2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்
வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்; பக்தர்களுக்கு தடுப்பூசி அட்டை அவசியம்
வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி!
நல்லூர் ஆலயத்தில் சீனத்தூதுவர் வழிபாடு
யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு
2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்
பிரதமர் மஹிந்த அங்கீகாரம்
சைவத் தமிழ் உலகுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்துக்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு. பத்மவாசனால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.
மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிடப்பட்டது.
இப் பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் வே.கந்தசாமி, சுந்தரலிங்கம், சுப்பிரமணியன், விக்னேஸ்வரன், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
வலி.வடக்கு பிரதேசப் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (17) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை, படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
(யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன்
தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை
ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் 15 வருடங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 45 வயது தேவராசா சிவபாலன் என்பவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, வத்தளையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். அதன்பின், 2008ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மேல் நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார். இவருடைய விடுதலைக்காக இவரது தாயார் குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்; பக்தர்களுக்கு தடுப்பூசி அட்டை அவசியம்
- முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம்
- மேலும் பல விதிமுறைகள்
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது.
சிவனொளிபாதமலை கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
மலையுச்சியில் காணப்படும் 1.8 மீற்றர் அளவான பாறை அமைப்பு இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு, இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர். கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று (17) நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.
அந்தவகையில் பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட - இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.
மேலும், கொரோனா காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும்.
புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரிகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது.
(ஹட்டன் சுழற்சி நிருபர்) - நன்றி தினகரன்
வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி!
பின்னணியில் உளவு அமைப்பு -அருண் சித்தார்த்தன்
வடமாகாணத்தில் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சியொன்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்.சிவில் சமூக மையம் தெரிவித்துள்ளது.
வடக்கில் ஏற்கனவே ஆயுதக் குழுக்கள் இருப்பதாக அதன் தலைவர் அருண் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அந்தக் குழுக்களின் பின்னணியில் இந்தியாவும், ரோ உளவுத்துறையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். நன்றி தினகரன்
நல்லூர் ஆலயத்தில் சீனத்தூதுவர் வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் சீ செங்ஹாங் மற்றும் தூதரக அதிகாரிகள் குழு இன்று(16) நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவர்கள், இந்துசமய முறைப்படி வேட்டி அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
(யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன்
யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்று(15) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து வாள் வெட்டினை மேற்கொண்டனர்.
கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment