உலகச் செய்திகள்

 அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்று சாதனை அளவுக்கு அதிகரிப்பு

முன்னர் காணாத வேகத்தில் பரவிவரும் ‘ஒமிக்ரோன்’திரிபு

ஆப்கானிய தாக்குதல்: அமெரிக்க படையினருக்கு தண்டனையில்லை

சூரியனின் அருகில் சென்ற விண்கலம்

இரு கொரியாக்களின் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புதல்


அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டக்கூடும் என்று அந்த மாநில ஆளுநர் கூறியிருப்பதோடு, உயிர் தப்பியோரை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநில வரலாற்றில் இடம்பெற்ற பேரழிவு கொண்ட சூறாவளியாக இது உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் அதன் ஆளுநர் அன்டி பெஷயர், குறைந்தது 80 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“சூறைக்காற்று நேரடியாக தாக்கிய பகுதிகளில் எதுவும் எஞ்யிருக்கவில்லை” என்று அவர் கூறினார்.

இந்த சூறாவளியால் ஏனைய மாநிலங்களில் மேலும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனாதிபதி ஜோ பைடன், கென்டக்கியில், தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதோடு மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி உயிர் தப்பியோரை தேடி வருகின்றனர். தவிர குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 300க்கும் அதிகமான தேசிய காவல் படையைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

“உயிர்தப்பியவர்களை கண்டுபிடிக்கும் அதிசயம் ஒன்றை நம்பி நாம் தொடர்ந்து இயங்கி வருகிறோம்” என்று மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான மேய்பீல்டுக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் தெரிவித்தார்.

எனினும் கடந்த சனிக்கிமை காலை தொடக்கம் உயிருடன் எவரும் காப்பற்றப்படவில்லை.

இந்த சூறாவளி பயணித்த 227 மைல் தடத்தின் அனைத்து இடங்களும் அழிவடைந்திருப்பதாக ஆளுநர் கூறினார். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்திருக்கும் நிலையில் அதன் சரியான எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை.

முன்னதாக 1925 மார்ச் மாதம் மிசூரியில் 219 மைல்கள் பயணித்த சூறாவளியே அமெரிக்காவில் நீண்ட தூரம் பயணித்த சூறாவளியாக இருந்தது. இதில் 695 பேர் உயிரிழந்தனர். எனினும் வசந்தம் அல்லது கோடை காலத்திற்கு அப்பால் இவ்வாறான இயற்கை அனர்த்தம் மிக அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.

மேய்பீல்ட் நகரில் தீயணைப்பு நிலையம் மற்றும் நகர மண்டபம் சூறாவளியால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதில் 110 ஊழியர்கள் உள்ளே இருக்க சூறாவளி தாக்கியதாக நம்பப்படும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் எட்டு பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எட்டுப் பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

அமேசன் களஞ்சியம் ஒன்று உடைந்த நிலையில் இல்லினொயிஸில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல்போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டென்னசியில் நால்வர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு அர்கான்சாஸ் மாநிலத்தில் இருவர் பலியாகி உள்ளனர். இதில் ஒருவர் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்று பகுதி அளவு உடைந்ததில் பலியாகியுள்ளார். மிசுரியில் ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சூறாவளிகளுக்கு காலநிலை மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யும்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தை ஜனாதிபதி பைடன் கேட்டுள்ளார்.

அமெரிக்காவின் 6 மாநிலங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கி இருந்தன.    நன்றி தினகரன் 
பிரிட்டனில் கொரோனா தொற்று சாதனை அளவுக்கு அதிகரிப்பு

பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 78,610 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. இது கடந்த ஜனவரியில் பதிவான முந்தைய உச்ச எண்ணிக்கையை விடவும் சுமார் 10,000 அதிகமாகும்.

சுமார் 67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில் தற்போது நோய் தொற்று சம்பவங்கள் 11 மில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது.

அதிக வேகமாகப் பரவும் புதிய ஒமிக்ரோன் திரிபே பிரிட்டனில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். புதிய அலை ஒன்று பற்றியும் அவர் எச்சரித்தார்.

எனினும் அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக 100க்கும் அதிகமான எம்.பிக்கள் வாக்களித்த நிலையில் ஜோன்சன் அரசு பின்னடைவை சந்தித்துள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, “இந்த எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கும்”, என்று கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, சமூக கொண்டாட்டங்கள் தொடர்பாக மக்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் 10,000க்கும் அதிகமான ஒமிக்ரோன் திரிபு சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் 10க்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனிலேயே இந்த திரிபடைந்த வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுவதோடு இந்தத் திரிபினால் இதுவரை ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளார்.    நன்றி தினகரன் 

முன்னர் காணாத வேகத்தில் பரவிவரும் ‘ஒமிக்ரோன்’திரிபு

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

முன்னெப்போதும் காணாத வேகத்தில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வைக் கொண்ட இந்தத் திரிபு தற்போது 77 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கண்டுபிடிக்கப்படாது மேலும் பல இடங்களில் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

இந்த திரிபை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது பற்றி மருத்துவர் டெட்ரோஸ் கவலை தெரிவித்தார்.

“கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடுவதை நாம் இப்போது அறிந்து கொண்டோம். ஒமிக்ரோன் திரிபு குறைந்த அளவுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, தயாராக இல்லாத சுகாதார அமைப்புகளை மீண்டும் நிறைத்துவிடும்” என்று அவர் கூறினார்.

ஒமிக்ரோன் திரிபு முதன்முதலில் தென்னாபிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது, அப்போதிலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரோன் தோன்றியதிலிருந்து தென்னாபிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும் வகையில் பல நாடுகள் பயணத் தடைகளை அறிமுகப்படுத்தின, அந்நடவடிக்கைகள் ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்கவில்லை.

செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட, உலக நாடுகள் மத்தியில் உள்ள நியாயமற்ற தடுப்பூசி விநியோகம் தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தினார் டெட்ரோஸ்.

41 நாடுகள் தமது மக்கள் தொகையில் இன்னும் 10 வீதமானவர்களுக்குக் கூட தடுப்பூசி வழங்க முடியாத நிலையில் இருப்பதோடு 98 நாடுகள் இன்னும் 40 வீதத்தைக் கூட எட்டவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.    நன்றி தினகரன் 
ஆப்கானிய தாக்குதல்: அமெரிக்க படையினருக்கு தண்டனையில்லை

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 பேர் கொல்லப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க துருப்பினர் மற்றும் அதிகாரிகள் எவர் மீதும் பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அமெரிக்கா தலைமையில் வெளியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்ற இறுதி நாட்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட உதவிப் பணியாளர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த உதவிப் பணியாளரின் கார் வண்டி ஐ.எஸ் குழுவுடன் தொடர்புபட்டதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு சந்தேகித்த நிலையிலேயே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இது பெரும் துயரம் கொண்ட தவறு என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் ஒப்புக்கொண்டது.

எனினும் இது பற்றி இடம்பெற்ற உயர் மட்ட மீளாய்வு அறிக்கை கடந்த மாதம் வெளியானதோடு, ஒழுக்காற்று நடவடிக்கைகள் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.    நன்றி தினகரன் 

சூரியனின் அருகில் சென்ற விண்கலம்

சூரியனின் புற வளிமண்டலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் இவ்வாறு சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது நிகழ்ந்திருந்தாலும் அந்த விண்கலம் கொரோனா என்று அழைக்கப்படும் இவ்வழியாகத்தான் கடந்து சென்றது என்பது, தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.    நன்றி தினகரன்
இரு கொரியாக்களின் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புதல்

அமெரிக்கா, சீனா, வட கொரியா ஆகியவை இரு கொரியாக்களுக்கும் இடையிலான போரை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரவுள்ளன.

அதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றத் தமது அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

எனினும் வட கொரியாவின் நிபந்தனைகளால் இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கொரிய தீபகற்பம் இரண்டாக பிளவுபட்ட நிலையில் கொரியப் போர் 1950 தொடக்கம் 1953 வரை நீடித்தது.

வட மற்றும் தென் கொரியாக்கள் முறையே சீனா மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் தொடர்ந்து போர் சூழலிலேயே இருந்து வருகின்றன. இதனால் இரு தரப்புக்கும் இடையே பதற்ற நிலை நீடிக்கிறது.

இந்தப் போரை உத்தியோகபூர்வாக முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி தொடர்ந்து கடுமையாக முயன்று வருகின்றபோதும் அது சிக்கலான ஒன்றாக நீடித்து வருகின்றது.    நன்றி தினகரன்


No comments: