டுபாய் ஆட்சியாளரின் மனைவிக்கு 734 மில். டொலர்கள் ஜீவனாம்சம்
பங்களாதேஷில் படகு தீப்பிடித்து 32 பேர் பலி
மலேசிய வெள்ள அனர்த்தம்; உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
சீனா மற்றும் பூட்டன் இடையே தொடரும் எல்லைப் பிரச்சினை
தியானன்மென் படுகொலை நினைவுச் சிலை அகற்றம்
டுபாய் ஆட்சியாளரின் மனைவிக்கு 734 மில். டொலர்கள் ஜீவனாம்சம்
இங்கிலாந்து குடும்ப நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகையாக டுபாய் ஆட்சியாளர் பிரிந்து சென்ற தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 554 மில்லியன் பெளண்ட்கள் (734 மில்லியன் டொலர்கள்) வழங்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரியான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுஸைனுக்கு 251.5 மில்லியன் பெளண்ட்கள் மற்றும் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு 290 மில்லியன் பெளண்ட் வங்கி உத்தரவாதம் ஒன்றையும் வழங்கும்படி செய்க் முஹமது பின் ரஷீத் பின் ரஷீத் அல்–மக்தூமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
72 வயதான டுபாய் எமிரேட்டின் ஆட்சியாளர், 47 வயதான தனது முன்னாள் மனைவியுடன் நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது முன்னாள் மனைவி 13 மற்றும் ஒன்பது வயதான இரு குழந்தைகளுடன் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். நன்றி தினகரன்
பங்களாதேஷில் படகு தீப்பிடித்து 32 பேர் பலி
பங்களாதேஷில் பயணிகள் படகு தீப்பற்றிக் கொண்டதில், குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று அடுக்குகள் கொண்ட ஓபிஜான் 10 எனும் படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்துக் கொண்டதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீற்றர் தெற்கில் இருக்கும் ஜக்கார்காதி எனும் ஊரின் அருகே, நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலர் தீயில் கருகி மாண்டதாகவும் மேலும் சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து மூழ்கியதாகவும் கூறப்பட்டது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று அந்த வட்டாரத்தின் பொலிஸ் தலைவர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார். எஞ்சின் அறையில் இருந்தே தீ பிடித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்லாம், டாக்காவில் இருந்து வீடு திரும்புபவர்கள் அந்த படகு முழுவதும் தீ பரவி இருப்பதாக தெரிவித்தனர்.
“தீக்காயங்களுடன் 100க்கும் அதிகமானவர்களை பரிசாலில் உள்ள மருத்துவமனைகளுக்கு நாம் அனுப்பிவைத்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
மலேசிய வெள்ள அனர்த்தம்; உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
மலேசியாவில் இதுவரை காணாத வெள்ளப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
பலரை இன்னமும் காணாத நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் பலர் இன்னமும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வெள்ளப் பேரிடர் குறித்துப் பொது விசாரணை நடத்தும்படி கூறியுள்ளார்.
மக்களுக்கு உதவிகளை அனுப்புவதில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததும் மீட்புப் பணியாளர்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதும் இயற்கைப் பேரிடரை நிர்வாகப் பேரிடராக மாற்றியுள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் கொவிட்-19 நோய்ப்பரவலைத் தவிர்த்து, வெள்ளம் தொடர்பான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறித்து மலேசிய சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு எந்தத் தொற்றுநோயும் பரவுவதாகத் தகவல் இல்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அது கூறியது. நன்றி தினகரன்
சீனா மற்றும் பூட்டன் இடையே தொடரும் எல்லைப் பிரச்சினை
எந்த ஓர் எல்லை நாட்டுடனும் சீனா நல்லுறவை பேணாத நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பூட்டானுக்குள் புகுந்த சீன மக்கள் 4 கிராமக் குடியேற்றங்களை உருவாக்கினர்.
இந்த எல்லை மீறல்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றபோதும், அண்மைய ஆண்டுகளிலேயே சர்வதேச அவதானத்தை பெற்றுள்ளது.
ஆசியாவின் இரு வல்லரசுகளுக்கு மத்தியில் இருப்பது பூட்டானுக்கு பூகோள ரீதியில் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்திய – சீன எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே சமநிலையான உறவை பேணுவதில் பூட்டான் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது.
எனினும் பூட்டானை ஒரு பிரச்சினையற்ற அண்டை நாடாக பார்க்கும் இந்தியா இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. ஆனால் பூட்டானின் ஆட்புலத்தை குறைத்து மதிப்பிடும் சீனா, அது இந்தியாவுக்கு சவால்விடுவதற்கு சமமாக பூட்டானையும் எதிர்கொன்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
தியானன்மென் படுகொலை நினைவுச் சிலை அகற்றம்
தியானன்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் இருந்த பிரபலமான சிலை ஒன்று அகற்றப்பட்டுள்ளது.
1989 இல் சீன நிர்வாகத்தால் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை காட்டும் வகையில் உடல்கள் அடுக்கப்பட்டது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஹொங்கொங்கில் எஞ்சியிருந்த ஞாபகார்த்த சின்னங்களில் ஒன்றாக இது இருந்து வந்தது.
ஹொங்கொங்கில் அரசியல் எதிர்பாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையை சீனா தீவிரப்படுத்தி இருக்கும் நிலையிலேயே இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது.
எனினும் அவமானத்தின் தூண் என்று இதனை அழைத்த ஹொங்கொங் பல்கலைக்கழகம் இதனை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதமே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 8 மீற்றர் உயரம் கொண்ட இந்த சிலை கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக கட்டுமானத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.
தியானன்மென் படுகொலை குறித்த எந்த ஒரு பொது அங்கீகாரத்தையும் சீனா ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment