.
1962ம் வருடம் படத்தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவருக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்தது.ஆண்டின் ஆரம்பத்தில் புரட்சி நடிகர் எம் ஜி ராமசந்திரன் நடிப்பில் தயைக் காத்த தனயன் படத்தை தயாரித்து வெற்றி கண்டவர், சரியாக நான்கு மாத இடைவெளியில் அதே எம் ஜி ஆரின் நடிப்பில் குடும்பத்தலைவன் படத்தை தயாரித்து வெளியிட்டு அந்தப் படமும் ஓடி வெற்றி கண்டது.இதனால் தேவருக்கு அந்த ஆண்டு பண மழையாக கொட்டியது!
குடும்பத்தலைவனில் அதே எம் ஜீ ஆர்,சரோஜாதேவி ஜோடி இணைந்தது .வழக்கம் போல எம் ஆர் ராதா,அசோகன்,இருவரும் இடம் பெற்றார்கள்.நகைச்சுவைக்கு வி கே ராமசாமி.வழக்கமாக தாயார் வேடத்தில் கண்ணாம்பா நடிப்பார்.இம் முறை அவருக்கு பதில் எம் வி ராஜம்மா அம்மா வேடத்தில் தோன்றினார்.தேவர் படம் என்றால் வில்லனாக அசோகன் நம்பியார் என்று யாராவது நடிப்பார்கள்.ஆனால் இந்தப் படத்தில் துணை நடிகரான ஜெமினி பாலு வில்லனாக நடித்தார்.அவரின் பார்ட்னராக தேவர் வந்தார்.வில்லியாக வருபவர் லக்ஷ்மிராஜ்யம்.
குடும்பத்தலைவனான வேலாயுதம் பிள்ளை வசதியானவர்.ஆனால் சீட்டாட்டத்தில் மோகம் கொண்டவர்.தனது நிலன் புலன்களை பராமரிக்கும் பொறுப்பை மூத்த மகன் சோமுவிடம் ஒப்படைத்து விட்டு சீட்டாட்டத்தில் காலம் கடத்துகிறார்.இளைய மகன் வாசுவோ விளையாட்டு வீரன்.சாதனை செய்வதில் ஆர்வமுள்ளவன்.தன்னுடைய உயிரை காப்பாற்றிய பொன்னுசாமியின் மகள் சீதாவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் வேலாயுதம்.வாசுவை சந்திக்கும் சீதா அவன் மீது காதல் கொள்கிறாள்.எஸ்டேட்டில் இருந்து வீடு வரும் சோமுவுக்கும் சீதா மேல் காதல் பிறக்கிறது.
இப்படி அமைந்த படத்தின் கதை,வசனம் இரண்டையும் ஆரூர்தாஸ் எழுதினார்.வசனத்தில் செலுத்திய கவனத்தை கதையில் அவர் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.குறுகிய காலத்தில் தேவரின் அவசரத்திற்கு எழுதிய கதை!ஆனாலும் வசனங்கள் மூலம் அதனை சமாளித்து விட்டார் ஆரூர்தாஸ்.
படத்தில் நல்லவனான அப்பாவியான அண்ணன் வேடம் அசோகனுக்கு.உணர்ச்சிகரமாக சற்று மிகையாக நடித்திருந்தார் அவர்.எம் ஆர் ராதா,வி கே ராமசாமி காம்பினேஷன் அருமை.படத்தை கலகப்பாக்குவது அவர்கள்தான்.எம் ஜீ ஆர் சரோஜாதேவி காதல் காட்சிகள் ஓகே என்றால் சேற்றுக்குள் கட்டிப்புரண்டு தேவருடன் அவர் போடும் சண்டை டபுள் ஓகே!
திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் தன் திறமையை எல்லாப் பாட்டிலும் காட்டி இருந்தார் எனலாம்.கவிஞர் கண்ணதாசன் கவி வரிகள் அதற்கு வலு சேர்த்தன.மாறதைய்யா மாறாது மனமும் குணமும் மாறாது,எதோ எதோ ஒரு மயக்கம்,திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்,அன்றொரு நாள் அவனுடைய ஊரைக் கேட்டேன்,மழை பொழிந்து கொண்டே இருக்கும்,கட்டான கட்டழகு கண்ணா உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா,ஆகிய பாடல்கள் ரசிகர்களை இழுத்துப் போட்டு படத்தின் வெற்றிக்கும் உதவின.இவ்வளவுக்கும் டி எம் சௌந்தரராஜன்,பி சுசிலா இருவர் மாத்திரமுமே எல்லாப் பாடல்களையும் பாடி இருந்தனர்.சி வி மூர்த்தி படத்தை ஒளிப்பதிவு செய்தார்.
அண்ணன் தயாரித்தப் படம் என்றால் தம்பிதான் படத்தை இயக்குவார்.இந்தப் படத்தையும் எம் ஏ திருமுகம் இயக்கி இருந்தார்.நிறைய பொருட்செலவு இன்றி குறுகிய காலத்தில் தயாரிக்கப் பட்டு வெற்றி பெற்றான் குடும்பத்தலைவன்.
1962ம் வருடம் வெளிவந்து 60 ஆண்டுகளை பூர்த்தி செய்த படங்களைப் பற்றிய ஸ்வீட் சிக்ஸ்டி தொடர் இத்தோடு நிறைவுறுகிறது!
No comments:
Post a Comment