மூத்த முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி நினைவுகள் அஞ்சலிக் குறிப்புக்குள் வரும் இதர அஞ்சலிகள் ! முருகபூபதி


தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி.

இம்மாதம் 13 ஆம் திகதி அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது, அவர் குறித்த நினைவுகள் மனதில் எழுந்தன.  இறுதியாக 2013 ஆம் ஆண்டு அவரை அவரது ஊரில்தான் சந்தித்தேன்.  அதற்கு முன்னரும் அங்கு சென்று திரும்பி அவர்பற்றி எழுதியிருக்கின்றேன்.

அவர் வாழும்போதே அவர் பற்றி எழுதி, அதனையும் அவர்


படித்திருந்தார் என்ற மனநிறைவுடன்தான் இந்த அஞ்சலிக்குறிப்பிற்குள் வருகின்றேன்.

ஒருவர் மறைந்தவுடன் எழுதுவதற்கும் , உயிருடன் இருக்கும்போது எழுதுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

நமக்கல்லில் அவரைத்தேடிச்செல்லும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவரது அந்த செல்லம்மாள் இல்லத்தின் வாசலில் ஒரு புதிய அனுபவத்தை எதிர்கொள்வார்கள்.

அவரைப் பார்ப்பதற்காக சொந்த வாகனத்தில் செல்லும் எவருக்கும் கிட்டாத அனுபவம் அது.   நான் முதல் தடவை நாமக்கல் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கே நின்ற ஒரு ஓட்டோ சாரதியிடம், அவரது பெயரைச்சொன்னதும்,  “ ஏறுங்க சார்…. “  என்று மாத்திரம்தான் சொன்னார்.

அந்த இல்லத்தை நெருங்கும்போது, அந்த ஓட்டோவின் ஒலி கேட்டு விரைந்து வாசலுக்கு வந்தார் சின்னப்ப பாரதி.  ஓட்டோ சாரதிக்கு நான் பணம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொடுத்து அனுப்பிவிட்டார்.

மற்றும் ஒரு தடவை யுகமாயினி  ஆசிரியர் சித்தனுடன் நான் சென்றபோதும் இதுதான் நடந்தது.

இறுதியாக கரூரில் வசிக்கும் எனது உறவினரான ஆசிரியர் பொற்செல்வனுடன்  அவரது காரில் சென்றிருந்தேன். அதனால், அந்தக் காட்சி இடம்பெறவில்லை.

தன்னைத்தேடி ஓட்டோவில் வரும் எவருக்கும் சின்னப்ப பாரதியே சாரதிக்குரிய பணத்தை கொடுத்துவிடுவார்.  அங்கு பேரம் பேசுதல் நடக்காது.

அவ்வாறு சாதாரண ஓட்டோ சாரதிகளுடனும் தோழமையை பேணியவர்தான் சின்னப்ப பாரதி.

இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில்,  அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் குரலை ஒலித்தவாறு வந்து கலந்துகொண்டவர்தான் சின்னப்ப பாரதி.


ஈழத்து இலக்கிய உலக நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானவர்.

அவரை அவரது ஊரிலேயே சந்திப்பதற்காக சென்ற முதல் பயணத்தின்போது, இலங்கையிலிருந்து புறப்படும் தறுவாயில் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
அந்த இல்லம் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. அருகே அழகிய குன்று. சில கணங்கள் அந்த இல்லத்தின் சுற்றுப்புறத்தை ரசித்தேன். ஏற்கனவே பல இலக்கியவாதிகளதும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கவாதிகளினதும் கால் பதிந்த இல்லம்.
சின்னப்பபாரதியின் பிரத்தியேக அறை சிறிய நூலகமாகவே காட்சி தரும். அந்த இல்லத்தின் பின்புறம் சோலையாக காய், கனிகளுடனும் உயிர்ச்சத்துகள் நிரம்பிய கீரை வகைகள் பயிரிடப்பட்ட தோட்டமாகவும் காட்சியளிக்கிறது.
பல மணிநேரங்கள் சின்னப்ப பாரதியுடன் உரையாடியிருக்கிறேன்.  அத்துடன் அந்த இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து அவரது குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பிலும் திழைத்திருக்கின்றேன்.

 அவரது வாழ்வும் பணிகளும் இடதுசாரி இயக்கத்துடனும் முற்போக்கு

இலக்கிய முகாமுடனும் பின்னிப் பிணைந்திருந்தன.
தமிழில் அவரால் படைக்கப்பட்ட பல படைப்புகள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் மட்டுமன்றி ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன. தமிழகத்தவர் மட்டுமன்றி இலங்கை மற்றும் புகலிட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த விருதுகளையும் பணப்பரிசில்களையும் பெற்றிருக்கின்றனர். இந்தத் தகவல்கள் சின்னப்ப பாரதியைப்பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு பழையதுதான்.

சின்னப்ப பாரதியின் “பவளாயி” நாவலை உஸ்பெக்கிஸ்தான் மொழிக்கு மொழிபெயர்த்துள்ள லோலா மக்தூபா என்ற பெண்மணி உஸ்பெக்கிஸ்தானில் அமைந்துள்ள தாஸ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்ரிரியூட் ஒஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.


அவரும் நாமக்கல்லுக்கு வந்துள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றுள்ளார்.
சின்னப்ப பாரதியின் பவளாயி நாவலை உஸ்பெக் மொழிக்குத்தந்துள்ள அவர், தான் மேலும் தமிழைக் கற்றுக்கொண்டு, உஸ்பெக் இலக்கியங்களை தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களை உஸ்பெக் மொழிக்கும் பெயர்ப்பதுதான் தனது இலக்கியப்பயணம் என்று தினமணிக்கதிருக்கு வழங்கியுள்ள நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

சின்னப்ப பாரதியின் சர்க்கரை நாவல் இலங்கையில் சிங்கள மொழியில் அறிமுகமானது.  இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளிடத்தில் பேரன்பும் அபிமானமும் கொண்டிருந்த  அவர், உபாலி லீலாரத்தின முதலான சிங்கள படைப்பாளிகளிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்தியவர்.

உபாலி லீலாரத்தினவும் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார்.

சின்னப்ப பாரதி, தனது இளமைப்பருவத்து


பாடசாலைக்காலத்திலிருந்து வரித்துக்கொண்ட கொள்கையிலிருந்தும் வழுவாதிருந்தவர்.

எந்தச்சூழ்நிலையிலும் எப்படிப்பட்டவர்களிடத்தும் தான் காணும் தவறுகளை எடுத்துரைக்கத்தவறாத இயல்பும் அதேவேளை தனது தவறுகளை எவரேனும் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்  அவரிடம் இருந்தது. அதுவே அவரது வழுவாத கொள்கை.

“படைப்பாளி என்பவன் தனது படைப்பிற்கும் மேம்பட்டவனாக விளங்கவேண்டும்” என்ற இலக்கியமேதை மக்சிம் கோர்க்கியின் சிந்தனையை உள்வாங்கியவாறு இலக்கிய மற்றும் தான் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்திலும் பயணித்துக்கொண்டிருந்தவர்.

1935 இல் சாலைவசதியும் மின்சாரமும் இல்லாத,  ஆனால் இயற்கை எழில்கொஞ்சும் பொன்னரிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர், தனது கிராமம் பற்றி தனது  “ என் பணியும் போராட்டமும்” என்ற நூலில் இப்படி விவரிக்கின்றார்:-


“எங்கு பார்த்தாலும் வேம்பு, வாதநாரை, ஊஞ்சை, கறுவேல், பனை, நொச்சி, பூவரசு, கொடுக்காப்புளி, மின்னல், அரளி…இப்படியான மரங்கள் நீர்ப்பாசனத் தோட்டத்துக்கரைகளிலும் வெள்ளவாரிக்கரைகளிலும் புஞ்சைக்காடுகளிலும் விரிந்து பறந்து பருவங்களுக்கேற்ப இயற்கை மணத்தை பரப்பிக்கொண்டிருக்கும்.”

இவரைப்போன்று இயற்கையை இப்படி நேசித்த பல படைப்பாளிகளை நாம் பார்த்திருக்கின்றோம்.
கலைஞர் கருணாநிதிதான் செம்மொழி அந்தஸ்துக்கு பாடுபட்டவர் என்றுதான் அந்த மாநாடு கோவையில் நடந்தபோது பலரும் பேசிக்கொண்டார்கள்.

ஆனால்,  பலவருடங்களுக்கு முன்பே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென்று கோரி டில்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்திருக்கிறது. அந்தத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தவர் சின்னப்பபாரதி.

அந்தப்பயணத்தின்போது உடன்வந்த இலக்கியவாதிகள், இயக்கத்தோழர்களின் வேண்டுகோளை ஏற்று பின்னாளில் தமது சுயவரலாற்றை எழுதியிருக்கிறார்.

இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தந்தை. சற்று வசதியோடு வாழ்ந்தாலும் எளிமையை கடைப்பிடித்தவர்.

அவரது நூலக அறைச்சுவரில் காட்சி அளித்த அவரது மருமகனின் படம்  அதிர்வுகலந்த செய்திகளை சொன்னது.

மூத்த மகளின் கணவர் அவர். பெயர் இளங்கோ. ஒரு விஞ்ஞானி

. பாரத ரத்னா அப்துல்கலாமுடன் பெங்களுரில் பணியிலிருந்தவர். அங்கு ஒரு விமானத்தில் பயிற்சியிலிருந்தபோது எதிர்பாராத விபத்தினால் கொல்லப்படுகிறார். அந்தச்சம்பவம் விதியின் சதிதான்.
பரீட்சார்த்த பயிற்சி என்பதனால் மருமகன் ஒரு பயணம் புறப்பட்டிருக்கிறார். ஆனால்,  ரயிலை தவறவிட்டு மீண்டும் பயிற்சி நடந்துகொண்டிருந்த விமானத் தளத்திற்கு வருகிறார். அங்கு பயிற்சி தொடருகிறது. ஒரு விமான ஓட்டியை இறக்கிவிட்டு இவர் ஏறுகிறார். விமானப் பயிற்சி தொடருகிறது. திடீரென்று விமானம் இயந்திரக்கோளாறினால் வெடித்து சிதறுகிறது.

அந்த விபத்தில் சின்னப்பபாரதியின் மருமகன் இளங்கோ உட்பட மூவர் கொல்லப்படுகின்றனர்.
அப்துல்கலாம் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார். சின்னப்ப பாரதியின் மகளுக்கு பின்னர் அந்தத் தளத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தருகிறார் அப்துல் கலாம்.

கேரள இலக்கியத்தில் கவனிப்புக்குரிய படைப்பாளியாகவும் கேரள சட்ட மன்ற உறுப்பினராகவும் மார்க்சீய அறிஞராகவும் விளங்கியவர் பி. கோவிந்தப்பிள்ளை, சின்னப்பாரதியின் அருமைத்தோழர். இடதுசாரித்தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாத் அவர்களை சின்னப்ப பாரதிக்கு அறிமுகப்படுத்தியவரும் கோவிந்தப்பிள்ளைதான்.
சின்னப்பபாரதியின் மருமகன் எதிர்பாராதவிதமாக விபத்தில் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் கோவிந்தப்பிள்ளை எழுதியிருந்த ஆறுதல்கடிதம் சற்று வித்தியாசமானது. ஈடுசெய்யமுடியாத இழப்புகளை தாங்கிக்கொள்வதற்கு இதுபோன்ற

ஆறுதல்வார்த்தைகள் சிறந்த ஒத்தடம் என்பதானால் கோவிந்தப்பிள்ளை சின்னப்பபாரதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.

“…..செய்தி அறிந்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். நேரில் வந்து உங்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். வேலைப்பளு முடியவில்லை. உங்கள் மருமகனின் இழப்பு உங்களுக்கு தனிப்பட்டமுறையில் பேரிழப்புத்தான். நமக்கெல்லாம் புரட்சிகரமான தத்துவம் இருக்கிறது. அது நம்மையெல்லாம் அத்துக்கத்திலிருந்து மீண்டெழத் தைரியமளிக்கும். இந்த நேரத்தில் மார்க்சுக்கு நிகழ்ந்த சோகத்தைக் கூறுகின்றேன். மார்க்ஸ் தனது ஒரே அன்பு மகன் காலமனது பற்றி ஆறாத்துயரில் மூழ்கியிருந்தார். அச்செல்வனுக்கு சத்துணவும் நோய்க்கான உரிய வைத்தியமும் கொடுக்கமுடியாமல் அவன் இறந்துவிட்டானே என்பதே அவரின் தாங்கமுடியாத வேதனைக்கு காரணம்.

தனது அன்புத்தோழர் ஏங்கல்சுக்கு எழுதும்பொழுது, ‘ தத்துவஞானி

பேகன் கூறும்பொழுது யாரெல்லாம் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்துவருகிறார்களோ அவர்களுக்கு ஏற்படுகின்ற சொந்த இழப்புகளை அவர்களால் தாங்கிக்கொண்டு மீண்டெழமுடியுமென்பார்கள். நான் அப்படிப்பட்டவர்களில் ஒருவன் அல்ல. எனது மகனின் இழப்பென்பது இல்லாமையாலும் வறுமையாலும் உரிய மருத்துவம் செய்யமுடியாத கொடுமையினாலும் நிகழ்ந்துவிட்டதென்பதுதான் என்னைத்தாங்க முடியாத வேதனையில் ஆழ்த்துகிறது.” – என்று தெரிவித்தார்.
உங்களுடைய இழப்பு வறுமையால் நேர்ந்ததல்ல. விமான விபத்து… மனதை தேற்றிக்கொள்ளுங்கள்”
இவ்வாறு சின்னப்பபாரதிக்கு ஆறுதல் கூறிய கோவிந்தப்பிள்ளை அவர்களும்  பின்னாளில் காலமாகிவிட்டார்.  

அச்சமயம்  செம்மலர் இதழில் சின்னப்பபாரதி கோவிந்தப்பிள்ளைக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதியிருக்கிறார்.
மனிதவாழ்வில் இழப்புகளின் வடிவங்கள் மாறுபடும்.

இப்போது சின்னப்ப பாரதிக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதுகின்றேன்.

அன்னாரின் அன்புத்துணைவியார் செல்லம்மாள் அவர்களதும் அருமை மகள்மாரினதும் துயரத்தில் பங்கேற்கின்றேன்.

---0---
No comments: