மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கு; 'அக்கினிக்குஞ்சு' யாழ். பாஸ்கருக்கு விருது

 Tuesday, December 21, 2021 - 3:04pm

எழுத்தாளர் முருகபூபதியின் மூன்று நூல்களும் வெளியீடு 

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத் தலைநகர் மெல்பனில், மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை, மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் மல்லிகை ஜீவா நினைவரங்கு நடைபெற்றது.  

பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, பாரதியாரின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் 'மல்லிகை' இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா அவர்களின் உருவப்படத்திற்கும் கலை, இலக்கியவாதிகள் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினர். 

திருமதி சரண்யா மனோசங்கரின் தமிழ் வாழ்த்துடனும் திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடனும் தொடங்கிய இந்நிகழ்வில் 'மல்லிகை ஜீவா' நினைவுரையை எழுத்தாளர் நடேசன் நிகழ்த்தினார்.

சட்டத்தரணியும் சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சன எழுத்தாளருமான செ. ரவீந்திரன் எழுத்தாளர் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்', 'நடந்தாய் வாழி களனி கங்கை', 'கதைத் தொகுப்பின் கதை' ஆகிய நூல்களை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். 

தமிழ்க் குழந்தைகளுக்கு 'பாட்டி சொன்ன கதைகள்' ( சிறுவர் இலக்கியம்) நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன. 

செல்வன் ஹரீஜன் பசுபதிதாசன் 'பாட்டி சொன்ன கதைகள்' நூலையும், கிறிஸ்டி நல்லரெத்தினம் 'நடந்தாய் வாழி களனி கங்கை' நூலையும், அசோக் ஜனார்த்தனன் மற்றும் திருமதி கலாதேவி பாலசண்முகன் ஆகியோர் 'கதைத் தொகுப்பின் கதை' நூலையும் அறிமுகப்படுத்தி திறனாய்வுரை நிகழ்த்தினர். 

நூல்களின் ஆசிரியர் முருகபூபதி ஏற்புரை வழங்கினார். இவ்வரங்கில் மூன்றாவது நிகழ்ச்சியாக அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக 'அக்கினிக்குஞ்சு' இணைய இதழை மிகுந்த அர்ப்பணிப்புடன் நடத்தி வரும் எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர் 'மல்லிகை ஜீவா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார்.   

நன்றி தினகரன் 

No comments: