பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வழிபாடு
பிரதமர் மஹிந்த திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்
இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
திருக்கோவில் சூடு; சார்ஜென்டிற்கு ஜனவரி 06 வரை விளக்கமறியல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வழிபாடு
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜையும் இடம்பெற்றது.
இத்தனிப்பட்ட விஜயத்திற்காக பிரதமர் அரச நிதி எதனையும் பயன்படுத்தாததுடன், சகல செலவுகளையும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
பிரதமர் மஹிந்த திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்
படங்கள்: திருப்பதியிலிருந்து எஸ்.ஜயகுமார் நன்றி தினகரன்
இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் டக்ளஸின் உறுதிமொழியை அடுத்து கைவிடுகை
ஜனாதிபதி, பிரதமருடன் பேசி தீர்வை விரைவாக பெற்றுத்தருவதாக டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வைப் பெற்று தருவேனென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி வழங்கியதையடுத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தமது போராட்டத்தை கைவிடுவதாக நேற்று தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளுடனான அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்கள் நேற்று மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நடத்தினர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலிலிருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்ததுடன் அங்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி தீர்வைப் பெற்று தருவேனென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். அமைச்சரின் உறுதி மொழியையடுத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்தே யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
“அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்”, “நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது”, “கைப்பற்றிய படகுகளைப் விடக்கூடாது” போன்ற பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.
யாழ்.விசேட, யாழ்.குறூப் நிருபர்கள் - நன்றி தினகரன்
திருக்கோவில் சூடு; சார்ஜென்டிற்கு ஜனவரி 06 வரை விளக்கமறியல்
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு 4 உத்தியோகத்தர்களைக் கொன்ற பொலிஸ் சார்ஜென்டை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சார்ஜென்ட் ஒருவரே இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததோடு. பின்னர் சந்தேகநபர் மொணராகலை, எதிமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலைச் சேர்ந்த அப்துல் காதர், பிபிலை மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த துசார, பிரபுத்த ஆகிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் இருவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவும் இன்று காலை ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒலுவில் பகுதியை சேர்ந்த காதர் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சடலங்கள் திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச். மொஹமட் ஹம்சா, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரு சடலங்களையும் பார்வையிட்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் தலைமையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment