தாயகத்திலிருந்து விடைபெறும் தருணம் வந்தபோது, குடும்பத்தை விட்டு பிரிகின்ற வருத்தம் ஒரு புறம், நான் பல வருடங்களாக அங்கம் வகித்து இயங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அதன் துணை உறுப்பான எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் மற்றும் எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றம், இலக்கிய வட்டம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம் ஆகியனவற்றின் பணிகளிலிருந்தும் விடைபெறப்போகின்றேன் என்ற கவலை மறுபுறம் என்னை வாட்டிக்கொண்டிருந்தன.
இவை தவிர, கொழும்பை தளமாகக் கொண்டியங்கிய இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், அதன் தலைவர் எச். என். பெர்ணான்டோ ( இவரது சகோதரியைத்தான் தோழர் ரோகண விஜேவீரா மணமுடித்தார் ) சங்கத்தின் செயலாளர் சித்ரால், மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அறப்போராட்டத்தினை முன்னெடுத்த தோழர் லீனஸ், தலைமறைவாகிவிட்ட இதர தோழர்கள், நான் மிகவும் நேசித்த இலக்கியவாதிகளையெல்லாம் விட்டுவிட்டு விடைபெற்று தொலைதூரம் செல்லப்போகின்றேனே..! ? என்ற வேதனையுடனும் சோர்வுற்றிருந்தேன்.
அவர்கள் எவருக்குமே நான்
கடல் கடந்து செல்லவிருக்கும் செய்தி தெரியவே தெரியாது.
ஆனால், எனது உடன்பிறவா சகோதரனாக விளங்கிய எழுத்தாளர் ராஜஶ்ரீகாந்தனுக்கு மாத்திரம்
சொன்னேன்.
அவர் மிகுந்த நம்பிக்கைக்குரியவர். இரகசியத்தை வெளியே கசிய விடமாட்டார்.
1986 ஆம் ஆண்டு இறுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடத்திய பின்னர், நண்பர் சோமகாந்தனின் ஆகுதி கதைத் தொகுதி வெளியீட்டுவிழா நல்லூரில் ஒரு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மல்லிகை ஜீவா தனது மல்லிகைப்பந்தல் சார்பாக அதனை நடத்தினார். யாழ். மாநகர ஆணையாளர் சீ.வி. கே. சிவஞானம்,
எழுத்தாளர்கள் பிரேம்ஜி, சுப்பிரமணிய ஐயர், மெளனகுரு, முருகையன், சொக்கன், நந்தி உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.
அவர்களிடத்திலும் நான்
விடைபெறப்போகும் செய்தியை சொல்லவில்லை. காரணம்
அங்கே அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை எனக்கு சாதகமாக இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்பு திரும்பியதும், சோமகாந்தன் தனது ஆகுதி நூலின் அறிமுக நிகழ்வை கொட்டாஞ்சேனை கமலா மோடி மண்டபத்தில்
ஏற்பாடு செய்திருந்தார்.
அதற்கு நீதியரசர் எச்.
டபிள்யூ. தம்பையா தலைமை தாங்கினார். நானும்
மேமன் கவியும் சோமகாந்தனுக்கு பக்கத்துணையாக நின்று அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர்
இளங்கீரன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர். அன்றைய தினம் சனிக்கிழமை.
சோமகாந்தன், நிகழ்ச்சி
தொடங்கு முன்னர் என்னை தனியே அழைத்து, காதுக்குள்
இரகசியம் சொன்னார்.
“ பூபதி, தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் சொல்லிவிட்டேன்.
நாளை மறுநாள் திங்கட் கிழமை. அவரிடம் செல்லும்.
உமக்கு அங்கே வேலை காத்திருக்கிறது. ( 1987 ) பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து அங்கே இணைந்து கொள்ளலாம். வீரகேசரியை விட கூடுதல்
சம்பளம் கிடைக்கும். ஆனால், தற்போதைக்கு இந்தச் செய்தியை வெளியே சொல்லவேண்டாம். “
நான் மனதிற்குள் சிரித்து
– அழுதுகொண்டிருந்தேன்.
என்மீது சோமகாந்தன் வைத்திருக்கும் அன்பின் ஆழம் சிலிர்ப்பை
தந்தது. என்னை ஊடகத்துறையிலிருந்து இழந்துவிடலாகாது என்ற உள்ளார்ந்த அக்கறை அவரிடத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
மல்லிகை ஜீவா, பிரேம்ஜி,
சோமகாந்தன், இளங்கீரன் உட்பட பலர் எனது விலகலை
விரும்பவே இல்லை.
அவர்கள் தங்களுக்குள் ஒரு
மந்திராலோசனை நடத்தித்தான், சோமகாந்தன் ஊடாக தினகரன் சிவகுருநாதனுடன் பேசியிருக்கிறார்கள்
என்பதையும் புரிந்துகொண்டேன்.
அன்று கமலா மோடி மண்டபத்தில்
என்னை சந்தித்த நண்பர் ராஜஶ்ரீகாந்தன் ஒரு தகவலைச் சொன்னார்.
அந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது 60 வயது பிறந்த தினத்தை வீட்டில்
அமைதியாக கொண்டாடியிருந்த இளங்கீரன் அச்செய்தியை வெளியே சொல்லவில்லை. அது அவரது மணிவிழாக்காலம்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை
புறக்கோட்டை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி கட்டிடத்தில் ( சபாநாயகர்
பாக்கீர் மாக்காரின் அமைப்பின் காரியாலயம் ) எமது சங்கத்தின் மாதாந்த கருத்தரங்கு இருந்தது.
அதற்கு இளங்கீரனை எப்படியாவது
வரவழைத்து, சபையினரிடம் அவரது மணிவிழாக்காலத்தை பகிரங்கப்படுத்துவது என்பதுதான் ராஜஶ்ரீகாந்தனின்
நோக்கமாக இருந்தது.
இருவரும் இளைங்கீரனை நாளைய சந்திப்புக்கு
வருமாறு அழைத்தோம்.
இன்றும்வந்து
நாளையும் வரத்தான் வேண்டுமா?
எனக்கு ஓய்வு
தரமாட்டீர்களா? என்று அவர்
கடிந்துகொண்டார்.
“ இல்லை அவசியம் வாருங்கள் என்று அன்புக்கட்டளை விடுத்தோம். அன்று இரவு கூட்டம் முடிந்ததும் பஸ் நிலையம் செல்லாமல் உடனே வீரகேசரிக்கு விரைந்தேன். இளங்கீரனுக்கு 60 வயது மணிவிழா. கொழும்பில் இன்று அவருக்கு பாராட்டு என ஒரு செய்தியை எழுதி அச்சுக்கு கொடுத்துவிட்டு அதன்பின்னர் ஊருக்கு பஸ் ஏறினேன். இதனை
நான் ராஜஸ்ரீகாந்தனுக்கும் சொல்லவில்லை. மறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தியைப்பார்த்த சில இலக்கிய நண்பர்கள் கொழும்பில் இளங்கீரன் வீடு தேடிச்சென்று வாழ்த்தி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். அன்று மாலை அவருக்காக ஒரு பூமாலையும் வாங்கிக்கொண்டு மாதாந்த கருத்தரங்கிற்குச்சென்றேன்.
அன்றைய
சந்திப்பே இறுதிச்சந்திப்பு. இந்தப்பத்தியில்
இடம்பெறும் அவருடனான ஒளிப்படம்
அன்று எடுத்ததாகும்.
நான் புலம்பெயர்ந்துவிட்ட
செய்தியறிந்து எங்கள் வீட்டுக்குச்சென்று தனது முகவரியை கொடுத்து என்னை தொடர்புகொள்ளுமாறு
கேட்டுள்ளார். அவ்வப்போது அங்கே சென்று எனது குழந்தைகளை பார்த்தார்.
எனது இலக்கிய – ஊடகப் பயணத்தில்
இளங்கீரனும் எனக்கொரு ஞானத்தந்தையே. அவர் இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியின் ( சீன சார்பு ) தொழிலாளி
பத்திரிகையிலும், பின்னாளில் குமார் ரூபசிங்கவின் ஜனவேகம் பத்திரிகையிலும் ஆசிரியராகவிருந்தவர்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் எனக்கு அவர் எழுதிய கடிதங்கள் இலக்கிய நயம் மிக்கவை. அவரது மறைவின்பின்னர் அவற்றை ஊடகங்களில் வெளியிட்டேன்.
1997 ஆம் ஆண்டு அவர் எங்கள்
நீர்கொழும்பூரிலேயே மறைந்தார். இளங்கீரன், கே. கணேஷ், சி.வீ. வேலுப்பிள்ளை, கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஜி, சோமகாந்தன், அகஸ்தியர்,
மு. கனகராஜன், சிவா சுப்பிரமணியம், மல்லிகை ஜீவா, முருகையன், சிவானந்தன், வி. பொன்னம்பலம்,
டானியல், ரகுநாதன், சில்லையூர் செல்வராசன்,
எச். எம்.பி. மொகிதீன், சமீம், நீர்வை பொன்னையன், ராஜஶ்ரீகாந்தன், செ. கணேசலிங்கன்,
புதுவை இரத்தினதுரை, ஆப்தீன், மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், ரங்கநாதன்,…
இவர்கள் உட்பட எமது முற்போக்கு இலக்கிய வட்டாரத்தைச்சேர்ந்த
பலர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.
இவர்களில் சிலர் நான் புலம்பெயரமுன்னரே
விடைபெற்றுவிட்டனர். சிலரை 1997 ஆம் ஆண்டின் பின்னர் தாயகம் சென்ற வேளைகளில் சந்தித்தேன். அவர்கள் பற்றிய நினைவுகளை
தொடர்ந்தும் பதிவேற்றிவருகின்றேன். எனினும்
மனதில் அவர்கள் தொடர்ந்தும் நினைவுகளாகவே வாழ்ந்துவருகிறார்கள்.
1987 ஆம் ஆண்டு பிறந்து, ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ஆசிரியர்
சிவநேசச் செல்வனின் பிரத்தியேக அறைக்குச்சென்று எனது விலகல் கடிதத்தை நினைவூட்டினேன். இன்னும்
மூன்று தினங்களில் நான் அங்கிருந்து விடைபெறல்வேண்டும்.
அவர் அக்கடிதத்தை அலட்சியமாகவே
தனது மேசை லாச்சியில் அதுவரையில் வைத்திருந்தார்.
நான் விலகிச்செல்வது உறுதியானது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, பொது முகாமையாளர்
அறையை நோக்கி விரைந்தார்.
மதியம் என்னை அழைத்து, விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சொன்னார்.
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஆசிரியபீடத்திலும் ஏனைய பிரிவுகளிலும் கடமையாற்றுபவர்களில் மேலதிக நேரம் வேலைசெய்தவர்களுக்கு ( Over time duty ) வழங்க வேண்டிய
வேதனமும் வீரகேசரி – மித்திரனில் பிரத்தியேகமாக
எழுதிவருபவர்களுக்கான (
Contribution Payment ) கொடுப்பனவு தினமும் ஆகும்.
நான் ஜனவரி 31 ஆம் திகதிக்குப்பின்னர் அங்கே கடமைக்காக வரமாட்டேன். எனினும் குறிப்பிட்ட 10 ஆம் திகதி மேற்சொன்ன கொடுப்பனவுகளை பெறுவதற்கு வருவேன் என நம்பிக்கொண்டிருந்த
வார வெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால், அன்றைய
தினம் எனக்கு பிரிவுபசார விழாவை நடத்துவது பற்றி இதர ஊழியர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.
வழக்கமாக அத்தகைய ஒரு பிரிவுபசார
விழாவுக்கு ஒவ்வொருவரும் தலா நூறு ரூபா செலுத்துவார்கள். இராப்போசன விருந்துடன் கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நடைபெறும்.
நான் அமைதியாக இருந்து அடுத்த
வாரத்திற்கான இலக்கியப்பலகணி ( ரஸஞானி ) பதிவை எழுதிக்கொண்டும், அன்றாட செய்திகளை பிரதேச
நிருபர்களிடமிருந்தும் பெற்று செம்மைப்படுத்தி செய்தி ஆசிரியரிடம் கொடுத்துக்கொண்டுமிருந்தேன்.
ரண்முத்து ஹோட்டலில் பிரவுபசார நிகழ்வு நடந்தால்,
வீரகேசரியில் படத்துடன் செய்தி வெளியாகும் என்பதும் எனக்குத் தெரியும்.
நான் புறப்படவிருக்கும் விமானம் பெப்ரவரி 06 ஆம் திகதி மதியம் பேங்கொக் நோக்கி புறப்படுகிறது.
ராஜகோபால், என்னை தனது அறைக்கு
அழைத்து “ உமக்கு நாம் பிரிவுபசார நிகழ்வு நடத்தப்போகிறோம்.
பத்தாம் திகதி குடும்பத்தினருடன் வந்துவிடும்.
தொடர்ந்தும் வாரவெளியீட்டுக்கு எழுதும். விட்டுவிடவேண்டாம் “ என்றார்.
செய்தி ஆசிரியர் நடராஜா, “ உமது
தம்பியுடன் பிஸினஸ்ஸை கவனித்தவாறே நீர்கொழும்பு பிரதேச செய்திகளை எழுதி அனுப்பும்.
தற்போது அங்கே நிருபர் இல்லை “ என்றார்.
மித்திரனில் தொடர்கதைகளை
கவனிக்கும் அஸ்வர் நானா, “ பூபதி நீங்கள் மித்திரனில் எழுதிவரும்
கதாநாயகிகள் தொடர்கதையை விட்டுவிடவேண்டாம். வீட்டிலிருந்தும் எழுதி அனுப்பும். அது
முடிந்த பின்னர் மற்றும் ஒரு விறுவிறுப்பான தொடர்கதையை யோசித்து வைத்திரும். தொடர்ந்து
மித்திரனுக்கு எழுதும் “ என்றார்.
இவ்வாறெல்லாம் என்னிடம் வேண்டுகோள்
விடுத்தவர்களிடம் ஓம் ஓம் என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன்.
1987 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வந்தது.
அன்று கடமைக்குச்சென்று செய்திகளை
செம்மைப்படுத்திவிட்டு, மதியவேளையில் ஆமர் வீதி சந்திக்குச்சென்று அங்கிருந்த அம்பாள்
கபேயில் வடை வாங்கினேன். வாழைப்பழம், பிஸ்கட் ஆகியனவற்றுடன் திரும்பினேன்.
மாலைத்தேநீர் வேளையில் நானே
ஆசிரியபீடத்திலிருந்த அனைவருக்கும் அவற்றை வழங்கினேன்.
சிலர் மிகுந்த கவலையுடன்
என்னைப்பார்த்தனர்.
கொழும்பு பக்கம் வரும்போது
வீரகேசரிக்கும் வந்துவிட்டு செல்லுங்கள் என்றனர்.
கனத்த மனதுடன் வீரகேசரி ஆசிரிய
பீடத்தின் வாயில்படியை தொட்டு வணங்கிவிட்டு
வெளியேறினேன்.
நான் மிகவும் ஆழமாக நேசித்த
தொழில் புரிந்த நிறுவனம். வரலாற்று பெருமை
மிக்க ஊடகம். மகாகவி பாரதியாரின் ஆத்ம நண்பர்
வ. ராமசாமி அவர்கள் பணியாற்றிய அலுவலகம்.
பல ஊடக ஆளுமைகள் அமர்ந்து
செய்திகளை எழுதிக்குவித்த பத்திரிகை. மக்களின் குரலாக ஒலித்த ஊடகம். அதனுடனான உறவு
தொழில் ரீதியில் முடிவுக்கு வந்துவிட்ட அந்தத் தருணம் மனதை வருத்தியது.
செய்தி எழுதி எழுதி ஓய்ந்த எனது கரம், இனி என்ன செய்யப்போகிறது…?
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வரும் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்தான் நினைவுக்கு
வந்தது.
அதில் ஒரு வரி:
அன்று இரவு ஏழுமணிக்கு செய்தி
ஆசிரியர் நடராஜா, ஆசிரிய பீடத்து நண்பர்கள் தனபாலசிங்கம், பாலச்சந்திரன், தம்பையா,
கேதாரநாதன் ஆகியோருடன் கொட்டாஞ்சேனையில் ஒரு மதுபான விடுதியில் அவர்களுடனான இறுதி விருந்தை நிறைவு செய்துகொண்டு
விடைபெற்றேன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
அங்கிருந்த எவரிடத்திலும், நான் இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன்
என்ற செய்தியை சொல்லவே இல்லை.
( தொடரும் )
No comments:
Post a Comment