    நன்றி தினகரன் 

 இஸ்ரேலிய இராணுவம் சரமாரி சூடு: பலஸ்தீனர்கள் மூவர் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன போராளிகள் வலுவாக இருக்கும் ஜெனின் நகரில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் 3 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த மூவரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் கடும் போதல் வெடித்திருப்பதோடு இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக வாபா தெரிவித்தது.

அந்த வாகனம் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படப்பிடிப்பாளர் தெரிவித்துள்ளார். அண்மைய மாதங்களில் இஸ்ரேலிய படை இங்கு தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறது.

இரு வெவ்வேறு இடங்களில் ஆயுதங்களைத் தேடி ஜெனினில் தமது தூருப்புகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் இடத்தை அடைந்தபோது படையினர் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இரண்டாவது இடத்துக்குச் செல்லும் வழியில் வீதி ஓரத்தில் இருந்த அடையாளம் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றின் மீது பதிலடி கொடுத்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்ட இரு பலஸ்தீனர்கள் ஜெனின் பகுதியில் இருந்து வந்தவர்களாவர்.

கடந்த மார்ச் பிற்பகுதி தொடக்கம் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து, காரை மோத விடுதல் மற்றும் கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பதினேழு இஸ்ரேலியர்கள் மற்றும் இரு உக்ரைன் நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் இஸ்ரேலிய படையுடன் இடம்பெற்ற மோதல்களில் தாக்குதல்தாரிகள் உட்பட பல டஜன் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 
 ‘குரங்கம்மை’ நோயின் பெயரை மாற்ற திட்டம்

குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் ஒன்றை வைப்பதற்கு உலக சுகாதார அமைப்பு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் நோய்க்கு “பாரபட்சமற்ற மற்றும் களங்கப்படுத்தாத பெயர் ஒன்று அவசியமாக உள்ளது” என்று 30 விஞ்ஞானிகள் கடந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸை ஆபிரிக்கருடையது என்று குறிப்பிடுவது தவறானது மற்றும் பாரபட்சமானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1,600 சம்பவங்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளன.

குரங்கம்மை ஏற்கனவே நிரந்தர நோயாகக் கருதப்படும் நாடுகளில் 72 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள 32 நாடுகளில் யாரும் அந்நோயால் மரணமடையவில்லை.   நன்றி தினகரன் 


அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரிட்டன் ஒப்புதல்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடும் செய்ய அசாஞ்சுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடுகடத்தல் அவரது மனித உரிமையுடன் தொடர்புபடவில்லை என்று பிரிட்டன் நீதிமன்றங்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் முறையாக நடத்தப்படுவார் என்று அமெரிக்கா குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த அலுவலகம் மேலும் தெரிவித்தது.

2010 மற்றும் 2011இல் ஆவணங்களை கசியவிட்டது தொடர்பில் அசாஞ்சை அமெரிக்கா தேடி வருகிறது. 2019 இல் லண்டனில் இருக்கும் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அவர் வெளிற்றப்பட்ட பின் பிரிட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டது தொடக்கம் சிறை அனுபவித்து வருகிறார். ஈக்வடோர் அவரது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்தே தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

‘இது ஊடகச் சுதந்திரம் மற்றும் பிரிட்டன் ஜனநாயகத்தின் இருண்ட நாள்’ என்று இந்த உத்தரவு பற்றி விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

‘இது போராட்டத்தின் முடிவு அல்ல’ என்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் விக்கிலீக்ஸ் இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக குறிப்பிட்டுள்ளது.      நன்றி தினகரன் 


தாய்வானை சீர்குலைக்கும் செயலை கைவிட வேண்டும்

தாய்வானின் ஸ்தீரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்கிரி லா கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கேயிடம் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பென்டகன் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ஒரே சீனக் கொள்கை, தாய்வான் உறவுகள் சட்டம், அமெரிக்க - சீன மூன்று கூட்டறிக்கைகள் மற்றும் ஆறு உத்தரவாதங்கள் என்பவற்றுக்கான அமெரிக்காவின் பங்களிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதோடு தாய்வான் நீரிணையின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவமும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 

No comments: