வழிதவறிப் போன மக்களை தேவன் மீட்டெடுத்தார்,மானிடர் நமக்காக இயேசு பாலகன் பிறந்தார்

நத்தாரின் சிறப்பு செய்தி

பெத்தலேகம் எனும் சிற்றூரில் ஏழ்மையையும் எளிமையையும் தேர்ந்தெடுத்து நம் இயேசு கிறிஸ்து மனிதம் மாண்பு பெற இறைமனிதனானார். மானிட விடுதலையையும், மானுடம் காக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் போதித்தும் வாழ்ந்தும் காட்டினார்.

அந்த மெய்யான தெய்வமாம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமே 'கிறிஸ்மஸ்' தினமாக மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகின்றது. உலகின் பெரும்பாலான மக்களால் நினைவு கூரப்படுகிற ஒரே பண்டிகையாகவும் 'கிறிஸ்மஸ்' திகழ்கின்றது.

மத்தேயு 1:21 –'அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் மீட்பார்'

கண்களால் தரிசிக்க முடியாத கடவுள் தொட்டு விடும் தொலைவில் ஆன்மீக உணர்வாகி, ஆழ்மன இருளகற்றும் பேரொளியானதால் மட்டுமல்ல, அமைதிக்கான வழியை அடையாளமாய் காட்டியதால் மக்கள் அகமகிழ்ந்து கொண்டாடும் ஓர் உன்னத பெருநாளாகவும் நத்தார் பண்டிகை அமையப் பெறுகிறது.

இறையரசின் விழுமியங்களான அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம், சகவாழ்வு போன்ற நெறிமுறைகளை, போதனைகளாய் வெளிப்படுத்தி பாவமன்னிப்பு, இரட்சிப்பு, மனந்திரும்புதல் எனும் வலுவான நம்பிக்கையை வளர்ந்து ஒரு சிறந்த உலகுக்கு வழிவகுத்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி உரைத்த வாக்கு நிறைவேறும்படி வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த வித்தாக கன்னிமரியாளிடத்தில் மானிடனாக அவதரித்தார். மனிதரை மீட்டுத் தரும்படியாக மனிதனாய்ப் பிறந்து மனித வர்க்கத்தின் பாவங்களுக்காய் சிலுவை மரணத்தையேற்றார். பின்பு மூன்றாம் நாள் மகிமையாய் உயிர்த்தெழப்பட்டார். இதன் அடிப்படையில் நம் இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பவை மனிதனுக்காகவே ஆனதாகும் என்பதை தனித்துவப்படுத்துகிறது.

ஆம் நம் கடவுளாம் 'இயேசு கிறிஸ்து' உலகத்தை மிகவும் நேசித்தார். யோவான் 3:16ன் படி 'அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை கொடுத்தார். அதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் அழியாமல் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்'

அந்தப்படியே இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். மனிதனின் பாவத்தைச் சுமந்தார். அவரது தியாக மரணத்தின் மூலம் தமது இரட்சிப்பை சாத்தியமாக்கினார்.

தீமோத்தேயு 2:4:6 இன்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகின்ற அறிவில் வளரவும் அடையவும் அவர் சித்தமுள்ளவரானார். மனிதனுக்கு தேவனுடன் பேசி மத்தியஸ்தம் செய்ய யாரும் இருக்கவில்லை. ஆதலால் பிதாவானவர் தேவசாயவாக இருந்த தமது குமாரனை மனித சாயலாக மாற்றி இப்பூலோகத்திற்கு அனுப்பினார். நாம் ஆக்கினைக்குட்படாதிருக்க பிதாவானவர் சித்தம் கொண்டார். இவ்விதமாய் மனுக்குலத்தை மீட்க மானிட மகனாக உலகில் உதித்த உன்னத இயேசு சிறிஸ்துவின் வரலாறு. இந்த வரலாற்று நாயகன் இயேசு கிறிஸ்து. ஏசாயா 7:14 ல் 'இம்மானுவேல்' எனப்பட்டார்.

'இம்மானுவேல்' என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது அர்த்தமாகும். இதனை மத்தேயு நற்செய்தி 1:22:23 இலும் காணலாம். மனித குலத்துக்கு வெளிச்சமாக இப்பூமியில் வந்து உதித்த இயேசுபாலகன்.

யோவான் 3:16-18- தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கின்றவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தத்தமது வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார். வழி தப்பிப் போன எங்களை தேவன் மீட்டெடுத்தார்.

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. உங்கள் விசுவாசமும், நம்பிக்கையையும் தேவன் மேலிருக்கும்படி அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி அவருக்கு மகிமையைக் கொடுத்தார். பாவத்திலும், சாபத்திலும், அக்கிரமத்திலும் நோயிலிருந்து மீட்கப்பட்ட நாம் கிறிஸ்துவுக்காக உயிருள்ள சாட்சியாக வாழ தமது பரிசுத்த ஆவியை நம் இருதயத்திற்குள் அனுப்பினார். மறுபடியும் இவ்வுலக வழக்கத்திற்கும், பாவத்திற்கும் அடிமையாய் வாழாதபடிக்கு நாம் அவரின் பிள்ளையாயிருக்கின்றபடியினால் கலாத்தியர் 4:6 - மேலும் நீங்கள் புத்திரராயிருக்கின்றபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

'மண்ணில் வந்த விண்ணின் வேந்தனான' இயேசு பாலகனின் பிறப்பின் மகிழ்ச்சி தரும் நற்செய்தி யாதெனில், எம்மை விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் இந்த 2021ம் ஆண்டின் சொல்லொணாபாடுகளிலும் அவரது திருநாளை கண்டுகளிக்கும் கிருபை செய்துள்ளதோடு - இன்னும் ஒரு புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் பாத்திரவான்களாகவும் ஆசீர்வதித்திருக்கிறார். சங்கீதம் 65:11 இன்படி 'வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறீர், உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகின்றன'

முடிசூட்டுதல் என்றால் வெற்றியைக் குறிக்கிறது. தேவன் தமது ஜனத்தை மீட்டுகிறார். இந்த நத்தார் தினத்தில் தேவனை நம்புவோம். 2022 ஆம் ஆண்டு நமக்கு தேவன் ஆதரவாயிருந்து நம்மை காப்பாற்றுவார். இனங்களின் உறவையும் ஐக்கியத்தையும் சீராக்க, வீழ்சியடைந்து போன பொருளாதாரம் உயர்த்தப்பட, மதங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை கொண்டு வர, அழகான இலங்கையாக மாற்றி தரும்படி நம் தேவனிடம் பிரார்த்திப்போம்.

அத்தோடு, நம் நாட்டு மக்களிடையே 'அன்பு பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை அணிகலனாய் கொண்டு கிறிஸ்துவின் வழியில் பயணிக்கின்ற கிறிஸ்தவ பெருமக்களான நாம், அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்வோமாக.

உன்னதராம் இயேசு கிறிஸ்து பிறப்பிலும் ஏழ்மையை ஏற்றுக் கொண்டார், வளர்ப்பிலும் தாழ்மையை தெரிந்து கொண்டார், இறப்பிலும் மேன்மையை வெளிப்படுத்தினார்.

அனைவருக்கும் முகத்துவாரம் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் போதகர் குழு, நிர்வாக அங்கத்தவர் குழு ஆகியோர்களது சார்பில் எமது இதயம் நிறைந்த நத்தார் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-வண. ஜெயம் சாரங்கபாணி
(தலைமை போதகர்) முகத்துவாரம்
மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம்

நன்றி தினகரன் 

No comments: