இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்ட சீன ஜனாதிபதி
தமிழகத்தில் மேலும் ஏழு பேர் தஞ்சம்
எரிபொருளை முறையாக விநியோகிக்க ஏற்பாடு செய்க
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 50,000 மெ. தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்ட சீன ஜனாதிபதி
ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
சீனா இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் எனவும் ஜி குறிப்பிட்டார் என தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளிற்கான (ஜூலை 20) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர் இறப்பர், அரிசி உடன்படிக்கை தன்னிறைவு, ஐக்கியம், பரஸ்பர உதவி ஆகியவற்றினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில் இறப்பர் அரிசி உடன்படிக்கை, தன்னிறைவு, ஐக்கியம், பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வினை வலியுறுத்தினார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
தமிழகத்தில் மேலும் ஏழு பேர் தஞ்சம்
தனுஷ்கோடியில் தமிழக பொலிஸாரால் மீட்பு
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த 7 பேரும் திருகோணமலை, மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்திய கரையோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுள்ளனர்.
கோப்பாய் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
எரிபொருளை முறையாக விநியோகிக்க ஏற்பாடு செய்க
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டா பணிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் நேற்று (17) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வழங்குனர்களுடனான நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போதுள்ள எரிவாயு கையிருப்புக்களை முறையாக விநியோகிப்பதற்கும் போதுமான எரிவாயு கொள்ளளவை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நன்றி தினகரன்
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ்
இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் 14 பேர் பலியானதாக பதிவு
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்சா நோய் வேகமாக பரவி வருவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது வரையான காலம் வரை இன்புளுவன்சா நோய் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 11 நோயாளர்களும், மே மாதத்தில் 6 நோயாளர்களும், ஜுன் மாதத்தில் 103 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த நோய் தாக்கத்தினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 75 பெண்களும், 33 ஆண்களும், 12 சிறார்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த இன்புளுவன்சா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
இது இன்புளுவன்சா ஏ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
இந்த நோய் தாக்கத்திற்கு அதிகளவில் வயோதிபர்கள் மற்றும் கர்ப்பணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். காய்ச்சல், இருமல், தடிமல் போன்ற நோய் அறிகுறிகள் இந்த வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
பலாங்கொடை தினகரன் நிருபர் - நன்றி தினகரன்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 50,000 மெ. தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காகவும், அரிசி விலை அசாதாரணமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திய கடன் தொடர்பான கலந்துரையாடலில் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment