இயல்புதான் மனிதர்களின் அடிப்படை அழகு. காலம், நட்பு,
சுற்றுச்சூழல், அனுபவம் என்பன ஒரு மனிதரின் அடிப்படை இயல்புகளை மாற்றினாலும், மாற்றவே முடியாத குறிப்பிட்ட சில இயல்புகளையும் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.
அதனைப் புரிந்துகொண்டால் பொதுவாழ்வில் வரும் சிக்கல்கள், பிரச்சினைகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். ஏன் இவ்வாறு எழுதுகின்றேன் என்பதை இந்த அங்கத்தை
படிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒரு நாள் (அன்று சனிக்கிழமை ) இரவு எட்டு மணியளவில்
சோமா சோமசுந்தரம் அண்ணர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அக்காலப்பகுதியில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின்
ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழும்,
புதிய நிருவாகிகள் தெரிவிற்கான பரிந்துரை படிவங்களும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு
தபாலில் வந்திருந்தன.
மக்கள் குரல் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த சிலரை சங்கத்தின் புதிய
நிருவாகக்குழுவில் சேர்ப்பதற்கு தயாரானோம்.
துணைத்தலைவர் பதவிக்கு தருமகுலராஜா, இதழ் ஆசிரியர் பதவிக்கு இராஜரட்ணம் சிவநாதன், துணைப் பொருளாளர் பதவிக்கு எஸ். பாலச்சந்திரன்,
செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கொர்னேலியஸ்,
பல் மருத்துவர் ரவீந்திரராஜா.
என்னையும் விண்ணப்பிக்கச்சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
எனக்கு அப்போது இங்கே வதிவிட உரிமை கிடைக்கவில்லை. ஏனைய ஐவரும் வதிவிட உரிமையும் குடியுரிமையும்
பெற்றவர்கள்.
நண்பர் திவ்வியநாதன், அந்தப்போட்டியில் பங்கேற்கவில்லை.
சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன் தலைவர் பதவிக்கு தனது
விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். அதனை முன்மொழிந்து வழிமொழிந்தவர்கள்: சட்டத்தரணி விமலேஸ்வரன்
( இவர் சங்கத்தின் செயலாளராகவிருந்த Doncaster மகேஸ்வரனின்
தம்பி ) , கணகேஸ்வரன் ( இவர் லண்டனில் வாகனவிபத்தில் கொல்லப்பட்ட எழுத்தாளர் க. நவசோதியின்
தம்பி )
ரவீந்திரன் அண்ணரின் விண்ணப்பத்திற்கும் எமது மக்கள்
குரலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
இந்நிலையில் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் அண்ணர்,
“எமது மக்கள் குரல் நிருவாகிகளை சந்திக்கவேண்டும். அதற்கு எனது வீட்டில் ஏற்பாடு செய்ய முடியுமா..? “ எனக்கேட்டார்.
“ எதற்கும் நண்பர்கள் சிவநாதன், தருமகுலராஜா ஆகியோருடன் இதுபற்றி பேசுங்கள். “ என்றேன். அதன்பிரகாரம் அவர்களுடனும் சோமா அண்ணர் பேசினார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு எனது குடியிருப்பில் நால்வரும் சந்திப்பது என முடிவாகியது.
அவர் சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் தொடர்பாகத்தான் எம்முடன் பேச வருகிறார் என்று நாங்கள் மூவரும் நினைத்திருந்தோம்.
ஆனால், அவர் அந்த சந்திப்பினை ஏற்பாடு செய்து வந்த
நோக்கமே முற்றிலும் வேறானது.
மக்கள் குரலில் ஒரு குட்டிக்கதை வெளிவந்திருந்தது.
நாம் வெளியிட்டது கையெழுத்து இதழ். அதில் சில ஆக்கங்களை நானும் சிவநாதனும் எழுதியிருக்கின்றோம். ஆனால்,
அந்தக்கதையை எழுதியவரின் கையெழுத்து அழகாக இருந்தமையால், அதனை அவ்வாறே வெளியிடுவது
என முடிவாகி வெளிவந்தது.
அதன் உள்ளடக்கம் ஒரு சில உண்மைச்சம்பவங்களை பின்னணியாகக்
கொண்டிருந்தது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
தொடர்ந்து கதைகள் எழுதிவரும் நான் ,
அந்தக் குட்டிக்கதையின் எழுத்து வடிவம்
சிறப்பாக அமையவில்லை என்றேன். படைப்பூக்கம் அற்ற நடைச்சித்திரமாகவும் அமையாத ஒரு பதிவு
அது.
எனினும் வெளிவந்தது.
அதனை யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவர் பிரதி எடுத்து,
மெல்பனில் ஒரு பிரபல தமிழ் மருத்துவர் இல்லத்திற்கும் அவரது கிளினிக் முகவரிக்கும் தபாலில் அனுப்பியிருக்கிறார். மேலும் பல வீடுகளுக்கும் தபாலில் சென்றிருக்கிறது.
இதனைப் படித்த மருத்துவரின் மனைவியான அந்த “அம்மணி“ வெகுண்டெழுந்து சோமா அண்ணரிடம் முறையிட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் மெல்பனிலிருந்து ஊடகங்களிலும்
வானொலிகளிலும் கதைகள் எழுதிக்கொண்டிருந்தவன் நான் என்பதனால், குறிப்பிட்ட குட்டிக்கதையையும்
மக்கள் குரலில் நான்தான் எழுதியிருக்கவேண்டும் என்ற கற்பனையில் அந்த அம்மணி என் மீது
புகார் எழுப்பி குற்றம் சுமத்தியிருக்கிறார்.
தான் சென்று விசாரித்துவருகின்றேன் எனப்புறப்பட்டவர்தான்
சோமா அண்ணர். அந்த பஞ்சாயத்தின்போது சோமா அண்ணர், எனது குடியிருப்பில் சிகரட் புகைக்க
அனுமதியுண்டா..? என நாகரீகமாகக் கேட்டார். நான் குடியிருப்பின் ஜன்னல்களை திறந்து,
அவருக்கு அருகில் ஒரு ஆஷ்ட்ரேயையும் வைத்து தேநீர், பிஸ்கட் வழங்கி உபசரித்தேன்.
சோமா அண்ணர் இயல்பில் கோபம் வரும் மனிதராக இருந்தாலும், கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணமும் இருக்கும் என்பதுபோன்று நல்லியல்புகள் பல கொண்டிருந்தவர். பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவியவர். யார் அவர் பற்றி என்ன சொன்னாலும், நானே அவருடன் கருத்து ரீதியில் மோதியிருந்தாலும்கூட, அவரை எனக்கு நன்கு பிடிக்கும். எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரியவர்.
அன்றைய சந்திப்பில் சோமா அண்ணர் அதிகம் சிகரட் புகைத்தார். பின்னாளில் அவர் அந்தப்பழக்கத்தை முற்றாக நிறுத்தினார்.
குறிப்பிட்ட குட்டிக்கதையை நான் எழுதவில்லை என்று
இரண்டு நண்பர்களும் சொன்னார்கள். நான் எனது
கையெழுத்தையும் மல்லிகை, வீரகேசரியில் அக்காலப்பகுதியில் வெளியான எனது சிறுகதைகளையும்
அவருக்கு காண்பித்தேன்.
அதனை எழுதியவர் யார்…? என்ற பெயரை மாத்திரம் நண்பர்கள் சொல்லவில்லை. எழுதியவர்
மக்கள் குரல் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதை உறுதிபடச்சொன்னோம்.
எதற்கும் மருத்துவரின் வீட்டுக்கு நேரில் வந்து சொல்லுமாறு சோமா
அண்ணர் கேட்டுக்கொண்டார். அதன் மூலம் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றார்.
மறுநாள் திங்கட் கிழமை இரவு மருத்துவர் வீட்டுக்கு செல்வது என முடிவாகியது.
எனக்கு இரவு நேர வேலை என்பதனால் நான் செல்லவில்லை.
நண்பர்கள் தருமகுலராஜாவும், சிவநாதனும் சென்று விளக்கமளித்தனர்.
மக்கள் குரலின் அடுத்த இதழில், குறிப்பிட்ட குட்டிக்கதை
முற்றிலும் கற்பனை எனவும், எவரது மனதையும் அது பாதித்திருந்தால் ஆசிரியபீடம் அதற்காக
வருந்துவதாகவும் ஒரு சிறிய குறிப்பினை வெளியிட்டோம்.
எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதி வெளியீட்டு அரங்கில் குறிப்பிட்ட மருத்துவரையும்
சோமா அண்ணரையும் நண்பர் தருமகுலராஜாவையும் பேசவைத்தேன். சிவநாதனின் பெற்றோர் இராஜரட்ணம் தம்பதியர் மங்கல
விளக்கேற்றி அந்த விழாவை தொடக்கி வைத்தனர்.
அதுவே மெல்பனில் நடந்த முதலாவது தமிழ் நூல் வெளியீட்டு அரங்கு. எழுத்தாளர்கள்
எஸ். பொ, மற்றும் அருண். விஜயராணி ஆகியோர் மெல்பனில் மேடையேறிய முதலாவது இலக்கிய அரங்கு
!
இலங்கை தமிழ்ச்சங்கத் தேர்தல்
மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் விக்ரோரியா இலங்கை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டமும் நிருவாகிகள் தெரிவுக்கான தேர்தலும் நடந்தன. மெல்பனுக்கு அகதிகளாக வந்திருந்த பலர் சங்கத்தின் அங்கத்துவம் பெற்று கலந்துகொண்டனர். போட்டி பலமாக இருந்தது.
தலைவர் பதவிக்கு சட்டத்தரணி ரவீந்திரனும் மருத்துவர்
இராஜன் இராசையாவும் போட்டியிட்டனர்.
இதழ் ஆசிரியர் பதவிக்கு நண்பர்கள் ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தியும் இராஜரட்ணம் சிவநாதனும் போட்டியிட்டனர்.
வழக்கமான சங்க ஆண்டுப்பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக
நிறைவடைந்த பின்னர் தேர்தல் பற்றி தலைவர் சோமா அண்ணர் அறிவித்தார்.
அப்போது சபையில் இருந்து எழுந்த நான், “ தலைவரிடம் ஒரு வேண்டுகோள்… “ என்றேன். அவர் என்ன..?
என்று கேட்டார்.
“ இந்தத்
தேர்தலில் பலரும் போட்டியிடுகிறார்கள். இவர்களில் சிலர்தான் வெற்றி பெறுவார்கள். அவ்வாறு
வெற்றியடைந்தால், வெற்றி பெற்றவர்கள், சங்கத்திற்கும் எமது தமிழ் சமூகத்திற்கும் எத்தகைய
சேவையை வழங்குவார்கள் என்பதை ஒவ்வொரு வேட்பாளரும்
மேடையில் தோன்றி, தமது விளக்கத்தை சுருக்கமாகவேனும்
கூற வேண்டும் “ என்றேன்.
எனது கோரிக்கையை சபையிலிருந்த சிலர் ஆதரித்தனர்.
ஆனால், தலைவர் சோமா அண்ணர் அதற்கு அனுமதிக்கவில்லை.
நான் அவ்வாறு ஒரு வேண்டுகோளை முன்வைப்பேன் என அவர்
எதிர்பார்த்திருக்கவில்லை.
சோமா அண்ணர் மறுக்கவும், சபையில் சலசலப்பு தோன்றியது. பேராசிரியர் எலியேசரும் தில்லை ஜெயக்குமாரும் மௌனமாக
வேடிக்கை பார்த்தனர்.
அந்தச்சலசலப்பினால், கூட்டம் குழம்பிவிடலாகாது என்பதனால், எனது வேண்டுகோளை மீளப்பெற்றேன்.
வாக்குப்பதிவின் பின்னர், வாக்கு எண்ணிக்கை பணியில்
ஒருவராக என்னையும் இணைத்துக்கொள்ளுமாறு சோமா
அண்ணரே சொன்னார்.
அந்தத் தேர்தலில் மருத்துவர் இராஜன் இராசையா தலைவராக
தெரிவானார். அந்தப் பதவிக்கு போட்டியிட்ட ரவீந்திரன்
அண்ணர், தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துப்பேசும்போது, எந்தவொரு பொதுப்பணிகளிலும் மாற்றுக்கருத்துக்களை
முன்வைப்பது ஜனநாயக மரபு என்று குறிப்பிட்டார்.
அக்கூட்டம் முடிந்து சில வாரங்களில் சோமா அண்ணருக்கு
மாரடைப்பு வந்தது. அவர் சிகிச்சை முடிந்து
வந்தபின்னர் சந்தித்தேன். மலேசியத் தமிழ் அறிஞர்
இர. ந. வீரப்பன் அவர்கள் மெல்பன் வந்த சமயம் சோமா
அண்ணர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதும்
அங்கே சென்றேன். எனது சமாந்தரங்கள் நூல் வெளியீட்டு
அரங்கில் சோமா அண்ணரும் உரையாற்றவேண்டும் என்று நேரில் சென்று அழைத்தேன். துணைவியார் ரஞ்சினி அவர்களுடன் வருகை தந்தார்.
அதன்பின்னர் பல மேடைகளில் அவருடன் பேசியிருக்கின்றேன். அவருக்கு மிகவும் பிடித்தமான காவியம் கம்பராமாயணம். இலக்கிய மேடைகளில் கம்பனை அழைத்துவிடுவார். இறுதியாக
அமரர் வித்துவான் வேந்தனாரின் நூல் மற்றும் பாடல் இறுவட்டு வெளியீட்டில் சோமா
அண்ணருடன் உரையாற்றினேன்.
“ இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும்
உங்களது அரசியல் பொது வாழ்க்கை அனுபவங்களை
எழுதுங்கள் அண்ணா “ என்று அவரிடம் பலதடவைகள்
சொல்லியிருந்தேன்.
ஆனால், அவர் எழுதாமலேயே தனது 68 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டு விடைபெற்றுவிட்டார். அவரது இறுதி நிகழ்வில் கலந்துவிட்டு,
அவர் பற்றிய அஞ்சலிக்குறிப்பு ஆக்கத்தை எழுதினேன்.
அவர் மிகவும் நெருக்கமாக இருந்த இலங்கை தமிழ்ச்சங்கத்திற்கு இதுவரையில் பல தலைவர்கள்
வந்துவிட்டனர். ஆனால், அனைவரும் ஆண்கள்தான்.
இதுவரையில் பெண்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை இச்சங்கம் வழங்கவில்லை. ஏன்…..? என்பதும் புரியவில்லை. இச்சங்கம் இதுவரையில் சில பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. விக்ரோரியாவில் இது மூத்த தமிழ்ச்சங்கம். பொன்விழாவை நெருங்கும் இச்சங்கத்தின் தலைமைத்துவத்திற்கு
பெண்கள் எப்போது வருவார்கள்…?
எமது மக்கள் குரல், மற்றும் ஒரு ஏட்டையும் வெளியிட்டது. அதன் பெயர் செய்திச்சுடர். இலங்கை – இந்திய பத்திரிகைகளில் வெளியான முக்கிய
அரசியல் செய்திகளின் நறுக்குகளை A 4 தாளில் ஒட்டி,
அதனையும் வெளியிட்டு வந்தோம்.
மக்கள் குரலின் இறுதிப்பக்கத்தில் “ கடைசிப்பக்க கண்ணாடி “ என்ற பகுதியை ஆரம்பித்திருந்தோம். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காண்பிக்கவும்,
அவற்றை கண்டித்து இடித்துரைப்பதற்காகவும் இரத்தினச்சுருக்கமாக அந்த கடைசிப்பக்க கண்ணாடி
எழுதப்பட்டது.
இலங்கைப் பிரதமராகவிருந்த ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சராகவிருந்த
லலித் அத்துலத் முதலியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மெல்பனுக்கு வந்திருந்தனர்
இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் அவர்களை எதிர்த்து அந்த மண்டபங்களின் முன்பாக சுலோக
அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதில் பிரதமரின் சாதியையும் சிறுவயதில்
அவர் செய்த தொழிலையும் ஏளனம் செய்தும் எம்மவர்கள் கத்தினர். லலித் அத்துலத் முதலி ஒரு குற்றச் செயலுக்காக சிறையில்
இருந்தவர். அது அசிட் சம்பந்தப்பட்டது. அதனால் அந்த மூன்று எழுத்தையும் அவரது பெயருடன் இணைத்து அவரை ஏளனம் செய்தனர்.
வெறுப்புணர்வு என்னவெல்லாம் செய்யும் பாருங்கள். வரம்பு மீறிய வார்த்தைகளை எம்மவர்கள்
கொட்டினார்கள்.
அதனைக்கண்டித்து மக்கள் குரல் கடைசிப்பக்க கண்ணாடியில் நானே எழுதினேன்.
ருஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன். அமெரிக்க
ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு விறகு வெட்டியின் மகன். கர்மவீரர் காமராஜர் செக்கிழுத்த குடும்பத்திலிருந்து
வந்தவர். இவர்கள் எல்லாம் தலைவர்களாக வந்திருக்கிறார்கள்.
ஒருவருடைய அரசியல் கொள்கையை விமர்சிப்பதை விடுத்து தனிப்பட்ட முறையில் அவர்களது
குடும்ப பின்னணி பற்றியும் தொழில் பற்றியும் ஏளனம் செய்வது பண்பல்ல என்ற தொனியில் அந்தக்குறிப்பு
எழுதப்பட்டது.
பின்னாளில் ரணசிங்க பிரேமதாசவின் விருந்தினர்களாக
கொழும்பு கலதாரி மெரிடினில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் அடேல்
பாலசிங்கம் மற்றும் யோகி ஆகியோரும் தங்கியிருந்து பேசினார்கள்.
இத்தகைய முரண்நகையான காட்சிகளையும் கடப்பதுதான் எமது புகலிட வாழ்க்கை !
மக்கள் குரல் உருவாக்கிய தாக்கத்தினால், அதற்கு மாற்றாக விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்
மாணவர் அமைப்பு உணர்வு என்ற இதழை வெளியிட்டது. மொத்தம் மூன்று இதழ்கள்தான் வெளியானது.
காலப்போக்கில் மக்கள் குரல், செய்திச்சுடர்,
உணர்வு என்பனவும் நின்றுவிட்டன.
1989 ஆம் ஆண்டு இறுதியில் சட்டத்தரணி ரவீந்திரன் தலைமையில் அவுஸ்திரேலியத்
தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினை உருவாக்கினோம். இதன் மாத இதழாக அவுஸ்திரேலியா முரசு
வெளியானது. அருண். விஜயராணி ஆசிரியரானார்.
நண்பர் விமல். அரவிந்தன் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மரபு என்ற மாத
இதழை வெளியிடத் தொடங்கினார். தொடர்ந்து யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு இதழும் வெளியானது.
பின்னர் தமிழ் உலகம், உதயம், ஈழமுரசு என்பனவும் வெளிவந்தன.
சில இதழ்களில் எழுதியிருக்கின்றேன்.
2000 ஆம் ஆண்டு வரையில் அவுஸ்திரேலியாவில்
வெளியான தமிழ் இதழ்கள் பற்றி விரிவான நீண்ட கட்டுரையை எனது இலக்கிய மடல் நூலில்
எழுதியிருக்கிறேன். மதுரை உலகத் தமிழ்ச்சங்கம்
மற்றும், திருச்சி பிஷப் ஹீபர்
கல்லூரி ஆகியன மாணவர்களுக்காக
மெய்நிகரில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்குகளில்
இந்த தமிழ் இதழ்கள் பற்றி பேசியிருக்கின்றேன்.
https://atlaswriters.wordpress.com/
இந்த இணையத்தளத்தில் குறிப்பிட்ட இதழ்கள்
பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
( தொடரும் )
No comments:
Post a Comment